Sunday 1 July 2018

ஜி.எஸ்.டி. வரியும் நடைமுறை தாக்கமும்

ஜி.எஸ்.டி. வரியும் நடைமுறை தாக்கமும் டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய பொருளியல் அறிஞர் இன்று (ஜூலை 1-ந்தேதி) ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த நாள். நமது நாட்டின் பொருளாதாரத்திலும், வாணிபத்திலும், பணவியலிலும், பொதுநிதித்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டாக 2017-ம் ஆண்டு விளங்குகிறது. பணமதிப்பிழப்பு நாட்டையே ஒரு வகையில் புரட்டிப் போட்டது. சரக்கு சேவை வரி முறை (ஜி.எஸ்.டி.) நாட்டின் பொருளாதார நடைமுறையில் பல விளைவுகளைக் கொண்டு வந்திருக்கிறது. என்றைக்கு அரசு என்று ஒரு அமைப்பு தோன்றியதோ, அன்று முதல் அரசின் செலவுக்கு வருவாய் தேடும் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பொருளியல் பாடமே அரசியல் பொருளியலாக வளர்ந்தது. பின்னர் அரசின் வரவு, செலவு, நிதிநிலை பற்றி ஆராயும் இயலாக ‘பொதுநிதி’ வளர்ந்துள்ளது. அரசின் செலவுகள் கூடக்கூட வருவாய் வரும் வழிமுறை வலையாக விரிந்து பரவியுள்ளது. அதில் வரிகளுக்கு முதன்மையான இடம் கிடைக்கின்றது. அப்படிப் பெருகிவரும் வரிகளில் விற்பனை வரியும் ஒன்று. பல்வேறு மாநிலங்களிலும் பல வகைகளில் விற்பனை வரி விதித்த நிலையில் ஒரு வகை குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கலைத் தீர்க்க 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு சேவை வரியை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு மத்திய அரசு விதித்த உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும் சுங்க வரித்துறையில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள், சிறப்புக் கூடுதல் சுங்க வரி, செஸ், சர் சார்ஜ் என்று பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பெற்றன. இவற்றை எல்லாம் நீக்கிவிட்டு ஒரு முனைவரியாக சரக்கு சேவை வரி விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதன்படி வரி விகிதங்களை 5 நிலைகளில் முறைப்படுத்தி இருக்கின்றனர். முதலாவதாக சில இன்றியமையாத பொருட்களுக்கு வரி இல்லை. அதாவது, ‘ஜீரோ’ வரி. உதாரணமாக பாட நூல்களுக்கு வரி இல்லை. இரண்டாம் வகை பொருட்களுக்கு 5 சதவீதமும், மூன்றாம் வகை பொருட்களுக்கு 12 சதவீதமும், நான்காம் வகை பொருட்களுக்கு 18 சதவீதமும், ஐந்தாம் வகை பொருட்களுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்பெறுகின்றது. பெரும்பாலான நிறுவனங்களில் கணினி பயன்படுத்துவதால் விற்பனை பட்டியலை முறைப்படுத்தி உள்ளனர். வணிக வரித்துறை கணக்குகளை பேணும் முறைகளை வகுத்துள்ளது. சில பொருட்களின் மீது விதிக்கும் வரி விகிதங்களை மாற்றங்கள் செய்துள்ளனர். வரி விதிப்பினை செயல்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்துகின்றனர். இதுவரை பெட்ரோலியம், மதுபான பொருட்களை இந்த வரி விதிப்பின் கீழ் கொண்டுவரவில்லை. அதனுடைய நோக்கம் அரசுக்கு வரி செலுத்தாமல் எய்ப்பவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே. இதற்கு முன்பு வாட், மோட் வாட் வரி விதிப்பு முறைகளை மேற்கொண்ட போது நாடு பெற்ற அனுபவங்கள் கசப்பானது. அரசு அலுவலகங்கள் குறிப்பின்படி 13 வகைகளில் வருமான எய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 2010-ல் நடந்த தணிக்கையின்போது மொத்தம் இருந்த 25 மாநிலங்களில் 11 மாநிலங்களில் மட்டும் 50 சதவீத அளவுக்கு வரி எய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு நடைமுறையில் உள்ள ஊழல், லஞ்சம் போன்றவையும், வணிகர்கள், தொழில்முதலாளிகள், அரசு அலுவலர்கள் போன்றவர்களின் நேர்மை குறைவும் காரணங்களாகும். புதிய சரக்கு சேவை வரி முறை காலத்தின் தேவை. மத்திய நிதி மந்திரியாகவும் குடியரசு தலைவராகவும் இருந்து நிதித்துறையில் அனுபவமும் அறிவும் பெற்ற ஆர்.வெங்கடராமன், ‘இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு ஒரு முனை வரிதான் ஏற்றது; தேவையானதும் கூட’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு ஜூலை முதல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சரக்கு சேவை வரி முறை முந்தைய வரிமுறைகளை விடச் சிறந்தது; விரிவானது. அரசின் உயர்நிலை அதிகாரிகள் புதிய தொழில்நுட்பங்களோடு உருவாக்கியது. விரைந்து செயல்படுத்த வேண்டுமென்பதற்காக சட்ட வடிவில் கொண்டுவரப்பட்டது. ஒன்றின் நோக்கம் உயர்வானதாக இருக்கலாம். ஆனால் அதனைச் செயல்படுத்துகின்றபோது எழுகின்ற நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவில்லை என்றால் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும். சரக்கு சேவை வரிமுறையிலும் இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தியா மிகப்பெரிய நாடு. இங்கு பல வகையான தொழில் வாணிபக் கட்டமைப்புகள் இருக்கின்றன. சின்ன பெட்டிக்கடை முதல் பன்னாட்டு அளவில் பேரளவில் வாணிபம் செய்கின்ற நிறுவனங்கள் வரை உள்ளன. தொழில்களிலும் குடிசைத் தொழில்கள் முதல் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட பெருந்தொழில்கள் வரை உள்ளன. கட்டை வண்டிகள் முதல் விமானங்கள் வரை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இந்த பலவகையான வளர்ச்சி நிலைகளையும் கட்டமைப்புகளையும் கொண்ட உற்பத்தித் தொழில்களையும், வாணிப அங்காடிகளையும் ஒருமுக வரி விதிப்பு முறைக்குள் கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. ‘யானையைப் பானைக்குள்’ அடக்குவதைப் போன்ற முயற்சி இது. வரிகளை வகைப்படுத்தி வரி விகிதங்களை நிர்ணயித்த பின்பும் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. சிலவற்றின் விளக்கங்கள் தெளிவாக இல்லை. சரக்கு சேவை வரி விதிப்புமுறை வந்து ஓராண்டு காலமாகியும் ஐயப்பாடுகள் எழுந்துகொண்டு இருக்கின்றன. அதிகாரிகளால் திட்டவட்டமான தீர்ப்பும் கூற முடியவில்லை. இந்த சரக்கு சேவை வரி முறையிலும் இருக்கின்ற இடைவெளிகளைக் கண்டு, அவற்றின் வழியாக வரி விதிப்பிலிருந்து விலக்குப் பெறும் முயற்சி தொடர்கின்றது. குறிப்பாக பெரிய நிறுவனங்களை நடத்துகின்றவர்களுக்கு வரி விலக்குப் பெறும் வழிமுறையைக் கூற வல்லவர்கள் இருக்கிறார்கள். சிறிய, நடுத்தர, வணிகர்கள் தான் அகப்பட்டுக்கொண்டு வெளிவர வழித் தெரியாமல் திண்டாடுகிறார்கள். இன்றைய வரிமுறையில் ஒரு நிறுவனம் பல்வேறு படிகளையும் ஆவணங்களையும் நிரப்பித்தர வேண்டியது இருக்கிறது. அரசுக்கு இந்தப் புள்ளி விவரங்கள் தேவைப்படலாம். ஆனால், இந்த நடைமுறைகளை எல்லாம் பின்பற்றுவது சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாக இல்லை. விடுபட முடியாத சிக்கல்கள் போல் தோன்றுகின்றன. கூடுதலாக வரி செலுத்தியவர்கள் அதனைத் திரும்பப்பெற பெரியதும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. கிடைக்குமென்று உறுதிப்பாடும் இல்லை. இதனால் ‘வரி எய்ப்புக்கு வழிவகுக்கின்றது’ என்று கூறுகின்றனர். வரி விதிப்பு முறையில் திட்டவட்டமான நிலை இல்லாததால் பொருட்களின் விலையை விருப்பம் போல் கூட்டி விடுகின்றனர். இது வரியை நுகர்வோர் மீது சுமத்தும் முறையாகும். இது மக்கள் நலனை பாதிக்கும். சரக்கு சேவை வரி விதிப்பு முறையால் ஏராளமான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாக கூறுகின்றனர். தமிழக அரசு வெளியிட்ட ஒரு குறிப்பின்படி கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 320 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 5 லட்சத்து 19 ஆயிரத்து 73 பேர் வேலை இழந்து இருப்பதாகவும் தெரிகின்றது. இது வரி விதிப்பின் மறைமுகப் பாதிப்பு என்கின்றனர். அரசு செயல்பட, ஆக்கப் பணிகளை மேற்கொள்ள வருவாய் தேவை. இதற்கு வரி விதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. முதல் முதலில் பொருளியல் நூலை எழுதிய அறிஞர் ஆடம் ஸ்மித் வரி விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்கின்றார். முதலாவதாக அதில் சமத்துவ தன்மை இருக்க வேண்டும். இரண்டாவதாக திட்டவட்டமாக, தெளிவாக இருக்க வேண்டும். மூன்றாவதாக செலுத்துபவர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும். நான்காவதாக அந்த வரியை வசூலிப்பதில் சிக்கனம் இருக்க வேண்டும். நமது சரக்கு சேவை வரி முறை பொன் முட்டை இடுகின்ற வாத்து. அதனைப் பேணிக் காத்து தொடர்ந்து வருவாய் பெறுவது அரசின் திறமை.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts