Thursday, 15 December 2016

கிழக்கு நோக்கிய பார்வையில் துல்லியம் இருக்கிறதா?

கிழக்கு நோக்கிய பார்வையில் துல்லியம் இருக்கிறதா? | நினைவுக்கெட்டிய நாட்களிலிருந்தே இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வசித்துவரும் பழங்குடி இனக் குழுக்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி எல்லைகளை வகுத்துக்கொண்டு செயல்பட்டுவந்தன. பிரிட்டிஷ் காலத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளாக (அதாவது, பிரிட்டிஷ் நிர்வாகத்தின்கீழ் அடங்காத ஒன்றாக) இருந்த இத்தகைய எல்லைகளை இந்திய விடுதலைக்குப் பின்பு அகற்றி, அவற்றை இந்தியாவின் இதர பகுதிகளைப் போன்ற மாநிலங்களாக மாற்ற முயற்சி நடந்தது. இதை எதிர்த்துத் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்ட அங்கெழுந்த விடுதலை இயக்கங்களால் இப்பகுதி பல்வேறு கிளர்ச்சிகளின் இருப்பிடமாக மாறியது. இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம்தாங்கிய கிளர்ச்சிக் குழுக்கள் இப்பகுதியில் செயல்பட்டுவருகின்றன. 1950-கள் வரையில், இங்குள்ள பழங்குடி இனத்தவரின் சிறப்புத் தன்மைகளை அங்கீகரித்த வகையிலும், 1960-களில் 1962-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய-சீன எல்லைப் போரைத் தொடர்ந்து, இப்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு என்ற சட்டகத்தின் அடிப்படையிலும், 1970-களிலிருந்து 1980-கள் வரையில் இங்கு உருவான அரசியல்ரீதியான கிளர்ச்சிகளின் விளைவாக அரசியல் சட்டகத்தின் அடிப்படையிலும் மத்திய அரசு பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1990-களில் இந்தியாவில் உருவெடுத்த புதிய பொருளாதாரக் கொள்கையானது, நாட்டின் வர்த்தகம் குறித்த அணுகுமுறையை கிழக்கு நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற மாற்றத்தை நோக்கிச் சென்றபோது, இப்பகுதி வர்த்தகரீதியான அணுகுமுறை என்ற சட்டகத்துக்குள் கொண்டுவரப்பட்டது. வெற்றி மிக அரிது சுமார் 4,500 கி.மீ. நீளத்துக்கு அண்டை நாடுகளுடன் பகிர்ந்துகொண்டு வரும் இதன் எல்லைகளைத் தாண்டியே மத்திய அரசு உருவாக்கியுள்ள கிழக்கு நோக்கிய கொள்கையை அமல்படுத்த முடியும் என்ற நிலையில், இதுவரை இப்பகுதியில் உருவான கிளர்ச்சிகளை அடக்குவதற்காக நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்கள் அங்கு அமலாக்கப்பட்டுவரும் சூழல் அதிருப்தியை மேலும் அதிகரித்தது. கூடவே, போதிய வளர்ச்சியற்ற நிலை; மத்திய அரசையே எதற்கும் நம்பியிருக்கும் நிலை ஆகியவற்றின் பின்னணியில் இப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு இப்பகுதி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகள் வெற்றிபெறுவதென்பது மிக அரிதாகவே இருந்தது. இத்தகையதொரு சூழலில்தான் இந்தியாவின் பொருளாதாரத் தேவைகளுக்கு இப்பகுதியை பயன்படுத்திக்கொள்ளும் திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வகுக்கப்பட்டன. புரிந்துகொள்ளப்படாத தேவைகள் இதில் மூன்று திட்டங்களைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டலாம். 1) கிழக்கு நோக்கிய கொள்கை. 2) வடகிழக்குப் பகுதிக்கான தொலை நோக்குப் பார்வை 2020. 3) பிம்ஸ்டெக் எனும் வங்காள விரிகுடா பகுதி நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக் கான முன்முயற்சி அமைப்பு. மேற்கண்ட திட்டங்களில் குறிப்பாக முதல் இரண்டு திட்டங்களுமே வடகிழக்குப் பகுதியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், அங்குள்ள மக்களின் கருத்துகளைப் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாக, மேற்கூறிய திட்டங்களின் செயல்பாடு இன்றுவரை முறையாக நிறைவேற்றப்படாத நிலையிலேயே நீடிக்கின்றன. கிழக்கு நோக்கிய கொள்கை புதிய பொருளாதாரக் கொள்கையானது உலகமயமாதலை அடிப்படையாகக் கொண்டு, வெளிநாட்டு வர்த்தகத்துக்கு முன்னுரிமை தரத் துவங்கியது. இதுவரை மேற்கு நாடுகளை நோக்கியே இருந்துவந்த நமது வர்த்தக உறவுகளைக் கிழக்கில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, ஜப்பான் ஆகிய பகுதிகளை நோக்கி திசைமாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அது உணரச் செய்தது. அவ்வகையிலேயே அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் 1994 செப்டம்பரில் இந்த கிழக்கு நோக்கிய கொள்கையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எனினும், இக்கொள்கையை முறையாக அமல்படுத்த வேண்டுமெனில், பூகோளரீதி யாக நமது வடகிழக்கு மாநிலங்களே இதற்கான வழியாக அமையும் என்ற தெளிவே நமக்கு 2000-ம் ஆண்டில்தான் பிறந்தது. இப்பகுதியில் உள்ள மக்கள் வழிவழியாக கலாச்சாரரீதியாகவும், மொழி அடிப்படையிலும் இன்றைய ஏஷியன் எனப்படும் நாடுகளுடன் நேரடியான உறவுகொண்டவர்கள் என்ற வகையில், வடகிழக்குப் பகுதியில் உற்பத்தித் தளங்களை அமைத்து, பொருட்களைக் கிழக்கு நோக்கி வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதே இதற்கு எளிதான வழியாக இருக்கும். கட்டமைப்பு வசதிகள் இல்லை எனினும், கிழக்கு நோக்கிய கொள்கைக்கு என இதுவரை ஒரு வெள்ளை அறிக்கைகூட உருவாக்கப்படவில்லை. இதை நிறைவேற்ற அவசியமான வடகிழக்குப் பகுதியின் உற்பத்தி அமைப்புகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பற்றி, அப்பகுதி மக்களின் தேவைகள் பற்றி, ஒரு பொது விவாதத்தை அப்பகுதி மக்களிடையே உருவாக்கும் முயற்சிகள்கூட இதுவரை எடுக்கப்படவில்லை. உதாரணமாக, இந்தக் கிழக்கு நோக்கிய கொள்கையை உருவாக்கும் குழுவில், அசாமிலிருந்து ஒரே ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமே பங்குபெற்றார். எந்தவொரு தொழிலுக்கும் அவசியமான மின்சாரத்தைப் பொறுத்தவரையில் நாட்டின் வேறெந்தப் பகுதியையும்விட அதிக அளவில் 57.6 ஜிகா வாட்ஸ் மதிப்புள்ள நீர் மின்உற்பத்திக்கான வசதியைக் கொண்டதாக, அதற்கும் மேலாக மின்உற்பத்திக்கு உகந்த வகையில் அபரிமிதமான இயற்கை எரிவாயுவைக் கொண்டு இப்பகுதி இருந்தபோதிலும், தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் எதுவும் பெரிதாக உருவாகாத நிலையில், கிழக்கு நோக்கிய கொள்கையை நிறைவேற்றும் வகையில் வர்த்தகப் பொருட்களின் உற்பத்தி மையமாக இப்பகுதியை வளர்த்தெடுக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்கானதொரு முயற்சியாகவே 2008-ல் வடகிழக்குப் பகுதிக்கான 'தொலைநோக்குப் பார்வை 2020' அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைநோக்குப் பார்வை 2020 இந்த ஆவணம், நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது: 1. சுயாட்சி முறையைப் பெருமளவுக்கு அதிகரிப்பது. 2. இப்பகுதி மக்கள், பொது நிறுவனங்களின் திறமையை வளர்த்தெடுப்பது. 3. அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டுவதன் மூலம், சிறப்பான நிர்வாகத்தை உருவாக்குவது. 4. மக்களின் அதிகாரத்தை வளர்த்தெடுப்பது. இதில் நிறுவனரீதியாகத் தேவைப்படும் மாற்றங்களில் மணிப்பூரில் உள்ள மொரே, சிக்கிம் மாநில எல்லையில் உள்ள நாது லா, இதர வட கிழக்கு மாநிலங்களில் உள்ள நுழைவுப் பகுதிகளுக்கான நிபந்தனைகளைத் தளர்த்தி, அண்டை நாடுகளிலிருந்து விவசாய விளைபொருட்கள், மாமிசப் பொருட்கள் ஆகியவற்றை எளிதாக விற்பனை செய்யும் ஏற்பாடு; எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்க அமைப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டுவது; அசாம், திரிபுரா, மணிப்பூர் தவிர்த்த இதர மாநிலங்களில் இன்றும் நிலவிவரும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை ரத்துசெய்வது ஆகியவை அடங்கும். இத்தகைய ஏற்பாடுகள் மூலமே அண்டை நாடுகளான சீனா, மியான்மர், பங்களாதேஷ் ஆகியவற்றுடனான வர்த்தக முயற்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும். இதன் அடுத்தகட்ட முயற்சியாகவே தற்போது பிம்ஸ்டெக் (BIMSTEC) என்ற வங்கதேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வங்காள விரிகுடா நாடுகளுக்கு இடையே பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி அமைப்பு உருவாக்கப்பட்டு, சமீபத்தில் இந்த நாடுகளின் தலைவர்கள் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களுடனான ஒரு உச்சி மாநாடும் கோவாவில் நடைபெற்றது. இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு, பிம்ஸ்டெக் அமைப்பின் மூலம் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சிகளை எடுத்துள்ளபோதிலும், வடகிழக்குப் பகுதியில் வளர்ச்சிக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அங்குள்ள மக்களின் ஒத்துழைப்போடும் புரிதலோடும் மேற்கொள்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை தராதவரை இவை காகிதங்களில் எழுதப்பட்ட திட்டங்களாகவே நீடிக்கும் என்பதே யதார்த்தமாகும். - வீ.பா.கணேசன், எழுத்தாளர்.

No comments:

Popular Posts