கடலுக்கும் மீனவர்களுக்கும் ஏது ஓய்வு?

கடலுக்கும் மீனவர்களுக்கும் ஏது ஓய்வு? எழுத்தாளர் ஜான் பிரபு என்னுடைய பள்ளிக்காலத்தில் அதிகாலையில் எழுந்து கடற்கரையில் நின்று, கரை நோக்கி ஓடிவரும் படகுகளை பார்ப்பதென்பது அலாதியானது. படகுகள் கரைசேர்ந்ததும், மீன்களை வலைகளிலிருந்து பிரித்து எடுத்து, கடவத்தில் (பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டி) அடுக்கி எடுத்துச்சென்று மார்க்கெட்டில் விற்று வருவது அம்மாவின் வேலை. என் அம்மாவின் மீன் வியாபாரம் எப்படி ஆரம்பிக்கும் என்றால், கிலோ ஐம்பது ரூபாய் என்று என் அம்மா கூற, வந்திருப்பவர் நாற்பதிலிருந்து ஆரம்பிப்பார். இவர் விலையை கூட்ட என் அம்மா ஒரு பக்கம் மீனின் விலையை குறைத்துக் கொண்டே வருவார். ஒரு கட்டத்தில் வாங்க வந்தவர், நாற்பத்திரண்டு ரூபாய் எனவும், என் அம்மா நாற்பத்து ஏழு எனவும் நிற்பர். இந்த ஐந்து ரூபாய் வித்தியாசத்திற்காக என் அம்மா அவரிடம் விற்க மாட்டார். மீண்டும் வெயிலில் அமர்ந்திருந்து அடுத்து வாங்க வருபவருக்காக காத்திருப்பார். ஐந்து ரூபாய் குறைவாக விற்று விட்டு, வெயிலில் இருந்து எழுந்து வீடு சென்றிருக்கலாம். ஆனால் அந்த ஐந்து ரூபாய் இரவெல்லாம் உழைத்த என் அப்பாவின் உழைப்பின் வலிக்கு குறைவானதாக இவர் நினைத்திருக்கலாம். அல்லது அந்த ஐந்து ரூபாய் இந்த வெயிலை விட ஒன்றுமில்லை என்று உணர்ந்திருக்கலாம். எப்படியிருப்பினும், அந்த ஐந்து ரூபாய் வித்தியாசம் என்பது நேர்மையான உழைப்பிலிருந்து வந்தது, இரவின் குளிரையும் தூக்கத்தையும் பாராமல் உழைத்த இவரின் கணவர் உழைத்ததை, வெயிலின் உக்கிரத்தையும் பொருட்படுத்தாமல் இவர் உழைப்பதில் கிடைத்தது. இன்றைய அறிவியல் காலகட்டத்தில் இயந்திரங்களின் உதவியுடன் நடக்கும் எளிய தொழிலன்று இந்த மீன்பிடி. கொட்டும் மழையில், தோலில் இருக்கும் வியர்வை நாளங்களில் வியர்த்திருக்கும் ஒரு துளி வியர்வை மேல் மழையும் சேர்ந்துகொள்ளும் அளவு உடலுழைப்பு தேவைப்படும் ஒரு தொழில். தூக்கி வீசும் அலைகளுக்கு எதிராகவும், உரத்து வீசும் காற்றுக்கு எதிராகவும், மழைகளிலும் இயற்கைக்கு எதிராக போராடி வாழும் வாழ்வு இந்த மீனவர் வாழ்வு. எந்தவகை கடினமான வேலையாக இருந்தாலும், படகை கடலுக்கு எடுத்துச்செல்ல என்றும் அஞ்சியதில்லை இவர்கள். மீன்பிடியிலேயே பலவகைகள் உண்டு. மீன்பிடித்து அரைநாளிலும் திரும்பலாம், ஒரு நாள் கூட ஆகலாம் அல்லது சிலவகை மீன்பிடிக்க ஒரு வாரம் வரைகூட ஆகலாம். எந்தவகை மீன்பிடியாய் இருப்பினும் மீனவர்களின் மூலதனமாய் இருப்பது, உழைப்பு, கடின உழைப்பு மற்றும் அயராத உழைப்பு மட்டுமே. மீனவனின் ஒவ்வொரு நாளும் இயற்கையை புரிந்து, அதனுடன் உறவாடி மற்றும் அதனுடன் போராடி வாழ்வதுமே ஆகும். இன்னும் சில மணிநேரங்களில் மாறப்போகும் காற்று, வரப்போகும் மழை, வெளுத்துக்கட்டப் போகும் புயல் இது அனைத்தையும் முன்கூட்டியே கணித்து அதற்கேற்றது போல செயல்பட வேண்டிய தொழில். சில நேரங்களில் கணித்த நேரத்திற்கு முன்பே கூட வானிலை மாறுகையில், அதையும் தன்னுடைய கடைசி நாள் போல் நினைத்து வெற்றி பெறுகின்றனர். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் இவர்களின் முயற்சி வெற்றியடையாமலும் போகலாம். உயிர் போகும் தருவாயும் உண்டு. உடல் குடும்பத்தாருக்கு முழுதாக கிடைக்கலாம், மீன் அரித்த பாதியோ அல்லது முழுதும் கடலோடு கூட போகலாம். எது எப்படியானாலும், அந்த நிகழ்வு இவர்களை தடுத்து நிறுத்த முடிவதில்லை. பயத்தை வென்று நங்கூரத்தை எடுத்து படகில் வைத்துக்கொண்டு தனது வாழ்வாதாரத்தை நோக்கி சென்று கொண்டே இருப்பார்கள். கடலில் மீனவர்களின் வேலையென்பது நாம் நினைப்பது போன்றதல்ல. படகின் மேல்விளிம்பில் ஏறி நின்று அலைகள் தூக்கிவீசும் நேரம் வலையிழுப்பதென்பது, நொடி நேரத்தில் கவனம் தவறினாலும் ஆபத்தில் முடிவதைத் தவிர்க்க முடியாது. மழையின் பொழுது குளிரில் பற்கள் ஒன்றோடொன்று மோதினாலும், வெயில் காலத்தில் வெற்றுடம்பில் உடலை சுட்டுப்பொசுக்கும் வெக்கையானாலும், உழைப்பில் மட்டுமே கவனமாயிருக்கையில் தனக்கானதை பெற முடியும். கடலுக்குச் செல்லும் உபகரணங்களை எடுத்துக்கொண்டு மீனவன் கடலுக்குச் செல்லும் அந்த நொடியே, கரை நோக்கி வரும் அலைக்கு எதிராக கிளம்புகிறான். சில வகை மீன்பிடிகளில் வலைமற்றும் வேறு எந்த உபகரணமுமின்றி தன் கையாலேயே மீன்பிடிக்க கடலில் குதிப்பதுண்டு. இத்தகைய தருணங்களில் தன்னுடைய உடலையே ஆயுதமாகக்கொண்டு வேட்டையாடி மீன்பிடிக்கின்றனர். மூச்சை இழுத்துக்கொண்டு கடலில் குதித்து அடுத்த மூச்சை இழுப்பதற்குள் மேலே வர வேண்டும். மூச்சை பிடித்துக்கொண்டு கடலுக்குள் குதிக்கும் அந்த நிமிட நேரத்திற்குள் தனக்கு தேவையானதை கடலிலிருந்து எடுத்துக்கொண்டு வரவேண்டிய தொழில் இது. மீன்பிடி நாளோடு அல்லது மீன்பிடித்த அந்த நேரத்தோடு மீனவனின் உழைப்பு முடிவதல்ல. இதற்கு நிகரான உழைப்பை, பிடித்த மீன்களை பணமாக மாற்றுவதிலும் போட வேண்டியிருக்கிறது. தானே சந்தைப்படுத்துகையில் ஏற்படும் நேரமும் அல்லது இடைத்தரகர்களிடம் விற்கையில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் லாபத்தில் இவர்களின் உழைப்பு அடிபட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எது எப்படியிருப்பினும், மீனவனின் அடுத்த நாள் பயணம் தொடரும். தன் உடலை நம்பி, தன் உழைப்பை நம்பி, தான் பெரிதும் நம்பும் கடல்தாயை நம்பி. கடலுக்குள்ளே புதைந்திருக்கும் நங்கூரத்தை தன்னுடைய உடல்பலம் திரட்டி தூக்கும் நொடியிலிருந்து, மீன்பிடித்துவிட்டு வந்து திரும்பவும் கடலுக்குள் வீசும் அந்த நொடி வரை மீனவனின் உழைப்பு ஓய்வின்றி போராட்டமாய் இருக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments