Wednesday, 11 July 2018

பெயர் மாற்றத்தால் பயனில்லை!

பெயர் மாற்றத்தால் பயனில்லை! By எஸ். வைத்யசுப்ரமணியம் | வள்ளுவப் பேராசான், "ஒரு பிறவியில் தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்கு தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்' என்கிறார். "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்பது அவரது குறள். கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் சொத்தாகக் கருதப்படுகிறது. மேலும், அக்கல்வி அவனுடைய அடுத்த ஆறு பிறவிகளுக்கும் தொடரும். அதுபோன்று ஒருவன் கற்ற முறையற்ற கல்வியும் அவனுடைய ஆறு பிறவிகளிலும் தொடரும். முறையான கல்வி மற்றும் முறையற்ற கல்வி என்பது கல்வி கற்கும் நோக்கத்தைப் பொருத்தது. உயர்கல்வியைப் பொருத்தமட்டில் ஒருவர் பெறும் புதிய அறிவு சமூக வாழ்க்கையை ஏற்றம் பெற வைப்பதாக அமைய வேண்டும். ஒரு சமுதாயம் செல்வத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே கல்வியைப் பயன்படுத்துவது முறையற்ற செயலாகும். காரணம், சமுதாயமே பன்முகத் தன்மையை கொண்டதாகும். பல்கலைக்கழகங்களும் சமுதாயத்தை பன்முக கோணத்தில் அணுக வேண்டும். பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்கும் இயந்திரங்கள் அல்ல. அவை பல்துறை அறிவைப் பெருக்கும் நிறுவனங்கள் ஆகும். உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்தில் அறிவியல், வானியல், மேலாண்மை, தத்துவம், உளவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், வேளாண்மை மற்றும் வளர்ந்து வரும் பிற துறைகளில் படிப்புகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாகவே, இந்தப் பல்கலைக்கழகங்களை மாணவர்களும், கல்வியாளர்களும் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகையப் பல்கலைக்கழகங்கள் பல்வேறு துறைகளில் பாடப்பிரிவுகளை வழங்குவதாலேயே சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் பல்திறன் கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உயர்கல்வியின் பல்வேறு துறைகளைக் கட்டுப்படுத்தும் பல்வேறு சட்டங்களும் ஒன்றாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே? இந்த அடிப்படையில்தான் புதிய உயர்கல்வி ஆணைய மசோதாவை ஆய்வு செய்ய வேண்டும். 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு மசோதாவை நீக்குவதற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய உயர்கல்வி ஆணைய மசோதாவை வடிவமைத்து, பல்வேறு சமூகத்தின் கருத்துகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. இம்மசோதா ஐந்து அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது. குறைந்த அரசுக் குறுக்கீடு, நிதியளிப்பை தனிமைப்படுத்துதல், சான்றிதழ் ஆய்வு முறைக்கான முடிவு, கல்வித்தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அமலாக்க உரிமை. இந்த ஐந்து தூண்கள் மீது நிற்கும் இந்த சீர்திருத்த மசோதா ஒருபுறம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இன்னொருபுறம் அதை முழுமைப்படுத்துவதற்கான அம்சங்களையும் இந்த மசோதாவில் சேர்த்துக் கொண்டால்தான், மாற்றம் பயனளிக்கும். ஆய்வு மற்றும் உயர்கல்வி முன்னேற்றத்திற்காக 1986-இல் தேசிய கல்வி கொள்கையும், 1992-இல் செய்முறைத் திட்டமும் உருவாயின. இவற்றின் மூலம் கூடுதலான ஒருங்கிணைப்பும், திட்டமிடுதலும் எதிர்பார்க்கப்பட்டன. முதலில் யூ.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாகவும், பின்னர் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.), இந்திய பார் கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி வாரியம் போன்ற அமைப்புகளின் மூலமாக பல்வேறு பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், கல்லூரிகளை அங்கீகரித்தல் மற்றும் பாடத்திட்டங்களை அங்கீகரித்தல் போன்றவற்றை இந்த அமைப்புகள் வடிவமைத்தன. இத்தகையப் போக்கு, பாடத்திட்டங்கள் தனித்தனியாக இருக்கும் வரை சரி என்றே தோன்றும். ஆனால் கால மாற்றத்திற்கேற்ப நம் உயர்கல்வியின் தற்போதைய நிலைக்கு ஒரு மாறுபட்ட போக்கு தேவை. ஏனென்றால், இன்றைய நிலையில் எல்லாத் துறைகளுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவப் பட்டம் பெற்ற ஒருவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது மட்டும்தான் தெரிகிறது. இதற்குப் பின்னால் பல்வேறு துறைகளின் பங்களிப்புகள் உள்ளன. "நானோ' தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்கள், வேதியல் பட்டதாரிகள், சமூகவியலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், விலை நிர்ணயம் செய்யும் நிதி நிர்வாகத்தினர், காப்புரிமையை உறுதி செய்யும் சட்டத் துறையினர் ஆகியோரின் பங்களிப்பு ஒரு மருந்துத் தயாரிப்பின் பின்னணியில் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அதனால்தான், புதிய உயர்கல்விக் கொள்கை என்பது இந்த எல்லாத் துறையினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பல்துறைத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டே, கல்வியாளரும் விஞ்ஞானியும், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவருமான யஷ்பால் தலைமையில் அமைந்த குழு, உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்த தனது அறிக்கையில், "உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தனியே ஒரு தேசியக் குழுவை அமைக்க வேண்டும்' என்று 2009-இல் பரிந்துரைத்தது. இதே பரிந்துரையைத்தான் தேசிய அறிவுசார் ஆணையம் தனது அறிக்கையில், "உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்' என்று 2006-இல் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக 2015-இல் இரண்டு ஆய்வு குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஒன்று இந்தியத் தொழில்கல்வி வாரியத்திற்காக முன்னாள் மனித வள மேம்பாட்டு செயலாளர் எம்.கே.காவின் தலைமையிலும், மற்றொன்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்காக அதன் முன்னாள் தலைவர் ஹரி கெளதம் தலைமையிலும் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய கல்வி கொள்கைக்காக டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் தலைமையில் ஒரு குழுவை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழுவும் மேற்கண்ட பரிந்துரைகளை மனதில் கொண்டு தனது வரைவு அறிக்கையை 2016-இல் தயாரித்தது. பல்வேறு பரிந்துரைகளை செய்த இந்த குழுவும் தேசிய உயர்கல்வி முன்னேற்றம் மற்றும் மேலாண்மை மசோதா அவசியம் என்று எடுத்துரைத்தது. பல்கலைக்கழக மானியக்குழுவை நீக்கிவிட்டு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையத்துக்கு நிதி வழங்குவது இல்லாமல் ஒழுங்கு முறை, கல்வி, நிர்வாகம் மற்றும் ஒழுக்கவியல் செயல்பாடுகள் போன்ற அதிகாரங்களை கொடுப்பது ஒரு சரியான அணுகுமுறையாகும். எனினும் கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வர இருக்கும் நிலையில் மேலே குறிப்பிட்டவை மட்டும் போதாது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேசிய மனித வள மேம்பாட்டுத்துறை, கல்வித்துறையில் பல முன்னோடி சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கற்றலின் விளைவு சார்ந்த பள்ளிக் கல்வி, நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி, தர வரிசை, தேசிய மேலாண்மை நிறுவனங்களுக்குத் தன்னாட்சி, தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ஒழுங்கு முறை கட்டமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி, தொலைநிலைக் கல்வி இன்னும் பல. இதனால் சில பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டாலும் அப்பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கொள்கை கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் தேசிய அளவில் "சிறந்த கல்வி நிறுவனங்கள்' என்ற தகுதியை இருபது கல்வி நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கும்போது மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மசோதாவின் நன்மை, தீமைகளை ஆராய்வதற்கு முன்னரே, உயர்கல்வித்துறை அமைச்சகம் தன் கீழ் இருக்கும் உயர்கல்விக்கான பல அமைப்புகளைச் சேர்த்து ஒரே அமைப்பாக இந்த உயர்கல்வி மசோதா அமைவதற்கான வடிவமைப்பை உருவாக்க வேண்டும். இதைச் செய்யத் தவறி விட்டால், பலராலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இந்தப் புது மசோதா ஒரு பகுதி தீர்வாகவே அமையும். பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தை நீக்கிவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது என்பது பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு ஒரு புதிய பெயர் சூட்டுவதாகவே கருதப்படும். அதனால் எதிர்பார்க்கப்படும் நன்மை எதுவும் ஏற்பட்டுவிடாது. ஏனெனில், பல்வேறு திசையில் சிதறி கிடக்கும் இந்திய உயர்கல்வித்துறையை நிர்வகிக்க ஓர் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதை இந்திய உயர்கல்வி ஆணையம் பூர்த்தி செய்யாது. பல்கலைக்கழக கல்வியில் தன்னாட்சி, தேசிய அளவில் சிறந்த நிறுவனங்களைத் தெரிவு செய்தல், தொலைநிலைக் கல்வி, ஆன்லைன் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கல்வி ஆகியவற்றின் சீர்திருத்தங்களோ அல்லது அவற்றின் தாக்கங்களோ இன்னும் முழுதாக அறியப்படவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையத்தைக் கொண்டு வருவதற்கு அவசரம் காட்டுவதை விட மேற்குறிப்பிட்ட சீர்திருத்தங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய முறைகளும் அவசரமாக உருவாக்கப்பட்ட வேண்டும். கல்வித்துறைக்குத் தேவையான முழு தன்னாட்சி அளிக்கப்படவில்லை. அதே போன்று, ஆன்லைன் மற்றும் தொலை நிலைக் கல்வியின் கட்டுப்பாட்டு சீர்திருத்தமும் இன்னும் சோதிக்கப்படவில்லை. இவைதான் உயர்கல்விக்குக் கிடைக்கப்போகும் மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆகையால் இந்த உயர்கல்வி ஆணையம் என்ற மசோதாவிற்கு சற்று ஒய்வு கொடுத்துவிட்டு, மேலே சுட்டிக்காட்டிய உயர்கல்விக்கான பல்வகை மாற்றங்களை முழுமையாக அமல்படுத்திவிட்டு அதன் பிறகு அதனுடைய நன்மைகளை ஆராய வேண்டும். இத்தகைய முறையினால் உயர்கல்வி ஆணையத்திற்கு ஒரு ஒருங்கிணைந்த தெளிவு கிடைக்கும். உயர்கல்வித் துறையின் பொறியியல், அறிவியல், மேலாண்மை, ஆசிரியர் கல்வி போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இந்த புதிய உயர்கல்வி ஆணையம் அமைய வேண்டும். அதுவே பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக விளங்கும். சுருக்கமாக, உயர்கல்வி ஆணைய மசோதா என்பது ஒருங்கிணைந்த ஒரு மசோதாவாக இருக்க வேண்டும்; பல்கலைக்கழக மானியக் குழுவின் மாற்றுப் பெயராக இருக்க வேண்டாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts