செங்கொடிக் கவிஞன்|
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்|
கவிஞர் வைரமுத்த
நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்|
பள்ளிக்கல்விக்கும் பாட்டுக்கும் தொடர்பில்லையென்று எழுதிக்காட்டியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். வாழ்க்கை கற்றுக்கொடுத்தது; கம்யூனிசம் தீட்டிக்கொடுத்தது. பட்டுக்கோட்டை பாவலர் ஆனார்.
இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம்.
ஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட முடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால் அழிக்கப்படாதது.
1930-ல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப் படுகிறான்.பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் அரசாங்க ஆவணங்களில் கூட எழுத்துப் பிழையில்லாமல் எழுதமுடியாத ‘செங்கப்படுத்தான்காடு’அவன் பிறப்பூர் ஆகிறது.அவன் ‘குவா குவா’ சொல்லிவிழுந்த அடுத்த ஆண்டில்தான் தமிழ்சினிமா பேசவே தொடங்குகிறது.
அவன் திரைப்பாட்டு எழுதவந்த 24 ஆண்டுகளுக்குள் புராணம்-இதிகாசம்-சரித்திரம்-சுதந்திரப் போராட்டம் என்ற கலையின் கச்சாப் பொருள்களையெல்லாம் செலவழித்துத் தீர்த்து விட்டு சமூக எதார்த்தம் என்ற தளத்தில் வந்து நிலைகொள்கிறது திரைப்படத்தேர்.
1954-ல் அந்தப் பாமரப் பாவலன் பாட்டெழுத வந்து விட்டான். அதுவரைக்கும் கேட்காத தொனியில் உழைக்கும் மக்களின் முரட்டு மொழியில் திடீரென்று வந்து மிரட்டுகிறது அவன் பாட்டு.பாட்டெழுத வருவதற்கு முன்பு அவன் பார்த்த தொழில்கள் பதினேழு என்கிறார் ஜீவா. விவசாயி- மாடுமேய்ப்பவன்- மாட்டுவியாபாரி-மாம்பழ வியாபாரி-இட்லி வியாபாரி-முறுக்கு வியாபாரி-தேங்காய் வியாபாரி-கீற்று வியாபாரி-மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி- உப்பளத் தொழிலாளி- எந்திர ஓட்டுநர்-தண்ணி வண்டிக்காரன்- அரசியல்வாதி -பாடகன்- நடிகன்-நடனக்காரன்-கவிஞன்.
வாழ்வியல் கூறுகளையும் வர்க்க அடுக்குகளையும் அவன் பார்த்த 17 தொழில்களும் பாடம் புகட்டியிருக்கக்கூடும்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற குறளை
“யாருமேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
ஆகமொத்தம் பிறந்ததெல்லம்
பத்தாம் மாதம்தானே“
-என்று எழுதிக் காட்டியவன்.
கம்யூனிசம் சொல்லிக்கொடுத்த வர்க்கப் போராட்டத்தை
“வசதி படைத்தவன்தரமாட்டான்
வயிறு பசித்தவன்விடமாட்டான்”- என்று செந்தமிழ் செய்கிறான்.
அவன் கலைபெற்றது தமிழால்; நிலைபெற்றது கம்யூனிசத்தால்.
அதே காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் பிம்பமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், இந்தப்பொதுவுடைமைக் கவிஞனின் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவேயில்லை.
‘மக்கள் திலகம்‘ என்ற முத்திரையைக் கட்டிக் காக்க மக்கள் கவிஞனின் வரிகள் அவருக்குத் தேவைப்பட்டன.
பவுத்தமதத்தின் பெருங்கூறுகளையெல்லாம் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு விரைந்து கிளைபரப்பிய இந்து மதத்தைப்போல, பொதுவுடைமைக் கவிஞனின் வரிகளையும் வாங்கிச் செழித்து வளர்ந்தது திராவிடம்.
“தூங்காதே தம்பி தூங்காதே,(நாடோடி மன்னன்) திருடாதே பாப்பா திருடாதே(திருடாதே) சின்னப் பயலே சின்னப் பயலே சேதிகேளடா(அரசிளங்குமரி) குறுக்குவழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா(மகாதேவி) பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போகமாறுது”(சக்கரவர்த்தித் திருமகள்) போன்ற பாடல்கள் எம்.ஜி.ஆரின் சல்லிவேர்கள் பரவுவதற்கான பாதையைப் பதப்படுத்தின.
ஆணுக்கும் பெண்ணுக்குமான சுகம் என்பது சுயசுகத்தோடு முடிந்து போவதல்ல. தாம்பத்யம் என்பது பெண்ணுடல் கொண்டு தன்னுடல் நிரப்புவதல்ல.அதுபோல் ஆணுடல்கொண்டு பெண்ணுடல் நிரப்புவதுமல்ல. ஆண் தன்னை உருக்கிப் பெண்ணை நிரப்புவதும் பெண் ஒரு ஆணை நிரப்பத் தன்னைப் பெருக்குவதும் தாம்பத்யத்தின் இருபாற் தத்துவம். கொடுத்துப் பெறுதல் அல்லது பெற்றுக் கொடுத்தல். இழந்து கொண்டே அடைதல்;அல்லது அடைந்துகொண்டே இழத்தல் என்பதே தாம்பத்யத்தின் தத்துவம். எதிர் உயிரைப் பெருமை செய்வதுதான் இணைவிழைச்சின் இன்பம்.
பட்டுக்கோட்டை எழுதுகிறான்:
“இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்”
நான் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன வரிகளுள் இதுவும் ஒன்று.
தங்கத்தின் மூலக்கூறு பிரித்தால் கடைசிவரைக்கும் தங்கம்தான். பட்டுக்கோட்டையின் பாட்டுக்கூறு பிரித்தால் அவன் காதல்வரைக்கும் கம்யூனிஸ்டுதான்.
அவன் பாடல்களில் பெரிய அலங்காரமில்லை. மேக மந்தைகள் நட்சத்திரங்களை மேயும் கற்பனைகளில்லை.தமிழ்மரபுக்குரிய கட்டமைவு அமைந்தது;கருத்தமைதி இருந்தது.
இருபெருங்கூறுகளில் பட்டுக்கோட்டை பெரிதும் கவனம் செலுத்தியதாய்க் கருதுகிறேன். ஒன்று முறியாத மோனை. இரண்டு காதுக்குள் இனிக்கும் கடைஇயைபு.
“மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில்
வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு
செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பதுபழைய
பொய்யடா”
இதில் ‘மனிதனாக’ என்பதற்குத் தனியுடைமை என்று எதுகையுமிட்டு, முறியாத மோனைகளையும் அமைத்த பாவலன், “வையடா-கையடா- செய்யடா- பொய்யடா.“ என்று கடைஇயைபுகளையும் கச்சிதப்படுத்தியிருப்பதுதான் கட்டமைதி.
ஒரு பாடல் அல்லது ஒரு படைப்பின் வீரியம் கவிஞன் இறந்த பிறகும் அது எத்தனை காலம் இறவாமல் இறக்கிறது என்பதுதான். பட்டுக்கோட்டையின் பல பாடல்களுக்கு மரணமில்லை. அவை நிகழ்காலத்தின் நீரோட்டத்தில் வாழ்கின்றன.
“பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லே
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
பொதுப் பணியில் நினைவில்லே
போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லே“
1959-ல் எழுதப்பட்ட இந்தப்பாட்டு நிகழ்கால அரசியலுக்கும் நெருக்கமாக இருப்பது தற்செயலானதல்ல.
இருபத்தொன்பது வயதில் இறந்து போனவனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. அவன் எழுதிய கடைசிப் பாடலுக்குரிய பணத்தைக் கையோடு கொண்டுவருகிறார் நடிகை பண்டரிபாய். பணத்தை வைத்துவிட்டு அழுதவர் அவன் எழுதிய கடைசிப் பாடலைப் படித்துப் பார்க்கிறார்.
“தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கிவிடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான்- இதப்
புரிஞ்சுக்கிட்டவன் அழமாட்டான்” -புரிந்த பிறகும் அழுகை வருகிறது.
ஒரு படைப்பாளியின் பணியென்பது கலைசெய்வதும் களிப்பூட்டுவதும் மட்டுமல்ல. தன் எழுத்தால் இந்தச் சமூகம் மேம்பட்டதா, மனித மனங்களின் கசடு கழிந்ததா, பண்பாடு பரிமாணமுற்றதா என்றுதான் ஒரு கலைவல்லான் கணக்குப் பார்க்கிறான். அப்படிக் கணக்குப் பார்த்த பட்டுக்கோட்டைக்குக் கவலையே விஞ்சியது. விரக்தியின் விளிம்பில் சலித்த வார்த்தைகளில் சம்பவிக்கிறது ஒருபாட்டு
“சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகள் எழுதி எழுதி வச்சாங்க
எல்லாம்தான் படிச்சீங்க என்னபண்ணிக் கிழிச்சீங்க”கடுமையான மொழியில் கொடுமையான கேள்வியிது.
கேட்கப்பட்ட காலத்தின் சூட்டோடு இப்போதும் பட்டுக்கோட்டையின் கேள்வி அப்படியே தகித்துக்கிடக்கிறது. சமூகம்தான் விடைகாண வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
உலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கு...
-
பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வ...
-
தொலைந்து போன கதை சொல்லிகள்...! ஆர்.ஜெயசீலன், துணை தாசில்தார், வேதாரண்யம். “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவன் மகளை ஒரு மந்திரவாதி தூக்கிட...
-
செங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...
-
அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள...
-
பொருநைக் கரையில் அரேபியக் குதிரை அ.பாஸ்கர பால்பாண்டியன், தொல்லியல் அறிஞர் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த புகழ் மிக்க காலத்தில் புண்ணிய...
No comments:
Post a Comment