Sunday 5 August 2018

மரம் செய்ய விரும்பு

மரம் செய்ய விரும்பு கவிஞர் பிரைட் பூக்களின் புன்னகை ரசிக்க தெரிந்த உங்களுக்கு, அதன் இதழ்களை இம்சை செய்ய எப்படி உள்ளம் துணிகிறது? இயற்கை அழிக்கப்பட்ட உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் வண்ணம் தீட்டப்படாத ஓவியம்போல் சப்பென்றிருக்கும். இயற்கையால் மனிதன் அடையும் பயன்கள் ஏராளம் ஏராளம். தாய் வரம் தர மறுப்பதுண்டு. என்றாவது தாவரம் தர மறுத்ததுண்டா? தாவரங்கள் உணவுக்கு விருந்தாகிறது. உடலுக்கு மருந்தாகிறது. வீட்டுக்கு விறகாகிறது. வயலுக்கு உரமாகிறது. கதவுக்கு நிலையாகிறது. கலைமிகுந்த சிலையாகிறது, வெயிலுக்கு நிழலாகிறது, மீன் பிடிக்கும் படகாகிறது. முடமானவரின் காலாகிறது, வயதானவர் கைக்கோலாகிறது, காதலருக்கு கட்டிலாகிறது, குழந்தைகளுக்கு தொட்டிலாகிறது, உத்தரமாகிறது, மத்தளமாகிறது. இப்படி தன்னையே மனிதனுக்கு அர்ப்பணிக்கும் மரங்களை அழிப்பதற்கு எப்படி இதயங்கள் ஒப்புக் கொள்கிறது? முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல். மனிதகுலம் வாழ மழையை கொடுக்கின்றன மரங்கள். எனவே அவைகளை மாரிவள்ளல் என்றுகூட நாம் புகழலாம். மிதமிஞ்சிய சீதோஷ்ண நிலையை மிதப்படுத்தி வானமண்டலத்திலுள்ள மழையை வையகத்திற்குக் கொண்டுவரும் மகத்தான பணியைச் செய்து கொண்டிருப்பது மரங்கள்தானே? மேலும் மரங்கள் தங்கள் வேர்களின் மூலம், கனமழையினாலும், பெருங்காற்றாலும் மண் அரித்து செல்லப்படாமல் பாதுகாக்கின்றன. மலைகளில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கின்றன. மரங்களிலுள்ள இலைகள் மழைத்துளிகள் பூமியில் வேகமாக விழுவதை தடுப்பதால் ஓரிடத்திலுள்ள சத்துமண் வேறொரு இடத்திற்கு அரித்து செல்லப்படுவது தடுக்கப்படுகிறது. பூகம்பங்கள் ஏற்படுவதற்கு மண் அரிமானமும் ஒரு காரணம் என்று அறிவியல் கண்டுபிடிப்புகள் சொல்லிய பின்னும், மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லையென்றால், வீதியில் போகிற சனியனை விலை கொடுத்து வாங்குகிறோம் என்றே அர்த்தம். குழந்தை மார்பகங்களை கடித்தாலும் கடைசிவரை பாலூட்டி மகிழ தயங்காதகுணம் படைத்தவளே அன்னை. மரங்கள்கூட அப்படித்தான். நாம் வெட்டி அழித்தாலும் நம்மை பல ஆபத்துக்களினின்று காப்பாற்றியே வருகின்றன. தொழிற்சாலைகள், டீசல், பெட்ரோல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஆகியவற்றினின்று வெளியேற்றப்படும் கழிவுப் புகைகள் மிகவும் ஆபத்தானவை. புகையில் கலந்துள்ள கார்பன் சேர்மங்கள் காற்றுமண்டலத்தையே அசுத்தப்படுத்துகின்றன. கிட்டதட்ட வளிமண்டலத்தில் விஷத்தை விதைக்கின்றன என்றே சொல்லே வேண்டும். விஷத்தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால் நமது உடலில் விதவிதமான நோய்கள் முளைக்கக்கூடும். இந்த கார்பன் கூட்டுப் பொருட்களைத்தான் தாவரங்கள் தனது உணவாக ஸ்டார்ச் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக எடுத்துக்கொள்கின்றன. ஆக மனிதன் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு மரங்களே மறைமுகமாக உதவி வருகின்றன. தொழிற்சாலைகளும், வாகனங்களும் நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தக்காலத்தில், மரம் வளர்ப்பதை நாம் புறக்கணித்துவிட்டால், நம் கண்ணை நாமே குத்திக்கொண்டதற்கு சமமாகி விடும். அப்படியானால் தாவரங்களையே உபயோகப்படுத்தாமல், உலகில் நாம் உயிர் வாழ முடியுமா? முடியாதுதான். ஆனால் நாம் மனசுவைத்தால் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் தாவரங்களைப் பயன்படுத்த முடியும். ஆடம்பர விஷயங்களுக்காக அவைகளை பலியாக்காமலிருந்தாலே போதும். நமது எதிர்கால சந்ததியினருக்கு சொத்துக்களைச் சேமித்து வைப்பதில் மட்டும் புண்ணியமில்லை. சுத்தமான காற்றையும், வற்றாத மழையையும் சேகரித்துவைப்பதும் நமது கடமையாகும். அத்தியாவசியத் தேவைகளுக்காக மரங்களை வெட்ட நேர்ந்தாலும், வெட்டிய இடங்களிலெல்லாம் புதிய மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமே அது சாத்தியமாகும். ஒருமுறை ஜோத்பூர் மகாராஜா புதிய அரண்மனை ஒன்றை கட்ட ஆசைப்பட்டார். அரண்மனைக்கு தேவையான மரங்களை வெட்டிவரச் சொல்லி தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். வீரர்கள் பிஷ்னோயி என்னும் கிராமத்தை முற்றுகையிட்டனர். அம்ரிதாதேவி என்பவள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவள். வீரர்கள் மரங்களை வெட்டுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெட்டப்படடுகின்ற மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு மேலும் வெட்டவிடாமல் தடுத்தாள் அவள். ஆத்திரமடைந்த வீரர்கள் அம்ரிதாதேவியை வெட்டிச்சாய்த்தனர். அவளது மூன்று பிள்ளைகளையும் அவ்வாறே கொன்று குவித்தனர். செய்தியறிந்த பிஷ்னோயி மக்கள் வெகுண்டெழுந்தனர். இயற்கையை பாதுகாக்க படைவீரர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். சண்டையில் முன்னூறுக்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்த மன்னன் மனம் மாறி மரங்களை வெட்டுவதில்லை என அப்போதே முடிவு செய்தான். அன்று பிஷ்னோயி மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு இன்று நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டாமா?

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts