Sunday 1 July 2018

சிரிப்பு மனித இனத்தின் சிறப்பு

சிரிப்பு மனித இனத்தின் சிறப்பு பேராசிரியர் கண.சிற்சபேசன் ‘சிரிப்பு மனித இனத்திற்கே சொந்தமான சிறப்பு’ என்று கலைவாணர் என்.எஸ்.கே. குறிப்பிட்டார். ‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிடு ஞாலம், பகலும் பாற்பட்டன்று இருள்’ என்றார் திருவள்ளுவர். அதாவது சிரிக்கத் தெரியாதவனுக்குப் பகல் கூட இருட்டாகத் தோன்றும் என்கிறார். மேலும் வள்ளுவர் கூறிய ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்னும் கடும் துன்பமோ சிக்கலோ நமக்கு ஏற்படும்போது பயன்படும். எப்படி? துன்பம் வரும் போது சிரித்தால் மனம் இறுக்கம் அகன்று மென்மையாக மாறும். நம் துன்பத்திற்கும் சிக்கலுக்கும் உரிய வழிமுறையைச் சிந்திக்க இந்த மனநிலை நமக்குப் பயன்படும். கலைவாணர் கடும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். அவ்வளவு தீவிரமான நோய்வாய்ப்பட்ட சூழலிலும் அவர் நகைச்சுவையை விட்டுவிடவில்லை. காலையில் மருத்துவமனைக்கு டாக்டர் வந்தார். வலது மணிக்கட்டைத் தொட்டு நாடி பிடித்துப் பார்த்தார். அதன்பின் சென்றுவிட்டார். பிறகு அவரைக்காண வந்த நடிகர்கள், ‘ஐயா, எப்படி இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்கள். கலைவாணர் மிக நிதானமாக விடையளித்தார். ‘டாக்டர் வந்தார். கையைப் பிடித்துப்பார்த்தார். அப்புறம்... கை... விட்டுட்டார்’ என்றார். தன்னைப் பிறர் பழிப்பதைக் கூட நகைச்சுவையாக மாற்றிவிடும் திறமையும் பொறுமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா. 1937-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாடெங்கும் நடந்தது. செட்டிநாட்டரசர் முத்தையாச் செட்டியாரும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ராஜாஜி இந்தி எதிர்ப்புப் போரின் உயரம் எவ்வளவு என்பது அண்ணாதுரையைப் பார்த்தாலே தெரிந்துவிடும் எனக் குறிப்பிட்டிருந்தார். அண்ணா உயரம் குறைவு என்றாலும் செட்டிநாட்டரசர் மிகவும் உயரமானவர். எனவே அண்ணா குறிப்பிட்டாராம்; ‘என் உயரத்தைக் குறிப்பிட்ட முதல்-அமைச்சர் என்னைப் போலவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்டிநாட்டரசர் முத்தையாவை மறந்துவிட்டார். திருக்குறளின் முதலடி நீளமானது, அவரைப் போல. அடுத்த அடி குறுகியது, என்னைப் போல. திருக்குறள் அறிந்தவர்களுக்கு இதன் பெருமையும் அருமையும் தெரியும்’ என்றார். எவ்வளவு தன்னடக்கமான உவமை? வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். பூசலும் பிணக்கும் மறைந்துவிடும். ஒரு சமயம், அண்ணா முதல்-அமைச்சராக இருந்த வேளை. சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. நிதி அமைச்சர் விலைவாசி குறித்த அறிக்கையை வெளியிடுகிறார். ‘புளி விலை குறைந்துவிட்டது’ என அவர் தெரிவிக்கிறார். ‘இது உங்கள் முயற்சியாலா?’ என எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்கிறார். முதல்-அமைச்சர் அண்ணா எழுந்து, ‘எங்கள் முயற்சியால் இல்லை. புளியமரத்தின் முயற்சியால்’ என்று தெரிவிக்கிறார். அப்போது நிலவிய இறுக்கம் நீங்கி, கட்சி வேறுபாடின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சிரிப்பில் மூழ்கினர். அப்போது பேருந்து வண்டிகளில் திருக்குறளை எழுதி வைக்க அரசு ஆணையிட்டு எல்லாப் பேருந்துகளிலும் குறள் எழுதிவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் எழுந்து கேட்கிறார்: ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று எழுதிவைத்துள்ளர்களே. யாருடைய நாக்கு காத்துக்கொள்ளவேண்டும்? ஓட்டுனருடைய நாக்கையா? நடத்துனருடைய நாக்கையா? அல்லது பயணம் செய்வோர் நாக்கையா? முதலமைச்சர் அண்ணா சற்றும் தயங்காமல் விடையளித்தார், ‘நாக்குப் படைத்த எல்லோருடைய நாக்கையும்’ என்று. ‘எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் நான் எப்போதோ போய்ச் சேர்ந்திருப்பேன்’ என்றாராம் காந்தியடிகள். சிரிக்கவைத்து அதனுடன் சிந்திக்கவைக்கும் கலையில் வித்தகர் கலைவாணர் ஒரு திரைப்படத்தில் ஒரு பண்ணையாருக்குப் பணியாளாக வேலை பார்க்கிறார். அந்தப் பண்ணையாரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர் குத்தகைப்பணம் கொடுக்க வந்துள்ளார். முதலில் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். அவர் தண்ணீர் குடித்த குவளை தீட்டுப்பட்டுவிட்டது எனக் கூறி அந்தக் குவளையைக் கழுவி எடுத்துவருமாறு பண்ணையார் உத்தரவிடுகிறார். அதன்பின் வந்தவர் குத்தகைப்பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அந்தப் பணத்தின்மீது கலைவாணர் தண்ணீர் தெளிப்பார். ‘ஏய் ஏய் பணத்தை ஏன் நனைக்கிறாய்’ எனப் பண்ணையார் சத்தம் போடுவார். ‘அவர் குடித்த பாத்திரம் தீட்டாகிவிட்டது என்பதால் கழுவ வேண்டும் என்றீர்கள். அதேபோல் அவர் கொடுக்கும் பணமும் தீட்டாகிவிட்டதல்லவா? எனவே கழுவி எடுத்துவந்தேன்’ என்று மிகவும் நிதானமாகக் கலைவாணர் கூறுவார். சமூகத்தில் நிலவிவந்த சமூகநோய்களைச் சுட்டிக்காட்டி நம்மைச் சிரிக்கவைத்துச் சிந்திக்கவைத்த பெருமை கலைவாணருக்கே உரியது. சிரிப்போம். சமூகநோய் களை அகற்றுதற்குச் சிந்திப்போம். சிரிப்போம். கவலைகளை மறப்போம். அடுத்தவர்களின் கவலைகளையும் அகற்றுவோம். சிரிக்கும்போது கவலைகள் மட்டுமா மறைந்துபோகும்? நம்மைப் பிடித்து ஆட்டிவைக்கும் அத்தனை வேறுபாடுகளும் மறைந்துவிடும். இன்று (ஜூலை 1-ந்தேதி) உலக நகைச்சுவை தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts