Friday, 13 July 2018

தமிழக லோக் ஆயுக்தா: ஊழலை ஒழிக்கும் ஆயுதமா?

தமிழக லோக் ஆயுக்தா: ஊழலை ஒழிக்கும் ஆயுதமா? சுபத்ரா தனசிங், மாநிலக்குழு உறுப்பினர், அறப்போர் இயக்கம் நாடு சுதந்திரம் அடைந்த தொடக்க காலத்தில், தமிழக அரசியலிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தூய்மை இருந்தது. அன்றைக்கு இருந்த அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்தியாவுக்கு உதாரணமாக இருந்தனர். ஆனால் இன்றைய தமிழகமோ ஊழலில் இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’னாக திகழ்கிறது. மக்கள் நல்வாழ்வுக்கு மேற்கொள்ளப்படும் அத்தனை திட்டங்களிலும் முறைகேடு, ஊழல் தலைவிரித்தாட தொடங்கிவிட்டது. தமிழகத்துக்கு தலைகுனிவை தேடித்தரும் இந்த ஊழல் பேயை விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது. இதற்கு அத்திப்பூத்தாற் போன்று நடவடிக்கை எடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை மட்டும்போதாது. அரசால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சுதந்திரமான அமைப்பு வந்தால், அதுவே ஊழலை ஒழிக்க வல்லதாக இருக்கும். இதைக் கொண்டு வருவதே லோக் ஆயுக்தா சட்டத்தின் நோக்கம். அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்ய வேண்டிய லோக் ஆயுக்தா சட்டம் சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அதன் ஷரத்துகள் மிக கவனமாக ஊழல் ஒழிப்பிற்கு பதில், ஊழல் வளர்ப்பைச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் உள்ள குறைபாடுகளின் பட்டியல் மிக நீளம். லோக் ஆயுக்தா அமைப்பு முதல்-அமைச்சரின் ஊழலைக் கூட விசாரிக்கும் அதிகாரம் கொண்டது. ஆனால், தமிழக அரசு கொண்டுவர இருக்கும் அந்த அமைப்பின் தலைவரை முதல்-அமைச்சரும், சபாநாயகருமே நியமிக்க முடியும். அப்படியென்றால், முதல்-அமைச்சர் ஊழல் செய்யும் பட்சத்தில் நடைபெறும் விசாரணை எந்த அளவுக்கு தூய்மையானதாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவது இயல்புதானே. லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை முதல் முறையாக நியமிப்பதற்கான எந்தக் காலக்கெடுவும் இல்லை. ஏற்கனவே பல மாநிலங்கள் சட்டத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு லோக் ஆயுக்தா தலைவரை நியமிக்காமல் வைத்துக் கொண்டிருக்கின்றன. அதை பார்த்தும் இப்படி சட்டம் இயற்றப்பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? உள்ளாட்சி மன்ற நடுவத்தின் கீழ் வரும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் லோக் ஆயுக்தாவின் கண்காணிப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் லோக் ஆயுக்தா சட்ட வரம்புக்குள் வராது. அப்படியென்றால், அங்கே நடக்கும் ஊழலை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்று தெரியவில்லை. லோக் ஆயுக்தாவிற்கு சுயமாக விசாரணை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரம் இல்லை. குழு ஏ, பி, சி மற்றும் டி அதிகாரிகளின் மீது பெறப்படும் புகார்கள், தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறைக்கே அனுப்பப்படும். இவர்களையும் லோக் ஆயுக்தாவால் முழுமையாக விசாரிக்க முடியாது. எல்லாவற்றையும் கடந்து, ஊழல் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதைப்பற்றிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதைத் தவிர லோக் ஆயுக்தாவால் எதுவும் செய்ய முடியாது. இந்த அமைப்பில் வழக்கு தொடரும் பிரிவு என்ற ஒன்றே இல்லை. ஆக, ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர் பேரில் குற்றத்தைத் தாக்கல் செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ லோக் ஆயுக்தாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஊழல் குறித்து புகார் கூறுபவர்களை பயமுறுத்தும் வண்ணம், ஒரு நபரின் புகார் நிரூபிக்கப்பட முடியாமல் போனால் அவருக்கு அதிக பட்சம் ஒரு வருட சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று இந்த மசோதா சொல்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதை விளக்காத இந்தச் சட்டம், புகார் அளிப்பவரின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கையை வரையறுத்துள்ளது. புகார் அளிப்பவரிடமிருந்து இந்த அரசு என்ன எதிர்பார்க்கிறதென்றால், அவரே முழு விசாரணையையும் நடத்தி ஆதாரங்களைத் திரட்டி 100 சதவீதம் குற்றத்தை நிரூபித்துவிட்டு, பிறகு புகார் செய்ய வேண்டும் என்பதைதான். பொதுமக்களே விசாரிக்க முடிந்தால் விசாரணை எதற்கு? லோக் ஆயுக்தா அமைப்பு எதற்கு? தனக்கு தெரிந்த தகவல்களை புகாராக எழுதி லோக் ஆயுக்தாவிடம் கொடுப்பது மட்டுமே ஒரு சாமானியனால் இயன்ற காரியம். அதைத் தாண்டி எதுவும் செய்வதற்கு சாமானியர்களுக்கு பயிற்சி இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊழல்களை லோக் ஆயுக்தாவால் விசாரிக்க முடியாது. அதாவது ஒரு ஊழல்வாதி தான் செய்த ஊழலை 4 ஆண்டுகள் வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டால் போதும், அதன் பிறகு அவர் மீது லோக் ஆயுக்தா அமைப்பால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. பொது ஊழியர்களின் சொத்து விவரங்களை பொதுதளத்தில் வைப்பது பற்றிய முக்கிய ஷரத்துகள் எதுவுமில்லை. புகார் அளிப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படாது. இதனால் ஆதிக்க சக்திகளுக்கு பயந்து பலரும் புகார் அளிக்க முன்வருவதில் தயக்கம் காட்டுவார்கள். லோக் ஆயுக்தா அமைப்பால் சுயமாகக் குற்றத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் முடியாது. அதாவது லோக் ஆயுக்தா அதிகாரியின் கண்முன் ஒரு ஊழல் நடந்தாலும், அவராகவே அதை எடுத்து விசாரிக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. ஒரு வருடம் சிறை செல்ல தயாரான நிலையில் தைரியமாக புகார் கொடுக்க ஒருவர் கிடைத்தால் மட்டுமே விசாரணையை தொடங்க முடியும். லோக் ஆயுக்தா ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரிகளை அரசே நியமிக்க முடியும் என்பதால், ஊழல்வாதிகளையே இந்த அமைப்பின் அதிகாரிகளாக நியமிக்கும் மிகப் பெரிய வாய்ப்பு களையப்படவே இல்லை. ஊழலை ஒழிக்கும் ஆயுதமாக வேண்டிய லோக் ஆயுக்தா, அதை காக்கும் கேடயமாக மாறி இருப்பது வேதனைக்குரியது. எனவே, மக்கள் விரோத சட்டத்தை தமிழக கவர்னர் திருப்பி அனுப்ப வேண்டும். மக்களிடம் கருத்துக் கேட்டு திருத்தப்பட்ட வலுவான லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர வேண்டும். அதுதான் ஊழலை ஒழிக்க களம் காண்போரின் எதிர்பார்ப்பு.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts