Sunday, 5 August 2018

படிக்கட்டு பயணம்...! பதைபதைப்பு மரணம்...!

படிக்கட்டு பயணம்...! பதைபதைப்பு மரணம்...! முனைவர்.செ.சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி.(ரெயில்வே) தமிழகத்தில் தினமும் சுமார் 2.5 லட்சம் பேர் ரெயில்களில் பயணிக்கிறார்கள். பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்கவே ரெயில் பயணம் என்றாலும், சில நேரங்களில் ரெயிலிலும் அசம்பாவிதங்கள் நடந்துவிடுவதுண்டு. இதனால் சிலருக்கு ரெயில் பயணம் இன்பமான நினைவுகளாக அமைவதில்லை. காலதாமதமாக வந்து, ரெயில் புறப்பட்டபின் ஏற முயற்சிப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ரெயில் மெதுவாகத்தான் புறப்படும். ஆனால் அதன் வேகம் படிப்படியாக அதிகமாகிக் கொண்டே போகும். அதன் விசைமாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. ஏற முனைபவரின் கைகள் கைப்பிடியை பற்றிக்கொள்ளும். ஆனால் கால்கள் ஒத்துழைக்காது. ரெயிலுக்கும் நடைமேடைக்குமிடையே கால்கள் மாட்டிக்கொள்ளும். இதில் சிலர் மரணமடைந்திருக்கிறார்கள், பலரின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஓடும் ரெயிலில் ஏறுவதை விட்டுவிட்டு, ரெயில் நிலையத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிடுங்கள். ரெயிலில் நீங்களும் குழந்தைகளும், ரெயில்பெட்டிக் கதவைத் திறந்து அங்கேயே நின்று வேடிக்கைப் பார்க்காதீர்கள். ஓட்டுநர் திடீரென்று வேகத்தை குறைக்கும்போது கதவு வேகமாக அடைத்து உங்களை வெளியில் தள்ளிவிடும். ஓடும் ரெயிலில் இருந்து விழுந்தால் பலமாக அடிபடுவதோடு உயிரிழப்பு நேரிடவும் வாய்ப்புண்டு. சமீபத்தில் ஒருவர் இரவு நேரத்தில் ரெயில் கதவை கழிவறை வாசல் என்று நினைத்து, திறந்து வெளியே விழுந்து இறந்து போனார். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கவும் மின்சார ரெயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உரிய நேரத்துக்கு போக வேண்டும் என்பதற்காக கூட்டத்தோடு கூட்டமாக முண்டி அடித்துக்கொண்டு ரெயில் ஏறி, படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற சூழல்களை தவிர்க்க வேண்டுமென்றால் வீடுகளில் இருந்து முன்கூட்டியே கிளம்ப வேண்டும். ஏனென்றால் படிக்கட்டு பயணம் எப்போதும் ஒரே போல இருக்காது. கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை மெய்பித்த நிகழ்வுகள் பல உண்டு. கடந்த 2 நாட்களில், சென்னை பரங்கிமலையில் அடுத்தடுத்து நடந்த இருவேறு ரெயில் விபத்துகளில் மாணவர்கள் உள்பட 6 பேர் பலியான சம்பவமும் அதைத்தான் காட்டுகிறது. அவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததால் விபத்தை சந்திக்க நேரிட்டுள்ளது. எந்த நொடியும் மரணம் நேரிடும் வாய்ப்பிருக்கும்போது, நாம் நிச்சயம் படிக்கட்டு பயணத்தை தவிர்த்தே ஆக வேண்டும். ஆங்கிலேய அரசு 1856-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில் சேவையை சென்னை ராயபுரத்தில் ஆரம்பித்த நாள் முதல் இரவில் திருட்டு என்பதும் தொடர்கதையாக இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் நேர்மையும், மனிதாபிமானமும் எல்லாரிடத்தும் வந்துவிடவில்லை. ரெயிலில் திருடுவதை தொழிலாகக் கொண்ட பல குற்றவாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரெயிலில் பயணித்து திருடுவார்கள். இவர்களை எத்தனை முறை சிறையில் அடைத்தாலும், வெளியில் வந்து திருட ரெயிலில் ஏறுகிறார்கள். உங்களது பையை அப்படியே எடுத்துவிடுவார்கள், அல்லது நகை மற்றும் பணம் வைத்திருக்கும் பையை மட்டும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இது குளிர்சாதன பெட்டியிலும் நடக்கும். நாகரிக உடையணிந்து கவுரமான மனிதர் போல காட்சியளிப்பவன், பெரிய திருடனாகக்கூட இருப்பான். அவன் சர்வதேச பள்ளியிலும் படித்திருப்பான், பல பட்டங்களும் பெற்றிருப்பான், ஆங்கிலமும் சரளமாகப் பேசுவான். அவனது தந்தை கூட ஒரு ரெயில் திருடனாக இருப்பான். இப்படிபட்டவர்களை நல்லவர்கள் என்று எண்ணி, அலட்சியமாக இருந்து பாதுகாப்பை தளர்த்திவிடாதீர்கள். நீங்கள் தூங்கும்போது, உங்கள் உடைமைகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கிவிடுவான். விலை மதிப்பான பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லாதீர்கள் என்று நாங்கள் சொல்வது சிறப்பாக இருக்காது. அந்த அறிவுரை விமர்சனம் செய்யப்படும். இருந்தாலும் குடும்பத்தின் அனைத்து நகைகளையும் ஒரு பையில் எடுத்துச் செல்ல வேண்டுமா என்று நீங்கள் பலமுறை சிந்திக்க வேண்டும். ஒருவேளை அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு செல்லத்தான் வேண்டும் என்றால், ஒருவராவது தூங்காமல் இருந்து நகையை பார்த்துக்கொள்ள வேண்டும். நான்கு பேர் பயணிக்கிறீர்கள் என்றால், ஆளுக்கு 2 மணி நேரம் மட்டும் தூங்காமல் பொருளை பாதுகாத்துக் கொண்டால் விடிந்துவிடும். நகையும் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல இன்னொன்றும் செய்யலாம், ஒரு உறுதியான பெட்டியில் (சூட்கேஸ்) பொருளை வைத்து பெட்டியை சங்கிலியால் பிணைத்துப் பாதுகாக்கலாம். அப்போது திருடன் பெட்டியை தூக்கிச் செல்ல முடியாமல் போய்விடும். ரெயிலில் உங்களோடு பேச்சுக் கொடுத்து நண்பர்களாகி அந்த நட்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் வைத்திருக்கும் குளிர்பானத்தை உங்களுக்குத் தரலாம். மயக்க மருந்தை பிஸ்கட்டில் கூட கலந்து தந்துவிடுவார்கள். இந்த ‘பிஸ்கட் பண்டிட்டுகள்’ உங்கள் குடிதண்ணீரில் கூட மயக்க மாத்திரை கலக்கக்கூடும். எனவே, எச்சரிக்கையாக செயல்படுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் எதையும் வாங்கி உண்ணாதீர்கள், அது ஆபத்தில் முடிந்துவிடும். கைப்பேசிகள் திருட்டுதான் சாதாரணமாக நடக்கும் திருட்டு. ஆனால் இன்று கைப்பேசி நமக்கு சாதாரணமானது அல்ல. அது நகை, பணத்தை விட மதிப்பு மிக்கதாக இருக்கிறது. கைப்பேசியை சார்ஜ் போட்டுவிட்டு, கழிவறைக்குச் சென்று திரும்பும்போது கைப்பேசி அங்கு இருக்காது. நடைபாதைக்கு அருகில் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தாலும் கைப்பேசி மாயமாகி விடும். இரவில் கைப்பேசியை மேடையில் வைத்து தூங்கினாலும் காலையில் அது காணாமல் போகலாம். கைப்பேசியை பாதுகாப்பாக மறைவாக வைத்திருப்பதுதான் சிறந்தது. கால்சட்டையில் ரகசிய பை ஒன்றை தைத்துக்கொள்ளலாம், அதில் செல்போன், பர்ஸ் போன்றவற்றை வைத்து இரவில் தூங்கலாம். பெண்கள் ஜன்னலோரமாக தலையை சாய்த்து ஓய்வெடுக்கும்போதுதான் நகை பறிப்பு திருடன் கைவரிசை காட்டுவான். இது ரெயில் நிலையத்தில் நடக்கிறது. எனவே பெண்கள் ஜன்னல் ஓரம் தலை சாய்வதை தவிர்க்க வேண்டும். ரெயில் பயணத்தில் சில நேரங்களில் குழந்தைகள் காணாமல் போக நேரிடும். குழந்தைகளை கையைப் பிடித்து கவனமாக அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தை காணவில்லை என்றால் காவலரிடமோ, டிக்கட் பரிசோதகரிடமோ உடனே தெரிவித்து விடவேண்டும். பயணிகள் இந்த குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், விபத்து இல்லாத பயணத்தை பெறலாம்; திருடனுக்கு திருடும் வாய்ப்பு இல்லாமல் போகும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts