Follow by Email

Monday, 2 July 2018

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சுவாசிக்க உதவும் பாக்டீரியா!

பூமிக்கும் மனிதனுக்குமான பல கோடி ஆண்டு கால உறவானது சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால் மனிதன் தன்னிடம் இருக்கும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், மேலும் புதிய பல தொழில்நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கியும் விண்வெளியில் உள்ள மற்றும் மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த, ஏதாவது ஒரு கிரகத்தை அல்லது நிலவை கடந்த பல ஆண்டுகளாக வலைவீசித் தேடி வருகிறான் என்பது பழைய செய்தி. ஆனால், மனிதனுடைய அடுத்த புகலிடமாக மாறக்கூடிய பிரகாசமான வாய்ப்பு செவ்வாய் கிரகத்துக்கு இருக்கிறது என்பதை உறுதி செய்யும் பல விண்வெளி ஆய்வு முடிவுகள் தொடர்ந்து வெளியான வண்ணமாய் இருக்கின்றன என்பதுதான் சமீபகால ஹாட் நியூஸ். அந்த வகையில், செவ்வாய் கிரகத்தில் மனிதனுக்கான இருப்பிடங்களை, வாழ்விடங்களை மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு அமைக்கலாம், அங்கு எந்த வகையான உணவுப் பயிர்கள் நன்றாக வளரும் என்பதைக் கண்டறிந்து அங்கு எந்த வகையான உணவுகளை உற்பத்தி செய்யலாம் என பல ஆய்வுகளும், விவாதங்களும் தொடர்கின்றன. ஆனால், செவ்வாய் கிரகத்தில் உணவு, உடை மற்றும் உறையுள் எல்லாம் இருந்தாலும் கூட மனிதன் அங்கு வாழ பிராண வாயு (ஆக்சிஜன்) இல்லாமல் போனால் மேலே குறிப்பிட்ட அனைத்தும் வீண் தானே? ஆக, செவ்வாய் கிரக மனித வாழ்க்கைக்கு அங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது, போதுமான அளவுக்குக் ஆக்சிஜன் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்வது மிக மிக அவசியம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. முக்கியமாக, நீடித்த ஆக்சிஜன் உற்பத்தி என்பதுதான் செவ்வாய் கிரக வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகும். செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள சயனோபாக்டீரியா (cyanobacteria) எனும் ஒருவகையான சிவப்பு பாக்டீரியா உதவக்கூடும் என்கிறது ஆய்வுச்செய்தி ஒன்று. சயனோபாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் கார்பன் டை ஆக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு பிராண வாயுவை வெளியிடக்கூடிய பண்பு கொண்டவை. முக்கியமாக, சயனோபாக்டீரியாக்கள் பூமியிலுள்ள, மனிதன் வாழ முடியாத ஆபத்தான இடங்களில் வாழும் திறன்பெற்றவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. சயனோபாக்டீரியாக்களின் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜன் வெளியிடும் திறன் காரணமாக, அவை செவ்வாய் கிரக மனித வாழ்க்கைக்கு உதவக்கூடும் என்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள். தாவரங்கள் ‘போட்டோ சிந்தசிஸ்’ எனும் ஒளிச்சேர்க்கை மூலமாக சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்வதைப்போலவே, சயனோபாக்டீரியாக்களும் ஒளிச்சேர்க்கை மூலமாகவே ஆற்றல் உற்பத்தி செய்கின்றன. ஆனால், தக்காளி போன்ற தாவரங்களுக்கு தேவைப்படும் சூரிய ஒளியின் அளவில் மிகக்குறைந்த அளவு சூரிய ஒளி இருந்தாலே சயனோபாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை மேற்கொண்டு ஆற்றல் உற்பத்தி செய்யும் திறன் பெற்றவையாம். உதாரணமாக, சயனோபாக்டீரியாக்கள் கடலின் மிகவும் ஆழமான பகுதிகளில் வாழ்வது இதற்கு முன்னர் கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு அவற்றின் உடலிலுள்ள குளோரோபில் (Chlorophyll) எனும் ரசாயனம் தான் காரணமாக இருக்கிறது. மேலும், பெரும்பாலான தாவரங்கள் ‘குளோரோபில்-எ’ (Chlorophyll-a) எனும் ரசாயனத்தின் மூலமாகவே நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒளியைப் (visible light) பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மேற்கொண்டு ஆற்றல் உற்பத்தி செய்கின்றன. ஆனால் சயனோபாக்டீரியாக்களோ, குளோரோபில்-எப் (Chlorophyll-f) எனும் மிகவும் பிரத்தியேகமான ஒரு வகை குளோரோபில்லைப் பயன்படுத்தி, நம் கண்களால் பார்க்க முடியாத ‘அக ஊதா/இன்ப்ரா ரெட் (far-red/near infrared light)’ ஒளியை ஆற்றலாக மாற்றுகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஜெனிபர் மார்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். இந்த புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள, சயனோபாக்டீரியாக்கள் தொடர்பான இந்த புதிய அறிவியல் உண்மையின் அடிப்படையில் பார்த்தால், செவ்வாய் கிரகத்துக்கு செல்லக்கூடிய நம் எதிர்கால சந்ததியினர் சயனோபாக்டீரியாக்களை தங்களுடன் செவ்வாய் கிரகத்துக்குக் கொண்டுசென்றால் அவர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை சயனோபாக்டீரியாக்கள் உற்பத்தி செய்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். முக்கியமாக, விண்வெளி சூழலியலை பிரதிபலிக்கும் அண்டார்டிகாவிலுள்ள மோஜாவே பாலைவனம் (Mojave Desert) மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் (International Space Station (ISS) ஆகிய இரு மிகவும் மோசமான இடங்களிலும் சயனோபாக்டீரியாக்கள் வாழ்வது இதற்கு முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் சுவாசிக்க வேண்டுமானால் சயனோபாக்டீரியாக்கள் கூட இருந்தால் போதுமானது என்கிறது இந்த புதிய விண்வெளி ஆய்வு.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts