Saturday, 6 October 2018

சுவாசிப்பதைப் போல் வாசியுங்கள்

கலை, அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. எனவே ஒரு துறையில் நுழையும் முன் ஓர் இளைஞனுக்கு அது குறித்த தெளிவான நூலறிவு வேண்டும். தமிழ் இலக்கியத் துறையில் சாதிக்க நினைப்பவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு, திருக்குறள் போன்ற நூல்களைக் கற்றுத் தெளிவு பெற்றிருக்க வேண்டும். மின்சாரத்தில் ஆராய்ச்சி செய்ய விரும்பும் மாணவன், மைக்கேல் பாரடே, பெஞ்சமின் பிராங்ளின், ஓம்ஸ், ஓல்டாஸ், கூலூம், வாட், மேக்ஸ்வெல் போன்றவர்களின் நூல்களைப் படித்திருக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் பல ஆண்டுகள் படித்த பின்னரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் செம்மையாகப் பேசத் தெரியவில்லை என்பதற்கு, நூல் வாசிப்பு இல்லாததுதான் காரணம் என்று தயக்கமின்றிக் கூறிவிடலாம். மதிப்பெண் வாங்க எவற்றைப் படிக்க வேண்டுமோ அவற்றை மட்டும் படிப்பது பொது அறிவையும் மொழி அறிவையும் வளர்க்க உதவாது. பள்ளிப் பாடங்களுக்கு வெளியே பரந்து விரிந்து கிடக்கும் புத்தக உலகத்தில் நடமாடத் துணிய வேண்டும். அங்கு குவிந்து கிடக்கும் நூல்களைப் படித்துச் சுவைத்து பயனடைய வேண்டும். பொன்னான நேரத்தை தரமான நூல்களை வாசிப்பதில் செலவிடுதல் நல்ல முதலீடு ஆகும். உங்களை புத்தகப்புழு என்று யாராவது கிண்டல் செய்தால், மகிழ்ச்சி அடையுங்கள். பலரும் புத்தகப்புழுவாக இல்லாமல் சினிமா புழுவாகவும், கிரிக்கெட் புழுவாகவும், கம்ப்யூட்டர் கேம் புழுவாகவும், வெட்டிப் பேச்சு புழுவாகவும் இருப்பதால்தான் இந்தச் சமுதாயம் பின்தங்கிவிட்டது. அப்படி புத்தகப்புழு என்று அழைக்கத் தகுதி பெற்றவர்கள் இங்கு அதிகமாக இல்லை. அவ்வாறு இருந்துவிட்டால் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றுதான் நான் கூறுவேன். அவர்கள் நூல் படிக்காதவர் களைவிட அறிவிலும், பண்பிலும், சமூக அக்கறையிலும் சிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். நல்ல நூல்களை யாராவது நமக்கு அறிமுகம் செய்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். அவை, உங்களது பெற்றோருக்குத் தெரியாமல் போயிருக்கலாம், நண்பர்களுக்கு அதில் நாட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம், பள்ளி, கல்லூரிகளில் அவற்றின் அவசியம் இல்லாமல் போயிருக்கலாம். எனவே நல்ல நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படிக்கும் பொறுப்பு உங்களுடையதுதான். கேரளத்தில் ஒவ்வொரு ரெயில் பயணியும் ஒரு செய்தித்தாளை வாங்கிப் படிப்பதைப் பார்க்கலாம். கல்வியிலும், வாழ்க்கைத் தரத்திலும், உடல் ஆரோக்கியத்திலும், வெளிநாடுகளில் வருவாய் ஈட்டுவதிலும் கேரள மக்களுக்கு நிகர் அவர்களே என்ற நிலை உருவாகியிருப்பது, வாசிப்புப் பழக்கத்தால்தான். இளைஞர்களுக்கு ஏன் நூல் வாசிப்பில் நாட்டமில்லை என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை, நூல் வாசிப்பின் உண்மையான அவசியம் அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா அல்லது ஒரு வேலை கிடைக்க இது அவசியமில்லை என்று நினைக்கிறார்களா? அவர்கள் கண்ட வெற்றி பெற்ற மனிதர்கள் வாசிப்பதில்லை என்பதாலா அல்லது வாசிப்பு கல்வி நிலையங்களில் ஊக்குவிக்கப் படுவதில்லை என்பதாலா? வாசித்துப் பொருள் காண்பது கடினமான காரியம் என்பதாலா அல்லது என்னதான் வாசித்து அறிவை வளர்த்தாலும் அவனவன் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கையாலா எனத் தெரியவில்லை. உண்மையில், நல்ல நூல்களைப் படித்து முடித்ததும் கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. உண்பதிலும், பொழுதுபோக்கிலும், நகைச்சுவையிலும், அரட்டையிலும் மகிழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு, நல்ல நூல்களைப் படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இன்னும் புலப்படவில்லை. ஏனென்றால், நம்மில் பலருக்கு இன்னும் அந்த அனுபவம் கிட்டவில்லை. பத்திரிகைகளையும் நூல்களையும் வாசித்து அறிவார்ந்த வாழ்க்கை வாழாதவர்களின் வாழ்க்கைத் தரம் கற்கால மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தைப் போல பரிதாபமாகத்தான் இருக்கும். அவர்களிடம் செல்வமும், பதவியும் இருந்தாலும் சரி. ஒரே ஆண்டில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியமைக்க ஒரு திட்டம் வகுத்துத் தாருங்கள் என்னிடம் யாராவது கேட்டால், ‘மாணவர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் நூல் வாசிக்க வேண்டும்’ என்பேன். அப்படி ஓர் ஆண்டு இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தால் இளைஞர்களின் சிந்தனை, மொழியறிவு, அறிவியல் அறிவு, மனிதப் பண்பு, மனப்பான்மை, சமூக அக்கறை ஆகியவற்றில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும். இன்றைய வாசகர் நாளைய தலைவர் என்பார்கள். வாசித்தலால் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியால் பலர் தலைவர் ஆகிவிடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்கள். உடலுக்கு உடற்பயிற்சி போன்றது, மனதுக்கு வாசித்தல். நல்ல நூல்கள் நம்முடன் பேசும். வாசித்தலும் ஓர் உரையாடல்தான். தினமும் நேரம் ஒதுக்கித்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. எப்போதும் கையோடு ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்றால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கலாம். ஒருவரைப் பார்க்கக் காத்திருக்கும்போதும், விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போதும் வாசிக்கலாம். இப்போதெல்லாம், கைபேசியில் நூல்களை ஒலி வடிவில் நாம் கேட்க முடிகிறது. அதற்கு ‘ஆடியோ புக்ஸ்’ என்று பெயர். எந்த முறையில் என்றாலும், ஒரு நூல் கருத்தை அறிந்தபின், அதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், உண்டபின் செரிக்காமல் தவிக்கும் நிலை போலாகிவிடும். அமைதியாக வாசிக்கலாம் என்றாலும், அவ்வப்போது உரக்க வாசித்துப் பார்க்க வேண்டும். இதனால் எழுத்துகளை சரியாக உச்சரிக்கப் பயிற்சி கிடைக்கும். நம்மைத் திருத்திக்கொள்ளவும், வெகு நேரம் பேசவும் அது உதவும். வாசிப்பதற்கு கண் பார்வை சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கண்கள் சிரமப்படும், தலைவலி கூட ஏற்படக்கூடும். எனவே மாணவர்கள் கண்களை உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவை என்றால் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். நல்ல நூல்களைப் படித்தால் நமது உடலிலும் மனதிலும் அறிவிலும் அதிசய மாற்றம் நிகழ்வதை நாமே உணருவோம். நல்ல நூல்கள் என்பன எவை என்ற கேள்வி எழும். அதுகுறித்து அத்துறை சார்ந்த அறிஞர்கள், புத்தக வாசிப்பு ஆர்வம் உள்ளவர் களிடம் கேட்கலாம். வெற்றுச்சிப்பிகள் மலிந்துகிடக்கும் கடலில் முத்தைத் தேடுவது கடினம்தான். ஆனால் அந்தத் தேடலுக்கு உரிய பலன், நல்ல நூல்களைப் படித்து அறிவதால் கிட்டும். சிறந்த நூல்களை ஆசைப்பட்டு வாங்கிவிட்டு, அவற்றைப் படிக்காமல் செல்லரிக்க விடுவதும் மோசம்தான். எனவே, வாங்கி வைத்திருக்கும் நூல்களை முதலில் படித்து முடியுங்கள். வாசிப்பதால் நமது எழுத்து மேன்மையடையும், எழுத்தால் நமது வாசிப்பு மேன்மையடையும். இவை இரண்டு செய்தால் நம் சிந்தனை மேம்படும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அவர் களுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இடவசதிக்கு ஏற்ப ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவே நம் பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய சொத்து என உணர வேண்டும். வாசிப்பின் உன்னதம் உணர்வோம்... உயர்வோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts