Wednesday 11 July 2018

பிரச்னை அதுவல்ல

பிரச்னை அதுவல்ல By ப. இசக்கி | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளை தனியார் நிறுவனம் மூலம் "ஆன்-லைன்' முறையில் நடத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்போது, தேர்வாணையம் நடத்தி வரும் தேர்வுகள் அனைத்தும் காகிதத்தின் மூலம் ஓ.எம்.ஆர். (ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன்) முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்துக்கு இது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), பொதுத்துறை மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட சில தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் "ஆன்-லைன்' முறையில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அறிவிக்கப்பட்டு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது. இதிலும் காலதாமதம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கான காரணங்களுடன் முறையான அறிவிப்புகள் வெளியிடப்படுவது உண்டு. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அந்த நிலை இல்லாமல் இருந்தது. அண்மைக் காலமாக தமிழ்நாடு தேர்வாணையத்திலும் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வு நடைபெறும் நாள், முடிவுகள் அறிவிக்கப்படும் உத்தேச நாள் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இறுதி முடிவு, அதன் பிறகான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தேர்வர்களை மிகவும் சோர்வடையச் செய்கிறது. இதில் முக்கியப் பணி, விடைத் தாள்களைத் திருத்துவது. ஆண்டுக்கு சுமார் 20 வகையான தேர்வுகளை நடத்தும் தேர்வாணையத்தின் தேர்வுகளை சுமார் 50 லட்சம் பேர் வரை எழுதுகின்றனர். இந்த ஆண்டு அதிகபட்சமாக குரூப்-4 தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வை சுமார் 1.2 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்தப் பணிச் சுமையைக் குறைக்க தேர்வுகளை "ஆன்-லைன்' மூலம் நடத்தினால் முடிவுகளை விரைவாக அறிவித்து ஆள் சேர்க்கையை துரிதப்படுத்த முடியும் என தேர்வாணையம் நம்புகிறது. எனவேதான், தேர்வாணையத்தின் தேர்வுகளை சிறப்பாகவும், நேர்மையாகவும், பாதுகாப்பான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தி முடிந்த அளவு குறைந்தபட்ச காலத்திற்குள் முடிவுகளை அறிவித்து ஆள் சேர்க்கையை நடத்த "ஆன்-லைன்' தேர்வு முறையை அமல்படுத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஓ.எம்.ஆர். தேர்வு முறைக்கு தேவைப்படும் காகிதத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, போக்குவரத்துச் செலவு, கால விரயம், கேள்வித்தாள் வெளியாகும் அபாயம் மற்றும் கூடுதல் ஆள்கள் தேவைப்படுதல் என பல்வேறு சிரமங்கள் உள்ளன. "ஆன்-லைன்' மூலம் தேர்வுகளை நடத்துவதால் சில சிரமங்களைக் குறைக்கலாம். எனினும், தடையற்ற மின்சாரம் மற்றும் இணைய தள சேவை போன்ற சிக்கல்களும் இல்லாமல் இல்லை. மேலும், கேள்வித் தாள்களை தேர்வாணையமே தயாரித்து தனியார் நிறுவனத்திடம் அளிக்கும். அவை முன்கூட்டியே வெளியாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறைகேடுகள் நாடறிந்தவை. அவை குறித்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்குகளும் உண்டு. தேர்வாணையம் இப்படி என்றால், தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் போன்றவை நடத்தும் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையே கிடையாது. சில வாரியத் தேர்வுகளில் கேள்வித்தாள்களை தேர்வு அறைக்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. விடைகளை பகிரங்கமாக அறிவிக்க மாட்டார்கள். தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் வெளியிட மாட்டார்கள். நேர்முகத் தேர்வுகளை தனியார் இடங்களில் கூட நடத்துவார்கள். திடீரென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை மட்டும் அவசர அவசரமாக வெளியிட்டு ஆள்களை சேர்த்துக் கொள்வார்கள். இத்தனைக்கும் இதில் சில தேர்வுகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்துகிறது. தனியார் உதவியுடன் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகள் நிகழும் என்பதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வே சாட்சி. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 196 மாணவர்களுக்கு அதிகமான மதிப்பெண்களை அளிக்க ரூ. 50 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டால், கடினமாக உழைத்து தேர்வெழுதிய சுமார் 2,000 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 315 முதல் 323 வரையில் மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவற்றின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி.யின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு பெற்றவர்கள். அவர்களின் பணிக்காலத்துக்கு உத்தரவாதம் உண்டு. அவர்கள் அரசையோ, அரசியல்வாதிகளையோ சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. எனவே, அரசியல்வாதிகள் அங்கு செல்வாக்கு செலுத்த முடிவதில்லை. ஆனால் மாநில தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளும் அரசுதான் நியமிக்கிறது. அவர்கள் அரசியல் சார்பு உடையவர்களாகவே இருக்கிறார்கள். இதுவே ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாகிறது. எனவே, தேர்வுகளை அரசு நடத்துகிறதா, தனியார் நடத்துகிறார்களா என்பதல்ல பிரச்னை. தேர்வாணைய பொறுப்புகளில் அரசியல் சார்பற்ற நேர்மையாளர்களை நியமித்து வெளிப்படைத்தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts