Thursday, 15 December 2016

எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் | தலைசிறந்த பத்திரிகையாளர்

எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் | தலைசிறந்த பத்திரிகையாளர் | பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழை விலைக்கு வாங்கி, உலக அரங்கில் மதிக்கப்படும் நாளிதழாக மறுவடிவம் பெறுவதற்கு அடித்தளமிட்ட எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து. கும்பகோணத்தில் பிறந்தார் (1859). இன்னம்பூர் மற்றும் கபிஸ்தலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். 12-வது வயதில் புரொவின்சியல் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி படிப்புக்குப் பின்னர் சென்னை பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1879-ல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் சட்டம் பயின்றார். சட்டப் படிப்பை முடிக்காமலேயே 1881-ல் துணைப் பதிவாளராகப் பொறுப்பு ஏற்றார். 1884-ல் சட்டப் படிப்பு தேர்ச்சியடைந்ததும் துணைப் பதிவாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, பி.பாஷ்யம் ஐயங்காரிடம் ஜூனியராகச் சேர்ந்தார். அப்போதிருந்தே அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்வம் காட்டிவந்தார். 1884-ம் ஆண்டு சென்னையில், பொதுஜனக் கருத்துகளை வெளியிடுவதற்காக 'மெட்ராஸ் மஹாஜன சபா' என்ற மன்றம் தொடங்கப்பட்டது. இந்தச் சபையின் நிர்வாக உறுப்பினராகச் செயல்பட்டார். 1878-ம் ஆண்டு ஜி.சுப்ரமணிய ஐயர் உள்ளிட்ட அறுவரின் முயற்சியால் 'தி இந்து' வாராந்திர இதழாகத் தொடங்கப்பட்டது. கஸ்தூரிரங்க ஐயங்கார் செயல்பட்டுவந்த மெட்ராஸ் மஹாஜன சபாவின் அலுவலகம் 'தி இந்து' அலுவலக வளாகத்தில் இருந்தது. கஸ்தூரிரங்க ஐயங்கார் 1885-ல் கோவையில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 'மிகவும் உணர்வுப்பூர்வமானவர்; கூச்ச சுபாவம் உடையவர்; மெதுவாகப் பேசுபவர்; எனவே வழக்கறிஞர் தொழிலில் பெரிதாக வெற்றிபெற வாய்ப்பில்லை' எனும் இவரைப் பற்றிய கணிப்பைப் பொய்யாக்கி, வெற்றிகரமான வழக்கறிஞராகப் பிரபலமடைந்தார். இவர் கோயம்பத்தூர் வந்த ஒருசில மாதங்களிலேயே உள்ளூர் மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாவட்ட வாரியத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892 வரை அங்கு பணியாற்றினார். வழக்கறிஞர் சங்கக் குழுவின் உறுப்பினராக இணைந்த இவர், 1897-ல் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக் கூட்டங்களில் இவர் ஆற்றும் உரைகளில் தகவல் செறிவும் தெளிவும் சிறந்த ஆலோசனைகளும் பளிச்சிட்டன. 1886-ல் மாணவர்களுக்கான இலக்கிய அமைப்பு தொடங்க உதவினார். பின்னர், ஜி.சுப்ரமணிய ஐயர் நடத்திவந்த 'தி இந்து' இதழில் இணைந்தார். இந்த இதழ் ஏப்ரல் 1, 1889-ல் நாளிதழாக மாற்றப்பட்டது. குறைவான பிரதிகளே விற்பனையான 'தி இந்து' பத்திரிகையை, 1905-ம் ஆண்டு ரூ.75 ஆயிரம் விலை கொடுத்து துணிச்சலாக வாங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது உறவினர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காரை உதவி ஆசிரியராக நியமித்தார். நாளிதழில் விளம்பரங்களை அதிகரித்தார். சரிந்து வந்த பத்திரிகையைத் தூக்கி நிறுத்தி, ஐந்தே ஆண்டுகளில் அதன் கடன்களை அடைத்தார். சென்னையில் ரோட்டரி பிரின்டிங் பிரஸ் தொடங்கினார். 'தி இந்து' பத்திரிகையை மக்களின் குரலாக ஒலிக்கவைத்தார். இன்று உலக அளவில் முக்கியமான நாளிதழ்களில் ஒன்றாக மதிக்கப்படும் 'தி இந்து' நாளிதழ் அத்தகைய பெருமையைப் பெறுவதற்கான அடித்தளமிட்டவர், தலைசிறந்த பத்திரிகையாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட கஸ்தூரிரங்க ஐயங்கார், 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 64 வயது நிறைவடையும் தருணத்தில் காலமானார். - ராஜலட்சுமி சிவலிங்கம்

No comments:

Popular Posts