Thursday 15 December 2016

பண மதிப்பு நீக்கம் பிளாஸ்டிக் அட்டைகளுக்காகவா?

பண மதிப்பு நீக்கம் பிளாஸ்டிக் அட்டைகளுக்காகவா? | மோடி அரசு எடுத்துவரும் குழப்பம் தரும் நடவடிக்கைகள் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது நடந்த ஒரு கதையை நினைவுபடுத்துகிறது. 'சன்டா பன்டா' (சர்தார்ஜி கதைகள்) வருவதற்கு முன்னால், பல்தேவ் சிங் என்றொரு அமைச்சர் நேரு அமைச்சரவையில் இருந்தார். ஜைல் சிங்கை எப்படி 'ஞானி' என்று அழைத்தனரோ அப்படியே பல்தேவ் சிங்கையும் 'சர்தார்' என்று அழைத்தனர். 

சர்தார்ஜிகள் பற்றிய ஜோக்குகளை சொல்லக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங், பல்தேவ் சிங்கை வைத்தே பல கதைகளைப் புனைந்திருக்கிறார். பல்தேவ் சிங் (1902-1961) சுதந்திரப் போராட்ட வீரர், நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அவர் தொடர்பான ஒரு சம்பவத்தைச் சொல்ல குஷ்வந்த் சிங் தயங்கியதே இல்லை. மத்திய அமைச்சராகப் பதவியேற்றது முதல் பல மாதங்களுக்கு பல்தேவ் சிங் அவருடைய தாயார் இருந்த ரோபார் ஊருக்குச் செல்லவே முடியவில்லை. ஒரு நாள் சென்றார். "உன்னுடைய மகன் அமைச்சராகி என்ன பிரயோஜனம், வெள்ளைக்காரர்கள் போன பிறகு சில்லறைக்கு இப்படித் தட்டுப்பாடு வந்திருக்கிறதே என்று ஊரார் கேட்கிறார்கள். உன்னால் இதைப் போக்க ஏதாவது செய்ய முடியுமா?" என்று பல்தேவ் சிங்கின் தாயார் கேட்டார். 

பல்தேவ் சிங் சிந்தனையோடு டெல்லி திரும்பினார். தன்னுடைய மாத ஊதியம், படிகள் போன்றவற்றை எல்லாம் சில்லறையாக மாற்றினார். அவற்றை பெரிய 2 டிரங்கு பெட்டிகளில் அடைத்து தனது அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகும் அவருடைய அம்மாவின் சில்லறைப் பிரச்சினை தீரவில்லை காரணம், அதை அவர் அனுப்பியது மணியார்டர் மூலம்! ஜனநாயக அரசுகள் செய்யாதது குஷ்வந்த் சிங் இப்போது உயிரோடு இருந்திருந்தால் மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பல்தேவ் சிங் நடவடிக்கையோடு ஒப்பிட்டு மானத்தை வாங்கியிருப்பார். புழக்கத்தில் இருந்த 86% ரொக்கத்தைச் செல்லாது என்று இதுவரை இறையாண்மை மிக்க எந்த ஜனநாயக அரசும் அறிவித்ததே இல்லை. பணத்துக்குப் பதிலாக பண அட்டைகள், கடன் அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற யோசனை சரிதான்; இதைத்தான் நீங்கள் விரும்பினீர்கள் என்றால் கோடிக்கணக்கான ரூபாயைச் செல்லாது என்று அறிவித்து நாட்டுக்கு இவ்வளவு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது எதற்காக? 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகையுள்ள இந் நாட்டில் வெறும் 2.5% முதல் 3% வரையிலான மக்கள் மட்டுமே பிளாஸ்டிக் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். 

அவர்களில் பலர் 3 அட்டைகளைக் கூட வைத்திருக்கின்றனர். மேலும் சிலர்தான் 'இ-வாலெட்' என்று அழைக்கப்படும் 'மின்-பர்ஸ்' வைத்திருக்கின்றனர். வசதியுள்ள மேட்டுக்குடி மக்களின் நலனுக்காக, அரசையும் - வரி செலுத்தும் ஏழைகளையும் பிணையாக வைக்கிறீர்கள். கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிக்க இதைவிட நல்ல முறையில் சிந்தித்துச் செயல்பட்டிருக்க வேண்டும். மூச்சுத்திணறும் இந்நேரத்தில் சிந்திப்பது எளிதல்ல. டிஜிட்டல் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்து தங்களுடைய துறையின் தலைவர்களுக்குப் பாடம் எடுக்கப்போவதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அதே நாளில்தான் ஐ.என்.எஸ். பேட்வா என்ற 3,800 டன் போர்க் கப்பல், மசகான் கப்பல் கட்டுமிட உலர் துறையில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. பாதுகாப்பு அமைச்சரோ அடுத்த நாள், பிளாஸ்டிக் அட்டைகளைப் பயன்படுத்தி கொள்முதல்களையும் இதர சேவைகளையும் நடத்துவது எப்படி என்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார்! இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டு காலாண்டுகளை (ஆறு மாதங்கள்) முடக்கிவிட்டது மோடியின் அறிவிப்பு. அப்போது பரவசப்பட்டோம் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தபோது, மிகத் துணிச்சலான நடவடிக்கை என்று பரவசப்பட்டோம். 

அப்படி அறிவிப்பதற்கு முன்னால் அவர் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருப்பார் என்று கருதி மகிழ்ந்தோம், அங்கேதான், நான் உள்பட - அனைவருமே தவறு செய்துவிட்டோம். அரசின் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் டெல்லி வட்டாரங்கள் முன்கூட்டியே கசிய விடுவதையே பார்த்திருந்த நாம், இந்தத் திடீர் ரகசிய நடவடிக்கையால் பெரிதும் கவரப்பட்டோம். இந்த நடவடிக்கையின் விவரங்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, 'நடவடிக்கை எடுத்தவர்களுக்கே' தெரியாது என்ற உண்மையை இப்போதுதான் தெரிந்துகொள்கிறோம்! அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தால் கூட ரகசியம் வெளியுலகுக்குக் கசிந்துவிடும் என்று கூறுவது அபத்தமாக இருக்கிறது. கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்த ரகசியங்களை அவர்கள் காப்பாற்ற மாட்டார்கள் என்றால், ரகசியக் காப்புறுதிப் பிரமாணம் ஏன் அவர்களுக்குச் செய்துவைக்கப்படுகிறது? எதற்கு அமைச்சரவையும், கூட்டுப் பொறுப்பும்? இப்போதும்கூட துணிச்சலாக நடவடிக்கை எடுக்கும் பிரதமரைப் பாராட்டுகிறவர்கள் இருக்கிறார்கள்: குறிப்பாகச் சொல்லப் போனால் மோடியின் இந்த முடிவால் அன்றாடம் வங்கியின் வரிசைகளில் தங்களுடைய சொந்தப் பணத்தைச் சிறுக சிறுக எடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருப்பவர்கள் பாராட்டுகிறார்கள். 

ஒரு மாதத்துக்குப் பிறகு அவர்களும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உறைந்திருக்கிறார்கள். இப்படி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்ததற்கு வலுவான ஒரு காரணம் இருக்கவேண்டும், இதன் பலன் பெரிதாக இருக்கும் என்றுதான் இன்னமும் நம்புகிறார்கள். அந்தப் பலன், எல்லோரும் கடன் அட்டையையும் பண அட்டையையும் பயன்படுத்து வதாக மட்டும் நிச்சயம் இருக்க முடியாது. கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று தொடங்கி, கடன் அட்டைகளைப் பயன்படுத்துங்கள் - இனி ரொக்கம் கிடையாது என்று கூறுவது டிரங்க் பெட்டிகள் நிறைய சில்லறையைச் சேர்த்து மணியார்டர் மூலம் அனுப்பி ரொக்கமாகப் பணம் பெற வைத்த புத்திசாலித்தனத்துக்கு ஈடானது. பின்குறிப்பு: முன் யோசனை இல்லாமல் மேற்கொள்ளப்படும் செயல்கள் கூட தீரமுடன் மேற்கொள்ளப்பட்டு வீரம் விளைந்தால் புகழ்ச்சிக்கு உரியதாகிவிடும். கிரீமியப் போரில் குதிரைப் படைக்குத் தலைமை தாங்கிய கார்டிகான் பிரபு அப்படிப்பட்ட பாராட்டைப் பெற்றார். ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் அதைப் போற்றி கவிதை பாடினார். நார்மன் டிக்சன் அதையே படுமுட்டாள்தனமான செயல் என்று கண்டித்தார். "ரொம்பப் பிரமாதம், அது போரே அல்ல, சரியான முட்டாள்தனம்" என்றார் பிரெஞ்சு படைத் தலைவர் பியரி பாஸ்கெட். - சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,

No comments:

Popular Posts