Thursday 30 August 2018

சாலையும் தேவை! சோலையும் தேவை!

சாலையும் தேவை! சோலையும் தேவை! முனைவர் குணா.தர்மராஜா நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றக்கூடாதென சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இது நிரந்தர தடையாக மாறுமா என்ற ஏக்கமும், மாறவேண்டும் என்ற அவாவும் அவர்கள் முகங்களில் தெரிகிறது. இந்த எட்டு வழிச்சாலை வரவில்லையென்றால் தமிழகத்தின் பொருளாதாரமும், தொழிற்துறை வளர்ச்சியும் அதலபாதாளத்தில் விழுந்து விடுமென்று ஓர் உணர்வுப்பூர்வமான பொய் பரப்பப்படுகிறது. உணர்ச்சி மேலிடும்போது காரணங்களும், நியாயங்களும் மறைக்கப்படுகின்றன. அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் தமிழர்கள் வேண்டாமென்று சொன்னோம் என்று சொல்பவர்களுக்கு, நியூட்ரினோ வேண்டாம் என்றோம், நியூட்ரினோ கூடாதென்பதற்காகவல்ல, மாறாக மேற்கு தொடர்ச்சி மலையைக்குடைந்து, மழை வளத்தை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பிடுங்கி அப்பாவிகளின் வயிற்றில் மண்ணள்ளி போட்டு விடாதீர்கள் என்பதற்காக. மீத்தேன் வேண்டாம் என்று சொல்லவில்லை. மீத்தேனை மாட்டு சாணத்தில் இருந்து தேவைக்கும் மேலாக தயாரிக்கலாமே. ஏன் சோறுடைத்த தஞ்சை மண்டலத்தின் ஈரக்குலையை அறுக்கிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். அதுவும் தனியாருக்கு ஏன் மீத்தேன் எடுக்கும் அனுமதியை தருகிறீர்கள்? யார் அழிந்து யாருக்கு லாபம்? என்றுதான் கேட்கிறோம். 11-வது ஐந்தாண்டுத்திட்டம் திட்டமிட்ட 2 சதவீத வளர்ச்சியை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் எட்ட முடியாமல் வெறும் 0.69 சதவீத வளர்ச்சியையே அடைந்ததற்கு காரணம் தமிழகத்தின் விளை நிலங்களில் 5 லட்சம் ஹெக்டேர்கள் குறைந்ததே என்று திட்டக் கமிஷன் தனது 2011-ம் ஆண்டு அறிக்கையில் கூறியது. இந்நிலையில் இருக்கும் மூன்று சாலைகளை அகலப்படுத்தாமல் விளைநிலங்களை அழித்து நாசமாக்கி அதன்மீதுதான் சாலை போடுவேன் என்று அடம்பிடிப்பதுதான் வளர்ச்சியா? எட்டு வழிச்சாலை மக்களுக்கு பாலும் தேனும் கொண்டு வரும், மூன்று மணி நேரத்தில் சென்று வரலாம், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்று பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். முதலில் இது சென்னையில் இருந்து சேலம் செல்லும் சாலையல்ல, காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள படப்பை என்ற இடத்தில் இருந்துதான் இந்த சாலை ஆரம்பித்து மொத்தம் ஐந்து மாவட்டங்களை ஊடறுத்து ஓடுகிறது. இந்த சாலை கவுதிமலை, வேடியப்பன் மலை, தீர்த்தமலை உள்பட பல மலைகளை தொட்டுக்கொண்டும், வன பாதுகாப்பு மண்டலத்திற்குள்ளேதான் செல்கிறது. ஈரப்பதமான நிலங்களை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்க கூடாதென்று உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காமல் பல கிலோமீட்டர் ஈரப்பத நிலங்களின் மீதுதான் இச்சாலை போடப்பட இருக்கிறது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் இழப்பீடு தரவில்லை என்று தகவல்கள் வந்து சேரும் நிலையில் இந்த அரசு 8 வழிச்சாலைக்கான இழப்பீட்டை எப்படி தரப்போகிறதோ? தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின்படி கையகப்படுத்தப்படும் இந்த நிலங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்ட கால அளவிற்கு நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க அரசு முன்வர வேண்டுமென சில அரசியல்வாதிகள் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றியே இந்த அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சரியான புரிதல் இல்லாத நிலையில் (உதாரணமாக தென்னை ஒன்றிற்கு முதல்-அமைச்சர் ரூ.40 ஆயிரம், சேலம் ஆட்சியர் ரூ.50 ஆயிரம், திருவண்ணாமலை ஆட்சியர் ரூ.80 ஆயிரம், கிருஷ்ணகிரி ஆட்சியர் ரூ.28 ஆயிரம்), இந்த அரசு இழப்பீட்டை அள்ளித் தருமாம், அதை விவசாயிகள் நம்ப வேண்டுமாம். இந்த சாலை பல விளை நிலங்களை ஊடறுக்கிறது. வெறும் ஒரு ஏக்கர் நிலம்தானே என்கிறீர்களா? ஆனால் சாலை போடும்போது பறக்கும் புழுதியில் பாதிக்கப்படப்போகும் நிலங்களை பண்படுத்தவே பல வருடங்கள் ஆகுமே! அதுபோக பல நிலங்களில் கிணறுகள் சாலைக்கு அந்தப்பக்கமும், நிலங்கள் சாலைக்கு இந்தப்பக்கமும் சிக்குகிறதே, இதற்கு என்ன நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறது அரசு? பாசன விவசாயத்தை நம்பி இருக்கும் இந்த பகுதிகளை ஒரு சாலை ஒட்டு மொத்தமாக அழிக்கப் போகிறது என்பது திண்ணம். இருக்கும் மூன்று சாலைகளை விரிவு படுத்தினால் என்ன என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை. ஒட்டு மொத்தமாக புதிய வழியில் எட்டு வழிச்சாலை போடுகிறார்கள் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். ஏற்கனவே இருக்கும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் பலமுறை இந்த எட்டு வழிச்சாலை ஓடுகிறது. இப்படியிருக்கையில் இருக்கும் சாலையை ஏன் அப்படியே அகலப்படுத்தி எட்டு வழியாக மாற்றக்கூடாது? வெறும் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீடுகள் மட்டுமல்ல; கிணறு போனால் அதனால் பாதிக்கப்படும் நிலங்கள், சாலை குறுக்காக ஓடுவதால் பாதிக்கப்படும் நிலங்கள், கட்டுமானப் பணிகளால் பாதிக்கப்படும் நிலங்கள், மலைகளை குடைவதால் ஏற்படப்போகும் சீர்குலைவுகள், இயற்கை சமன்நிலை சீர்கேடுகள், வனவிலங்குகள் அழிப்பு, தொல்லியல் கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்று அனைத்தையும் கணக்கெடுங்கள். அவ்வளவு தெளிவும் உண்மையும் இருந்தால் திட்ட முன்வரைவை அரசு முன்வைக்கட்டுமே? இதுவரை ஏன் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடவில்லை? விவசாயிகள் நிலங்களை தர விரும்பவில்லை என்று அரசுக்கு நன்றாக தெரியும். விவசாயிகள் நிலங்களை தாமாக முன்வந்து தர தயாராக இருக்கிறார்கள் என்றால் காவல்துறை இல்லாமல் ஒரு நிலத்திலாவது கல்லை நடச் சொல்லுங்களேன். மக்களுக்கு சாலையும் வேண்டும், சோலையும் வேண்டும். அப்படி பார்த்தால், ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுபடுத்துவதே சரியானதாக இருக்கும். நினைவில் வையுங்கள். எட்டு வழிச் சாலை திட்டம் என்பது விவசாயிகளின் கோவணத்தை அவிழ்த்து தலைப்பாகை கட்டுவது போன்றது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts