Friday, 31 August 2018

கபடியின் தாயகம் தடுமாறலாமா?

கபடியின் தாயகம் தடுமாறலாமா? ஜல்லிக்கட்டும், கபடியும் தமிழர்களின் வீரத்தை உலகம் முழுவதும் ஒளிரச் செய்துகொண்டு இருக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளாகும். இன்றைக்கு சர்வதேச அளவில் கபடியின் தாயகமாக இந்தியா விளங்குவதற்கு தமிழகம் தான் காரணம். ஏழைகளின் விளையாட்டாக கருதப்படும் இந்த போட்டியில் வெற்றிகரமாக ஜொலிக்க வேகம், விவேகம், ஆற்றல் மட்டுமின்றி சமயோசித அறிவும் அத்தியாவசியமானதாகும். ஒரு கால கட்டத்தில் ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக பார்ப்பதே அரிதாக இருந்த கபடி போட்டியில் புரோ கபடி லீக் வருகைக்கு பின்பு, திறமை மிக்க வீரர்களால் கோடிகளை கூட குவிக்க முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதுடன், போட்டியின் புகழும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது என்றால் மிகையாகாது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டான கபடி (ஆண்கள்) 1990-ம் ஆண்டு பீஜிங்கில் (சீனா) நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அறிமுக ஆட்டமாக இடம் பிடித்தது. முதல் போட்டி தொடரிலேயே இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தது. அந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து கொடுத்தது கபடி மட்டுமே. மற்ற எந்த போட்டியிலும் தங்கம் கிட்டவில்லை. அறிமுக போட்டி முதல் ஆசிய விளையாட்டில் இந்திய கபடி அணியின் ஆதிக்கம் உச்சத்தில் கொடிகட்டி பறந்தது. தொடர்ச்சியாக இந்திய அணி 7 தங்கப்பதக்கங்களை தனதாக்கி மகிழ்ந்தது. இதேபோல் 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக அங்கம் வகித்த பெண்கள் கபடியில் இந்திய அணி தொடர்ந்து 2 முறை தங்கப் பதக்கத்தை உச்சி முகர்ந்தது. கபடி என்றாலே அதற்கு இந்தியாதான் ராஜா என்றளவுக்கு நம் ஆதிக்கம் தொடர்ந்தது. எனவே இந்தோனேஷியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் கபடியின் முடிவு நமக்கு தித்திப்பை தரும் என்று எண்ணிய கபடி ரசிகர்களுக்கு ஏமாற்றமும், எரிச்சலும் தான் மிஞ்சி இருக்கிறது. ஆண்கள் கபடியில் இந்திய அணி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் தங்கம் தவறி வெண்கலமாகி போனது. லீக் ஆட்டத்தில் 23-24 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி, அரைஇறுதியில் 18-27 என்ற புள்ளி கணக்கில் ஈரானிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதேபோல் இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டியில் 24-27 என்ற புள்ளி கணக்கில் ஈரானிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றது. இந்திய கபடி அணிகளின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருப்பதுடன், ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியர்களுக்கு அதிர்ச்சி தந்த இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, புரோ கபடியின் வருகை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் புரோ கபடி அறிமுகம் ஆன பிறகு இந்திய கபடி சம்மேளனத்தை கைப்பற்ற பலரும் படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர். கபடி சம்மேளன நிர்வாகத்துக்கு எதிராகவும், இந்திய அணி தேர்வு குறித்தும் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளால் ஏற்பட்ட குழப்பமும் வீரர்களை மனதளவில் பாதித்து இருக்கலாம். ஏனென்றால், வழக்கு விவகாரத்தினால் போட்டியை நேரில் காண கபடி சம்மேளன நிர்வாகிகளால் செல்ல முடியாமல்போனது. ஒருவேளை அவர்கள் அதிகம் பேர் சென்று இருந்தால் அது வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்து இருக்கக்கூடும். போட்டி முடிவும் இந்தியர்கள் கொண்டாடும் விதமாக இருந்திருக்கலாம் என கபடி சங்கத்தினர் கருதுகிறார்கள். மேலும், நமது அணியின் தடுப்பு (டிபன்ஸ்) ஆட்டத்தில் பலவீனத்தை பார்க்க முடிந்தது. ‘சூப்பர் டேக்கிள்’ (1 முதல் 3 வீரர்கள் இருக்கையில் எதிரணி ரைடரை வெற்றிகரமாக பிடிப்பது) செய்ததில் ஈரான் அணியினர் சிறப்பாக செயல்பட்டதை மறுக்க முடியாது. நமது வீரர்களின் ஆட்ட வீடியோ காட்சிகளை பார்த்து ஈரான் நன்றாக தயாராகி இருந்திருக்கிறார்கள். கபடியில் கர்ஜிக்கும் சிங்கமாக வலம் வந்த நமது அணி சற்றே மேலோங்கிய மெத்தனத்தை கைவிட்டு இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஏனென்றால் போட்டிக்களத்தில் இறுதி வரை போராடுபவர்களுக்குத்தானே வெற்றி கிட்டும்! அணி தேர்விலும் அரசியல் புகுந்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுவும் நம் வெற்றியை பறித்ததில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அதாவது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்படுவதால் அவர்களால் போதிய பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, ஆசிய போட்டிக்கான இந்திய அணியில் கபடியில் துடிப்பு மிக்க தமிழகத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் யாரும் இடம் பெறவில்லை. தமிழக வீரர் ரஞ்சித், வீராங்கனை ஜீவிதா ஆகியோர் 3 கட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றும் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது வேதனைக்குரியது மட்டுமின்றி விவாதத்துக்கும் உரியது. போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றாலும் நம்மால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டத்தில் நாம் கண்ட தோல்வியை நமக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக எடுத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் ஒலிம்பிக்கில் 8 முறை தங்கத்தை தனதாக்கிய இந்திய ஆக்கி அணி தற்போது பதக்க மேடை பக்கத்தில் கூட செல்ல முடியாமல் தடுமாறும் நிலையை கபடி அணியும் சந்திக்க நேரும். கபடியின் தாயகம் இப்படி தடுமாறலாமா? -ராஜ்

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நினைவில் வாழும் டயானா

நினைவில் வாழும் டயானா முனைவர் ரா.ராஜேஸ்வரி சுப்பையா இன்று (ஆகஸ்டு 31-ந்தேதி) வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவு நாள். வரலாற்றில் எழுதி முடிக்கப்படாத முற்றற்ற கதையின் ஒப்பற்ற நாயகி டயானா பிரான்செஸ் ஸ்பென்சர். இவர், 1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி, நோர்ப்போர்க் எனும் இடத்தில் பிறந்தார். இவரது ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரசக் குடும்பத்துடன் நெருக்கமாக நட்பு கொண்டிருந்தனர். இவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். இவரது எட்டு வயதில் பெற்றோர் பெற்ற திருமணத்தடையால் தாய் மற்றும் தந்தையிடம் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டார். இசையிலும் நடனத்திலும் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தார் டயானா. அரசக் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த ஸ்பென்சர்ஸ் குடும்பத்தின் வழித்தோன்றலான டயானா, பிறப்பு முதல் அன்பிற்காக உருகியதை அவர் வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பறைசாற்றுகின்றன. அழகு, புன்னகை, புதுமை என்று தன்னை எப்போதும் புறத்தில் புதுப்பித்துக் கொண்டே இருந்தவர், அகத்தில் அழுது கொண்டிருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? எலிசபெத் மகாராணியின் செயலரையே இவரது அக்கா திருமணம் செய்திருந்தார். தன் அக்காவை பார்க்கச்செல்லும் இவர், அவ்வப்போது அரசவிழாக்களிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இளவரசர் சார்லசை இவர் பார்த்தது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் தான். தனது திருமணத்தை வெகுநாட்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த இளவரசர், டயானாவை பார்த்ததும் மனம் மாறினார். இளமைக் காலங்களில் மெய்யான அன்பிற்காக ஏங்கிய டயானா, சார்லசின் காதலை ஏற்று, இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணத்திற்குக் காரணி ஆனார். 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் நாள் டயானாவுக்கும் வேல்ஸ் இளவரசர் சார்லசுக்கும் புனித பால் தேவாலயத்தில் திருமணம் நடந்தேறியது. அரசக் குடும்பத்தின் அங்கமானார் இந்த அழகுச்சுரங்கம். இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். டயானாவின் புகழும் உயரத் தொடங்கியது. இவரது புன்னகையும் தினசரிகளுக்குத் தீனியானது. இவரது அசைவுகள் ஒவ்வொன்றும் ஊடகங்களில் தலைப்புச்செய்தியானது. இவர் புகைப்படங்கள் நாளிதழ்களை நாள்தோறும் நிரப்பின. பொதுவாக அரசக் குடும்பத்தினர் வெளியுலகத்தினருடன் தொடர்பின்றி இருப்பர். ஏதாவது முதன்மை விழாக்களில் மட்டுமே அவர்களது முகங்கள் தெரியும். ஆனால் டயானா, குடிசை முதல் கோபுரம் வரை சுற்றி வந்தார். தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் குட்டியரசர்கள் எனக் கூண்டுக்குள் ஒடுக்காமல் (அரசக் குடும்பத்தினர் வீட்டிலேயே கற்பதே மரபு) மரபை மாற்றினார். பள்ளிக்குச்சென்று படித்தலே பக்குவம் தருமெனக் கருதினார். இந்நிலையில், தன் கணவரின் மற்றொரு பெண்ணுடனான தொடர்பையறிந்து மனமுடைந்து போனார். தற்கொலைக்கும் முயன்றார். தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை சகிக்க முடியாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எய்ட்ஸ் நோயாளியிடம் கை குலுக்குதல், தொழுநோயாளியிடம் நலம் விசாரித்தல் எனப் பிணியுடையோரிடமும் பிணக்கின்றிப் பழகினார். அந்த சமயத்தில் நேர்காணல் ஒன்றில், ‘நான் ராணியாக விரும்புகிறேன். ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல. மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று டயானா கூறியது வையம் முழுவதும் வைரலாகப் பரவியது. கருத்து வேறுபாடுகள் மிகுதியான சூழலில், பல வினாக்களுக்கு விவாகரத்து ஒன்றே, ஒரே விடையாகப்பட்டது; தம்பதியர் விடைபெற்றனர். இந்நிலையில் டோடி என்பவருடன் டயானாவுக்கு ஏற்பட்ட காதல் சர்ச்சைகளை சம்பாதித்தது. டயானாவின் இறுதிக்காலம் இயல்பாய் வராமல், இடையில் வர இக்காதலும் காரணியானது. பாரீசில் 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் நாள், மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுநர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர் வாகனத்தைத் துரத்திய மற்றொரு வாகனத்தில் இருந்தவர்கள் புகைப்படக்காரர்கள் அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சொர்க்கத்திற்கே பறந்தது டயானாவின் கார். டோடியும் பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட, மருத்துவமனையில் மன்றாடி மறைந்தார், டயானா. மதம், இனம், வயது, பாலினம், தேசம் என அனைத்து எல்லைகளையும் தாண்டிய உலக உள்ளங்களை சோகம் கவ்விக்கொண்டது. ‘நான் பிறந்தபோது வெறுக்கப்பட்டேன், திருமணத்தின்போது வெறுக்கப்பட்டேன். அரசக் குடும்பத்தில் நுழைந்தபோதும் வெறுக்கப்பட்டேன். ஆனால் அனைவராலும் விரும்பப்படவேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது’ என்பதை அடிக்கடி சொன்ன இளவரசி டயானாவின் இறப்பு இரும்பு உள்ளங்களையும் இளகச்செய்தது. அரசப் பாரம்பரியச்சுவர்களைத் தகர்த்து, ஜொலிக்கும் மாளிகையில் வெளிச்சத்தைத் தேடியவர், கருப்புக் காலனால் களவாடப்பட்டு விட்டார். காலங்கள் கடந்தாலும் காவியத் தலைவியாய் நம் நினைவலைகளில் என்றும் நீந்துவார் டயானா.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 30 August 2018

சூரியனை நெருங்கி ஆராய ஒரு விண்கலம்

சூரியனை நெருங்கி ஆராய ஒரு விண்கலம் என்.ராமதுரை, அறிவியல் எழுத்தாளர் சூரியன் ஒரு பிரம்மாண்டமான நெருப்புக் கோளம். எந்த ஒரு விண்கலமும் சூரியனில் இறங்கி அதை ஆராய முடியாது. சூரியனை நெருங்கினாலே பஸ்மம் ஆகிவிடும். ஆனால் ஒரு விண்கலத்தால் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி சூரியனை ஆராய முடியும். அந்த அளவில் அமெரிக்காவின் நாசா சூரியனை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. சூரியன் பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனை ஆராய பூமியில் பல ஆராய்ச்சிகூடங்கள் உள்ளன. தமிழகத்தில் கொடைக்கானலிலும் ஓர் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. சூரியனை ஆராய்வதற்கென்றே விண்வெளியில் ஏற்கனவே பல விண்கலங்கள் உள்ளன. சூரியனிலிருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி இவை சூரியனை ஆராய்கின்றன. இந்தியாவும் சூரியனை ஆராய ‘ஆதித்யா எல் 1’ என்னும் விண்கலத்தை 2021-ம் ஆண்டில் உயரே செலுத்த இருக்கிறது. இதற்கிடையே நாசா, பார்க்கர் சோலார் ஆய்வுக்கூடம் என்ற பெயரில் சூரியனை நெருங்கி ஆராய ஆகஸ்டு 11-ந்தேதி ஒரு விண்கலத்தை உயரே செலுத்தியுள்ளது. இது சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வெள்ளி கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெள்ளி கிரகத்துக்குச் செல்வது ஏன் என்று கேட்கலாம். பார்க்கர் விண்கலம் வெள்ளி கிரகத்தை சுற்றி விட்டு சூரியனை நோக்கிச் செல்லும். இப்படி வெள்ளி கிரகத்தை சுற்றும் போது பார்க்கர் விண்கலத்தின் வேகம் குறையும். சூரியனை நெருங்கி ஆராய்ந்து விட்டு மறுபடி வெள்ளி கிரகத்தை நோக்கி வரும். வெள்ளியை சுற்றி விட்டு மறுபடி சூரியனை நெருங்கி ஆராயும். சூரியனை சுற்றிவிட்டு மறுபடி வெள்ளியை நோக்கி வந்து விட்டு மீண்டும் சூரியனை நோக்கிச் செல்லும். இப்படியாகத்தான் அது சூரியனை ஆராயும். விண்கலத்தின் வேகத்தை குறைப்பதற்காகவே அது இவ்விதம் வெள்ளி கிரகத்தை கடந்து செல்கிறது. அப்படியும் கூட ஒரு கட்டத்தில் விண்கலத்தின் வேகம் மணிக்கு 6 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். ஏழு ஆண்டுக்கால அளவில் சூரியனை 24 தடவை சுற்றும். ஒரு கட்டத்தில் இது சூரியனிலிருந்து 61 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். சூரியனுக்கு இவ்வளவு அருகாமையில் செல்லும் போது சூரியனில் இருந்து கடும் வெப்பம் தாக்கும். ஆராய்ச்சிக் கருவிகள் செயல்படாமல் போகலாம். எனவே பார்க்கர் விண்கலத்தின் ஒரு புறத்தில் வெப்பத் தடுப்புக் கேடயம் பொருத்தப்பட்டுள்ளது. இது விசேஷப் பொருளால் ஆனது. விண்கலத்தில் சூரியனை நோக்கிய புறத்தில் வெப்பம் 1300 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம். ஆனால் வெப்பக்கேடயத்துக்குப் பின்புறம் ஆராய்ச்சிக் கருவிகள் அமைந்த புறத்தில் வெப்பம் வெறும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். வெப்பத் தடுப்புக் கேடயம் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதாக இருக்கும். பார்க்கர் விண்கலம் சூரியனை சுற்றுவதும் வெள்ளியை சுற்றுவதுமாக இருந்தாலும் வெப்பக் கேடயம் அமைந்த புறம் எப்போதும் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். சூரியனைச் சுற்றி கொரோனா என்ற பகுதி உள்ளது. தமிழில் இதை ஜோதி என்று கூறலாம். சூரியனின் மேற்புறப் பகுதியில் வெப்பம் சுமார் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. ஆனால் சூரியனை சுற்றி உள்ள ஜோதி பகுதியில் வெப்பம் பத்து லட்சம் டிகிரி அளவில் உள்ளது. இது பெரிய மர்மமாக உள்ளது. பார்க்கர் விண்கலம் இந்த ஜோதி பகுதியை ஆராயும். ஜோதி பகுதியை நாம் பூமியிலிருந்து பார்த்தால் தெரியாது. ஆனால் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த சில கணங்களில் மட்டும் ஜோதி பகுதியை நம்மால் பார்க்க முடியும். ஜோதி மிக வெப்பம் கொண்டதாக இருக்கின்ற மர்மத்தை பார்க்கர் துலக்கும் என்று கருதப்படுகிறது. சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவை சூரியனிலிருந்து நாலா புறங்களிலும் பரவுகின்றன. இந்தத் துகள்கள் பூமி, செவ்வாய், வியாழன் முதலிய கிரகங்களைக் கடந்து சூரிய மண்டல எல்லையில் உள்ள புளூட்டோ வரை செல்கின்றன. இந்தத் துகள்களுக்கு ஆங்கிலத்தில் சோலார் விண்ட் என்று பெயர். உண்மையில் இது காற்று அல்ல. இத்துகள்கள் பூமியைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. இதல்லாமல் சூரியனிலிருந்து சில சமயம் ஆற்றல் மொத்தை வெளியே வீசப்படுவது உண்டு. இது சுருக்கமாக சி.எம்.இ. என்று குறிப்பிடப்படுகிறது. இது பூமியைத் தாக்க நேர்ந்தால் பல விளைவுகள் ஏற்படும். பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின்சார நிலையங்கள், தரைக்கு அடியில் உள்ள எண்ணெய்க் குழாய்கள் முதலியவை பாதிக்கப்படும். சி.எம்.இ. பற்றியும் பார்க்கர் விண்கலம் ஆராயும். பார்க்கர் விண்கலம் வருகிற அக்டோபர் 3-ந்தேதி வெள்ளியை நெருங்கும். பிறகு நவம்பர் 5-ந்தேதி வாக்கில் சூரியனை முதல் தடவையாக நெருங்கும். சூரியனிலிருந்து சோலார் விண்ட் எனப்படும் துகள்கள் வெளிப்படுகின்றன என்று 1958-ம் ஆண்டில் யூஜின் பார்க்கர் என்ற அமெரிக்க நிபுணர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் கருத்து வெளியிட்டார். அவரை கவுரவிக்கும் வகையில் சூரியனை ஆராயும் விண்கலத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்கரின் கட்டுரை முதலில் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் தான் அக்கட்டுரையை வெளியிடும்படி செய்து பார்க்கருக்கு உரிய கவுரவம் கிடைக்கும்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பன்முக ஆற்றல் கொண்ட நடிப்பின் சிகரம்

பன்முக ஆற்றல் கொண்ட நடிப்பின் சிகரம் டி.எஸ்.பாலையா நடிகர் ஜூனியர் பாலையா தமிழ் சினிமா வானில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தவர், டி.எஸ்.பாலையா. பன்முக ஆற்றல் கொண்ட அவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் முத்திரை பதித்தவர். எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். காலத்தால் அழிக்க முடியாத காவியமான திருவிளையாடல் படத்தில் ஹேமநாதபாகவதராக வந்து ஒரு நாள் போதுமா? என்ற பாடலைப்பாடி தன் வித்தை கர்வத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தினார். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் உடம்பு அசையாமல் முகப்பாவத்திலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்வானாகவே வாழ்ந்திருப்பார். பாகப்பிரிவினை, பாமாவிஜயம் போன்ற படங்கள் டி.எஸ்.பாலையாவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த படங்கள். 36 வருடங்களில் 146 படங்களில் நடித்து சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர். டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா தன் தந்தையுடனான நினைவுகள் பற்றி மனம் திறந்து கூறியதாவது:- என் தந்தை 1914-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி, தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டையில் பிறந்தார். சிறுவனாக இருந்தபோதே அவருக்கு கலை ஆர்வம் அதிகம். சற்றே முரட்டு சுபாவம் உடையவர். என் தந்தையின் கலை ஆர்வம் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன்னுடைய 10-வது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். நாடார் சமூகத்தில் பிறந்து, நெல்லையில் ஓட்டல் நடத்தி வந்த ஒரு பிள்ளைமார் வீட்டில் வளர்ந்தார். பின்னர் வெளியூருக்கு சென்று ஏதாவது ஒரு நாடக கம்பெனியில் சேர முடிவு செய்தார். மெல்ல மெல்ல நாடகத்துறையில் வளரத் தொடங்கினார். பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டு இருந்தபோது, அவரது நடிப்பை கண்டு வியந்த, என்.கே.ராதாவின் தந்தை, ஏ.என்.மருதாசலம் செட்டியாரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் ‘சதிலீலாவதி’ படத்தில் நடிக்க என் தந்தைக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற வெள்ளைக்கார டைரக்டர் இயக்கினார். அந்த படத்தில் தான் எம்.ஜி.ஆரும் நடித்தார். எம்.ஜி.ஆர். என் தந்தையை விட 3 வயது இளையவர். அந்த படம் சிறப்பாக ஓடியது. என் தந்தையின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். நல்ல குரல் வளம் இருந்ததால், சொந்த குரலில் பாடல்களும் பாடி இருக்கிறார். என் தந்தையின் பல கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டன. அதில், இன்றைக்கும் மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் ஒன்று, தில்லானாமோகனாம்பாள் படத்தில் தவில்காரராக அவர் நடித்து இருப்பது. இதற்காக அவர் ஒரு தவில் வித்வானை வீட்டுக்கு அழைத்து வந்து பயிற்சி பெற்றார். ஒருமுறை சிவாஜி கணேசன் இதுபற்றி என்னிடம் பேசும்போது, ‘உன் தந்தை போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. தில்லானா மோகனாம்பாளில் தவில் வித்வானாக அவரின் நடிப்பை கண்டு வியந்தேன்’ என்றார். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் ஹேமநாதபாகவதராக நடித்தார். அந்த படத்தில் ஒருநாள் போதுமா என்ற பாடல் பிரபலம். அந்த பாடலை பாடிய பாலமுரளி கிருஷ்ணா, தானே ஹேமநாதபாகவதராக நடிக்க விரும்பினார். ஆனால், ஏ.பி.நாகராஜன், இந்த கதாபாத்திரத்தை நான் பாலையா அண்ணனுக்குதான் கொடுக்கப்போகிறேன் என்றார். அந்த பாடலில் என் தந்தை அருமையாக நடித்திருப்பார். பாடல் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. திரைப்படம் வெளியான பிறகு பேசிய பாலமுரளிகிருஷ்ணா, ‘நல்லவேளை பாலையாவே நடித்தார். என் பாடலுக்கு உயிர் கொடுத்தது அவர்தான்’ என்று புகழ்ந்தார். என் தந்தை மீது அத்தனை நடிகர்களும் நல்ல மரியாதை வைத்திருந்தனர். அதில் நாகேசும் ஒருவர். காதலிக்க நேரமில்லை படத்தில், நாகேஷ் என் தந்தையிடம் கதை சொல்லும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி குறித்து பின்நாட்களில் என்னிடம் பேசிய நாகேஷ், ‘கதை சொல்லும் காட்சி படமாக்கி முடித்தபோது, சுற்றி இருந்த அத்தனை பேரும் கைத்தட்டினார்கள். ஆனால், உங்க அப்பா மட்டும் கைதட்டவில்லை. நான் கதைசொல்லும்போது, அவர் இரண்டு புருவங்களை மேலே உயர்த்தினார். அவர் பயந்துவிட்டார். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்று எண்ணினேன். ஆனால் அவரோ, நீ இன்னமும் ஜாக்கிரதையாக நடித்து இருக்க வேண்டும் என்றார். அவர் பொறாமையில் இப்படி சொல்கிறார் என்று நான் எண்ணினேன். அந்த படம் வெளியானதும், தியேட்டருக்கு பார்க்க சென்றோம். அப்போது, கதை சொல்லும் காட்சி முடிந்ததும், கைத்தட்டல்கள் பலமாக வந்தன. ரசிகர் கூட்டத்தில் ஒருவர், ‘ஆயிரம் சொல்லுங்க பாலையா பாலையாதான்டா’ என்று குரல் எழுப்பினார். அப்போதுதான் உங்க அப்பா நீ இன்னும் ஜாக்கிரதையா பண்ணி இருக்கனும் என்று சொன்னது புரிந்தது. படம் பார்த்துவிட்டு, நான் எப்படி நடித்தேன்? என்று கேட்டேன். உடனே என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். நான் எத்தனையோ அவார்டு வாங்கி இருப்பேன். அதையெல்லாம் விட மேலானது உங்க அப்பா கட்டி தழுவி முத்தம் கொடுத்ததுதான்’ என்றார். என் தந்தையின் நடிப்பை பார்த்து வியந்த எல்லீஸ் ஆர்.டங்கன் அவரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் என் தந்தை மறுத்துவிட்டார். ‘எனக்கு பிடித்த ஒரே ஒரு நடிகர் பாலையா மட்டும்தான். அவரை ஹாலிவுட்டுக்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். அதற்கு அவர் தமிழ் மீது வைத்திருந்த பற்றுதான் காரணம்’ என்று எல்லீஸ் ஆர்.டங்கன் குறிப்பிட்டு உள்ளார். என் தந்தை காமராஜரின் சிஷ்யன் மாதிரி இருந்தார். தி.மு.க.வின் தொடக்க காலகட்டத்தில், அந்த கட்சிக்காக பல நாடகங்களில் நடித்தார். அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரிடம் நல்ல நட்பு இருந்தது. ஜெயலலிதா மீதும் பாசம் வைத்து இருந்தார். இப்படி தமிழகத்தை ஆட்சி செய்த முதல்-அமைச்சர்களிடம் அவர் நட்பாக பழகி இருந்தார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிற்காலத்தில், கந்தர்அலங்காரம் என்ற படத்தில் நடித்தபோது, எம்.ஆர்.ராதாவை சந்தித்தேன். ‘நான் யார் கூட வேண்டுமானாலும் தயக்கமின்றி நடிப்பேன். ஆனால், உங்க அப்பாக் கூட நடிக்கும்போதுதான் மிகவும் ஜாக்கிரதையாக நடிப்பேன். ஏனென்றால் அவர் மிகவும் திறமையானவர்’ என்றார். என்னுடைய தந்தையின் கடைசி காலத்தில் மருத்துவமனையில் இருந்தார். அப்போது, அவர் சினிமாவில் என்னுடைய பெயர் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். நீ எனக்கு ஜூனியர். எனவே ஜூனியர் பாலையா என்று உன் பெயரை மாற்றிக்கொள். இதுதான் என் ஆசை என்றார். அதன்படி நானும் மாற்றிக்கொண்டேன். என்னுடைய நிஜ பெயர் ரகு. இது பலருக்கும் தெரியாது. என் பிள்ளைகளின் பெயரோடும் பாலையா என்ற தந்தை பெயரை சேர்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக என் தந்தை விளங்கினார். ஆனால் என் தந்தையின் நூற்றாண்டு விழாவை திரைத்துறையினர் யாரும் நினைவுகூராதது மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்று (ஆகஸ்டு 23-ந்தேதி) டி.எஸ்.பாலையா பிறந்த நாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பாதுகாப்பு

காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பாதுகாப்பு சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொன்மை வாய்ந்த காவிரி வடிநிலத்தை பாதுகாக்க வேண்டிய காட்டாய தேவை இன்று எழுந்துள்ளது. பெரும் வெள்ளநீர் பெருகெடுத்து ஓடி வரும் நேரத்தில் கூட, ஒரு துளி நீருக்காக அதே ஆற்றுப் பாசனத்தின் கடைமடை விவசாயிகள் ஏக்கத்துடன் காத்து நிற்கிறார்கள் என்ற உண்மை நம் மனசாட்சியை சுட்டு சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? டெல்டா என்று புகழ் பெற்ற காவிரி வடிநிலப்பகுதியை அறிய வேண்டுமென்றால் தமிழகத்தின் 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை கவனத்துடன் திரும்பி பார்க்க வேண்டும். நமது நீர் மேலாண்மையின் தொன்மை சிறப்புக்கு கல்லணையை தவிர வேறு ஆதாரங்கள் தேவையில்லை. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் நீரியல் துறையில் புதிய சாதனையை படைத்த அறிஞர் ஆர்தர் காட்டன், 1835-ம் ஆண்டில் காவிரியும் கொள்ளிடம் பிரியும் முக்கொம்பில், மேலணையை உருவாக்கினார். அதன் பின்னர் 1837-ம் ஆண்டில் கல்லணையை ஒட்டி, மணல் போக்கிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஒரு பேரார்வம் ஏற்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லப்படும் கல்லணையின் அடித்தளம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆர்வம். ஆவலுடன் ஒரு கோடை காலத்தில் அணையைப் பிரித்து பார்க்கத் தொடங்கினார். 12 அடி ஆழத்துக்கு அணையை தோண்டிப் பார்த்தார். கற்கள் ஒன்றின் மீது, மற்றொன்று அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். கற்களை உறுதியோடு இணைத்து வைக்கும் மரபிசின் அல்லது வேறு கலவைகள் எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஆனாலும் அவை உறுதியுடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருப்பது உலகின் அதிசயமாக தெரிந்தது அவருக்கு. இதன் காரணத்தை ஆராய்ந்தபோதுதான், ஆர்தன் காட்டனுக்கு தெளிவு கிடைத்தது. அதிக எடையுள்ள கற்களை முதலில் போட்டு இருக்கிறார்கள். எடை காரணமாக அடிமட்டத்திற்கு பறாங்கற்கள் சென்று, அதன் மேல் மணல் மூடி அடித்தளமாக அமைந்து இருக்கிறது. அதன் மீது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதைவிடவும் எடைக் குறைந்த கற்களைப் போட்டு அணையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அவருக்கு புலப்பட்டது. பின்னாளில், ‘ஓடும் நீரில் அணையைக் கட்டிய இந்த ஆதி தொழில்நுட்பம் உலகில் வேறு எங்கும் இல்லை. தமிழ் மக்களிடம் தான் இருந்திருக்கிறது’ என்று ஆர்தர் காட்டன் குறிப்பிட்டுள்ளார். டெல்டாவின் ஆறுகள் வாய்க்கால்கள் பற்றிய தகவல்கள் பெரும் வியப்பைத் தரக்கூடியவை. பசுமை கொஞ்சும் இந்த சமவெளியில், 36 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் ஒவ்வொன்றின் நீளத்தையும் மொத்தமாக கூட்டி பார்த்தால், இவை 999 மைல் நீளம் கொண்டுள்ளன. இதிலிருந்து பிரிந்து நீர் சுமந்து செல்லும் வாய்க்கால்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 881. ஆறுகள் வாய்கால்கள் ஆகியவற்றின் மொத்த நீளத்தை கூட்டிப் பார்த்தால், 24 ஆயிரத்து 98 மைல்கள் ஆகும். இது ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கு. காவிரி டெல்டாவின் இந்த தொன்மையான கட்டமைப்பை நம்மால் ஏன் இன்று காப்பாற்ற முடியவில்லை? கடைமடைக்கும் தண்ணீர் போய் சேரும் வலிமை கொண்ட பாசன கட்டமை முறைக்கு ஏன் இந்த புதிய நெருக்கடி? இரக்கமற்று ஆற்று மணலை கொள்ளையடித்ததில் ஆறு பள்ளமாகி மதகுகளில் தண்ணீர் ஏறி செல்ல மறுக்கிறது. மணலற்ற ஆறுகளில் சாக்கடை தேங்கி ஆகாய தாமரை முதல் அத்தனை தீங்கு செய்யும் தாவரங்களும் முளைத்து விடுகின்றன. காவிரி டெல்டா நீர் பாசன மேம்பாட்டுக்கு என்று பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. உலக வங்கி, ஆசியன் வங்கி, தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கிய தொகை என்று சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த சில ஆண்டுகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெருந்தொகை செலவிடப்பட்ட பின்னரும் ஏன் கடைமடைப் பகுதிக்கு நீர் போய் சேரவில்லை? எந்த பொறுப்பும் இல்லாமல் திட்டங்களை வகுத்து பணச் செலவு செய்து கொண்டிருக்கும் அரசு எந்திரம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எந்த ஒரு திட்டமும் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்தால் தான், அது வெற்றி திட்டமாக கருதப்படும். கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சேர்க்க முடியாத அரசின் முழக்கங்கள் வெறும் பொய் முழக்கங்களாகத்தான் இருக்க முடியும். காவிரி வடிநில பகுதிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சீரமைப்பு திட்டம் இன்று தேவைப்படுகிறது. இது மக்கள் பங்கேற்று, கண்காணித்து சீரமைக்கும் இயக்கமாக இருக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறம் வளர்த்த கோவில் பொருளாதாரம்

அறம் வளர்த்த கோவில் பொருளாதாரம் டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய பொருளியல் அறிஞர் ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது போன்ற கருத்துகள் நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக பழகி வருபவை. எப்போது கடவுள் பற்றிய கருத்து மனித உள்ளத்தில் தோன்றியது என்று தெரியாது. ஆனால், அவன் வேட்டையாடி, மீன்பிடித்து காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவன் எவற்றை எல்லாம் கண்டு அஞ்சினானோ, அவற்றை எல்லாம் வணங்கினான் என்பது கருத்து. அப்படி முதல் வணக்கம் பெற்றது தீயாக இருக்கலாம் என்று கூறுபவர்கள் உண்டு. மனிதன் ஆடு, மாடுகளை மேய்த்து இயற்கையை ஓரளவு அறிந்த நிலையில் வேளாண்மையை தொடங்கினான். நாடோடியாக, காடோடியாக அலைந்தவன் நிலைபெற்று வாழத்தொடங்கினான். ஊரும் வீடுகளும் தோன்றின. தான் வணங்கிய தெய்வத்துக்கு கோவில் கட்டினான். அறிவு வளர, வளர அவன் வழிபட்ட முறைகளிலும் மாற்றம் தோன்றின. சமயம் பிறந்தது. இது நீண்ட நெடிய வரலாறு. தெய்வத்தை உள்ளத்தில் உணர்ந்து வழிபடுவது அக வழிபாடு. அது உயர்ந்த நிலை. கோவில் சென்று சடங்குகளோடும், மரபுகளோடும் வழிபடுவது புற வழிபாடு. இந்த புற வழிபாட்டுக்குப் பொருள் தேவை. இதன் வளர்ச்சி திருவிழாக்கள், தங்கத்தேர் போன்றவை. இப்படித் தான் மக்கள் உணராமலேயே கோவில் பொருளாதாரம் தோன்றியது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கிறார், வான்புகழ் கொண்ட வள்ளுவர். பொருள் இல்லார்க்கு இன்று பெருங்கோவில் வழிபாடோ, தீர்த்த யாத்திரையோ இல்லை. பொருள் இருப்பவர்களுக்கு கோவில் வழிபாட்டிலும் தனிச்சிறப்பு. கட்டணம் கட்டித்தான் சாமி தரிசனம் என்ற நிலையில் பொருளின் ஆதிக்கத்தை உணர்கிறோம். ஆனால், கோவில் பொருளாதாரத்தின் வேர்களும், விழுதுகளும் வேறுநோக்கில் அமைந்தவை. எல்லா மக்களும் தங்களுடைய சக்திக்கேற்ப உழைப்போ, பொருளோ வழங்கி கோவிலை உருவாக்கினர். அதாவது கோவில் சார்ந்த ஓர் அற உணர்வில் தோன்றிய பொருளாதாரம் இது. கோவிலுக்கு பொன்னும் பொருளும் தருபவர்கள் உண்டியலில் போடுவது என்ற முறையின் உயர்ந்த நோக்கத்தை உணர வேண்டும். இதில் யார், எதை, எவ்வளவு போட்டார்கள் என்பது தெரியாது. அதில் போட்டது எல்லாம் பொதுவானது. அதை அறப்பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதை நிர்வகிப்பவர்கள் அறங்காவலர்கள். இடைக்காலத்தில் தான் கோவிலுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிப்பது, அவர்களுக்கு தனி மரியாதை செய்வது போன்ற பழக்கங்கள் தோன்றின. கோவில் வருவாயை பெருக்கும் உத்திகளையும் கண்டறிந்தனர். ஆதிகாலத்தில் சொத்துகளும், வருவாய்களும் கேட்காமலேயே கிடைத்தன. கோவிலில் வழிபாடு தொடர்ந்து நடைபெற அரசர்கள் மானியம் கொடுத்தனர், நிலங்கள் வழங்கினர். செல்வந்தர்கள் தங்கள் வளம் செழிக்க காணிக்கை போட்டனர். எல்லா மக்களும் இயன்றதை அளித்தனர். கோவிலின் வருவாயை வழிபாட்டு செலவுக்கு மேல் வந்த பணத்தை அறப்பணிகளுக்கு செலவிட்டனர். பல கோவில்களில் தர்மசாலைகள் செயல்பட்டன. பசித்து வந்தவர்களுக்கு புசிக்க உணவு அளித்தனர். பள்ளிகள் நடத்தினர். கலைகள் வளர்த்தனர். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினர். கோவில் திருவிழா என்றால் 3 நாட்கள், 10 நாட்கள் சிறப்பு வழிபாடு செய்ய, கண்டுகளிக்க, கொண்டாடி மகிழ தக்க வகையில் வழிவகை செய்வார்கள். இதற்கான பொருள் கணக்கின்றி வந்தது. கவனத்தோடு தன்னலமின்றி நிர்வகித்தனர். இது தான் கோவில் பொருளாதாரமாக, அறப்பொருளாதாரமாக வளர்ந்தது. இவற்றை எல்லாம் ‘கண்ணுக்குத் தெரியாத கை’ தோன்றா துணையாக இருந்து நிர்வகிப்பதாக மக்கள் நம்பினர். இன்றும் கிராமக் கோவில்களில் இந்த அறம் ஓரளவு செயல்படுகின்றது. திருவிழா என்றால் ஊர் மக்கள் எல்லோரும் வரி கொடுப்பார்கள். வசதியானவர்கள் நன்கொடை வழங்குவார்கள். கோவில் வழிபாட்டில் பாகுபாடு இருக்காது. சாமிக்கு படைப்பது எல்லோருக்கும் சமமாக கிடைக்கும். இது கோவில்கள் வளர்க்கும் சமத்துவ பொருளாதாரம். பொதுவாக இன்று சிறப்பு வாய்ந்த பெரிய கோவில்களும், வருவாய் மிகுந்த ஆலயங்களும் வளர்த்திருக்கின்ற பொருளாதாரம் வேறு. இது வாணிப பொருளாதாரமாக மாறிய நிலை. சில கோவில்களில் இருக்கும் பெருவாரியான சொத்துகளுக்கு கணக்கும் இல்லை, வழக்கும் இல்லை. எடுத்துக்காட்டாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய கோவிலின் நகைகள், பொருட்கள் இருக்கும் எல்லா அறைகளும் இன்னும் திறக்கப்படவில்லை. இன்று நமது நாட்டில் கோவில்களிலேயே மிகுதியாக வருவாய் உள்ள கோவில் திருப்பதி தான். வரிசையில் நின்று மக்கள் கணக்கின்றி உண்டியலில் காணிக்கை செலுத்துவதை காணலாம். இறைவன் பற்றிய அச்சம் போய் விட்டது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோவிலை நிர்வகிக்கும் நிலை. சமீபகாலமாக கோவிலில் உள்ள விலை மதிப்பற்ற சாமி விக்கிரகங்களும், ஆபரணங்களும், பிற பொருட்களும் காணாமல் போகின்றன. இப்படிப்பட்ட குற்றங்களை விசாரிக்க தனியாக போலீஸ் அதிகாரியை நியமித்து இருக்கின்றனர். சிலர் அகப்பட்டுள்ளனர். அறப் பொருளாதாரமாக தோன்றிய கோவில் பொருளாதாரம் சுரண்டல் பொருளாதாரமாகவும், கொள்ளை பொருளாதாரமாகவும் மாறி விடுமோ? என்ற அச்சம் தோன்றுகிறது. மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கோவில் பொருளாதாரம் வழி மாறிப்போகிறது. கோவில்களை, சொத்துகளும் வருவாயும் நிறைந்த நிறுவனங்களாக பார்க்கும் வாணிபக் கண்ணோட்டம் வந்து விட்டது. கோவில் நிர்வாகிகளிடமும், ஊழியர்களிடமும் அது உண்மையாகிவிட்ட அவலத்தை காண்கிறோம். உண்மையில் கோவில்கள் வளர்த்தது, தனிவகை அறப்பொருளாதாரம். இது மக்களிடம் அன்பை வளர்ப்பது, அருளை உள்ளொளியாக வளர்ப்பது, கொடை கொடுக்கும் பணத்தை இறை நம்பிக்கையின் அடிப்படையில் நமது முன்னோர்கள் வளர்த்தார்கள். ‘அந்த அறப்பொருளாதாரத்தை மீட்டு வளர்ப்போம்’. அது நம்மை மட்டுமல்ல உலகைக் காக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விராட்டின் பத்தாண்டு மிரட்டல் பயணம்

விராட்டின் பத்தாண்டு மிரட்டல் பயணம் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அரங்கில் நுழைந்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை கடந்திருக்கிறார். 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை செஞ்சுரி விளாசியவர், விராட் கோலி. 18 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானவர். 19 வயதை தொடுவதற்குள் ஜூனியர் உலக கோப்பையின் வெற்றி கேப்டன் ஆனார். 22 வயதுக்குள் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். 25 வயதுக்குள் கேப்டன் அந்தஸ்து. எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.165 கோடி சம்பாத்தியம் என்று அசாத்திய வளர்ச்சியுடன் நம்மை வியக்க வைத்து வீறுநடை போடுகிறார். இதுவரை எழுதப்பட்டு இருக்கும் அவரது வாழ்க்கை பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால்... 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் தனது மகன்கள் விகாஷ், விராட் இரண்டு பேரையும் மேற்கு டெல்லியில் கிரிக்கெட் அகாடமி நடத்தும் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவிடம் சேர்த்து விட்டார். அந்த அகாடமிதான் விராட்டின் திறமையை பட்டை தீட்டிய பட்டறை. “விராட்டை பார்த்ததுமே மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானவராக இருப்பதை உணர்ந்தேன். வயதுக்கு மிஞ்சிய திறமை அவரிடம் காணப்பட்டது. அவர் தனது வயது வீரர்களை காட்டிலும் பெரிய வீரர்களுடன் ஆடுவதை குறிக்கோளாக கொண்டிருந்தார். ‘எனது வயது வீரர்களால் என்னை அவுட் ஆக்க முடியவில்லை. மூத்த வீரர்களுடன் விளையாட அனுமதியுங்கள்’ என்று அடிக்கடி சொல்வார். ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் நிறைய தன்னம்பிக்கை இருந்தது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புவார். வலை பயிற்சியிலும் கடைசி வீரராகத்தான் வெளியே வருவார். எனது அகாடமியில் பயிற்சி பெறும், பெற்ற வீரர்களிலேயே வித்தியாசமான ஒருவர் யார் என்று கேட்டால் விராட் கோலியை நோக்கித் தான் கையை நீட்டுவேன்” என்கிறார், பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா. விராட் கோலி எத்தகைய கடினமான சூழலையும் திறம்பட சமாளிக்கும் போராட்ட குணம் கொண்டவர். மன உறுதி மிக்கவர். கிரிக்கெட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்துக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். 2006-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ரஞ்சி கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் டெல்லி-கர்நாடக அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கர்நாடகா 446 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்த நிலையில், ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து அந்த அணியை காப்பாற்ற விராட் கோலி போராடினார். 2-வது நாள் முடிவில் அவர் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார். மறுநாள் அதிகாலை விராட் கோலியின் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது அவரது தந்தையின் திடீர் மரணம். மாரடைப்பால் அவரது தந்தை பிரேம் மரணம் அடைந்தார். தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத கோலி சோகத்தில் உறைந்து போனார். அதனால் அவர் 3-வது நாள் ஆட்டத்தை தொடர வரமாட்டார் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் 3-வது நாள் காலை 7.30 மணி அளவில் வீரர்களின் ஓய்வறையில் கையில் பேட், பேடுடன் நின்று கொண்டிருந்தார். விராட் கோலி. சக வீரர்கள் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து திகைத்து போனார்கள். அப்போதைய டெல்லி அணியின் கேப்டன் மிதுன் மன்ஹாஸ், ‘விராட் நீ வீட்டுக்கு செல். பேட் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை’ என்று கூறினார். அதற்கு கோலி தொடர்ந்து பேட் செய்ய விரும்புவதாக கூறினார். இளம் வயதில் இப்படியொரு தாங்க முடியாத துயரத்தை மனதில் புதைத்துக் கொண்டு, கோலி ஒரு தேர்ந்த வீரர் போல் விளையாடினார். அவர் 90 ரன்கள் (238 பந்து) எடுத்து ஆட்டம் இழந்தார். அணியை இக்கட்டில் இருந்து மீட்டெடுத்த கோலி அதன் பிறகு நேராக தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோலி வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு இது. அதை பற்றி நினைவுகூரும் கோலி, ‘நான் விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என்று தான் எனது தந்தை எப்போதும் விரும்புவார்’ என்று சொல்வார். விராட் கோலி ஜூனியர், சீனியர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. மூத்த வீரர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பார். பள்ளி விளையாட்டின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் கையால் விருது வாங்கியுள்ளார். அப்போது கோலிக்கு வயது 11. பிற்காலத்தில் கோலியின் தலைமையின் கீழ் நெஹரா விளையாடினார். நெஹராவை தனது குருவாக கருதிய கோலி, கடைசி சர்வதேச போட்டியில் ஆடிய போது அவரை தோளில் சுமந்து சென்று நெகிழ வைத்தார். இதே போல் தனது பால்ய கால பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவுக்கு காரை பரிசாக அளித்த கோலி, அகாடமிக்கு செல்லும் போதெல்லாம் நிறைய விளையாட்டு உபகரணங்களை தாராளமாக கொடுப்பார். கிரிக்கெட்டில் உச்சத்தை நெருங்கி கொண்டிருக்கும் விராட் கோலி டெஸ்டில் அதிக இரட்டை சதம் விளாசிய கேப்டன் (6), ஒரு நாள் போட்டியில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதங்கள் அடித்தவர் (19), தனது தலைமையில் இந்திய அணியை தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரில் வெற்றி பெற செய்தவர், மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் சராசரியாக 50 ரன்களுக்கு மேல் வைத்திருந்த ஒரே வீரர் என அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 29 வயதான விராட் கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 342 ஆட்டங்களில் பங்கேற்று 58 சதம் உள்பட 17 ஆயிரத்து 875 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் தலா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து தற்போது 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை மிரட்டலாக நிறைவு செய்திருக்கும் விராட் கோலி, இதே போன்று மேலும் 10 ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட்டில் உள்ள பெரும்பாலான சாதனைகளை தவிடுபொடியாக்கி தன்வசப்படுத்திவிடுவார். -ஜெய்பான்

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெண்ணுரிமை போற்றிய பல்துறை வித்தகர் திரு.வி.க.

பெண்ணுரிமை போற்றிய பல்துறை வித்தகர் திரு.வி.க. பேராசிரியை பானுமதி தருமராசன் திருவாரூர் விருத்தாசல முதலியாரின் மகன் திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.), தமிழ்த் தென்றலாக தமிழுக்குத் தொண்டு செய்தவர். அன்றைய அரசியலில் தடம் பதித்தவர். பெண்ணுரிமையைப் போற்றிய பேரறிவாளர். தொழிற்சங்கத் தந்தை. தமிழ் வளமும் ஆங்கில வளமும் ஒருங்கே அமையப்பெற்றவர். காந்தியடிகள் தமிழகத்துக்கு முதன்முறையாக வந்தபோது காங்கிரசின் பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவை தமிழில் மொழிபெயர்த்தவர் திரு.வி.க.தான். காந்தியடிகள் பற்றி முதன்முதலில் தமிழில் நூல் எழுதிய பெருமையும் திரு.வி.க.வையே சாரும். காந்தியடிகளின் எளிமையான வாழ்க்கை முறை, சாந்தமான தோற்றம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட திரு.வி.க அவரை ‘அடிகள்’ என்று பெருமையோடு அழைத்தார். விருத்தாசல முதலியார்-சின்னம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாக 1883-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி துள்ளம் கிராமத்தில் திரு.வி.க. பிறந்தார். பல்துறை வித்தகரான இவர், முதலில் பின்னி கம்பெனியில், பின்பு ஸ்பென்சர் கம்பெனியில் பணிபுரிந்தார். பிறகு தமது தமையனாரின் அச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆசிரியப் பணி ஏற்றார். ஓராண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பெண்ணுரிமையை போற்றிய திரு.வி.க. ‘பெண்ணின் பெருமை’ என்ற நூலை படைத்தார். பெண்ணுரிமைக்கு அடிப்படையானது பெண் கல்வி என்பதை அறிந்த இவர் ஆயிரம் விளக்குப் பகுதியில் ‘பவானி பாலிகா’ என்ற பள்ளியைத் தொடங்கினார். இவருடன் பணிபுரிந்த மார்த்தா அம்மையாரும் அழகாக பேசக்கூடியவர். ஒரு கூட்டத்தில் பேசச்சென்றபோது, அக்கூட்டம் ஏன் ஒரு பெண்கள் சங்கமாக அமையக்கூடாது என்று எண்ணிய திரு.வி.க. ராயப்பேட்டையில் மாதர் சங்கத்தை ஏற்படுத்தினார். ராமாமிர்தம் அம்மையார், மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் ஆகியோரின் கருத்துகளை ஆதரித்து பேசினார். மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் சட்டசபையில் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்புச்சட்டத்தை ஆதரித்தார். நீதிபதி சதாசிவ ஐயரிடம் கலந்தாலோசித்து, விதவைப் பெண்களின் மறுமணத்திற்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். பின்னர் இது வடநாட்டில் உள்ள அத்தகைய அமைப்பு ஒன்றுடன் இணைக்கப்பட்டது. 13-9-1912 அன்று கமலாம்பிகையை மணந்தார். திருமணமானதும் இவரது மனைவி கமலாம்பாள் தமக்கு பொன் நகைகள், பட்டுப்புடவைகள் வேண்டாம். கல்வி கற்றுக்கொடுத்தால் போதும் என்று கேட்டுக்கொண்டார். திரு.வி.க.வும் மனமுவந்து கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் திரு.வி.க.வின் தாயார் அதனை விரும்பவில்லை. உடனே திரு.வி.க. தனிக்குடித்தனம் போக எண்ணினார். கமலாம்பிகையோ, கூட்டுக்குடும்பம் பிரியக்கூடாது என்றும் இரவு நேரங்களில் தமக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் போதும் என்றும் கூறிவிட்டார். மனைவியின் மாண்பை வியந்த திரு.வி.க. அவருக்கு அவ்வையாரின் பாடல்கள், பெரியபுராணம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். தமது மனைவி இயற்கையிலேயே அறிவுடையவள் என்பதை உணர்ந்தார். கபாலீசுவரர், பார்த்த சாரதி கோவில்களுக்குப் போகும்போது அங்கு அமர்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுக்கொடுத்தார். திருவொற்றியூரில் இருந்த கமலாம்பிகையின் பெரியப்பா வீட்டுக்கு வார இறுதியில் வெள்ளிக்கிழமைகள் மாலையிலேயே இருவரும் சென்றுவிடுவர். அச்சமயங்களில் திருவொற்றியூர் கடற்கரையில் தமிழ்ப் பாடம் தொடர்ந்தது. கமலாம்பிகை நன்கு பாடக்கூடியவர் என்பதையும் இங்குதான் திரு.வி.க. அறிந்துகொண்டார். ஞாயிறு மாலை திருவல்லிக்கேணி சபாவில் பெரியபுராணச் சொற்பொழிவில் தவறாமல் வந்துவிடுவார். இவ்வாறுதான் தனது மனைவி கமலாம்பிகைக்குக் கல்வி புகட்டினார். ஆனால் கமலாம்பிகை 18-9-1918 அன்று மரணம் அடைந்துவிட்டார். சாதிமுறையும், பெண் உரிமை மறுப்பும்தான் இந்தியாவின் பிற்போக்கான நிலைக்கு காரணம் என்று எழுதி வந்தார். தியோசாபிகல் சங்கம் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி வந்தது. இதன் ஒரு பிரிவான கலாச்சேத்ராவை உருவாக்கிய ருக்மணிதேவியின் காதல் திருமணத்தை சாதி மறுப்புத் திருமணமாக 1930-ம் ஆண்டு திரு.வி.க. நடத்திவைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரின் சீற்றத்தையும் சமாளித்தார். ‘நோயை அவ்வப்போது ஒதுக்கும் மருந்து தக்கதாகாது. சாதி நோயை அறவே நீக்கவல்ல மருந்து தேவை’ என்று உணர்ந்து சாதி மறுப்பு திருமணங்களை நடத்திவைத்தார். சென்னையின் சூளைப் பகுதியில் இயங்கிய வெங்கடேச குணாமிர்த வர்ஷணிசபை என்ற சமயசபைக்கு 1908-ம் ஆண்டு செல்வபதி செட்டியார் தலைவரானார். ஞாயிறுதோறும் நடைபெறும் கூட்டங்களில் சொற்பொழிவுகள் முடிந்ததும், தொழிலாளர்கள் தங்கள் குறைகளைக் கூறுவது வழக்கம். தொழிலாளர்களுக்கு என்று அமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பிய செல்வபதி செட்டியார், தொழிலாளர்களிடம் உரையாற்றத் தகுதிவாய்ந்தவர் யார் என்று ஆராய்ந்து, சபாவின் சார்பில் உரையாற்ற திரு.வி.க.வை அழைத்தார். கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் தொழிலாளர்கள் திரண்ட இக்கூட்டத்தில் திரு.வி.க.வின் உரையைக் கேட்ட தொழிலாளர்களிடையே தொழிற்சங்கம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. அதன் விளைவாக 27-4-1918 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் முறையாக தொடங்கப்பட்டது. சென்னை தொழிற்சங்கத்துக்கு பிறகு 27 தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. இவற்றின் பொறுப்பாளர்களாக வாடியா, திரு.வி.க., செல்வபதி செட்டியார் ஆகியோர் விளங்கினர். 1920-ம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்க ஆண்டுவிழாவுக்குப் பின் சென்னையில் மத்திய தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக திரு.வி.க. தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921-ம் ஆண்டு பக்கிங்ஹாம் ஆலையில் ஆறு மாதங்களாக நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது திரு.வி.க.வை நாடு கடத்த முயற்சித்தனர். அவரை நாடு கடத்தினால் தமிழகத்தில் குழப்பம் ஏற்படும் என்று ஆளுநர் வில்லிஸ்டனுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே, திரு.வி.க.வை ஆளுநர் வரவழைத்து எச்சரித்து அனுப்பினார். 1947-ம் ஆண்டு பக்கிங்ஹாம் கர்னாடிக்மில் தொழிலாளர் போராட்டம் வலுத்தது. அப்போதிருந்த தலைவர் அந்தோணிப் பிள்ளை நாடு கடத்தப்பட்டார். மீண்டும் தொழிலாளர்கள் திரு.வி.க.வை அணுகி தலைமைப் பொறுப்பினை ஏற்கும்படி வேண்டினர். திரு.வி.க.வும் மறுக்கவில்லை. அவரை நாடு கடத்தவோ சிறையிலடைக்கவோ அரசு முன்வரவில்லை. வீட்டுக் காவலில் வைத்தது. இதழுலகில் திரு.வி.க.வின் தொண்டு சிறப்பானது. இவரது 21-வது வயதில் தொடங்கி 71 வயது வரை அறுபதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இறுதியில், 1953-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி திரு.வி.க. மரணம் அடைந்தார். பரலி சு.நெல்லையப்பர் கூறியதைப் போலே, “திரு.வி.க.வுக்கு நிகராகச் சொல்லக் கூடியவர் திரு.வி.க. ஒருவரே!”. தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்த திரு.வி.க.வை என்றும் போற்றுவோம். நாளை (ஆகஸ்டு 26-ந்தேதி) திரு.வி.க. பிறந்த நாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவத்தில் பெண்கள்

ராணுவத்தில் பெண்கள் நிர்மலா சீதாராமன், ராணுவ மந்திரி, இந்திய அரசு பல திருப்பங்களுக்குப்பின் இந்திய ராணுவத்தில் பெண்களின் இடம் குறித்த பிரச்சினை பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது சாதகமாக கையாளப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பயணம் செய்யும்போது ராணுவத்தில் நிரந்தரமான பணிக்காக பல்வேறு பின்னணிகளில் இருந்து பெண்களின் பெருங்குரலை ஒருவரால் கேட்கமுடியும். மிகக்குறைவான பிரிவுகளில் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக நிரந்தரமான பணிகளுக்கு பெண்கள் பரிசீலிக்கப்படுவது உண்மையாகும். பெண்கள் விரக்தி அடைவதற்கு ராணுவத்தின் சுருக்கமான நிலையைப் பார்க்கும்போது இந்தப் பிரச்சினை சிக்கலானதாகவும், ஒப்பீட்டு முறையிலும் எப்படி இருக்கிறது? என்பதை ராணுவத்தின் சுருக்கமான நிலையால் காண முடிகிறது. இதன்மூலம், விரிவான தொலைநோக்குப் பார்வையைப் பெறலாம். தெளிவுக்காகப் பார்த்தால், மருத்துவ மற்றும் செவிலியர் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை இந்த விவாதத்திற்கு வெளியே வைக்க வேண்டும். 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தரப் பணி என்பது ஏற்புடையதாக இல்லை. அந்த ஆண்டிலிருந்து ராணுவ கல்விப் படையிலும், நிர்வாகப் பிரிவிலும் மட்டுமே பெண்கள் நிரந்தரப் பணியை விரும்பினார்கள். 2017-ம் ஆண்டுவரை இந்த இரண்டு பிரிவுகளிலும் 83 பெண்கள் நிரந்தரப் பணிக்கு எடுக்கப்பட்டார்கள். இதுதொடர்பான இந்திய விமானப்படையின் கடந்த இருபதாண்டுகால அனுபவம் வேறுவிதமாக உள்ளது. பொருத்தப்பாட்டையும், விருப்பத்தையும் பொறுத்து நிரந்தர பணிக்கான தேர்வு 2006-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட அனைத்து ராணுவ ஊழியர் தேர்வு ஆணையர்களின் விருப்பமாக இருந்தது. அதன் பிறகு, நிரந்தரப் பணிக்கான நிதி நிறுத்தப்பட்டது. எனவே, 2006-ம் ஆண்டு வரை 338 பெண்கள் மட்டுமே நிரந்தரப்பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் நிர்வாகம், ஏரோனாட்டிகல் பொறியியல் மற்றும் மின்னணுவியல், தடவாளங்கள், கணக்கு பிரிவுகளில் இருந்தனர். 2010-க்குப் பிறகு இந்திய கடற்படையும்கூட நிரந்தர பணிக்கான அனுமதியை நிறுத்திவிட்டது. பல பெண் அதிகாரிகள், ஆண்களோடு பெண்களுக்கும் சம உரிமை தரப்படவேண்டும் எனக் கோரி நீதிமன்றங்களை அணுகினார்கள். நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முப்படைகளும் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருந்தன. நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பை கேட்ட பிறகு பாதுகாப்பு அமைச்சகம் அதற்கு அடுத்த நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது அல்லது குறிப்பிட்ட சில விஷயங்களில் உத்தரவை பின்பற்றியது. பிரபலமான பபிதா புனியா வழக்கில் ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அரசின் நடைமுறை கொள்கைக்கு முரணாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை வழங்கவில்லை. இதன் காரணமாக பல பெண்கள் தங்களின் பணியில் (ராணுவ ஊழியர் தேர்வாணையத்தின் கால நிர்ணயம் முடிவடைந்த பின்னரும்) நீடிக்கும் நிலை உருவானது. இருப்பினும், அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள். எனவே, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியைப் பெறுவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்தார். விமர்சனம் செய்வதில் பேரார்வம் கொண்ட சிலர், பிரதமர் எதையும் புதிதாக சொல்லவில்லை என்று கூறினார்கள். வேறு சிலரோ அவர் தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கெல்லாம் நேர்மாறாக கொள்கை நிலையை அறிவித்ததன் மூலம் குழப்பமான சூழலை பிரதமர் அகற்றி இருக்கிறார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கொள்கைக்கு தொடர்ச்சியாக அவர் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார். விமானப்படையில் பெண் விமானிகள் ஏற்கனவே சாதனைப் படைத்திருக்கிறார்கள். கப்பல் படையில் தாரிணியில் பயணம் செய்தவர்கள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். தற்போது நாட்டின் உயர்நிலை நீதிமன்றத்தில் மூன்று பிரபலமான நீதிபதிகள் உள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் நான்கு அமைச்சர்கள் உள்ளனர். பிரதமர் தலைமையிலான இந்தக் குழுவில் 50 சதவீதம் பெண்களாவர். ‘ரக்க்ஷாபந்தன்’ நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் செய்திருப்பதன் மூலம் இந்தியாவிலுள்ள பெண்களுக்கு சிறந்த பரிசை வழங்கியிருக்கிறார். தன்னம்பிக்கையுடனான இத்தகைய போராட்டத்தால் பெண்கள் இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக மட்டுமே அரசின் நடைமுறை உள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அருள் வடிவான அன்னை அன்னை தெரசா

அருள் வடிவான அன்னை அன்னை தெரசா எழுத்தாளர் எஸ்.பழனிதுரை இன்று (ஆகஸ்டு 26-ந்தேதி) அன்னை தெரசா பிறந்த நாள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. தனது அயராத சேவைகளால், ஒவ்வொரு ஏழையின் முகத்திலும் கடவுளை கண்டவர் அன்னை தெரசா. தொழுநோயாளிகளுக்கு அவர் செய்த சேவையை கண்டு உலகமே போற்றிப் புகழ்ந்தது. 26-8-1910 அன்று யூகோஸ்லேவியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜி நகரில் பிறந்தார். அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ. கோன்ஸா என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு. 12 வயதிலேயே சமூகச் சேவை செய்வது பற்றி சிந்திக்க தொடங்கினார். குறிப்பாக இந்தியா சென்று சமூக சேவையில் ஈடுபட அவர் விரும்பினார். தனது 18-வது வயதில் அயர்லாந்தில் உள்ள சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ என்கிற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்து, குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், ஏழைகள் என அனைவருக்கும் சேவை புரிவதற்கான நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பிறகு அவரின் விருப்ப படி, கொல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 1929-ம் ஆண்டு கொல்கத்தா திருச்சபையை வந்தடைந்தார். அங்குதான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் நினைவாக தனது பெயரை தெரசா என்று மாற்றிக்கொண்டார். டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் அன்னை தெரசாவுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அவர் இந்தியாவை தன் தாய்நாடாக ஏற்க தொடங்கினார். இந்தியையும் மேலோட்டமாக கற்றுக்கொண்டார். இதற்கிடையே மீண்டும் கொல்கத்தாவுக்கு பணிமாறுதல் கிடைத்தது. அங்கு கல்வியோடு சமூக சேவையும் செய்தார். பள்ளியில் பணியாற்றுவதுடன் நின்றுவிடாமல், பிள்ளைகளை குளிப்பாட்டுவது, கழிவுநீர் ஓடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய தொடங்கினார். குறுகிய காலத்தில் பள்ளி முதல்வர் பொறுப்பை ஏற்றார். வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார். 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பசியால் வாடியவர்கள், வீடின்றி தவித்தவர்கள், பார்வை இழந்தவர்கள், சமூகத்தால் புறந்தள்ளப்பட்டவர்களை அடையாளம் கண்டு உதவிகளை செய்து வந்தார். புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார். அரசாங்க உதவியுடன் ஹூக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். ‘சிசுபவன்’ தொடங்கி ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளை மீட்டு காப்பகத்துக்கு கொண்டு வந்து பராமரித்தார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். அங்கு இலவசமாக உணவு, மருந்து வழங்கப்பட்டன. அந்த மருத்துவ மனைக்கு ‘காந்தி பிரேம் நிவாஸ்’ என்று பெயரிடப்பட்டது. தொழுநோயாளிகளின் தினத்தை அறிவித்து, அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவதை தெரசா வழக்கத்தில் வைத்திருந்தார். ஒருமுறை ஒரு கடைக்கு முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். வெற்றிலைப் போட்டுக்கொண்டு இருந்த அந்த கடைக்காரர், இதை பார்த்தும் பார்க்காதது போல இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் தெரசா உறுதியாக இருந்தார். தெரசாவை கோபமாக பார்த்த கடைக்காரர், அவர் யாசகம் கேட்டு நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார். சற்றும் மனம் தளராத அன்னை தெரசா, ‘மிக்க நன்றி. நீங்கள் கொடுத்தது எனக்கு. இனி என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டார். இதை கேட்டு மனம் உடைந்த கடைக்காரார், கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன. ஒருமுறை போப் ஆண்டவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும், அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இதைப் போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலம்விட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார். தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர். உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் 4 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன. 5-9-1997 அன்று இரவு தெரசாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. அன்னை தெரசாவின் சேவையை பாராட்டி ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. அமைதிக்கான நோபல் பரிசு, பத்ம ஸ்ரீ, 23-வது போப் ஜானின் அமைதி விருது, குட் சமரிட்டன் விருது, கென்னடி விருது, சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது, டெம்பிள்டன் விருது உள்பட பல விருதுகள் தெரசாவுக்கு வழங்கப்பட்டன. தன் சேவையால் உலக மக்களின் மனதில் இன்றும் அன்னை தெரசா வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சாலையும் தேவை! சோலையும் தேவை!

சாலையும் தேவை! சோலையும் தேவை! முனைவர் குணா.தர்மராஜா நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றக்கூடாதென சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இது நிரந்தர தடையாக மாறுமா என்ற ஏக்கமும், மாறவேண்டும் என்ற அவாவும் அவர்கள் முகங்களில் தெரிகிறது. இந்த எட்டு வழிச்சாலை வரவில்லையென்றால் தமிழகத்தின் பொருளாதாரமும், தொழிற்துறை வளர்ச்சியும் அதலபாதாளத்தில் விழுந்து விடுமென்று ஓர் உணர்வுப்பூர்வமான பொய் பரப்பப்படுகிறது. உணர்ச்சி மேலிடும்போது காரணங்களும், நியாயங்களும் மறைக்கப்படுகின்றன. அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் தமிழர்கள் வேண்டாமென்று சொன்னோம் என்று சொல்பவர்களுக்கு, நியூட்ரினோ வேண்டாம் என்றோம், நியூட்ரினோ கூடாதென்பதற்காகவல்ல, மாறாக மேற்கு தொடர்ச்சி மலையைக்குடைந்து, மழை வளத்தை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பிடுங்கி அப்பாவிகளின் வயிற்றில் மண்ணள்ளி போட்டு விடாதீர்கள் என்பதற்காக. மீத்தேன் வேண்டாம் என்று சொல்லவில்லை. மீத்தேனை மாட்டு சாணத்தில் இருந்து தேவைக்கும் மேலாக தயாரிக்கலாமே. ஏன் சோறுடைத்த தஞ்சை மண்டலத்தின் ஈரக்குலையை அறுக்கிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். அதுவும் தனியாருக்கு ஏன் மீத்தேன் எடுக்கும் அனுமதியை தருகிறீர்கள்? யார் அழிந்து யாருக்கு லாபம்? என்றுதான் கேட்கிறோம். 11-வது ஐந்தாண்டுத்திட்டம் திட்டமிட்ட 2 சதவீத வளர்ச்சியை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் எட்ட முடியாமல் வெறும் 0.69 சதவீத வளர்ச்சியையே அடைந்ததற்கு காரணம் தமிழகத்தின் விளை நிலங்களில் 5 லட்சம் ஹெக்டேர்கள் குறைந்ததே என்று திட்டக் கமிஷன் தனது 2011-ம் ஆண்டு அறிக்கையில் கூறியது. இந்நிலையில் இருக்கும் மூன்று சாலைகளை அகலப்படுத்தாமல் விளைநிலங்களை அழித்து நாசமாக்கி அதன்மீதுதான் சாலை போடுவேன் என்று அடம்பிடிப்பதுதான் வளர்ச்சியா? எட்டு வழிச்சாலை மக்களுக்கு பாலும் தேனும் கொண்டு வரும், மூன்று மணி நேரத்தில் சென்று வரலாம், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்று பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். முதலில் இது சென்னையில் இருந்து சேலம் செல்லும் சாலையல்ல, காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள படப்பை என்ற இடத்தில் இருந்துதான் இந்த சாலை ஆரம்பித்து மொத்தம் ஐந்து மாவட்டங்களை ஊடறுத்து ஓடுகிறது. இந்த சாலை கவுதிமலை, வேடியப்பன் மலை, தீர்த்தமலை உள்பட பல மலைகளை தொட்டுக்கொண்டும், வன பாதுகாப்பு மண்டலத்திற்குள்ளேதான் செல்கிறது. ஈரப்பதமான நிலங்களை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்க கூடாதென்று உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காமல் பல கிலோமீட்டர் ஈரப்பத நிலங்களின் மீதுதான் இச்சாலை போடப்பட இருக்கிறது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் இழப்பீடு தரவில்லை என்று தகவல்கள் வந்து சேரும் நிலையில் இந்த அரசு 8 வழிச்சாலைக்கான இழப்பீட்டை எப்படி தரப்போகிறதோ? தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின்படி கையகப்படுத்தப்படும் இந்த நிலங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்ட கால அளவிற்கு நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க அரசு முன்வர வேண்டுமென சில அரசியல்வாதிகள் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றியே இந்த அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சரியான புரிதல் இல்லாத நிலையில் (உதாரணமாக தென்னை ஒன்றிற்கு முதல்-அமைச்சர் ரூ.40 ஆயிரம், சேலம் ஆட்சியர் ரூ.50 ஆயிரம், திருவண்ணாமலை ஆட்சியர் ரூ.80 ஆயிரம், கிருஷ்ணகிரி ஆட்சியர் ரூ.28 ஆயிரம்), இந்த அரசு இழப்பீட்டை அள்ளித் தருமாம், அதை விவசாயிகள் நம்ப வேண்டுமாம். இந்த சாலை பல விளை நிலங்களை ஊடறுக்கிறது. வெறும் ஒரு ஏக்கர் நிலம்தானே என்கிறீர்களா? ஆனால் சாலை போடும்போது பறக்கும் புழுதியில் பாதிக்கப்படப்போகும் நிலங்களை பண்படுத்தவே பல வருடங்கள் ஆகுமே! அதுபோக பல நிலங்களில் கிணறுகள் சாலைக்கு அந்தப்பக்கமும், நிலங்கள் சாலைக்கு இந்தப்பக்கமும் சிக்குகிறதே, இதற்கு என்ன நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறது அரசு? பாசன விவசாயத்தை நம்பி இருக்கும் இந்த பகுதிகளை ஒரு சாலை ஒட்டு மொத்தமாக அழிக்கப் போகிறது என்பது திண்ணம். இருக்கும் மூன்று சாலைகளை விரிவு படுத்தினால் என்ன என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை. ஒட்டு மொத்தமாக புதிய வழியில் எட்டு வழிச்சாலை போடுகிறார்கள் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். ஏற்கனவே இருக்கும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் பலமுறை இந்த எட்டு வழிச்சாலை ஓடுகிறது. இப்படியிருக்கையில் இருக்கும் சாலையை ஏன் அப்படியே அகலப்படுத்தி எட்டு வழியாக மாற்றக்கூடாது? வெறும் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீடுகள் மட்டுமல்ல; கிணறு போனால் அதனால் பாதிக்கப்படும் நிலங்கள், சாலை குறுக்காக ஓடுவதால் பாதிக்கப்படும் நிலங்கள், கட்டுமானப் பணிகளால் பாதிக்கப்படும் நிலங்கள், மலைகளை குடைவதால் ஏற்படப்போகும் சீர்குலைவுகள், இயற்கை சமன்நிலை சீர்கேடுகள், வனவிலங்குகள் அழிப்பு, தொல்லியல் கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்று அனைத்தையும் கணக்கெடுங்கள். அவ்வளவு தெளிவும் உண்மையும் இருந்தால் திட்ட முன்வரைவை அரசு முன்வைக்கட்டுமே? இதுவரை ஏன் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடவில்லை? விவசாயிகள் நிலங்களை தர விரும்பவில்லை என்று அரசுக்கு நன்றாக தெரியும். விவசாயிகள் நிலங்களை தாமாக முன்வந்து தர தயாராக இருக்கிறார்கள் என்றால் காவல்துறை இல்லாமல் ஒரு நிலத்திலாவது கல்லை நடச் சொல்லுங்களேன். மக்களுக்கு சாலையும் வேண்டும், சோலையும் வேண்டும். அப்படி பார்த்தால், ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுபடுத்துவதே சரியானதாக இருக்கும். நினைவில் வையுங்கள். எட்டு வழிச் சாலை திட்டம் என்பது விவசாயிகளின் கோவணத்தை அவிழ்த்து தலைப்பாகை கட்டுவது போன்றது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க ‘வைபை’

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க ‘வைபை’ எந்த நேரம் எங்கே என்ன நடக்கும், யாருக்கும் தெரியாது. உலக மக்கள் அனைவரும் உயிரைக் கையில்தான் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு இன்றைக்கு பயங்கரவாதிகள் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தலீபான்கள், ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி வலை சமூகம் என பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் உலகமெங்கும் கால் பதித்துவிட்டன. காரணமே இன்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்க வேண்டும், பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த பயங்கரவாதிகள், டிபன்பாக்ஸ் குண்டு, பீப்பாய் குண்டு, கொத்து குண்டு, பைப் குண்டு, பெட்ரோல் குண்டு, மோட்டார் சைக்கிள் குண்டு, கார் குண்டு, குக்கர் குண்டு, சூட்கேஸ் குண்டு என எந்த வடிவத்தில் எந்த வெடிகுண்டை எங்கே வைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இன்றைக்கு உலகின் முன் உள்ள மிகப்பெரிய சவால், இந்த பயங்கரவாதம்தான். இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத்தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா பல லட்சம் கோடி டாலர்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் ஜி.டி.டி. என்ற பெயரில் உலகளாவிய பயங்கரவாத புள்ளிவிவர மையம் என்ற ஒன்று, பயங்கரவாத சம்பவங்களை பதிவு செய்து, புள்ளி விவரங்களை தொகுப்பதற்கென்றே செயல்படுகிறது என்றால் பயங்கரவாதம் எந்தளவுக்கு தீவிரமாகி வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 1970-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை உலகமெங்கும் ஏறத்தாழ 1 லட்சத்து 80 ஆயிரம் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருப்பதாக இந்த உலகளாவிய பயங்கரவாத புள்ளி விவர மையம் பதிவு செய்து வைத்து இருக்கிறது. இவற்றில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மட்டுமே 88 ஆயிரம் அரங்கேறி இருக்கின்றன. உலகின் ஏதேனும் ஒரு நாட்டில், ஒரு நகரத்தில் குண்டுவெடிப்பு நிகழாத நாட்களோ, உயிர்ப்பலி ஏற்படாத நாட்களோ இல்லை. அண்மைக்காலமாக பொதுக்கூட்டங்களில், பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம், தேவாலயம், மசூதி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சந்தைகள் என மக்கள் கூடுகிற பல இடங்களிலும் நடந்து வருகிற குண்டுவெடிப்புகள் பதற வைப்பதாக அமைந்து இருக்கின்றன. விமான நிலையங்களில், பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில், பொது விழாக்களில் குண்டு வெடிப்புகளை தவிர்ப்பதற்கு சோதனை என்ற பெயரில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத்தான் செய்கிறார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் சிரமத்துக்கும், எரிச்சலுக்கும் ஆளாகி வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக பொதுமக்களின் சூட்கேஸ், கைப்பை உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றபோது தனி மனித அந்தரங்கத்துக்கு, சுதந்திரத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. விலை மதிப்பில்லாத நேரம் வீணாகிறது. நமது பெட்டியில் அல்லது பையில் என்ன இருக்கிறது என்பதை போலீசார் பரிசோதிக்கிறபோது, நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இப்படிப்பட்ட ஆத்திரத்துக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு இத்தகைய வெடிகுண்டு சோதனைகளை ஓசைப்படாமல் நடத்துவதற்குத்தான் இப்போது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தின் நியூபிரன்ஸ்விக் நகரில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் வின்லேப் அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைக்கு பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில், கல்லூரிகளில், இன்ன பிற பொது இடங்களில் இலவசமாக கிடைக்கிற வைபை என்னும் கம்பியில்லா இணையதள வசதியை பயன்படுத்தி வெடிகுண்டுகளை, பயங்கரவாத செயல்களில் பயன்படுத்தப்படுகிற ஆயுதங்களை, திரவங்களை கண்டுபிடித்து விடலாம் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். வைபையை வைத்துக்கொண்டு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், கூகுள் என போகலாமே தவிர வெடிகுண்டுகளை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா? எந்த இடத்திலும் யாரேனும் பை, பெட்டி என எதில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கத்திகள், பேட்டரிகள், திரவங்கள் வைத்திருந்தாலும் வைபையில் பயன்படுத்தப்படுகிற கம்பியில்லா சமிக்ஞைகளை பயன்படுத்தி அவற்றை கண்டுபிடித்து விடலாம். சம்பந்தப்பட்ட நபரிடம் போய் உங்கள் பையை திறந்து காட்டுங்கள், உங்கள் பெட்டியை திறந்து காட்டுங்கள் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களுக்கு தெரியாமலேயே இதை கண்டுபிடித்து விடலாம். அதன்பிறகு அவரை மடக்கி சோதனை போட்டு அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்? 2 அல்லது 3 ஆன்டெனாக்களைக் கொண்ட ஒரு கம்பியில்லா சாதனத்தை வைபை தொலை வசதியுடன் இணைத்து விட்டால் போதும். இந்த கம்பியில்லா சாதனத்தில் இருந்து வெளிப்படுகிற சமிக்ஞைகள் (சிக்னல்), ஒருவருடைய உடைமைகளை ஊடுருவிச்சென்று விட்டு, திரும்பி வரும். அவற்றை பகுப்பாய்வு செய்தால் போதும். அவற்றில் குண்டு இருக்கிறதா, துப்பாக்கி இருக்கிறதா, ஆசிட் இருக்கிறதா என தெரிய வந்து விடும். வைபை துணையுடன் கூடிய இந்த சாதனத்தை சோதனை ரீதியில் பயன்படுத்தி பார்த்தபோது முதுகில் அணிந்து கொள்கிற பைகளுக்குள் வெடிகுண்டு போன்றவை இருந்தால் 95 சதவீதம் துல்லியமாக கண்டுபிடித்து விட முடிந்து இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பை செய்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று உள்ள விஞ்ஞானி யிங்யிங் சென் இதுபற்றி கூறும்போது, “இந்த அமைப்பு இன்றைக்கு அவசியமாகி இருக்கிறது. விமான நிலையங்கள் போன்றவற்றில் வெடிகுண்டு சோதனைகளை நடத்துவதற்கான அமைப்புகளை நிறுவுவது என்பது மிக செலவு பிடிக்கிற அம்சம். இந்த பணியை செய்து முடிப்பதற்கு அதிகாரிகளை அமர்த்த வேண்டியதும் இருக்கிறது. இதையெல்லாம் குறைப்பதற்கு ஒரு அமைப்பை உருவாக்க விரும்பித்தான் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இப்போது வைபை துணையுடன் நிறுவுகிற வயர்லஸ் அமைப்பை கண்டுபிடித்து இருக்கிறோம். இதன்மூலம் சோதனை என்ற பெயரில் தனி நபர்களின் அந்தரங்கம் பாதிக்காது” என்கிறார். இந்த சோதனை முறை எல்லா இடங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்டால் போதும். பயங்கரவாத தாக்குதல்களையே தவிர்த்து விட முடியும் என்ற நம்பிக்கை வெளிச்சம் உருவாகி இருக்கிறது. -இலஞ்சியன்

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கனித்தமிழுக்கு மேன்மை சேர்த்த கால்டுவெல்!

கனித்தமிழுக்கு மேன்மை சேர்த்த கால்டுவெல்! கால்டுவெல் கவிவேந்தர் கா.வேழவேந்தன், (முன்னாள் அமைச்சர்) அன்னைத் தமிழின் குருதியிற் பிறந்தவையே கன்னட மொழியும், சுந்தரத்தெலுங்கும் அழகிய மலையாளமும், அருமைத்துளுவும் என்று வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண பெருநூலைப்படைத்தவரே ராபர்ட் கால்டுவெல்.அயர்லாந்து நாட்டின் கிளாடி எனும் ஆற்றங்கரையில் அமைந்த சிற்றூரில் 1814-ல் பிறந்தவர். ஸ்காட்லாந்து சென்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். லண்டனில் உள்ள கிறிஸ்தவ சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற அவர் அங்கிருந்து தென் இந்தியாவுக்கு கப்பலில் பயணம் மேற்கொண்டு நான்கு மாதங்களில் சென்னை துறைமுகம் வந்தடைந்தார். சென்னையில் இருந்து நெல்லைக்கு 400 மைல் தூரம் நடந்தே சென்று தமிழின் இயல்புகளையும், பண்பாட்டையும் முழுவதும் அறிய ஆவல் கொண்டார். பாளையங்கோட்டை வழியாக இடையன் குடியை அடைந்தார்.அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமயத்தொண்டும், மொழித்தொண்டும் திறம்பட ஆற்றினார்.கல்விச்சாலைகள் நிறுவி கற்றோர் தொகையை அதிகப்படுத்தினார். கிறித்தவரும் இந்து மதமும், தாமரைத் தடாகம் ஞான நீராட்டு நற் கருணை மாலை உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். ஆனால் கால்டுவெல் தன் வாழ்நாளையெல்லாம் செலவிட்டு மிகுந்த ஆர்வத்தோடும் எழுச்சியோடும் தீட்டிய ஒப்பரிய நெடுநூல்தான் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ ஆகும். இந்நூலின் முன்னுரையே 153 பக்கங்களைக் கொண்ட அற்புத ஆய்வுரை கொண்டதாகும். நூலின் மற்ற 640 பக்கங்களில் மொழி ஒலி, வேர்ச்சொல், பெயர்க்காரணம், இடம் பெயர், வினைச் சொல், சொல்லியல் ஒருமைப்பாடு எனும் பெருங்கூறுகளுடன் நம் செம்மார்ந்த தமிழ்மொழியின் மிகப் பெரும் கீர்த்தியையும் நேர்த்தியையும் அற்புதமாக விளக்குகிறார். அதை முழுவதும் ஆய்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் கால்டுவெல்லை வியந்து போற்றி ‘நல்லறிஞர்’ பட்டம் அளித்து மகிழ்ந்தன. ‘இந்திய நாட்டில் வழங்கும் மொழிகள் அனைத்தும் ஆரிய இன மொழிகளே! என்று தவறான திக்கில் நடைபோட்ட ஐரோப்பிய மொழி நூலறிஞர்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் மறுத்து, பல்வேறு கண்டுபிடிப்புகளால் திராவிட இன மொழிகளின் மாப்பெருமையை நிலைநாட்டி பெருநூல் வடித்தவர்தான் கால்டுவெல். திராவிட இன மேற்கோளின் இன ஒற்றுமையை இவரைப் போல் ஆய்ந்து மாபெரும் இலக்கண நூல் தீட்டியவர் வேறு எவரும் இல்லை. தமிழுலகம் காலமெல்லாம் இவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. ‘அரிசி’ ‘கட்டுரம்’, ‘தோகை’ போன்ற நம் தாய்த் தமிழ்ச் சொற்களே கோளம் முழுதும் உள்ள மொழிகளுக்குக் கடனாகத் தமிழால் தரப்பட்டவை. 1856-ம் ஆண்டிலேயே அச்சேறிய கால்டு வெல் தீட்டிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ தான் உலக மொழிக் குடும்பங்களில் உயர் தனிச் செம்மொழியாக நம் செந்தமிழ் எப்படித் தனிப்பெரும் ஆற்றலுடன் கம்பீரமாகத் திகழ்கிறது என்பதை முதன்முதலில் நிறுவியது. தமிழில்தான் ‘உயர்திணை’ என்றும் ‘அஃறிணை’ என்றும் பகுத்தறிவுக்கு ஏற்ப பாகுபாடு உள்ளதென்பதை அழுத்தமுடன் கூறியவர் கால்டுவெல் . உலகில் வேறு எந்த மொழியிலும் இந்த நுட்ப இலக்கணப் பாகுபாடு இல்லை என்றும் கூறியவர் அவரே. நம் தமிழ் மீது தீராக் காதல் கொண்ட கால்டுவெல், தம் இல்லற வாழ்வையும் தமிழர் பாணியில் அமைத்துக் கொண்டார். அப்பொழுது நாகர்கோவிலில் லண்டன் மிஷன் சங்கத்தில் தொண்டாற்றிய சார்லஸ் மார்ட்டின் மகள் எலிசாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்தே நெல்லைச் சீமையில் கல்விப் பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் மகன் ஆடிஸ்டன் ஆஸ்திரேலியா சென்று மருத்துவப் பணியாற்றித் தொண்டு செய்தார். மொழிகளின் மேல் மாறாப் பற்று கொண்ட செம்மல் கால்டுவெல் பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவர் ஆவார். நம் தமிழ்மறை திருக்குறளையும், சீவக சிந்தாமணியும், இலக்கண நூல்களை மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்ந்தார். கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு தமிழகம் வெறும் அகிலையும், துகிலையும் மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. எழிலார்ந்த தமிழ்ச் சொற்களையும் ஏற்றுமதி செய்தது என்பதை ஆணித் தரமாக எடுத்துக் கூறியவர் கால்டுவெல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் கொற்கைத் துறைமுகத்திலும், தொண்டித் துறைமுகத்திலும் எருமைக் கூட்டங்களைப் போல் கிரேக்க ரோமானியக் கப்பல்கள் வந்து காத்துக் கிடந்த காட்சிகளைப் பெருமிதத்துடன் அகழ்ந்தாய்ந்து வியந்து கூறியவர் இவரே. இப்போதைய ‘தூத்துக்குடி’யின் உண்மையப் பெயர் ‘தூற்றுக்குடியே. ஓர் ஊற்று வற்றிப் போனால், உடனே அதைத் தூர்த்து புதிய ஊற்றை வெட்டிக் கொள்ளும் பேருழைப்பு மண்டியோர் நிறைந்த நகரமே ‘தூத்துக்குடி’ ஆனது என்பார் கால்டுவெல். அவர் ஓரிருமுறை தாயகம் சென்று வந்தாலும், தம் வாழ்நாளில் மிகுதியாக 53 ஆண்டுகள் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து, ஊர் ஊராகச் சுழன்று வந்து ஒவ்வோர் இடத்தையும் ஆராய்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளைக் கூறி தமிழகத்தின் மேன்மையை உலகின் விழிகளுக்கு உணர்த்தினார்.நம் தாய்த்தமிழைக் கடவுள் கற்பித்த மொழி என்றும், வடமொழிக் கால்வழி மொழி என்றும் வெகு சிலர் தவறாகச் சொன்னபோது, அது பன்னெடுங்காலம் முன்பிருந்து புழங்கிய செவ்வியல் மொழி என்றும், தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்த செம்மொழி என்றும் தெள்ளத் தெளிவாக ஆய்ந்து கூறியவரே நம் கால்டுவெல்.அறிஞர் அண்ணா கால்டுவெல் சிறப்பைத் தமிழர்கள் மறவா வண்ணம் சென்னைக் கடற்கரையில் அவருக்கு அழகிய சிலையை நிறுவினார்.தமிழ் மண்ணையே தாயகம் ஆக்கிக் கொண்ட செம்மல் கால்டுவெல் தம் இறுதி நாள்களில் கொடைக்கானலில் சிறுகுடில் அமைத்துக் கொண்டு தன் மகனுடன் வாழ்ந்தார். மொழிப் பணியாலும் சமுதாயப் பணியாலும், சமயப் பணியாலும், புகழ் மகுடம் பெற்ற கால்டுவெல் 1891-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்28-ந் தேதி கொடைக்கானலில் மரணம் அடைந்தார். அவர் பல்லாண்டு பணிபுரிந்த இடையன்குடிக்கே அவர் உடல் கொண்டு வரப் பெற்று அதன் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேன்மை மிகுந்த அம்மாமனிதரின் மாட்சிக்கு என்றென்றும் சாட்சியாக விளங்குவது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணப்’ பணியே. அயர்லாந்தில் பிறந்து தன் உயர்வான மொழித் தொண்டால் நம் விழியெல்லாம் நிறைந்திருக்கும் அப்பெருமகனின் புகழ் என்றென்றும் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும். இது திண்ணம்.இன்று(ஆகஸ்டு28-ந்தேதி) கால்டுவெல் நினைவுநாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடலுக்கும் மீனவர்களுக்கும் ஏது ஓய்வு?

கடலுக்கும் மீனவர்களுக்கும் ஏது ஓய்வு? எழுத்தாளர் ஜான் பிரபு என்னுடைய பள்ளிக்காலத்தில் அதிகாலையில் எழுந்து கடற்கரையில் நின்று, கரை நோக்கி ஓடிவரும் படகுகளை பார்ப்பதென்பது அலாதியானது. படகுகள் கரைசேர்ந்ததும், மீன்களை வலைகளிலிருந்து பிரித்து எடுத்து, கடவத்தில் (பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டி) அடுக்கி எடுத்துச்சென்று மார்க்கெட்டில் விற்று வருவது அம்மாவின் வேலை. என் அம்மாவின் மீன் வியாபாரம் எப்படி ஆரம்பிக்கும் என்றால், கிலோ ஐம்பது ரூபாய் என்று என் அம்மா கூற, வந்திருப்பவர் நாற்பதிலிருந்து ஆரம்பிப்பார். இவர் விலையை கூட்ட என் அம்மா ஒரு பக்கம் மீனின் விலையை குறைத்துக் கொண்டே வருவார். ஒரு கட்டத்தில் வாங்க வந்தவர், நாற்பத்திரண்டு ரூபாய் எனவும், என் அம்மா நாற்பத்து ஏழு எனவும் நிற்பர். இந்த ஐந்து ரூபாய் வித்தியாசத்திற்காக என் அம்மா அவரிடம் விற்க மாட்டார். மீண்டும் வெயிலில் அமர்ந்திருந்து அடுத்து வாங்க வருபவருக்காக காத்திருப்பார். ஐந்து ரூபாய் குறைவாக விற்று விட்டு, வெயிலில் இருந்து எழுந்து வீடு சென்றிருக்கலாம். ஆனால் அந்த ஐந்து ரூபாய் இரவெல்லாம் உழைத்த என் அப்பாவின் உழைப்பின் வலிக்கு குறைவானதாக இவர் நினைத்திருக்கலாம். அல்லது அந்த ஐந்து ரூபாய் இந்த வெயிலை விட ஒன்றுமில்லை என்று உணர்ந்திருக்கலாம். எப்படியிருப்பினும், அந்த ஐந்து ரூபாய் வித்தியாசம் என்பது நேர்மையான உழைப்பிலிருந்து வந்தது, இரவின் குளிரையும் தூக்கத்தையும் பாராமல் உழைத்த இவரின் கணவர் உழைத்ததை, வெயிலின் உக்கிரத்தையும் பொருட்படுத்தாமல் இவர் உழைப்பதில் கிடைத்தது. இன்றைய அறிவியல் காலகட்டத்தில் இயந்திரங்களின் உதவியுடன் நடக்கும் எளிய தொழிலன்று இந்த மீன்பிடி. கொட்டும் மழையில், தோலில் இருக்கும் வியர்வை நாளங்களில் வியர்த்திருக்கும் ஒரு துளி வியர்வை மேல் மழையும் சேர்ந்துகொள்ளும் அளவு உடலுழைப்பு தேவைப்படும் ஒரு தொழில். தூக்கி வீசும் அலைகளுக்கு எதிராகவும், உரத்து வீசும் காற்றுக்கு எதிராகவும், மழைகளிலும் இயற்கைக்கு எதிராக போராடி வாழும் வாழ்வு இந்த மீனவர் வாழ்வு. எந்தவகை கடினமான வேலையாக இருந்தாலும், படகை கடலுக்கு எடுத்துச்செல்ல என்றும் அஞ்சியதில்லை இவர்கள். மீன்பிடியிலேயே பலவகைகள் உண்டு. மீன்பிடித்து அரைநாளிலும் திரும்பலாம், ஒரு நாள் கூட ஆகலாம் அல்லது சிலவகை மீன்பிடிக்க ஒரு வாரம் வரைகூட ஆகலாம். எந்தவகை மீன்பிடியாய் இருப்பினும் மீனவர்களின் மூலதனமாய் இருப்பது, உழைப்பு, கடின உழைப்பு மற்றும் அயராத உழைப்பு மட்டுமே. மீனவனின் ஒவ்வொரு நாளும் இயற்கையை புரிந்து, அதனுடன் உறவாடி மற்றும் அதனுடன் போராடி வாழ்வதுமே ஆகும். இன்னும் சில மணிநேரங்களில் மாறப்போகும் காற்று, வரப்போகும் மழை, வெளுத்துக்கட்டப் போகும் புயல் இது அனைத்தையும் முன்கூட்டியே கணித்து அதற்கேற்றது போல செயல்பட வேண்டிய தொழில். சில நேரங்களில் கணித்த நேரத்திற்கு முன்பே கூட வானிலை மாறுகையில், அதையும் தன்னுடைய கடைசி நாள் போல் நினைத்து வெற்றி பெறுகின்றனர். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் இவர்களின் முயற்சி வெற்றியடையாமலும் போகலாம். உயிர் போகும் தருவாயும் உண்டு. உடல் குடும்பத்தாருக்கு முழுதாக கிடைக்கலாம், மீன் அரித்த பாதியோ அல்லது முழுதும் கடலோடு கூட போகலாம். எது எப்படியானாலும், அந்த நிகழ்வு இவர்களை தடுத்து நிறுத்த முடிவதில்லை. பயத்தை வென்று நங்கூரத்தை எடுத்து படகில் வைத்துக்கொண்டு தனது வாழ்வாதாரத்தை நோக்கி சென்று கொண்டே இருப்பார்கள். கடலில் மீனவர்களின் வேலையென்பது நாம் நினைப்பது போன்றதல்ல. படகின் மேல்விளிம்பில் ஏறி நின்று அலைகள் தூக்கிவீசும் நேரம் வலையிழுப்பதென்பது, நொடி நேரத்தில் கவனம் தவறினாலும் ஆபத்தில் முடிவதைத் தவிர்க்க முடியாது. மழையின் பொழுது குளிரில் பற்கள் ஒன்றோடொன்று மோதினாலும், வெயில் காலத்தில் வெற்றுடம்பில் உடலை சுட்டுப்பொசுக்கும் வெக்கையானாலும், உழைப்பில் மட்டுமே கவனமாயிருக்கையில் தனக்கானதை பெற முடியும். கடலுக்குச் செல்லும் உபகரணங்களை எடுத்துக்கொண்டு மீனவன் கடலுக்குச் செல்லும் அந்த நொடியே, கரை நோக்கி வரும் அலைக்கு எதிராக கிளம்புகிறான். சில வகை மீன்பிடிகளில் வலைமற்றும் வேறு எந்த உபகரணமுமின்றி தன் கையாலேயே மீன்பிடிக்க கடலில் குதிப்பதுண்டு. இத்தகைய தருணங்களில் தன்னுடைய உடலையே ஆயுதமாகக்கொண்டு வேட்டையாடி மீன்பிடிக்கின்றனர். மூச்சை இழுத்துக்கொண்டு கடலில் குதித்து அடுத்த மூச்சை இழுப்பதற்குள் மேலே வர வேண்டும். மூச்சை பிடித்துக்கொண்டு கடலுக்குள் குதிக்கும் அந்த நிமிட நேரத்திற்குள் தனக்கு தேவையானதை கடலிலிருந்து எடுத்துக்கொண்டு வரவேண்டிய தொழில் இது. மீன்பிடி நாளோடு அல்லது மீன்பிடித்த அந்த நேரத்தோடு மீனவனின் உழைப்பு முடிவதல்ல. இதற்கு நிகரான உழைப்பை, பிடித்த மீன்களை பணமாக மாற்றுவதிலும் போட வேண்டியிருக்கிறது. தானே சந்தைப்படுத்துகையில் ஏற்படும் நேரமும் அல்லது இடைத்தரகர்களிடம் விற்கையில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் லாபத்தில் இவர்களின் உழைப்பு அடிபட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எது எப்படியிருப்பினும், மீனவனின் அடுத்த நாள் பயணம் தொடரும். தன் உடலை நம்பி, தன் உழைப்பை நம்பி, தான் பெரிதும் நம்பும் கடல்தாயை நம்பி. கடலுக்குள்ளே புதைந்திருக்கும் நங்கூரத்தை தன்னுடைய உடல்பலம் திரட்டி தூக்கும் நொடியிலிருந்து, மீன்பிடித்துவிட்டு வந்து திரும்பவும் கடலுக்குள் வீசும் அந்த நொடி வரை மீனவனின் உழைப்பு ஓய்வின்றி போராட்டமாய் இருக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்த கலைவாணர்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பேராசிரியை அன்புக்கொடி நல்லதம்பி இன்று (ஆகஸ்டு 30-ந்தேதி) கலைவாணர் நினைவு தினம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1908-ம் ஆண்டில் நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரி என்னும் புறநகர்ப்பகுதியில் சுடலைமுத்து-இசக்கி தம்பதியினர் 30-8-1908 அன்று ஓர் ஆண் குழந்தையைப் பெற்றனர். அப்போது அந்தக் குழந்தை உலகெங்கும் புகழ்பெற்ற கலைச்சுடராக விளங்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உலகம் முழுமையும் அவரைக் கலைவாணர் என்று அழைத்து மகிழ்ந்தது. இன்றும் அவரது கலைப்பணிக்காகவும் சமூக சேவைக்காகவும் கொடைப் பண்புக்காகவும் போற்றப்பட்டு வருகிறார். பெற்றோர் வைத்த பெயர் கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்று பொருள்படும் ஆங்கில முதலெழுத்துக்களால் என்.எஸ்.கே. என்று அழைக்கப்பட்டார். அவருடைய கொடைப்பண்புக்காக ‘கர்ணன்’ எனப் போற்றப்பட்டார். பொதுவாகத் திரைப்படங்களிலும் நாடகங் களிலும் சிரிப்பு நடிகர் என்றாலே கோமாளி என்றும் பப்பூன் என்றும் அழைக்கப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தை மாற்றி, சிரிப்பு நடிகர் கதாநாயகராக நடிப்பவருக்கு இணையாக மதிக்கப்படும் நிலையை உருவாக்கினார். சிரிக்கவைத்துச் சிந்திக்கத் தூண்டும் அவரது நடிப்பு திரைப்படங்களை எல்லாம் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாடங்களாக மாற்றியது. நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைப் பரப்பினார். மூடநம்பிக்கைகளைச் சாடினார். முற்போக்கு எண்ணங்களை விதைத்தார். பொழுதுபோக்கு எனக் கருதப்பட்ட திரைப்படம் அவர் நடிப்பால் அறிவுபுகட்டும் சாதனமாக மாறியது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் கலைவாணருக்கு இருந்த தொடர்பு சிறப்பானது. 1939-ல் வெளிவந்த ‘மாணிக்கவாசகர்’ படத்தில் கலைவாணர் சீர்திருத்தக் கருத்துகளைச் சிறப்பாகப் பரப்பும் விதத்தைப் பார்த்து அண்ணா மகிழ்ந்தார். பெரியாரிடம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ‘மக்கள் மனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அவர்கள் மனத்தில் பதியுமாறு சிறப்பான கலைப்பணி புரிந்து வருபவர்’ எனக் கலைவாணரைப் பெரியாரிடம் அறிமுகப்படுத்தினார். ‘நான் கல்லடியும் சொல்லடியும் பட்டு மூன்று மணிநேரம் தொண்டைகிழியப் பேசியும் எவ்வளவு பேர் என் கருத்தை ஏற்றார்கள் எனத் தெரியாமல் போகிறது. அதையே என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் சொல்கிறார். மக்கள் காசு கொடுத்துச் சினிமா பார்த்து மகிழ்ச்சியாக இந்தக் கருத்துகளையெல்லாம் நன்கு தெரிந்துகொள்கிறார்கள். நான் நூறு கூட்டங்களுக்குப் போய் செய்யக்கூடியதை என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தின் மூலம் சாதித்துவிடுகிறார்’ என்று பெரியார் கூறினாராம். 1957-ல் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு வாக்கு சேகரிக்க கலைவாணர் காஞ்சீபுரம் வந்தார். அண்ணாவை எதிர்த்துத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் புகழ்பெற்ற டாக்டர். கலைவாணர் தான் பேசத் தொடங்கியதும் அந்த டாக்டரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனாராம். ‘மிகவும் திறமைவாய்ந்த டாக்டர். கட்டணம் வாங்காமல் ஏழைகளுக்கும் மருத்துவம் பார்க்கும் டாக்டர்’ என்றெல்லாம் அவரைப் புகழ்ந்துகொண்டே போனாராம். ‘அண்ணாவுடன் போட்டியிடும் வேட்பாளரைக் கலைவாணர் இப்படிப் புகழ்கிறாரே’ என்று மக்களுக்குத் திகைப்பும் குழப்பமும் ஏற்பட்டது. பேச்சை முடிக்கும்போது, ‘இவ்வளவு திறமை வாய்ந்த டாக்டரை நீங்கள் காஞ்சீபுரத்தில் வைத்துக் கொண்டால்தானே உங்களுக்கு நல்லது. அவரை எம்.எல்.ஏ. ஆக்கிச் சென்னைக்கு அனுப்பினால் அப்புறம் யார் உங்களுக்கு மருத்துவம் பார்ப்பர்கள்? அவரை இங்கேயே வைத்துக்கொள்ளுங்கள். அண்ணாவை எம்.எல்.ஏ. ஆக்கிச் சென்னைக்கு அனுப்பிவையுங்கள்’ என்றவுடன் எழுந்த கையொலி அடங்க நெடுநேரம் ஆயிற்றாம். கலைவாணர் நாடக நடிகராக இருந்தபோது அவர் சக நடிகர்கள் மீது காட்டிய அக்கறையும் தேவைப்படுபவர்களுக்கு அவரின் உதவிக்கரம் நீண்டதையும் உடனிருந்து கவனித்தவர் எம்.ஜி.ஆர். கலைவாணரை எம்.ஜி.ஆர். தனது குருநாதராகப் போற்றினார். கலைவாணர் போலவே சிறந்த கருத்துகளையும், உயர்ந்த எண்ணங்களையும் பரப்பும் கலை வடிவமாகத் தமது திரைப்படங்களை உருவாக்கி வழங்கினார். ‘புரட்சி நடிகர்’ என்று போற்றப்பட்டார். கலைவாணரைப் போலவே எம்.ஜி.ஆரும் அள்ளி வழங்கும் கொடைப்பண்பைத் தமது வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டார். கலைவாணர் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாகப் பெரும் முயற்சி மேற்கொண்டார். அவருடைய முயற்சியாலே 12-7-1953 அன்று உருவாக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக 1957-ல் கலைவாணரும், பொருளாளராக எம்.ஜி.ஆரும் சிறந்த பணியாற்றினர். கலைஞர் மந்திரி குமாரி என்னும் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியபோது படத்தைப் பார்த்துவிட்டுக் கலைவாணர் மிகவும் பாராட்டினார். அவர் தயாரிக்கும் ‘மணமகள்’ படத்துக்கு திரைக்கதை உரையாடல் எழுதும் வாய்ப்பை வழங்கியதோடு அதற்குரிய ஊதியமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் திரைக்கதை உரையாடல் எழுதுவதற்கு அவ்வளவு பெரிய தொகை இந்தியாவிலேயே யாரும் கொடுத்ததில்லை. இது கலைஞர் மீதும், அவருடைய தமிழ் மீதும் கலைவாணர் கொண்டிருந்த அன்பையும் ஈடுபாட்டையும் காட்டியது. கலைஞர் சேலத்திலிருந்து சென்னைக்குத் தமது இல்லத்தை மாற்றிக்கொண்டதற்கும் கலைவாணரே காரணம் என்பதைக் கலைஞர் தமது ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். சென்னை வாலாஜா சாலையில் அமைந்திருந்த ‘பாலர் அரங்கம்’ கலைஞர் ஆட்சியில் ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டதன் மூலம் கலைவாணர் மீது கலைஞர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை அறிந்துகொள்ளலாம். 49 ஆண்டுகளே வாழ்ந்த கலைவாணர் ஆயிரக்கணக்கான பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டார். திராவிட இயக்கம், தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்னும் மூன்று இயக்கங்களுமே அவரைப் பெரிதும் கவர்ந்தவையாக விளங்கின. அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாட்டைப் போலவே அவர்கள் அத்துணைப் பேரும் கலைவாணரைப் பெரிதும் மதித்துப் போற்றினர். நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினர் நலனுக்காகவும் அவர் பெரிதும் பாடுபட்டார். யார் வந்தாலும் அள்ளி வழங்கும் வள்ளல் குணம் அவரின் தனிச்சிறப்பு. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கலைவாணரைப் பற்றிக் குறிப்பிட்டதை இங்கு நினைவுகூரலாம். ‘தமிழ்க்கலைஞனிலும் ஒருவன் ஒரு கோடியை அடுத்துப் பொருள் திரட்டினான். ஆனால் அவன் அத்தனையும் பிறர்க்கு வழங்கி உயிர்துறந்தான் என்று வரலாறு எழுதப்பெறுமேயானால் அது என்.எஸ்.கே. ஒருவரையே குறிக்கும்’ என்றார். கலைவாணரின் பொதுவாழ்வுக்கும் கொடையுள்ளத்துக்கும் தூணாய் அமைந்து துணைபுரிந்த அவரது துணைவியார் டி.ஏ.மதுரம் ஒப்பற்ற கலைஞராகவும், எடுத்துக்காட்டான வாழ்க்கைத் துணைவியாகவும் வரலாறு படைத்தார். 1936 முதல் 1957 வரை கலைவாணரும், டி.ஏ.மதுரமும் ஜோடியாக 122 படங்களில் நடித்துள்ளார்கள். இது தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மட்டுமின்றி உலகத்திரைப்படவரலாற்றிலும் பொறிக்கப்படவேண்டிய ஒப்பற்ற சாதனையாகும். கலைவாணர் தமது திரைப்படங்களின் மூலம் தரமிக்க நகைச்சுவையை வழங்கினார். மூடநம்பிக்கைகளைப் போக்கும் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தார். தமிழ் மொழியின் தனிச்சிறப்புகளை எடுத்துரைத்தார். காந்தி, பெரியார் என்னும் சான்றோர்களின் அறிவுரைகளைப் பரப்பினார். ஆண்-பெண் சமத்துவத்துக்கும் அடித்தள மக்கள் உயர்வுக்கும் உரிமைக்குரல் முழங்கினார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி அவர் மறைந்தபோது அகிலமே துயரத்தில் ஆழ்ந்தது. ஒரு தலைசிறந்த கலைஞரை, கொடைப்பண்புக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த வள்ளலை, தன்னைப்போல் எண்ணற்ற நகைச்சுவை நடிகர்களை உருவாக்கி வழங்கிய ஆசானை, பேசியதைப் போல் வாழ்ந்துகாட்டிய சிந்தனையாளரைத் தமிழ்நாடு இழந்தது. கலைவாணர் மறைந்தாலும், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். அவர் வழங்கிய சிந்தனைக் குவியல் நமக்கு என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருக்கிறது. ஏழ்மையும் அறியாமையும் அறவே இல்லாத சிறந்த நிலையை அடையப் பாடுபடுவதே அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். (கட்டுரையாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள்)

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கண்ணீரில் கலந்த காவிரி

வெள்ள பாதிப்பு; முதல்-அமைச்சர் பார்வை என செய்திகள் ஒரு பக்கம்; கிணறுகள் வற்றி கிடக்கின்றன; ஏரியில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; குளங்கள் காய்ந்து கிடக்கின்றன என விவசாயிகளின் வேதனை மறுபக்கம். ‘தடுப்பணைகள் கட்ட முடியாது; ஏனெனில் அவை சமவெளிப் பகுதிகள்’ என்று சேலத்தில் சொன்னார் முதல்-அமைச்சர். தற்போது, ‘60-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படும்’ என்று ஈரோட்டில் அறிவித்திருக்கிறார். எப்போது சமவெளிகள் பள்ளத்தாக்குகளாக மாறின என்பது புரியாத புதிர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமும், கடலை அடைந்த காவிரிக்கு தடுப்பணையும் ஒன்றே. ‘இது கூட புதிய திட்டம் இல்லை. 117 கோடி ரூபாயில் 61 தடுப்பணைகள் கட்டப்போவதாக 2014-ம் ஆண்டே உயர் நீதிமன்றத்தில், இதே தமிழக அரசால் சொல்லப்பட்ட விஷயம் தான்’ என போட்டு உடைத்திருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடி ரூபாய் வருவாய் கொண்ட தமிழக அரசுக்கு, வெறும் 117 கோடி ரூபாய் ஒரு விஷயமா? ஆண்டுக்கு 25 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தால் கூட 60 டி.எம்.சி. தண்ணீரையும், டெல்டா விவசாயிகளின் கண்ணீரையும் காப்பாற்றியிருக்க முடியுமே. இன்றைய தேதிக்கு அத்திட்டத்தின் மதிப்பீடு 300 கோடி ரூபாயை எட்டியிருக்கும். அந்த, ‘ஒதுக்கீடு’ எப்போது நடக்குமோ? இந்த ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையளவு, சராசரியை கடந்துவிட்டது. தமிழகத்துக்கு கர்நாடகா ஜூன், ஜூலையில் மட்டும் திறந்துவிட்டதே 147 டி.எம்.சி. தண்ணீர் அதன் பிறகு தான், சுனாமி போல, வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்ட கதையெல்லாம் நடந்தது. கேரள பெருவெள்ளத்தின் புண்ணியத்தில், நம் எல்லையோர மாவட்டங்கள் மிதந்ததும் அறிந்ததே. பல் துலக்க தண்ணீர் இல்லாத இஸ்ரேல், இன்று நீர் மேலாண்மையில் உலக நாடுகளுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. தமிழகமோ ஊதாரி கையில் கிடைத்த பணத்தைப் போல ஒட்டுமொத்த தண்ணீரையும் வீணடித்து கிடக்கிறது. தடுப்பணைகள் சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், தடுப்பணைகளுக்கு மாற்றாக வடிகால்வாய்கள் அமைத்திருக்க முடியாதா? தண்ணீரையே பார்த்திராத ராமநாதபுரம், விருதுநகர் வரை மழை நீரை மடைமாற்றி இருக்க முடியாதா? தேசிய நதியை எல்லாம் இணைப்பது இருக்கட்டும்; மாநிலத்துக்கு உள்ளேயாவது நதிகளை இணைக்கக் கூடாதா? நல்லக்கண்ணு மற்றும் அப்பாவு தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்புகளை அமல்படுத்தக் கூடாதா? கூழுக்கே வழியைக் காணோம்; பாயாசத்துக்கு எங்கே போவது என்ற கதையாக, காவிரியின் நிலை இந்த லட்சணத்தில் இருக்கும்போது, கோதாவரியைக் கொண்டு வருகிறார்கள் என்பதை எப்படித்தான் நம்புவதோ! ஏரிகளையும் குளங்களையும் முறையாக தூர்வாரியிருந்தால், இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தால், ஏரிகள் குளங்கள் கண்மாய்கள் இடையே முறையான இணைப்புகள் இருந்திருந்தால், இந்தப் பக்கம் வெள்ளமும் வந்திருக்காது; அந்தப்பக்கம் வறட்சியும் நீடித்திருக்காது. இந்தப் பிரச்சினைக்கு இடையில், கொள்ளிடம் பாலத்தின் 9 மதகுகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. எப்போது? வினாடிக்கு, வெறும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த போது. வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தபோது மதகு உடைந்திருந்தால்...? திருச்சி மாவட்டம், கேரளா ஆகியிருக்கும். கரையோர மக்களின் நிலை அதோகதி ஆகியிருக்கும். கொஞ்சம் கூட கலங்காத முதல்-அமைச்சர், இது 180 ஆண்டுக்கு முந்தைய பாலம்; உடைந்ததில் வியப்பென்ன என்பது போல் பேசுகிறார். அதானே! திறப்பு விழாவுக்கு முன்பே பிளந்துவிடும் பாலங்கள் கொண்ட நாட்டில், 180 ஆண்டு ஆன பிறகு கூட, ஒரு மதகு உடையக் கூடாதா? இது ஒரு குற்றமா? ஒரு நாட்டின் மிக முக்கிய தேவை, தொலைநோக்கு கொண்ட தலைமை. இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்த வெள்ளையனுக்கு இருந்திருக்கிறது அந்தப் பார்வை. தற்போதைய தமிழக அரசுக்கு அத்தகைய பார்வை இல்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார் ஆறு முறை ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சனம் செய்வது கடமை; கடமைக்கு விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடமையல்ல. பாராட்டுவதாக இருந்தாலும் பழிபோடுவதாக இருந்தாலும், இரண்டு திராவிட இயக்கங்களின் ஐம்பதாண்டு கால ஆட்சியையும் சேர்த்தே தான் செய்ய வேண்டும். பரஸ்பரம் குறை சொன்னது போகட்டும்; இனிமேலாவது நீர் மேலாண்மையில் கவனம் செல்லட்டும். நிதி ஒதுக்கீடு தான் ஒரே தீர்வு என்பதை நான் வலியுறுத்தவில்லை. ஆண்டுதோறும் கூவத்தை சீரமைக்க ஒதுக்கப்படும் நிதியும், போடப்படும் திட்டமும் என்ன ஆகிறது? அடுத்த வெள்ளத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோமா என்ற கேள்விக்கு பதில் தேடினாலே, அந்த நிதி ஒதுக்கீடுகள் என்ன ஆனது என்பதற்கும் பதில் கிடைத்துவிடும். நல்வழி சொல்ல ஆயிரம் வல்லுனர்கள் இங்கு இருக்கிறார்கள்; அதிகாரம், ஒரு படி கீழே இறங்கி அவர்களை அரவணைத்து, விவசாயிகளை ஆலோசித்து, போர்க்கால அடிப்படையில் அணைகள் கட்ட வேண்டாம்; தடுப்பணைகளைக் கூட தள்ளி வைக்கலாம்; குறைந்தபட்சம், ஆக்கிரமிப்புகளையாவது அகற்றுங்கள். கடைமடைக்கு தண்ணீர் வரட்டும். ஏனெனில், இத்தனை வெள்ளத்துக்குப் பிறகும், விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டார்கள் எனச் செய்தி வந்தால், அத்தனை பேருக்கும் அவமானம்! -அழகிய சிங்கன்

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 27 August 2018

மூளையின் ‘ராஸ்’ நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?

மூளையின் ‘ராஸ்’ நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி? கோ. ஒளிவண்ணன் மனித மூளையின் செயல்பாடுகள் அளப்பரியது. உலகத்தின் அதிநவீன கணினியைவிட மனித மூளையின் செயல்பாடு நுட்பமானது, வேகமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் மூளையின் சிறப்பு நினைவுப் பகுதியைப் பற்றி ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ‘ராஸ்’ என சுருக்கமாக அழைக்கப்படும் அந்த நினைவுப்பகுதியே நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதுதான் ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியச் செய்தி. மாணவர்கள் மூளையின் ராஸ் நினைவகத்தை வெற்றிகரமாக பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்... ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் மூலமாக நமது மூளைக்கு தகவல்கள் செல்கின்றன. தினம் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை, ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம் முன்னால் நடக்கின்றன. எல்லாமே மூளைக்கு கடத்தப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் மூளை பதிந்து வைத்துக்கொள்வதில்லை. அது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சி வியத்தகு மூளைச் செயல்பாடு ஒன்றை கண்டறிந்து கூறியுள்ளது. எவற்றை மூளைக்குள் கொண்டு செல்ல வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என்கிற இன்றியமையாத பணியை மேற்கொள்ளும் மூளையின் சிறப்பு நினைவகப்பகுதி ஒன்று இருப்பது விஞ்ஞானிகளால் அறியப்பட்டது. நுண்வலை செயலாற்றும் அமைப்பு என அந்தப் பகுதியை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ‘ரெட்டிக்யுளர் ஆக்ட்டிவேட்டிங் சிஸ்டம் (ராஸ்-RAS)’ என்றழைக்கப்படுகிறது. இது நமது மூளையின் கீழ்பகுதியில், நரம்பு மண்டலங்கள் மூளையோடு இணையும் பகுதியில் உள்ளது. நாம் காணும் காட்சிகளில், கேட்கும் ஒலிகளில், நுகரும் மணங்களில், சுவைக்கும் உணவுகளில், உடலால் தொட்டு உணரப்படுவதில் எவைகளெல்லாம் மூளைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கியமான வேலைகள் நுண்வலை செயலாற்றும் அமைப்பிடம் (ராஸ்) உள்ளது. இது நமது மூளையின் வாயில் காவலன் போன்றது. தேவையானதை மட்டுமே உள்ளே அனுப்பும். ராஸ் அமைப்பு, நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றோமோ அதை சிரத்தையாக செய்து முடிக்கிறது. தன்னுடைய குழந்தையின் மீது தாய்க்கு அதீத கவனம் இருக்கும். வீட்டில் அனைவருடன் உட்கார்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருப்பார். உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் சிறு சிணுங்கல் சத்தம், அங்கிருக்கும் இரைச்சல் மற்றும் சூழல்களைக் கடந்து மற்றவர்களுக்கு கேட்கும் முன்பே தாய்க்கு மட்டும் தெளிவாக கேட்கும். உடனே பதறி அடித்து எழுந்து செல்வார். இதை நாம் பல நேரங்களில் கண்டிருப்போம். தாய்க்கு மட்டும் குழந்தையின் குரல் கேட்க என்ன காரணம்? அம்மாவின் கவனம் குழந்தையின் மீது. நாம் எதில் கவனம் செலுத்துகிறோமோ, அதற்கு ‘ராஸ்’ முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, குழந்தையின் சிணுங்கல் ஒலிமற்ற ஒலிகளையெல்லாம் புறந்தள்ளி தாயின் செவிக்கு சென்றுவிடுகிறது. இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சொல்லலாம். நீலநிற உடை அணிந்து செல்லும்பொது, அன்றைக்கு அந்தநிற உடை அணிந்தவர்களை நாம் அதிகம் பார்க்கலாம். ஒருவர் புதிதாக ஷூ ஒன்றை வாங்கி அணிந்திருந்தால் அன்றைக்கு அவர் தன்னை அறியாமலேயே பலரது கால்களை பார்ப்பார். இதுவும் ராஸ் நினைவகத்தின் செயல்பாடுதான். சிலர் சிறந்த ஆற்றலாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும் திகழ்வதற்கு மிகமுக்கியக் காரணம் அவர்களது கட்டுப்பாடான செயல்பாடுகள் என்பதை நாம் அறிவோம். அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு பின்னணியில் முக்கிய காரணமாக இருப்பது நுண்வலை செயலாற்றும் அமைப்பு என்கிற ராஸ். அது இயங்கும் விதத்தினை அறிந்துக் கொண்டால் நாம் இந்த தரணியை ஆளலாம். நாம் எதை கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கிறோமோ, அது சம்பந்தமானவற்றை எண்ணற்ற தகவல்களிலிருந்து ‘ராஸ்’ சலித்து பிரித்து எடுத்து நமக்கு தந்துவிடுகிறது. உதாரணமாக, நாம் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், நம்மை அறியாமலேயே ராஸ் நமக்கு எண்ணற்ற உதவிகளை செய்ய தொடங்கிவிடும். அதுசம்பந்தமான செய்திகள், பத்திரிக்கையில் வந்தால் நமது கண்களில் தெளிவாக தெரியும். யாராவது அதை குறித்து பேசினால் நமது கவனம் அதில் செல்லும். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், நாம் எந்த பெருமுயற்சி எடுக்காமலேயே நமக்கு தேவையானதை அறிந்து ராஸ் செயல்படுகிறது. இதுவே, நாமும் முயற்சி செய்து ராஸிற்கு கட்டளைகள் வழங்கினால், நமது இலக்கு விரைவில் எட்டுவது நிச்சயம், நாம் சாதனையாளராவது நிச்சயம். ராஸ் நினைவுப் பகுதியை எப்படி பயன்படுத்திக் கொள்வது? என்பதை கவனிப்போம். நாம் எந்த ஒன்றை உறுதியாக நம்புகிறோமோ, ராஸ் அதனை சிரத்தையுடன் ஏற்றுக் கொள்கிறது. உதாரணமாக, எனக்கு மேடையில் நன்கு பேச வரும், நான் பேச்சாளராக வருவேன் என்று நம்பினால், ராஸ் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அதன்பின், நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரங்கள் திரட்டுகிறது. ஆயிரக்கணக்கான செய்திகள் நம்மை சுற்றி வந்தாலும், அவைகளில் ராஸ் நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் செய்திகளை மட்டும் நமது மூளைக்கு அனுப்புகிறது. ஒன்றின் மீது நம் நம்பிக்கை இன்னும் அதிகரிக்க, ராஸின் கவனம் அதன் மீது இன்னும் கூடுதலாகி அதிக அளவில் நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தருகிறது. இதனால் நாம் திட்டமிட்ட இலக்கை நோக்கி வெகுவாக முன்னேற முடியும். இப்படித்தான் உலகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் எல்லாம், முதலில் தாங்கள் எடுத்துக்கொண்ட செயலில் முழுநம்பிக்கை வைக்கிறார்கள். இத்தகைய நேர்மறையான எண்ணங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். அதே நேரத்தில், நம்மால் ஒன்றினை செய்ய முடியாது என்று நம்பிவிட்டால், ராஸ் அப்பொழுதும் உண்மையான ஊழியனாக நம்மால் ஏன் செய்ய முடியாது என்பதற்கான தகவல்களை திரட்டி நமது மூளைக்கு அனுப்பிவிடும். அதுமுடியாது என்கிற நமது நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டிவிடும். என்னாலே காலையிலே எழுந்து நடைப்பயிற்சி எல்லாம் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், என்றைக்கும் நடக்க மாட்டார்கள். எனக்கு கணக்கு பாடம் வராது என்று ஒருவர் நம்பினால், அவருக்கு கணக்குபாடம் வராது. ‘கணக்கு பாடமென்ன பெரிய இதுவா, எனக்கு வரவில்லையென்றால் யாருக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்பவர்கள், கணிதத்தை கற்று அறியும் சாத்தியங்கள் அதிகம்’. ஆகவே சாதனையாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ ராஸ் என்கிற மூளை நுண்வலை செயலாற்றும் அமைப்பை திறம்பட பயன்படுத்துகின்றனர். நாமும் ராஸ் நினைவுப்பகுதியை செம்மையாக நேர்மறையாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts