Sunday, 29 September 2019

இளைஞர் சமூகத்தின் இன்றைய தேவைகள்...!

இளைஞர் சமூகத்தின் இன்றைய தேவைகள்...!

முனைவர் ப.சேதுராஜகுமார்,

உதவி பேராசிரியர்,

சமூகவியல் துறை,

பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

இ ந்தியா உலக அளவில் அதிக அளவு இளைஞர் பட்டாளம் கொண்ட ஒரு நாடாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 கோடி மக்கள் 25 வயதுக்கு குறைவான இளையோர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தங்களது குடும்ப வாழ்வினை சிறிது, சிறிதாக செம்மைப்படுத்தி பெற்ற குழந்தைகளை பேணிக்காப்பதில் தற்போது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டு விழிப்புணர்வு, அறிவுமயமாதல், தனிக்குடும்ப அமைப்பு போன்ற காரணிகளாலும் குடும்ப மற்றும் எதிர்கால கல்வி மற்றும் சமூக செலவுகளை மனதில் கொண்டு அளவோடு குழந்தைகளைப் பெற்று புதிய நாகரிக அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்கள். இன்று அனைத்து குடும்பங்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இளையோர் குடும்ப உறுப்பினராக இருக்கின்றனர். மேலும் மற்றொரு முனையில் அபரிமிதமான மருத்துவ வளர்ச்சி, கொள்ளை நோய்களின் அழிவு, எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சிகிச்சை, சிறப்பான விஞ்ஞான ஆய்வுகள் போன்றவற்றின் காரணமாக இந்திய மக்களின் சராசரி வயது உயர்ந்து முதியோர் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர தொடங்கியிருக்கிறது. அதிக வாழ்வியல் அனுபவம் கொண்ட முதியோர்கள் மற்றும் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை எழுச்சி தற்போது முரண்பாடுகளின் உச்சமாகி விடுமோ என்று சமூகவியலாளர்களால் அஞ்சப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான இளவயது நபர்களின் தீய செயல்களே, இளையோரின் எதிர்மறை சமூக மயமாதலுக்கு சாட்சியாக விளங்குகிறது.

இந்திய திருநாட்டில் நவீனமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற காரணிகள் குடும்ப வாழ்வியல் முறையிலும், தனி நபர் ஒழுக்கமேன்மையிலும் மற்றும் அடிப்படை அமைப்பு செயற்பாட்டிலும் புதிய பரிணாமத்தை உருவாக்கியிருக்கின்றன. மேற்கூறிய மாற்றங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்தில் நிகழும் பண்பாட்டு அதிர்ச்சிக்கு மூலமாக உள்ளது.

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இளையோர் சக்தியை பற்றி குறிப்பிடும்போது, திறமைமிக்க 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், நான் இந்தியாவை வலிமை மிக்கதாக மாற்றுகிறேன் என்று முழங்கினார். ஆனால் இன்று 100 இளைஞர்களில் 70 சதவீதம் பேர் கைபேசி சகிதம் சமூக வலைதளங்களில் தங்களது பொழுதுப்போக்கு வித்தையை காட்டி முடங்கி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும். பெற்றோருக்கும், இளையோருக்கும் உள்ள தலைமுறை இடைவெளி, சம காலத்திய இளையோரின் கூடாநட்பு, அச்சமில்லா உளவியல் வலிமை, பெற்றோரின் கவனமின்மை மற்றும் அவர்களுக்குள்ளான முரண்பாடுகள், குடும்ப சிதைவு போன்ற காரணிகள் இளையோரை இளங்குற்றவாளிகளாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபராகவும் மாற்றி வருகின்றது என்பது சமூகவியல் மற்றும் உளவியல் வல்லுனர்களின் கூற்றாக காணப்படுகிறது.

அதிகரித்துவரும் இளையோர் தற்கொலைகள் அவர்கள் சாதாரண வாழ்வியல் மற்றும் கல்வியியல் தோல்விகளை கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு மனோதிடம் இல்லாததையும் சமூக மற்றும் சுய சிந்தனைகளில் அவர்களது வீழ்ச்சி பயணத்தையுமே காட்டுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நிகழும் மாணவர் குழு வன்முறைகளும், இருசக்கர வாகன பந்தய போட்டிகளும், அடிக்கடி நிகழும் மது விருந்து போதை கலாசாரம் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களும் இளையோர் தற்போது புதிய வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பதே கோடிட்டு காட்டுகிறது. சாதிக்க வேண்டிய வயதில் சறுக்கி விழும் நிலையில் இன்றைய இளையோர் உள்ளனர் என்பது அனைவரும் வருந்தக்கூடிய நிகழ்வாகவே உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் என்ற 18 வயது இளைஞன் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிகவும் இளம் வயது தலைமை நிர்வாகி என்ற பட்டத்தை சுகாஸ் கோபிநாத் அவர்கள் பெற்ற போது அவருக்கு வயது 17 மட்டுமே. பாக் சந்தி கடல் பகுதியில் நீந்திக் கடந்து சாதனை படைத்த குற்றாலீஸ்வரனின் அன்றைய வயது 12 மட்டுமே. ஏழ்மை குடும்பத்தில் பிறந்து உலக தடகளத்தில் இந்தியாவின் தங்க மங்கையாக தற்போது திகழும் ஹீமா தாஸ் வயது 18 மட்டுமே. இவர்களின் சமூக பொருளாதார பின்புலங்களை சீர்தூக்கிப் பார்க்கும் போது ஏழ்மை மற்றும் சராசரி பொருளாதார நிலைகளிலேயே அவர்கள் முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இலக்கு இன்மையும், முயற்சியின்மையும் நமது இளைஞர்களை எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதனாகவே மாற்றி வருகிறது. கல்வி பின்னடைவு, சினிமா தாக்கம், தனிநபர் வழிபாடு, அரசியல் புரிதலின்மை, சாதி மற்றும் மத பற்று போன்றவற்றில் புரிதலின்மை காரணமாக மனம் போன போக்கில் அவர்கள் பிழையோர்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.

சுவாமி விவேகானந்தர், அப்துல்கலாம், சமூக போராளி அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் எல்லாம் தங்களது இளமை காலங்களில் பெற்றோரின் அறிவுரைகள், ஆசிரியர்களின் வாழ்வியல் பாடம், சுயஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நன்னடத்தை கோட்பாடுகளை பின்பற்றி நடந்ததால் தான் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற தலைவர்களாக மாறி இருக்கின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும். நேர்கொண்ட பார்வை, கொள்கை பிடிப்பு, சமூக பொறுப்புணர்வு, தீய பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல் போன்றவைகள் தங்களை வலிமையாகக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டியது இளையோர்களின் கடமையாகும். பாலையும், தண்ணீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல இளையோர்கள் தீய மற்றும் நற்செயல்களை புரிந்துகொள்ளுதல் அவர்களின் மேன்மைக்கு வழிவகுக்கும். மேலும் இந்தியாவை அடுத்த உயரிய சமூக மாற்றத்திற்கு நகர்த்திச்செல்ல உதவியாக இருக்கும். இளையோரின் நன்னெறி மாற்றங்கள், சமூக பொறுப்புணர்வு ஆகியவை உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் என்பதை உணர்ந்து செயல்படுதல் நலம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாழ்வை வளமாக்கும் வழிகள்...!

வாழ்வை வளமாக்கும் வழிகள்...!

கவிஞர் தியாரூ, தமிழ்நாடு அரசின் பாவேந்தர்

பாரதிதாசன் விருது பெற்றவர்

தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டும், தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் தாங்களே பேசிக்கொண்டும் வாழ்வைக் கழிப்பது சிலருக்குப் பிடித்தமான விஷயங்கள். அப்படி நடந்து கொள்வதையே ‘தன்னடக்கம்’ ‘தாழ்மை’ ‘பணிவு’ என்றெல்லாம் அவர்கள் தவறாகக் கருதிக் கொள்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு வேறு யாரும் தேவை இல்லை; தங்களைத் தாங்களே அவர்கள் வீழ்த்திக் கொள்வார்கள்.

தன்னடக்கம் என்பது வேறு; தாழ்வு மனப்பான்மை என்பது வேறு. தன்னடக்கம் தலைகுனியாது; தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். உண்மையை உரக்கச் சொல்லும். ஆனால் தாழ்வு மனப்பான்மை, உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கிவிடும்.

குட்டக் குட்டக் குனிந்தால், உங்கள் முதுகின்மேல் நாலுபேர் ஏறி உட்கார்ந்து கொண்டு குட்டுவார்கள். ‘ஆகா, இதுவல்லவா சுகம்’ என்று நீங்கள் குனிந்தபடியே வாழப் பழகிவிட்டால், அதன்பின் உங்கள் கூன்முதுகை நிமிர்த்த எந்த வைத்தியராலும் முடியாது.

அப்படித் தங்களைக் கெடுத்துக்கொண்டு குட்டிச்சுவராகிப் போனவர்கள் பலருண்டு. நிமிர்ந்து நடப்பதற்கே அஞ்சுவார்கள். யாராவது நம்மைப் பற்றி சொல்லித் தொலைத்துவிட்டால் வம்பாகிவிடுமே என்று பயந்து, கூனிக் குறுகி வளைந்து குழைந்து செல்வார்கள்.

‘தற்பெருமை கொள்ளாதே; அடங்கி இருக்கக் கற்றுக்கொள்’ என்று உங்களைப் பார்த்துச் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை வளரவிட மாட்டார்கள். ‘அடங்கு அடங்கு’ என்று சொல்லியே அடக்கம் செய்துவிடுவார்கள்.

எனவே சுயமாகச் சிந்தியுங்கள். சுதந்திரமாக வாழுங்கள். உங்களை முதலில் நீங்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். தன்பெருமை என்பதுதானே தற்பெருமை. ஒருவன் தன் பெருமைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வது தற்பெருமையாயின் அதில் என்ன தவறு!

உலக வரலாற்றில் புகழ்மிக்க நாயகர்களில் ஒருவர் ஜூலியஸ் சீசர். பல நாடுகளின் சட்டதிட்டங்களையும் கலைகளையும் தெரிந்துவர, அவர் கப்பல் பயணத்தை மேற்கொண்ட போது, கடல் கொள்ளையர்களிடம் அவர் சென்ற கப்பல் மாட்டிக் கொண்டது.

பயணிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்து, கொள்ளையர்கள் அந்த நாட்டிற்குத் தகவல் அனுப்பினர். ஒவ்வொருவரையும் விடுதலை செய்ய தலா 20 தங்கக் காசு கொடுக்க வேண்டும் என்று கோரினர். இதைக்கேட்ட சீசருக்குக் கடுங்கோபம்.

என்னை அவமானப்படுத்தாதீர்கள். என் மதிப்பு வெறும் 20 தங்கக்காசுகள் தானா? நீங்கள் அதிகம் கேளுங்கள். குறைந்தபட்சம் 50 தங்கக் காசுகளாவது கொடுக்கச் சொல்லுங்கள். அதுதான் எனக்கு கவுரவம் என்று கூறினார். அவரைப் பார்த்து, ‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் சொல்ல மாட்டார்கள். உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னாராம்.

அத்தகைய துணிச்சலும் தன்னம்பிக்கையும் நமக்கு வேண்டும். நம்முடைய தனித்துவத்தை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த முனையும்போதுதான், அதை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் நாம் பெற முடியும். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கை. கோபுரம் என்றால் கோபுரம்; குடிசை என்றால் குடிசை.

நன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கையை நாம் பெற்றிருக்கிறோம். அதைச் சிந்தித்தால் நம்மை நாம் அறிந்து கொள்வோம். நம்மை நாம் அறிந்து கொண்டால் நம் உள்ளாற்றலைப் புரிந்து கொள்வோம். அப்படிப் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றி நிச்சயமாக நாம் பெருமிதம் கொள்வோம். உலகில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள்? தங்கள் உள்ளாற்றலை அவர்கள் உணர்ந்தார்கள்; இந்த உலகிற்கு உணர்த்தினார்கள். தாங்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதில் பெருமிதம் கொண்டார்கள். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் தங்கள் வழியில் சென்றார்கள்; வெற்றி கண்டார்கள். அவர்களே வெளிச்சமானார்கள்.

எனவே நல்லவற்றில் தற்பெருமை கொள்ளுங்கள். அதில் தவறில்லை. இருப்பவற்றை எண்ணிப் புளகாங்கிதம் கொள்வதில் என்ன குற்றம்! அது ஆரோக்கியமானதுதான். ஒருவன் தற்சிறுமை கொள்வதுதான் பெருந்தவறு. ஏனெனில், அதுதான் அவனை அழிக்கக்கூடிய அபாயகரமான நோய்.

தன்னை எள்ளளவேனும் அறிந்து கொள்ளாமல், தன் சக்தியை உணராமல், எப்படியோ வாழ்ந்து முடிப்போம் என்று கோழைத்தனமாக உறங்கிக் கொண்டிருந்தால் ஈக்களும் எறும்புகளும் கூட உங்கள் உடம்பில் மைதானம் அமைத்து விளையாடும். அப்படித்தான் தங்களைப் பற்றிய தெளிவே இல்லாமல் பலரின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகிறது.

ராமகிருஷ்ணர் உடல்நலமின்றிப் படுத்திருந்தார். தாமாக எழுவதோ உட்காருவதோ எதுவுமே முடியாத நிலை. அவரை கவனித்துக்கொள்ள பல இளைஞர்கள் அவருடன் இருந்தனர்.

வீட்டுத் தோட்டத்தின் மூலையில் செழித்திருந்தன பேரீச்சை மரங்கள். அதன் ரசத்தைப் பருகுவதற்காக அந்த இளைஞர்கள் அம்மரத்தடிக்குச் சென்றார்கள். படுக்கையில் இருந்த ராமகிருஷ்ணர் ஜன்னல் வழியாக அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அப்படி பார்த்து கொண்டிருந்தவர் சட்டென்று எழுந்தார்; வேகமாக ஓடினார்.

கணவர் எழுந்து ஓடுவதைப் பார்த்த சாரதாமணி வியப்படைந்தார். தாமாக எழுவதற்குக்கூட முடியாத நிலையில் இருப்பவர் எப்படி ஓடிச் செல்ல முடியும்! அவரால் நம்ப முடியவில்லை.

அவருடைய அறையைப் பார்த்தார். அங்கே படுக்கை காலியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தார். ராமகிருஷ்ணர் கட்டிலில் படுத்திருந்தார். எப்படி எழுந்து ஓடினீர்கள்? என்று ஆச்சரியம் தாளாமல் அவரிடம் சாரதாமணி கேட்டார்.

‘பேரீச்சை மரத்தில் நல்லபாம்பு ஒன்று இருந்தது. இளைஞர்கள் அதைக் கவனிக்காமல் அங்கு சென்றதைப் பார்த்தேன். அந்தப் பாம்பை விரட்டி அவர்களைக் காப்பாற்றவே ஓடினேன்’ என்றார் ராமகிருஷ்ணர். தம்மை உணர்ந்து தெளிந்தவர்கள் மகான்கள். அத்தகைய மகான்களாக இல்லையென்றாலும், மனிதர்களாக நாம் வாழ வேண்டும்.

இதுவரை எப்படியோ! இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 September 2019

இதயம் காப்போம்...!

இதயம் காப்போம்...!

வி.முருகேசன், இதய மருத்துவர், துணைத்தலைவர், டெல்டா மாவட்ட கடலோர இதய மருத்துவ சங்கம்.

நா ளை (செப்டம்பர் 29-ந் தேதி ) உலக இதய தினம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் இதய நோயாளிகள் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருகிறது. உலகத்தில் ஆண்டுக்கு 17.9 மில்லியன் பேர் இதய நோயினால் மரணம் அடைகின்றனர். இது உலக மக்கள் தொகையில் இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதயத்தை பற்றியும், இதய நோய்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உலக இதயநல கழகத்தால் 2000-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி முதல் உலக இதய தினமாக அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு “என் இதயம், உங்கள் இதயம்” என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நலமான இதயத்தோடு இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த ஆண்டில் முன்வைத்துள்ளது உலக இதயநல கழகம். இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைப்படி இந்தியாவில் 2.1 மில்லியன் பேர் இதய நோய் காரணமாக மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த அவலநிலைக்கு புகைபிடிப்பது, அதிகளவில் மது அருந்துவது, அதிக கொழுப்பு, பாரம்பரிய உணவுகளை கைவிட்டு அதிக உப்பு நிறைந்த துரித உணவுகளை உண்பது, ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இளம் வயதில் சர்க்கரை நோயினால் இதயம் பாதிக்கப்படுகின்றன. மக்களிடம் இதயத்தை பற்றி விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணமாக அமைகின்றன. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இடைவிடாது இயங்கிக்கொண்டு இருப்பது இதயமே. எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக சென்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயமே உறுதுணையாக இருக்கிறது. உடலின் பல பாகங்களில் இருந்து இதயத்திற்கு வரும் அசுத்த ரத்தம் இதய இயக்கத்தால் நுரையீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இதயத்திற்கு வந்து இங்கு இருந்து உடலின் மற்ற பாகத்திற்கு செல்கின்றன.

நாம் சுத்தமான காற்றை சுவாசித்தால் தான் அதிலுள்ள பிராண வாயுவை ரத்தம் எடுத்துக்கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் மாசுபட்ட வாகனப்புகை நிறைந்த சூழ்நிலையில் சுவாசிப்பதால் உடலுக்கு தேவையான பிராணவாயு (ஆக்சிஜன்) சரிவர கிடைக்காமல் உடல் சோர்வு, நுரையீரல், இதய பாதிப்பு ஏற்படுகின்றன. இதயம் சீராக துடிப்பதற்கு அதனுடைய தனித்தன்மை வாய்ந்த தசைகளும், தசைநார்களும் உதவுகின்றன. இயல்பான நிலையில் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 76 தடவை துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின் போதும் 80 மில்லி லிட்டர் ரத்தத்தை இதயமானது தமனிகள் மூலம் வெளியேற்றுகிறது.

எந்திரத்தனமான பரபரப்பான வாழ்க்கையில், மன உளைச்சல், கோபம், எதிலும் பரபரப்பு என்ற சூழ்நிலையில் இதயம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதிக துடிப்புடன் வேலை செய்து கொண்டு இருக்கிறது. அதிக ரத்தக்கொதிப்பு, நீண்டநாள் சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை இதய பாதிப்புக்கு முக்கிய காரணமாகும். புகைப்பிடிப்பது, அதிக மது அருந்துவது, அதிக உடல் எடை, நீண்ட நாள் ரத்த சோகை இதயபாதிப்பை ஏற்படுத்தும்.

இதயம் சீராக இயங்குவதற்கு அதற்குரிய சத்துகளையும், ரத்தத்தையும் எடுத்துச்செல்வது இதய கொரோனரித் தமனிகள். இந்த ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதன் அறிகுறியாக மார்பு, கழுத்து, இடது கை வலி, மயக்கம், மூச்சு விட சிரமம், நெஞ்சில் கட்டைப்போட்டது போன்ற உணர்வு ஏற்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு வலி வெளியில் தெரியாமல் மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் தெரியும்போது ஈசிஜி எடுக்கும் போது மாரடைப்பு வந்து இருப்பது தெரியும். பல்வேறு பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மேற்கூறிய அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் முறையாக பரிசோதனைகளை செய்து கொண்டு இதய பாதிப்பை தவிர்க்கலாம். தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நடைப்பயிற்சி, நீச்சல், பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, கூடைப்பந்து பயிற்சிகள் இதயத்துக்கு வலு சேர்ப்பவை.

உணவில் அதிக கொழுப்புதரும் பொருட்களையும், அதிக உப்பையும் தவிர்க்க வேண்டும். பாஸ்ட்புட் கலாசாரத்தை அறவே தவிர்க்க வேண்டும். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். புகை பகை என்று எண்ணி புகை பிடிக்கக்கூடாது. அதிக மது இதய வீக்கத்தை ஏற்படுத்தி செயல் இழக்க செய்கின்றன. ஆகவே மது அருந்தக்கூடாது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வாக்குறுதி: “என் இதயத்திற்கு, உங்கள் இதயத்திற்கு”, நம் எல்லோர் இதயங்களுக்கும், முறையான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமை, கேழ்வரகு மற்றும் சிறு தானியங்கள், கீரை, காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ பிரியர்கள் ஆட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும். தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீனை வேக வைத்து குழம்பாக சாப்பிடலாம். ஊறுகாய், கருவாடு, சிப்ஸ் போன்ற உப்பு அதிகமான உணவுகளை குறைத்துக்கொள்வது அவசியம். தேங்காய் எண்ணெய், தயிர், வெண்ணெய் பாலாடை, தேங்காய் முந்திரி பருப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை தொடக்கூடாது. சமையலின் போது பலவித எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

தினமும் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவை இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விக்ரம்: அனுபவ பாடங்கள்

விக்ரம்: அனுபவ பாடங்கள்

விக்ரம் லேண்டர்

முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,

துணைத்தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம்.

ஜூ லை, ஆகஸ்டு மாதங்களையும் தாண்டி செப்டம்பர் மாதத்திலும் இந்திய செய்தி ஊடகங்களை சந்திரயான்-2 நிரப்பி இருந்தது. இந்தியாவின் இரண்டாவது நிலவு பயணந்தான் அது.

சந்திரயான்-2 2019 ஜூலை 22-ந் தேதி மதியம் 2.31 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கிளம்பியது. படிப்படியாக தனது பயண வழியை மாற்றியும், உயர்த்தியும் ஆகஸ்டு 20-ந் தேதி காலை 9.30-க்கு நிலவைச் சுற்றிய நீள்வட்ட பாதையை அடைந்தது. செப்டம்பர் 2-ந் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டர் விக்ரம் என்ற நிலவின் தரையைத் தொடுவதற்காய் கட்டமைக்கப்பட்ட கலனைத் தன்னிடமிருந்து பிரித்து விட்டது.

அடுத்த நாள், செப்டம்பர் 3-ந் தேதி ஆர்பிட்டரை 95-க்கு 100 கி.மீ. என்றும், விக்ரமை இரு கட்டங்களில் நிலவைச் சுற்றிய 35 கி.மீ.க்கு 100 கி.மீ. என்ற நீள்வட்ட பாதைக்கும் மாற்றினர் நம் அறிவியலாளர்கள்.

இந்த நிலவு பயணத்தின் கடைசி கட்டமாக, செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.40 மணியளவில் நிலவின் தரையிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நிலவைச் சுற்றி வரும் வண்ணம் பயணித்த விக்ரம், தன்னுடன் பிரக்யான் என்ற ஆறு சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு மெதுவாகவும், பத்திரமாகவும் நிலவின் தென் துருவத்துக்கு அருகில் தரை தொட்டு 1.55 மணி அளவில் இறங்கும் வண்ணம் தன் பயணத்தை தொடங்கும் வண்ணம் பணிக்கப்பட்டது. முன்பே விக்ரமின் கணினியின் மூளையில் ஏற்றப்பட்ட கட்டளைகளின் படி, தானியங்கி முறையில் அதன் பயணம் தொடங்கியது.

விக்ரம் நிலவைத் தொடும் அந்த தருணம் இந்தியாவின் விண்வெளி சரித்திரத்தில் தென் துருவத்திற்கு அருகே, மனிதனால் செய்யப்பட்ட கலன் ஒன்றை மெதுவாக இறக்கிய முதல் நாடாக இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற காத்துக்கொண்டிருந்தது.

அந்த இறுதிக்கட்ட டிக் டிக் 15 நிமிடங்களின் வினாடிகள் நகர நகர, எந்த தருணத்தில் எந்த வேகத்தை அடைய வேண்டும் என்று முன்னரே கணித்து குறிக்கப்பட்டிருந்த பச்சை நிற கோட்டின் மேல் விக்ரமின் பயணம் கட்டித்தழுவிய படி சென்றது.

விக்ரமின் வேகம் எதிர்பார்த்த படி குறைந்து கொண்டே வந்தது.

நடு இரவு தாண்டிய அதிகாலை என்பதையும் பொருட்படுத்தாது 130 கோடி இந்திய இதயங்களும் தங்களின் லப் டப் துடிப்புடன் அந்த நிகழ்வை உன்னிப்பாய் பார்த்துக்கொண்டு நிலவைப் பத்திரமாக தொடும் அந்த தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தன.

11 நிமிடங்கள் 38 வினாடிகள் கடந்த நிலையில், நிலவின் தரைக்கு மேல் 2.6 கி.மீ. இருக்கும் போது, விக்ரமின் பயணத்தில் மெதுவாக ஒரு தடுமாற்றம் காணத்தொடங்கியது.

விக்ரமின் வேகம் குறைவதற்கு பதில், வேகம் கூட ஆரம்பித்தது. விஞ்ஞானிகள் சுதாரிக்கும் முன், நிலவின் தரைக்கு அருகே வேகமாய் 335 மீ தூரத்தை அடைந்து, தான் பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்த சமிக்ஞைகளை நிறுத்தி நிலவின் தரை தொட்டு விழுந்தது. பல இதயங்கள் துடிக்க மறந்தன. இந்தியா ஸ்தம்பித்தது.

சந்திரயான்-2 பயணத்தின் முதல் பின்னடைவை உலகமே பார்த்தது.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 99 மீட்டர் தாண்டிய நிலையில், தவறி விழுந்த இளையனாய், விக்ரம் நிலவின் தரையில் அடுத்து 14 நாட்கள் இந்திய விண்வெளி ஆய்வகமும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகமும் பல முறை, பல பல வகைகளில் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்தும், நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 செயற்கைக்கோளின் உதவியுடனும், அமெரிக்காவின் நிலவுக் களத்தின் வழியாகவும் முயற்சித்தும் விக்ரமை உயிர்ப்பிக்க முடியவில்லை.

மெதுவாக நிலவில் இறங்க வேண்டிய விக்ரம் நிலவின் தரையில் நிலைகுலைந்து விழுந்திருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்த மக்களின் பார்வை இப்போது வேறு விதமாக திரும்பியுள்ளது.

சந்திரயான்-2வின் திட்டம் இப்போது சந்திரயான்-1 போல் ஆகிவிட்டது. இந்தியா சந்திரயான்-2 திட்டத்திற்கு இதுவரை செய்த செலவு கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்.

திட்டத்திற்காக உழைத்த விஞ்ஞானிகளின் ஊதியம், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களை உபயோகித்தது, விண்வெளி ஆய்வுக்களத்தின் கட்டுமான மற்றும் சோதனை கூடங்களில் செலவழித்த நேரங்களுக்கான பணம் போன்றவற்றை சேர்த்தால் சந்திரயான்-2க்கான மொத்த செலவு இன்னும் கூடும். மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு செலவு இதற்கு தேவையா?

இது ஒரு வெற்று பெருமைக்கா? இந்த பின்னடைவில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? என்ற கேள்வி பட்டியலும் பலரால் முன்வைக்கப்படுகிறது. அறிவியல் ஆய்வுகளை வழக்கமாக போடும் லாப நஷ்ட கணக்குகளை மனதில் கொண்டு எடை போடுவது சரியில்லை தான். இருந்தாலும் சந்திரயான்-2 திட்டத்தால் கிடைத்த பயன்களை, “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற முறையில் சிந்தித்து பார்க்க இங்கு சில விதைகளைத் தூவுகிறேன். முதலில் சந்திரயான்-2 திட்ட வரையறையில் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள்.

1. சந்திரயான்-1-ன் நிலவு பற்றிய கண்டுபிடிப்புக் களை உறுதிப்படுத்துவது.

2. நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மெதுவாகவும், பத்திரமாகவும் இறங்கி நிலவின் தரையில் ஆய்வுகளை மேற்கொள்வது.

3. இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமும், எழுச்சியையும் ஊட்டுவது.

இந்த மூன்று குறிக்கோள்களில் எந்த அளவு நிறைவேறியிருக்கிறது அல்லது நிறைவேற வாய்ப்புள்ளது என்பதைப் பார்ப்போமா?

முதலாவது குறிக்கோள், சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி ஐந்து வருடங்களுக்கு மேல் பணி புரிய வாய்ப்பிருப்பதாலும், சந்திரயான்-1ஐ விட திறன் வாய்ந்த அறிவியல் கருவிகள் இருப்பதாலும், சந்திரயான்-1க்கு பிறகு இந்தியாவில் மிகப்பல இளம் அறிவியலாளர்கள் உருவாகி இருப்பதாலும், சர்வதேச மூத்த அறிவியலாளர்கள் பலரும் கூட இப்போது நமது திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதாலும், சிறப்பாக நிறைவேற மிகுந்த வாய்ப்புள்ளது என்பதை நாம் உணர முடியும்.

மூன்றாவது குறிக்கோள் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே நிறைவேறியுள்ளது என்பதை இந்த கட்டுரையின் முகப்பில் நாம் பார்த்த இந்தியர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்த காட்சி நிறைவேறிவிட்டது. இரண்டாவது குறிக்கோளான நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மெதுவாகவும், பத்திரமாகவும் இறங்கி நிலவின் தரையில் ஆய்வுகளை மேற்கொள்வது என்பதில் முழு வெற்றி கிட்டவில்லை. காரணம், குறிப்பிட்ட இடத்தில் விக்ரமால் பத்திரமாக தரையிறங்க முடியாமல் போனதுதான்.

முன்பே பார்த்தபடி ஜூலை 22-ந் தேதி பிற்பகல் 2.43-லிருந்து செப்டம்பர் 7, அதிகாலை 1.51:36 வரை விக்ரமின் நீண்ட நெடிய பயணத்தில் எல்லாம் சரியாக நடந்திருந்தாலும், முத்தாய்ப்பான மூன்று நிமிடங்கள் விக்ரமை தடுமாறச் செய்து நிலவின் தரையில் படுக்க வைத்து பூமியுடனான தொடர்பைத் துண்டித்த போது முழுமையான வெற்றியை இந்தியா தவறவிட்டு விட்டது.

இந்த சறுக்கல் ஏன் என்பதை முழுமையாக ஆராய்ந்து இந்திய விண்வெளி ஆய்வகம் அடுத்த நிலவுப் பயணத்தில் முழு வெற்றி பெற மனமார வாழ்த்துவோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 September 2019

இந்திய தொலைக்காட்சியின் அறுபது வருடப் பயணம்

இந்திய தொலைக்காட்சியின் அறுபது வருடப் பயணம்

ஷோபனாரவி, தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்.

தொ லைக்காட்சி நம் நாட்டில் முதன்முதலில் டெல்லியில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது அறுபதாவது வருட பயணத் தில் அடியெடுத்து வைக்கிறது.அகில இந்திய வானொலி தன் பொறியியல் வல்லுனர்களையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் இதற்கென ஒதுக்கித் தந்தது. ஓர் அறை தற்காலிக ஸ்டூடியோவாயிற்று. 21 சமூகத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இப்படி ஒரு சின்ன முயற்சியாகத் தான் தொலைக்காட்சி இந்தியாவில் தொடங்கியது.

பிறகு 1965-ல் செய்தி அறிக்கையோடு கூடிய ஒரு மணி நேர ஒளிபரப்பாக மாறியது. அதுவும் டெல்லியில் மட்டும் தான். 1972-ல் மும்பைக்குத் தொலைக்காட்சி வந்தது. 1975-ல் கொல்கத்தா, சென்னை, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லக்னோ என்று பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நானும் மற்றும் பலரும் உங்களுக்கு அறிமுகமானோம். குடும்பமே தொலைக்காட்சி பெட்டிக்கெதிரே அமர்ந்து மாலை வேளைகளைக் கழித்த காலம் அது. செய்தி ஒளிபரப்பாகும் நேரத்தில் தெருவில் நடந்து போனால் செய்தி அறிவிப்பவரின் குரல் ஒவ்வொரு வீட்டைக் கடக்கும்போதும் ஓங்கியும் தாழ்ந்தும் ஒலிக்கும். எல்லா வீட்டிலும் ஒரே குரல்! சனி, ஞாயிறுகளில் மவுண்ட் ரோடு கூட வெறிச்சோடிக்கிடக்கும். அப்போது அது தான் சென்னையில் முக்கியமான சாலை. மனோகர் நாடகம் என்ன, சோ நாடகம் என்ன என்று பரபரப்பாக இருந்த சபாக்களில் கூட கூட்டம் குறையலாயிற்று.

அகில இந்திய வானொலியின் அங்கமாக இருந்த தொலைக்காட்சி 1976-ல் தனியாகப்பிரிக்கப்பட்டது. தூர்தர்ஷன் என்று பெயர் பெற்ற இது 1982-ல் தேசியத் தொலைக்காட்சியாக உருப்பெற்று வண்ண ஒளிபரப்பையும் தொடங்கியது. ஓரக்கண்ணால் மானிட்டரில் எங்களை வண்ணத்தில் பார்த்து ரசித்துக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. இன்றளவிலும் உலகத்தின் பிரதானத் தொலைக்காட்சிகளில் ஒன்றாக தூர்தர்ஷன் விளங்குவதற்குக் காரணம் அதன் வசம் இருக்கும் எண்ணிலடங்கா ஸ்டூடியோக்களும், டிரான்ஸ்மிட்டர்களும் தான். எண்பதுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியும், ராமாயணமும், மகாபாரதமும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானபோது இமயம் முதல் குமரிவரை நாடே கட்டுண்டது.

1990-களில் கேபிள் டிவி தலைதூக்கியது. பிற நாடுகளில் இருந்து சார்டிலைட் மூலம் தனியார் சேனல்கள் 1992-லிருந்து நிகழ்ச்சிகளை நம் நாட்டில் ஒளிபரப்பலாயின. தனியார் சேனல்கள் பல தோன்றின. விளம்பரங்களுக்குப் போட்டி ஏற்பட்டதால் நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகமாகத் தயாரிக்கப்பட்டன. ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் இப்போது நம் சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.

இந்தியாவில் தொலைக்காட்சி வந்து 60 ஆண்டுகளே ஆயிற்றென்றாலும் பிக்சர் டியூப் என்று சொல்கிறோமே அதன் முதல் வடிவம் உருவானது 1897-ல் தான். ஜெர்மனி விஞ்ஞானி ப்ரெளன் என்பவர் இதை வடிவமைத்தார். இதுவே மின்னணு தொலைக்காட்சிக்கு அடித்தளமாயிற்று.

தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் என்றாலும் கலையுலகில் அபூர்வமான திறன் கொண்டவர்களை இனம் காணும் பணியிலும் இப்போது அது அரும்பணி ஆற்றி வருகிறது. நல்ல கருத்துள்ள தொடர்கள் வருவது போல யுக்தியான சிந்தனைகளைத் தூண்டும் விதமாகவும், பழிவாங்கும் செயல்களை ஊக்குவிக்கும் வழியிலும் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமைக்கப்படுவது வருத்தத்திற்கு உரியது. பெண்கள் பெரும்பாலும் ஆண்களுக்குச் சமமான உரிமை உள்ளவர்களாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது நம் சமுதாயம் அந்த விதத்தில் முன்னேறவேண்டும் என்பதை உணர்த்துகிறது. தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பிருந்தே நாடகக் கலையைப் பேணி வந்திருக்கும் தமிழ் மக்கள் அந்தக் கலை மூலம் சமுதாய முன்னேற்றத்துக்கு வித்திடும் வகையில் தொலைக்காட்சித் தொடர்களை அமைக்கவேண்டும். நாட்டுப்புற மக்களின் கலை வெளிப்பாடும் தொலைக்காட்சி மூலம் மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்பது உண்மையே.

வெளியே செல்லமுடியாத முதியோர்களும், சுவீடனைச் சேர்ந்த சிறுமி ‘க்ரெடா டுன்பெர்க்’-ஐ போல் கார்பன் சுவட்டைக் குறைக்க எண்ணி வாகனங்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பவர்களுக்கும் தொலைக்காட்சி தான் வெளியுலகத் தொடர்பும் பொழுதுபோக்கும் ஆகும்.

தொலைக்காட்சி ஓர் அருமையான கல்விச் சாதனம். நன்னன் தூர்தர்ஷனில் தமிழ் வகுப்புகள் நடத்திய போது என் ஐந்து வயது மகள் ஆடாமல் அசையாமல் அமர்ந்து உன்னிப்பாக கவனிப்பாள். இப்போது யாரேனும் அப்படித் தமிழ் வகுப்புகளைத் தொலைக்காட்சியில் நடத்தினால் தமிழ் தளர்ச்சியுறாமல் வாழும். ஆனால் அப்போது தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது என்பதால் நிகழ்ச்சிகள் எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தன. இப்போது எதைப் பார்ப்பது என்று தெரியாத நிலை இருப்பதால் நல்ல நிகழ்ச்சிகள் கூட, பல சமயங்களில் வெளியே தெரிய வராமலும், அங்கீகாரம் இல்லாமலும் போய் விடுகின்றன.

எத்தகைய நிகழ்ச்சியாக இருந்தாலும் தரம் குறையாமல் பார்த்துக் கொள்வது நன்று. சமூகத்தில் ஒரு நல்ல உத்வேகத்தை, நல்ல உணர்வுகளை ஏற்படுத்தவல்ல தொலைக்காட்சியை அந்தக் காரணங்களுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தை நம் சேனல்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகிவிடக்கூடாது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளட்ட வேண்டும் என்பது சரிதான். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது அவ்வை வாக்கு. ஒரு தலைமுறைக்கு வேண்டுமானால் சேர்த்துவைக்கலாம். பின் வரும் தலைமுறைகளுக்கு இந்தக் காகிதப் பணமும் பொன்னும் பொருளும் ஏக்கர் கணக்கில் தோப்பும் துரவும் தேவைப்படாது. ஏறும் உலகவெப்பம் இந்த நாகரிகத்தையே அழிக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. இருபது வருடங்கள் முன்னோக்கிப் போய் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவரிக்கும் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவேண்டியது அவர்களுடைய கடமை என்றே நினைக்கிறேன். தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புச்சாதனம் எந்த சமூகமாற்றத்தையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. அதைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வில்லன் ஆகிறதா வெங்காயம்?

வில்லன் ஆகிறதா வெங்காயம்?

டாக்டர் சோம வள்ளியப்பன்.

த ங்கத்தின் விலை அல்ல. உணவுப்பொருட்களின் விலை உயர்வுகளே, ஆளும்கட்சிகளை தேர்தல்களில் தோற்கடித்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால், அதுதான் உண்மை.

1980-ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை தீர்மானித்ததில் வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பெரிய பங்கு உண்டு. 1998-ம் ஆண்டு டெல்லி மற்றும் ராஜஸ்தான் தேர்தல்களில் வெங்காயத்தின் விலை உயர்வு, ஆளும் கட்சியினர் தோற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வெங்காயம். உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி, தினசரி பயன்படுத்தும் இந்தப்பொருள் உபயோகத்துக்கு வந்து ஏழாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.

சமையலறைகளில் இருந்து குறிப்பாக, இந்திய அடுப்படிகளில் இருந்து வெங்காயத்தை விலக்கவே முடியாது. இத்தனைக்கும் அதில் இருப்பது, 89 சதவீதம் நீர். 9 சதவீதம் கார்போஹைடிரேட் மற்றும் வெறும் 1 சதவீதம் புரதச் சத்துதான். ஆனாலும், அதன் வாசனை, சுவை மற்றும் சில மருத்துவ குணங்களுக்காக அது காலங்காலமாக விரும்பப்படுகிறது.

அப்படிப்பட்ட வெங்காயத்தின் விலை கடந்த மே மாதத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.2 ஆயிரம் உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரமாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.75 முதல் 80 வரை விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 77-ஆக உள்ளது. இது நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்வு.

இந்த விலை உயர்வுக்கு காரணம், போதிய அளவு வெங்காயம் சந்தைகளில் கிடைக்காதது தான்.

இத்தனைக்கும் இந்தியாதான் சீனாவிற்கு அடுத்தபடி உலகில் அதிக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு. ஆண்டுக்கு சுமார் 2.36 கோடி டன்கள் வெங்காயம் உற்பத்தியாகிறது. இது நம் தேவைக்கு சற்று அதிகமான உற்பத்திதான். அதனால், ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் டன்கள் வரை வங்காளதேஷம், மலேசியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

இருந்தும் ஏன் பற்றாக்குறை? மராட்டியம், கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்தான், நாட்டில் கிடைக்கும் வெங்காயத்தில் 90 சதவீதம் விளைகிறது. அதிலும் குறிப்பாக மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே மொத்த உற்பத்தியில் சரிபாதி விளைகிறது. தமிழகத்தில் அதிகம் விளைவது, சின்ன வெங்காயம் தான்.

மராட்டியம், கர்நாடகா உள்பட சில இடங்களில் கடந்த வருட வறட்சி, இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக வந்தது மற்றும் காரிப் பருவ அறுவடையின் போது மிகப்பெரிய அளவு மழை எனும் காரணங்களால் உற்பத்தி கணிசமாக குறைந்துபோனது.

வெங்காயம் ஆண்டுக்கு மூன்று போகம். அதனால் ஆண்டு முழுவதும் ஒரே போல சீராக வெங்காயம் கிடைக்கும். அதில் ஈரத்தன்மை நிற்க வேண்டும். அழுகிவிடக் கூடாது. அதனால், கேண்டா சவுள் எனும் ஈரப்பதம் மற்றும் தூசு இல்லாத இடத்தில் தான் சேமித்து வைக்க முடியும். இல்லாவிட்டால் முளைவிட்டுவிடும்.

அப்படிப்பட்ட பெரும்பாலான வெங்காய சேமிப்புக் கிடங்குகள் மராட்டியத்தில்தான் இருக்கின்றன. அங்கே கொட்டித் தீர்த்த மழையால் கையிருப்புகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பற்றாக் குறைக்கான மற்றொரு காரணம்.

கடுமையாக உயரும் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதைக் குறைக்க, டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 850 அமெரிக்க டாலர் விலை இருந்தால் தான் ஏற்றுமதி செய்யலாம் என்ற கட்டுப்பாடு; நடப்பில் இருந்த ஏற்றுமதிக்கான 10 சதவீத ஊக்கத்தொகை நிறுத்தம்; எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர்; பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தைகளில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு; வியாபாரிகள் அதிகபட்சம் எவ்வளவு ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் யோசனை போன்ற சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் மட்டுமே தொடர்ந்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போதுமா என்று தெரியவில்லை.

2010 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இப்படி வெங்காய விலை ஏற்றம் வந்திருக்கிறது. அப்போதும் கிலோ ரூ.80-ஐ தொட்டிருக் கிறது. இரண்டு முறை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்து சமாளித்திருக்கிறார்கள். இப்போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள எதிர்ப்பு கிளம்பியதால் அதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விளைந்தது தான் சந்தைக்கு வந்துகொண்டிருக்கிறது. அது போதவில்லை. அடுத்த காரிப் பருவ அறுவடை சந்தைக்கு வர அக்டோபர் இறுதியாகிவிடும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி சரக்கு வந்து சேர, நவம்பர் ஆகிவிடும். அதுவும் 2 ஆயிரம் டன்கள்தான். ஆக, இப்போதைக்கு பற்றாக்குறை தொடரும் நிலை.

இதுதவிர, எதிர்வரும் பண்டிகைகள் காலத்தில் உணவுப்பொருட்களின் நுகர்வுடன் வெங்காயத்தின் தேவையும் அதிகமாகலாம். நிலைமை காரணமாக நுகர்வோரும், வியாபாரிகளும் கூடுதலாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வார்கள். அதனால் பற்றாக்குறையும், விலையும் மேலும் அதிகரிக்கும் ஆபத்திருக்கிறது.

விலை உயர்வு குறித்து பேசிய, உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘இது தற்காலிகம் தான். அரசிடம் போதிய அளவு ஸ்டாக் இருக்கிறது. அரசு 56 ஆயிரம் டன் கொள்முதல் செய்து வைத்திருக்கிறோம். பிரச்சினை இல்லை என்கிறார். இப்படிப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க, மத்திய அரசு, மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளைப் போல, பிற மாநில அரசுகளும் ‘பிரைஸ் ஸ்டபிளைசேஷன் பண்ட்’ என்று ஒரு நிதி உருவாக்கி வைத்துக்கொண்டு, குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கவேண்டும்’ என்கிறார்.

டெல்லியில் நேபெட், என்.சி.சி.எப். மற்றும் மதர் டைரி போன்ற அரசின் கடைகள் மூலம், அரசு அதன் கிடங்குகளில் இருந்து கிலோ ரூ.23 /24 விலைகளில் விற்பனை செய்கிறது. எல்லா விலை ஏற்றங்களிலும் இரு சாரார் தாக்கம் பெறுவர். ஒன்று உற்பத்தியாளர், இரண்டாவது வாங்குபவர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு டிசம்பர் 2018-ல் இதே வெங்காயத்தின் மொத்த விலை கிலோ, வெறும் ரூ.1 மட்டுமே. அப்போது வெங்காயம் உற்பத்தி செய்தவர்கள் நஷ்டத்துக்கு உள்ளானார்கள். அதனால், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு 10 சதவீத ஊக்கத்தொகையை அறிவித்தது. அதைத்தான் இப்போது ஜூன் மாதத்துக்கு பின் நிறுத்தியிருக்கிறது.

உற்பத்தி குறைந்திருக்கும் காலத்தில் விலை உயர்வுதானே விளைவித்தவருக்கு கிடைக்கும் இழப்பீடு. இப்படி ஏற்றுமதியை தடை செய்வது மற்றும், இறக்குமதி செய்து விலையைக் குறைப்பது ஆகியவற்றால் எங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

இன்னும் ஒரு மாதகாலத்தில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெங்காய விலை பெரிய பிரச்சினையாக உருவாகாமல் போகலாம். ஆனால், அரியானாவிலும் மராட்டியத்திலும் நடக்கவிருக்கும் சட்டசபை பொதுத்தேர்தலை அப்படி சுலபமாக புறந்தள்ளிவிட முடியாது. காரணம் அங்கு உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள், நுகர்வோரும் இருக்கி றார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 22 September 2019

உலக அமைதிக்கு உன்னத வழி

உலக அமைதிக்கு உன்னத வழி

மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், இளைய சன்னிதானம், தருமை ஆதீனம்.

இ ன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அமைதி தினம்.

ஆசையின் காரணமாக தன்னை வருத்திக்கொண்டு மனிதர்கள் அலைகிறார்கள். எது கிட்ட வேண்டுமென தன்னை வருத்திக்கொள்கிறார்களோ, அது கிட்டியவுடன் தன் வருத்தத்தை போக்க ஈட்டியதையே செலவு செய்கிறார்கள். இதற்கு காரணம் மன அமைதி இல்லாமை. மன அமைதி எப்போது கிட்டும் என்றால் அது தவத்தினால் மட்டுமே கிட்டும். அத்தவம் நிறைந்த பூமி நமது பாரத பூமி “மோனத்திலே அன்னதானத்திலே சிறந்தநாடு” என பாரதி காட்டினார். தருமபுரத்தில் புலியும், பசுவும் ஒன்றாக நின்று நீர் அருந்துமாம். சிராப்பள்ளியில் பசுவும், புலியும் ஒன்றாக விளையாடுமாம். காரணம், அவ்வூர்களில் மன அமைதியுடன் தவம் செய்வோர் நிறைந்திருந்தனர். “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” என்றார் வள்ளுவர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அமைதிக்கு வித்தூன்றினான் கணியன் பூங்குன்றன் எனும் தமிழ் புலவன். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று உயிர் நேசிப்பினால் மலரும் உன்னத உலகுக்கு வழி காட்டினார் தாயுமானவர்.

அமைதி என்பது தோன்ற வேண்டுமெனில் போர் பகைமை, வன்முறை, ஆதிக்கம் பேராசை முதலியன விலக வேண்டும். மேலும் பாதுகாப்பின்மை, சமூக நீதியின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியன போட்டியையும், பொறாமையையும் ஏற்படுத்துகின்றன. மகாத்மா காந்தி “ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் சமூகநீதி இல்லாமல் இருக்கும் வரை அங்கே அமைதி இருப்பதாக கூற முடியாது” என்கிறார். எனவேதான் அவர் சமதர்மத்தையும், அகிம்சையையும், சத்தியத்தையும் போதித்தார்.

உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன. தனிமனிதன் தனக்குள்ளேயே சில மோதல்களை உணருகிறான். அது வெளியிலும் நீள்கிறது. குடும்பத்தோடு பக்கத்து வீட்டோடு நிகழும் மோதல்களே சமூகங்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் மதங்களுக்கு நடுவிலும் நிகழ்கின்றன. உலக மயமாக்கல், நவீனமயமாக்கல், கைக்குள் உலகம் என்று பல அறிவியல் கொள்கைகள் மனிதர்களை இணைத்திருந்தாலும் இதய அளவில் அவர்கள் தனித்தனியே வாழ்வதை அறிய முடிகிறது. இதற்கு காரணம் மனம் விசாலப்படாமை எனலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பர்.

தனிமனித அமைதி ஏற்பட்டாலே சமூக அமைதியும், உலக அமைதியும் எளிதாகும். ஆயிரம் துன்பத்திற்கு நடுவே இறைவனை மனதார நினைத்து ‘நிச்சயம் ஒருநாள் விடியும்’ என்று விடா முயற்சியுடன் நாள்தோறும் உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் எவர் தந்தாலும் எனக்கு நேரும் மான அவமானங்களைவிட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என குறிக்கோளோடு வாழ்பவர்களின் மனதிலே மலர்வதுதான் அமைதி.

உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமும், சகோதரத்துவமும் பொதுமையும் ஆகும். 20-ம் நூற்றாண்டில் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும், சொத்துகளையும் பழி கொண்டுள்ளன. 2-ம் உலக யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945-ல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களை தடுக்க உயரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் போரும், பயங்கரவாதமும், வன்முறையும் உலக மக்களை அச்சுறுத்தத்தான் செய்கிறது.

யுனெஸ்கோவில் முகவுரை வாசகமானது “மனித உள்ளங்களில்தான் போர் தோன்றுவதானால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெற வேண்டும்” என்கிறது. உலக நாடுகள் குடிமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து ராணுவ பலத்தை பெருக்குகின்றன. இதனால் சர்வதேச அச்சம் பெருகி வருகிறது. உலக அமைதி என்பது ‘மாறுபாடுகளின் சேர்க்கை, கலாசாரங்களின் இனக்கலப்பு அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக பண்பாட்டு அரசியல் சமூக பொருளாதார சூழல்களில் ஆழ வேரூன்றிய ஒன்றாகும். இந்திய திருநாடு இக்கொள்கையில்தான் நின்று அமைதியை நிலைநாட்டி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை இம்மந்திரச் சொல்லே இந்திய ஒற்றுமையின் பலம். 1956-ம் ஆண்டு ஐ.நா. சபையில் ஆயுத குறைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியாவாகும்.

‘எந்த நாடும் மற்ற நாடுகளை தாக்கக்கூடாது. பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிற நாடுகளுடன் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடாக திகழ வேண்டும். பிற நாடுகளின் இறையாண்மையைப் போற்ற வேண்டும். சகோதரத்துவ முறையில் இணங்கி இருக்க வேண்டும் என்னும் கொள்கையை கடைபிடித்து வருவதால் இந்தியா அமைதியின் தேசமாக நட்பின் நல்லுறவையும் பெற்று வருகிறது’. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ‘உலகில் குடியரசு ஆட்சி முறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி’ என்கிறார். இந்தியா இந்த நடைமுறையைத் தான் பின்பற்றி வருகிறது. பன்னாட்டு அமைதியை வளர்த்திடவும் ஒருங்கிணைப்பு செய்திடவும் 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தொடங்க பெற்றது. இது செப்டம்பர் 21-ம் நாளை உலக அமைதி தின நாளாக கொண்டாடி வருகிறது.

இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி வணிகம் தழைத்து தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழில் நுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலக மயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இது உலக அமைதிக்கு வழி என்னும் கருத்து பின் வருமாறு சொல்லப்பட்டால் அமைதியை வளர்க்கலாம்.

கல்வி வழியாக போதித்தல், அதிகாரம் பரவலாக்கல் அகிம்சை நெறியை பின்பற்றல் ஊடகங்கள் வழி ஒற்றுமையை உணர வைத்தல் அரசியல் உறவுகளைப் பேணுதல், பொருளாதாரம் அறம் பேணல், சமய இனநாடு வேறுபாடுகளை களைதல், நடுநிலையோடு நடத்தல், ஆதிக்கம் செலுத்தாமை, அன்பைப் போதித்தல், சகோதரத்துவம் பேணுதல், தனிமனித அறம் போற்றல், எதிர்மறை உணர்வுகளை நீக்கல், நல்லுறவு ஒத்துழைப்பு, ஒற்றுமை மன்னித்தல், மனித நேயம் பொறுப்புணர்வு இவை அமைதியை வளர்க்கும். சைவ சமயத்தில் அமைதிக்கான வழியை பல அருளாளர்களும் கவிஞர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ அன்பென்று கொட்டு முரசே - அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு’ எனும் தொடர்கள் அமைதிக்கான அடிப்படை எனலாம்.

புரட்சி கவிஞர் பாரதிதாசன், “அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அனைத்துகொள் உன்னை சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு” என்று அறிவுரை கூறுகிறார். இக்கருத்துகள் உலக உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாக அனைவரும் இந்த உலக அமைதி நாளில் உறுதி கொள்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...!

‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...!

ஆ.ஆறுமுகநயினார்,

முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர்.

த ற்போது நாட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் “பொருளாதார மந்த நிலை”. இதனால் இந்தியாவே அதல பாதாளத்துக்குள் விழுந்து விட்டது போல ஒரு பிரிவு மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. இதற்கு மாறாக மற்றொரு தரப்பினர் இதனால் நாட்டுக்கு எந்த கெடுதியும் இல்லை. இது காலப்போக்கில் இந்திய பொருளாதாரத்துக்கு நன்மையே தரும் என்றும் வாதிடுகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டையும், பதிவு துறையின் வருமானத்தையும் எவ்வாறெல்லாம் பாதித்தது? அது சீராக வழியுண்டா? என ஆராய்வோம்.

இந்த மந்தநிலை உலகளாவிய ஒரு அதீத சூழ்நிலை. சீனாவிலும் வாகனங்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதற்கு ஐரோப்பாவில் ‘பிரக்சிட்’ எனப்படும் பொருளாதார அழுத்தமும், சீனா, அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போரும், ஈரான், சவூதி அரேபியா பனிப்போரும், இந்தியா, பாகிஸ்தான் காஷ்மீர் மோதலும் போன்ற பிரச்சினைகள் உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு பெரிய காரணம் என்று கூறலாம். எலெக்ட்ரிக் கார் அறிமுகம் பற்றிய ஆர்வமும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் கூட ஒரு காரணம்.

ரியல் எஸ்டேட் மற்றும் பதிவுத்துறைக்கு வருவோம். பதிவுத்துறையில் கடந்த நிதி ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இதன் அடிப்படையில் பார்த்தால் 25 சதவீதம் வரை குறைவாகவே வருவாயும் ஆவணங்களின் எண்ணிக்கையும் எட்டப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சொல்லப் போனால் கடந்த நிதியாண்டு வருவாயை இவ்வாண்டு ஈட்டினாலே அது பெரிய சாதனை என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

இதற்கு காரணங்கள் வலுவானவை. முதலாவது காரணம் அரசின் வரி வசூல் கிடுக்குப்பிடி. முன்பெல்லாம் கருப்புப் பணம் ரியல் எஸ்டேட்டில் தாராளமாக முதலீடு செய்யப்பட்டது. இதனை சல்லடை போட்டு பார்க்க பதிவுத்துறையில் ‘பில்ட்டர்’ இல்லை. ஆனால் ஆன்லைன் பதிவுமுறை அமலுக்கு வந்த பின் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கினால் ‘பான் நம்பர்’ கொடுத்தால் மட்டுமே கணினி திறந்து பதிவுக்கு பச்சைக் கொடி காட்டும். இதனால் அளவுக்கு மேல் முதலீடு செய்பவர்களின் குடுமி வருமானவரித்துறை கையில் சிக்கி விடும். மேலும் தற்போது வருமான வரித்துறையின் நோட்டீஸ் அனுப்பும் முறை தானியங்கி முறையாக ஆக்கப்பட்டு விட்டதால், ஆள் பார்த்து நோட்டீஸ் அனுப்பும் காலமெல்லாம் மலையேறி விட்டது. இதனால் கணக்கில் வராத பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கிட்டத்தட்ட நின்று விட்டது என்றே கூறலாம். ஐம்பது கோடி நூறு கோடி என்று பதிவாகும் பெரிய ஆவணங்களும் பெரிய ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டுகளும் மாயமாகி விட்டன. ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய முதலீட்டாளர்களையும் காணவில்லை. இது ஒரு முக்கிய காரணம்.

அடுத்ததாக பதிவுத்துறை பெரிதும் நம்பி இருப்பது ஐ.டி. துறையில் சேருபவர்களின் முதல் பெரிய முதலீடான அடுக்குமாடி, வீடு வாங்கும் முதலீடுதான். இந்த முதலீடுகள் 100 சதவீதம் வங்கிக் கடன்களின் மேல்தான் செய்யப்பட்டன. ஆனால் மோட்டார் வாகனத்துறை, ஐ.டி. துறையில் ஆட்குறைப்பு, லே ஆப் போன்ற பிரச்சினைகளின் எதிரொலியாக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த முடியாமலும், கடன் வாங்கி வீடு வாங்கினால் நமக்கு வேலை நிலைக்குமா? மாத தவணையை ஒழுங்காக செலுத்த முடியுமா? வங்கி நமது விட்டை ஏலம் விட்டு விடுமா? என்ற பேரச்சம் காரணமாக கடன் வாங்கி வீடு வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். வீட்டுக்கடன் வட்டி கந்து வட்டிக்கு அடுத்தபடியாக உள்ளதும் ஒரு காரணம். அதாவது நீங்கள் கட்டும் தவணையில் முதலில் பல ஆண்டுகள் முக்கால்வாசியை வட்டிக்கு கழித்துக் கொள்வார்கள். அசல் அப்படியே இருக்கும் இதனால் வட்டி கட்ட முடியாமல் தவணை தவறி வாங்கிய வீட்டை இழந்து நிற்பவர்கள் லட்சக்கணக்கானவர்கள்.

முன்பு அப்ரூவல் இல்லாத மனைப்பிரிவு மனைகளை விற்க “தடை இருந்திச்சு ஆனால் இல்லை” என்ற நிலைதான் நிலவியது. இதனால் அங்கீகாரமற்ற மனைகள் மிகவும் குறைவான விலைக்கு சந்தைப்படுத்தப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறையும் பதிவுத்துறையும் சக்கைப்போடு போட்டன. ஆனால் உயர்நீதிமன்றம் தலையிட்டு பலசட்டம் திருத்தப்பட்டு அங்கீகாரம் பெற்ற மனைகளைத் தான் விற்க முடியும் என்ற நிலை உருவானது. இதில் அங்கீகாரம் பெற அங்கே, இங்கே கவனிப்பது என ஏகப்பட்ட செலவுகள் வாங்குபவர்கள் தலையிலேயே விழுவதால் அங்கீகாரம் பெற்ற மனைகளின் விலை இரட்டிப்பானது. இதனால் இதுவரை இவ்வகை மனைகளில் முதலீடு செய்தவர்கள் மக்கள் பின்வாங்கி விட்டதால் இவ்வகை வியாபாரமும் ஆவணப் பதிவுகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இப்போது ரியல் எஸ்டேட் துறை சரிவை தூக்கி நிறுத்த என்ன உபாயங்கள் என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலங்களின் அரசாங்க மதிப்பை மூன்றில் ஒரு பங்கு குறைத்தது. இதன் பயனாக பதிவாகும் ஆவணங்களும் வருமானமும் 4 மடங்கு உயர்த்தியது. இதனால் 8 சதவீதமாக இருந்த மொத்த பதிவுச் செலவு 11 சதவீதம் ஆக உயர்ந்தது. எனவே அரசு மீண்டும் மொத்த பதிவு செலவை 8 சதவீதமாக குறைத்தால் பொதுமக்களுக்கு வரவேற்கத்தக்க சலுகையாக இருக்கும்.

மத்தளத்தைப் போல ரியல் எஸ்டேட் துறைக்கு இரண்டு பக்கமும் வரி இடி! முதலில் கட்டப்படும் கட்டிடம் பிளாட் வாங்கினால் கட்டிடத்தின் மதிப்புக்கு முதலில் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும். அடுத்ததாக இதே கட்டிடம், பிளாட் அடிமனையோடு பதிவுக்கு வரும்போது மீண்டும் முத்திரை தீர்வை பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த இரட்டை வரிவிதிப்பு முறை ரியல் எஸ்டேட் மற்றும் பதிவுத்துறையை கடுமையாக பாதிக்கிறது. எனவே முத்திரை வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் அல்லது ஜி.எஸ்.டி-யை ரத்து செய்ய வேண்டும். இது மிகமிக அவசியமான நடவடிக்கையாகும்.

அடுத்ததாக வங்கிகள் வீட்டுக்கடன் என்ற பெயரில் பொதுமக்கள் அடிவயிற்றில் அடிப்பதை நிறுத்த வேண்டும். மாதத்தவணை செலுத்தும்போது அசலும் வட்டியும் சமமாக குறைத்துக் கொண்டே வரப்பட வேண்டும். கடன் வாங்கியவன் வீட்டை எப்போது ஜப்தி செய்யலாம் என்று பழைய கால பண்ணையார் மனப்பாங்கிலேயே இன்னமும் இருப்பதை வங்கிகளின் நிர்வாகங்கள் நிறுத்த வேண்டும். இறுதியாக ஒரு கோரிக்கை; சொத்து விலையெல்லாம் கன்னாபின்னா என்று எகிறி விட்ட இந்த சூழ்நிலையில் ரூ.5 லட்சம், 10 லட்சம் என்பதெல்லாம் சாதாரணம். இதற்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பி பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? எனவே சுறாக்களையும், திமிங்கலங்களையும் தப்ப விட்டு விட்டு சின்ன மீன்களை சித்ரவதை செய்யும் கொள்கையை கைவிட வேண்டும்.

நிதித்துறை செயல்பாடுகள் ஒட்டுமொத்த பொதுமக்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல் மிரட்டல்போல உள்ளது. வருமான வரி நோட்டீசுக்கு அடிப்படை வரம்பாக ரூ.25 லட்சம் நிர்ணயித்தால் கீழ்மட்ட, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஏற்படும் மன உளைச்சலை பெருமளவு தடுக்கலாம். நெருக்கடியை குறைக்கலாம். இதனால் அரசுக்கும் தலைவலி பெரிதளவு நீங்கும். ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்கு மிகப்பெரிய மருந்தாக நிவாரணியாக இது அமையும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின்சார உலகில் புதுமை படைத்தவர்

மின்சார உலகில் புதுமை படைத்தவர்

மைக்கேல் பாரடே

கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர்.

இ ன்று (செப்டம்பர் 22-ந் தேதி) விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்த நாள்.

மனிதன் இவ்வுலகில் ஏற்படுத்திய எத்தனையோ அறிவியல் புரட்சிகளில் தலையானது, மின்சாரத்தை கண்டுபிடித்தது. இன்றைக்கு உலகம் இயங்குவதற்கு உயிர்நாடியாக மின்சாரம் அமைந்துள்ளது. மின்சாரம் குறித்து மனிதன் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தாலும் அதனை கண்டுபிடித்த பெருமைக்கு பல அறிஞர்கள் உரியவர்கள். ஆனாலும், அதை உருவாக்குவதற்கான அடிப்படையை கண்டுபிடித்த பெருமை மைக்கேல் பாரடேவையே சேரும்.

இவர் 1791-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஜேம்ஸ் பாரடேக்கு மகனாக பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பாரடே 13 வயதாகியும் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பினை பெறவில்லை. வறுமை சூழலை விரட்ட புத்தகக்கடையில் புத்தகங்களை வினியோகிக்கும் வேலை பார்த்தார். இவருடைய கடின உழைப்பாலும், ஈடுபாட்டாலும் விரைவிலேயே புத்தகங்கள் கட்டும் (பைண்டிங்) தொழிலுக்கு முன்னேறினார்.

பள்ளிக்கூடம் செல்ல முடியாத பாரடே, சற்றும் மனம் தளராது, புத்தகங்களை பைண்டிங் செய்யும்போது, புத்தகங்களை தேடி படித்தார். தன் அறிவை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக, வேதியியல் பாடத்தில் தீராத பற்று கொண்டிருந்தார். அப்போதிருந்த தலைசிறந்த வேதியல் விஞ்ஞானி ஹம்பி டேவி என்கிற அறிவியல் அறிஞர் உரைநிகழ்த்தும் போது அதைக் கேட்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். டேவியின் பேச்சிலிருந்து குறிப்புகள் எடுத்து பின்னர் அதை ஒரு புத்தகமாக கட்டமைத்து கொடுத்தபோது அவர் பாரடேவின் ஆர்வத்தைக் கண்டு தனக்கு உதவியாளராக வைத்துக் கொண்டார். தொடர்ந்து அறிவியல் பாடங்களை படிப்பதன் வாயிலாகவும் அறிவியல் அறிஞர்கள் தொடர்புகளாலும் தன்னுடைய அறிவியலறிவை வளர்த்துக்கொண்டார்.

இரவு நேரங்களில் சைக்கிள்களில் செல்லும்போது டைனமோ விளக்கு பிரகாசமாக எரிவதை பார்த்திருக்கிறோம். அதைப்போன்று மோட்டார் சைக்கிள், கார் இவைகளில் முகப்பு விளக்குகள் எரிவதை பார்த்திருக்கிறோம். இதற்கான மின்சாரம், வண்டி ஓடுகின்ற போது அதன் சுழற்சியில் இருந்து பெறப்படுகிறது என்பதை அறியும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்குள் புதைந்து கிடக்கும் அறிவியல்தான் இன்றைக்கு உலகையே உலுக்கி கொண்டுள்ளது.

இரு காந்த துண்டுகளை எதிர் எதிர் துருவங்களாக ஒன்றுக்கு அருகில் இன்னொன்றை வைக்கின்றபோது ஈர்ப்பு சக்தியின் காரணமாக ஒட்டிக்கொள்ளும். இவ்விரு காந்தங்களையும் காற்றுப் புக முடியாத ஓர் உருளைக்குள் இருமுனைகளிலும் அசையாதவாறு ஆணி வைத்து பொருத்திக் கொள்வோம். இவைகளுக்கு இடையே காந்தபுலம் உள்ளது. இவைகளுக்கு நடுவே ஒரு செம்பு கம்பியை நீள் சதுரமாகவோ அல்லது நீள் வட்டமாகவோ வைத்துச் சுற்றும் போது காந்த புலத்தை வெட்டுகிறது. இதன் காரணமாக மின்சாரம் உருவாகிறது. அதாவது காந்த சக்தியில் இருந்து மின்சக்தி கிடைக்கிறது. அதனை கம்பிகளின் வழியே கடத்தி விளக்கு எரிப்பதற்கும், மின்விசிறி சுழல்வதற்கும் என எண்ணற்ற வகைகளில் பயன்படுத்திக்கொள்கிறோம். சைக்கிள் டைனமோ மற்றும் பிற வாகனங்களில் பயன்படுத்தும் டைனமோக்களில் இப்படிதான் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இம்மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பினை உலகிற்கு பறைசாற்றியவர் மைக்கேல்பாரடே.

காந்த புலங்களுக்கு இடையே உருளையை சுற்ற எத்தகைய சக்தியினை பயன்படுத்துவது என்பதுதான் இன்றைய அறிவியல் உலகில் முதன்மையான கேள்வி. அது மேலிருந்து கொட்டும் நீராக இருக்கலாம், நிலக்கரியை எரித்து அதன் மூலம் வருகின்ற நீராவியைக் கொண்டு சுற்றுவதாக இருக்கலாம், அணு உலைகளில் வெப்பத்தை உருவாக்கி அதன் மூலம் வருகின்ற நீராவியாக இருக்கலாம், சூரியஒளி, காற்று அல்லது கடல் அலைகளின் இயக்கமாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும், பாரடேவின் கண்டுபிடிப்பே ஆதாரமாக விளங்குகிறது.

இவருடைய பல படைப்புகள் வேதியியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அவற்றில், முக்கியமானது மின்னாற்பகுப்பு விதிகள். மின்னாற்பகுப்பு என்பது மின்சக்தியை பயன்படுத்தி வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துதல். உதாரணமாக மின்னாற்பகுப்பின் மூலமாக தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களாக பிரிக்கலாம். இவருடைய கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

மற்ற அறிவியல் அறிஞர்களை ஒப்பிடும்போது பாரடே தனது கண்டுபிடிப்புகளை எளிமையாக அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் விளக்கினார். அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு சென்று அறிவியல் உரை நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

உலகிலுள்ள முன்னணி அறிவியல் கழகங்களும், பல்கலைக்கழகங்களும் பாரடேக்கு பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் அளித்தன. இருந்தபோதிலும் அதிலெல்லாம் அவருக்கு பெரிய அளவில் நாட்டம் இருந்ததில்லை. அதைப்போல தனது படைப்புகள் மனித குலத்திற்கு ஆக்கப்பூர்வமான வழிகளில் மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் 1853-ல் ரஷியாவுடன் நடைபெற்ற கிரிமியன் யுத்தத்தின் போது ரசாயன ஆயுதங்கள் செய்துதர பணித்தபோது மறுத்துவிட்டார்.

பாரடே 1867-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி காலமானார்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம்

ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம்

டாக்டர் ஹர்சவர்தன், மத்தியமந்திரி,

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை.

உலக மக்கள் தொகையில் 2-வது இடம் வகிக்கும் நம் நாட்டில் நம் மக்கள்தான் நமக்கு மிகப் பெரிய பலம். நமது மக்களின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்று அரசு உறுதியாக நம்புகிறது. இதன் காரணமாக, சுகாதாரத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

சுகாதாரத்துக்காக ஆண்டு தோறும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் நிலை ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நோய் காரணமாக ஏற்படும் மூன்று வகையான சுமைகள், நமக்கு மிகப்பெரும் சவாலாக அமைகிறது. முதலாவதாக, மகப்பேறு கால உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. சிசு மரண விகிதம், தொற்றும் வகையிலான நோய்கள் நீடித்திருப்பதும் இதில் அடங்கும். இரண்டாவதாக, புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் பதற்றம் போன்ற தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதைக் கூறலாம். மூன்றாவதாக, டெங்கு, மலேரியா, காசநோய், நிபா, மஞ்சள் காமாலை, தீவிர மூளையழற்சி நோய் போன்ற கிருமிகளால் பரவும் நோய்களின் சுமை அமைகிறது.

நாட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. இதற்காக இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சரியாக ஓராண்டுக்கு முன்பு, ஆயுஷ்மான் பாரத் (ஆரோக்கிய இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 55 கோடி ஏழை எளிய மக்களுக்காக இந்த மாபெரும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த சுகாதார வசதிகள் என்ற இலக்கை அடையும் வகையில், கொண்டு வரப்பட்டது தான், ஆரோக்கிய பாரத சுகாதார பாதுகாப்பு இயக்கம்.

இதில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. முதலாவதாக 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் நல மையங்களை தொடங்கி அதை செயல்படுத்துவது ,,இதன் மூலம், ஒருங்கிணைந்த ஆரம்ப நிலை சுகாதார வசதிகளை மக்கள் உறுதியாக பெறமுடியும். ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் அளவுக்கு சுகாதார வசதிகளை பெறலாம். இதில், தீவிரமான நோய்களுக்காக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகளை பெறமுடியும். ஏழை மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் தான் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்ற சுகாதார காப்பீட்டுத் திட்டம். நாட்டில் உள்ள கடைசி மனிதனுக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்ற பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் கனவை நிறைவேற்றுவதற்கான அழைப்புக் குரலே ஆரோக்கிய இந்தியா திட்டம்.

ஆரோக்கிய இந்தியா என்பது மாற்றத்துக்கான நடவடிக்கை. இது அனைவருக்கும், அனைத்து வயதினருக்கும் உயர்ந்தபட்ச ஆரோக்கியத்தை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தேசிய சுகாதார கொள்கை 2017-ன் இலக்கை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக உள்ளது. ஆரோக்கிய இந்தியா, குறிப்பாக பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்பது, அரசு மருத்துவமனைகள் மற்றும் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின்மூலம், சுகாதார சேவைகளை குறைந்தகட்டணத்தில், கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கு இது முக்கியமானதாக திகழும். ஒருங்கிணைந்த சுகாதார வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது.

பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், மிகவும் சிறப்பான தொடக்கம். இந்தத் திட்டம், தற்போது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த கூட்டாட்சி கொள்கையை அதிக அளவில் பின்பற்ற வேண்டும் என்ற எங்களது கொள்கையை வெளிப்படுத்துகிறது.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில், மூன்றாம் நிலை சிகிச்சைக்காக இணையும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. அளவு மற்றும் தொகை அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தின் அற்புதமான அம்சமாக, பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்தும் எந்த மாநிலத்தையும் சேர்ந்த தகுதிவாய்ந்த நோயாளி, இந்தியாவின் எந்தப் பகுதியிலும், இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள எந்த மருத்துவமனையிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும். தங்களது மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு வெளியே சுமார் 40 ஆயிரம் பேர் இதுபோன்ற சிகிச்சையைப் பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரும் சுகாதார காப்பீடு உறுதியளிப்புத் திட்டமாக படிப்படியாக மாறிவருவதால், ஆரோக்கிய இந்தியா திட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச சமூகத்திடம் பெருமளவில் ஆதரவையும், பாராட்டையும் பெற்றுள்ளது. நமது நாட்டில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக, மருத்துவத் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் முதல்நிலை சுகாதாரப் பணியாளர்களாக வருவதற்கு அதிக அளவிலான மக்கள் முன்வரும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். மருத்துவக் கல்வித் துறையில் மைல்கல்லாக தேசிய மருத்துவ ஆணைய மசோதா திகழ்கிறது.

இது மாணவர்களின் சுமையைக் குறைக்கிறது. மருத்துவக் கல்வியின் தரம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்துகிறது. அரசு துறையில் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 82 மருத்துவமனைகளை அமைப்பதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இது மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும், நாட்டில் மருத்துவக் கல்விக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். அதோடு, மருத்துவக் கல்விக்கான செலவைக் குறைக்கும். தரமான கல்வியை உறுதிப்படுத்துவதோடு, தரமான மருத்துவ வசதிகளை அதிக அளவிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வழிவகை செய்யும்.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், டாக்டர்களும், பொதுமக்களும் இணைந்து, இந்த சுகாதார இயக்கத்துக்கு ஆதரவு தர வேண்டும். நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக என்னை நானே மறு அர்ப்பணிப்பு செய்கிறேன். நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதும், ஒவ்வொரு இந்தியருக்கும் சர்வதேச தரத்தில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் எனது வாழ்க்கையின் லட்சியமாக மாறியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சந்திரயான் பயணத்தால் சாமானியனுக்கு என்ன பலன்?

சந்திரயான் உள்ளிட்ட விண்வெளி திட்டங் களால் சாமானியனுக்கு கிடைக்கும் பலன் கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் வெற்றிகர மாக இயங்கி வரும் நிலையில், லேண்ட ரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதை மீட்டெடுக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற் சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் ரூ.978 கோடி செலவழித்து விண்கலங்களை அனுப்புவதைவிட பிற தேவைகளுக்கு அந்த நிதியை செலவிட லாம். கிரகங்களை ஆய்வு செய்வதன் மூலம் சமூக பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பன போன்ற கருத் துகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் சந்திரயான் உள்ளிட்ட விண்வெளி திட்டங் களால் சாமானியனுக்கு கிடைக்கும் பலன் கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பிரம்மோஸ் விண்வௌி மைய நிறுவனர் ஏ.சிவதாணுப்பிள்ளை கூறியதாவது: அறிவியலில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. எல்லாமே சோதனை முயற்சிகள்தான். நிலவில் அதிக ஆற்றல்வாய்ந்த ஹீலியம்-3 உட்பட பல்வேறு தாதுப்பொருட்கள் உள்ளன. இதில் ‘ஹீலியம் 3’ யுரேனியத்தைவிட 100 மடங்கு சக்தி கொண்டது. கதிர் வீச்சு பாதிப்பற்றது. இதனால் அதை மின் சக்தியாக மாற்றுவது எளிது. எனவே, நிலவில் இருந்து ‘ஹீலியம் 3’ பூமிக்கு எடுத்து வருவதற்கான சாத்தியக் கூறு களை ஆய்வு செய்ய விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன.

எதிர்காலத்தில் நிலவு ஒரு இடை நிறுத்தப்பகுதியாக மாற்றப்பட்டு செவ் வாய் உட்பட பிற கிரகங்களுக்கு சென்று வர உதவக்கூடும். விண்வெளியை சார்ந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு, அதிவேக தகவல் பரிமாற்றங் களுக்கும் புயல் போன்ற பேரிடர் நிகழ்வு கள், விவசாயம், நதிநீர் இணைப்பு உள் ளிட்ட பெரும்பாலான தேவைகளுக்கும் செயற்கைக்கோள்களின் உதவி தேவைப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது: பூமியில் மிக அரிதாக கிடைக்கக்கூடிய எட்ரீயம் (Yttrium), நியோடைமியம் (Neodymium) உள்ளிட்ட தாதுப்பொருட்கள் நிலவில் அதிகம் உள் ளன. இவை நிலவின் மேற்பரப்பிலேயே காணப்படுவதால் பூமிக்கு எளிதாக எடுத் துவர முடியும். தற்போது நிலா ஆண்டு தோறும் சராசரியாக 3 செமீ அளவுக்கு பூமியை விட்டுவிலகிச் செல்கிறது. இதனால் பூமியின் சுழல் வேகம் குறைந்து வருகிறது. இந்நிலை நீடித்தால் பூமியின் ஒருநாள் காலஅளவு 24 மணி நேரத்தில் இருந்து அதிகரிக்கும் அபாயமுள்ளது.

இதற்கான மாற்றுவழிகளை ஆராய சந்திரயான்-2 விண்கலத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை அளவிடும் கருவி அனுப்பப்பட்டது. இது தவிர சந்திரயான் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, டெரைன் ரிலேட்டிவ் நாவி கேஷன் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட் பங்களை மற்ற நாடுகள் உதவியின்றி இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இத்தகைய தொழில்நுட்பங்களை இந்திய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங் கள்தான் தயாரித்தன. இதன்மூலம் உயர்தொழில்நுட்பங்கள் பற்றிய ஆய்வு களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு தரப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்ட தைவிட 15 சதவீதம் கூடுதல் செயல் பாட்டை வழங்கியுள்ளது. எனவே, இந்த ஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவதை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும் போது, ‘‘இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும் முதலீடுகளும் மக்களின் நன்மையை முன்னிறுத்தியே இருக்கும். பூமியில் எரி பொருள், தண்ணீர், கனிம வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு மாற்றாக மற்ற கிரகங்களில் உள்ள வளங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சந்திரயான் உள்ளிட்ட எல்லா திட்டங் களும் எதிர்கால தேவைகளுடன் தொடர் புடைவை. சந்திரயானின் 95 சதவீத வெற்றி யின் மூலம் இளைஞர்கள், மாணவர் களிடம் விண்வெளி அறிவியல் தொடர்பான பெரும் விழிப்புணர்வு உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகளைவிட குறைந்த அள விலான நிதியைத்தான் இஸ்ரோ முதலீடு செய்கிறது. நாசாவின் பட்ஜெட் தொகையை விட 20 மடங்கு குறைவாகவே செலவு செய்துள்ளோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியன், வெள்ளி கிரகங்களை ஆய்வு செய்வதற் கான விண்கலங்களை அனுப்பும் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் விரைவில் சந்திரயான்-3 திட்டப்பணிகளும் தொடங்கும்’’என்றனர்.விண்வெளி திட்டங்கள் பற்றி விஞ்ஞானிகள் விளக்கம்நாட்டின் பாதுகாப்பு, அதிவேக தகவல் பரிமாற்றங்களுக்கும் புயல் போன்ற பேரிடர், விவசாயம், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பெரும்பாலான தேவைகளுக்கும் செயற்கைக்கோள்களின் உதவி தேவைப்படுகிறது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 September 2019

மனிதனின் முதல் மொழி

நாம் வாயால் பேசுகிறோம், விரல்களால் எழுதுகிறோம். ஆனால் வாயை மூடி விரல்களால் பேச முடியும் என்பதை அறிவீர்களா? சொல்லப்போனால் விரல்களால் பேசியதுதான் (சைகை மொழி) மனிதனின் முதல் மொழி என்பது உங்களுக்குத் தெரியுமா? மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான சைகை மொழி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

* உலகில் பல ஆயிரம் மொழிகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் குறைவான மொழிகளே உலகில் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. ஏராளமான மொழிகள் எழுத்துகள் இல்லாமலும், அதிகமாகப் பேசப்படாமலும் அழிந்து வருகின்றன. உலகில் பழமையான மொழி எது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களால் தெளிவான முடிவு எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளைவிட மூத்த மொழி மனிதனின் சைகை மொழியே. சைகையால் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துகள் தோன்றின. அதன் பின்னரே மொழிகள் வளர்ந்தன. ஆக சைகை மொழியே மனிதனின் முதல் மொழி.

* இன்றும் நமக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும், அந்த மொழிகளை அறியாத ஊருக்குச் சென்றால் நாம் சைகை மொழியில்தான் பேச வேண்டும். சைகை மொழி நமக்குள் மறைந்து கிடக்கிறது. நமது பேச்சு மற்றவர் களுக்கு புரியாவிட்டாலோ அல்லது அவர்கள் பேசுவது நமக்கு புரியவில்லை என்றாலோ நம்மை அறியாமலே நமது கைகள் சைகை மொழியை பயன்படுத்த ஆரம்பித்துவிடும். உலக அளவில் பொதுவான சைகை குறியீடுகள் உள்ளன. உணவு, நீர், வழிகேட்டல் போன்ற அடிப்படைகளுக்கான சைகை குறியீடுகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. பெரும்பாலான சைகை மொழியில் ஒத்துப்போகின்றன.

* உலக காது கேளாதோர் அமைப்பு சுமார் 7 கோடி மக்கள் காது கேளாத தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது. அவர்கள் சைகை மொழியில்தான் தகவல் தொடர்பு செய்கிறார்கள். அவர்கள் சைகையால்தான் பெரும் பாலான உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு இருக்கும். சைகை மொழிக்கும் வரலாறும், சுவையான பின்னணியும் உண்டு.

* சைகை மொழியும் ஒவ்வொரு நாட்டிற்கும் சிறிது வேறுபாடு காணப் படுகிறது. எனவே சைகை மொழியும் பல வகைப்படுகிறது.

* சைகை மொழி என்பது வெறும் கைகளால் பேசப்படுவதல்ல. முக பாவனை, கை அசைவு, உடல் அசைவு, வடிவ பாவனை ஆகியவற்றின் மூலம் முழுமையான சைகை மொழி பேசப்படுகிறது. சைகை மொழிக்கும் இலக்கணம் உண்டு. சரியான சைகையும், இமை-உடல் அசைவுமே கேள்வி பதிலை புரிய வைக்கின்றன.

* சைகை மொழியில் புருவ அசைவு முக்கியத்துவமானது. யார்? என்ன? எங்கே, ஏன்? என்பது போன்ற கேள்வி களுக்கு புருவம் கீழ்நோக்கி இறக் கப்பட வேண்டும். ஆம் அல்லது இல்லை என்பதை தெரிவிக்கும் சூழலில் புருவம் மேல்நோக்கி செல்ல வேண்டும்.

* மூளையில் பாதிப்பு ஏற்பட்டவர்களாலும் சைகை மொழியை புரிந்து கொள்ளவும், சைகை மொழியில் பேசவும் முடியும். ஆனால் அவர்கள் சைகை மொழிக்கான இலக்கணத் தன்மையுடன் பேச மாட்டார்கள்.

* அமெரிக்க சைகை மொழியில் ஆங்கில எழுத்துகள் ஒரு கையினால் காண்பிக்கப்படுகிறது. ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து சைகை மொழிகளில் இரு கைகளால் ஆங்கில எழுத்துகள் உணர்த்தப்படுகின்றன.

* பெண் மற்றும் பெண் தொடர்பான சைகைகள் தாடையின் அருகில் கைகளைக் கொண்டு செய்து காண்பிக்கப்படுகின்றன. ஆண் தொடர்பான சைகைளை குறிக்க நெற்றியின் அருகே கைகளைக் கொண்டு சைகை செய்யப்படுகிறது.

* காது கேளாதவர்கள் யாரிடமாவது உங்கள் பெயரை தெரிவிக்க வேண்டுமென்றால் ஆங்கில எழுத்துகளின் வடிவத்தை உங்கள் கைகளால் குவித்து ஒவ்வொரு எழுத்தாக செய்து காண்பித்தால் புரிந்து கொள்வார்கள். நீங்கள் அவர்களது பெயரை கேட்டாலும் அப்படியே சைகையால் எழுதிக் காண்பிப்பார்கள்.

* சைகை மொழியில் ஒவ்வொரு சைகைக்கும் 5 கூறுகள் உண்டு. அவற்றை மாற்றிக் காண்பித்தால் முழு அர்த்தமும் மாறிவிடும்.

* உள்ளங்கையின் உதவியால் திசைகளை கூறுவார்கள்.

* ஒரே சைகையை இரு அசைவுகளாக காண்பிப்பது இரு வேறு அர்த்தங்களை குறிக்கும்.

* அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சைகை மொழியை பயன்படுத்துகிறார்கள்.

* இன்று சைகை மொழியை உணர்த்துவதற்காக பல்வேறு அப்ளிகேசன்கள் உள்ளன. வாய்பேச முடியாதவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லவும் அப்ளிகேசன்களும், கருவிகளும் உள்ளன. அவற்றின் உதவியால் பேச முடிந்தவர்கள், பேச முடியாதவர்களுடன் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

* உங்களுக்கென பிரத்தியேக சைகை குறியீடுகளை உருவாக்கி உங்களுக்குப் பிரியமானவர்களுடன் சங்கேத பாஷையில் பேச முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. உங்கள் தேவைக்கேற்ப எளிதான சைகை குறியீட்டு மொழியை உருவாக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திரவ காந்தம் சவால்கள்

த.வி.வெங்கடேஸ்வரன்
புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற நல்ல செல்களையும் இந்த மருந்துகள் கொன்றுவிடுவதால் பக்க விளைவுகள் அதிகம். கற்பனை செய்துபாருங்கள். புற்றுநோய் சிகிச்சைக்காக வந்துள்ள நோயாளிக்கு வீரியம் வாய்ந்த புற்றுநோய்க்கொல்லி மருந்தை ஊசி மூலம் செலுத்துகிறார் மருத்துவர். நானோ அளவில் திரவ நிலையில் உள்ள காந்தக் குமிழியின் உள்ளே அந்த மருந்து அடைபட்டுள்ளது. கையில் மந்திரக்கோல்போல காந்தத்தைப் பிடித்தபடி, அந்த நானோ காந்த திரவத்தை ரத்தம் மூலம் புற்றுசெல்கள் உள்ள திசுக்கள் அருகே கொண்டுசெல்கிறார். அங்கே அந்தக் குமிழி உடைந்து, வீரியம் வாய்ந்த மருந்து புற்றுசெல்களில் மட்டும் பரவிப் புற்றுநோயை அழிக்கிறது. வேறு எந்தச் செல்களின் மீதும் மருந்து பரவவில்லை என்பதால், பக்கவிளைவே இல்லை. நோயும் குணமாகிறது.

இன்று வீரியம்வாய்ந்த புற்றுநோய்க்கொல்லி மருந்தைப் புற்றுத் திசுக்களுக்கு மட்டும் எடுத்துச் செல்லும் மந்திரக்கோல் ஏதுமில்லை. ஆயினும், மாசசூசட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் தாமஸ் ரஸ்ஸல், பெய்ஜிங் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் சூபோ லியூ உள்ளிட்டோர் உருவாக்கிய திரவ காந்தத் தொழில்நுட்பம் முதிர்ச்சி அடைந்தால், அறிவியல் நாவல்களில் வருவது போன்ற இந்த அற்புத சிகிச்சை கைகூடலாம்.

சட்ட வடிவக் காந்தம், லாட வடிவக் காந்தம், வளை வடிவ காந்தம், ஏன் கோள வடிவக் காந்தம்கூட உள்ளது. வடிவம் எதுவானாலும் இவையெல்லாம் திட காந்தங்கள்தான். திரவ வடிவில் காந்தம் ஏன் இல்லை? இரும்பு, நிக்கல் போன்ற உலோகத் துண்டுகளில் காந்தப் புலக்கூறு ஒழுங்கமைப்பில் அமையும்போதுதான் அந்தத் துண்டுகளில் காந்தப் புலம் ஏற்படும். அதாவது, நிலைகாந்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், நுண்ணிய அளவில் அணுக்களில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பொருட்களுக்கு திடம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகள் உள்ளன. திட நிலையில் உள்ளபோது அணுக்கள் அங்குமிங்கும் ஓடாமல் ஒரே இடத்தில் அதிர்ந்துகொண்டு நிற்கும். திரவம், வாயு நிலைகளில் அணுக்கள் அங்குமிங்கும் அவிழ்த்துவிட்ட கழுதை போல ஓடிக்கொண்டிருக்கும். ஒழுங்கமைப்பு ஏதுமில்லா அந்த நிலையில், அணுக்களுக்குக் காந்தப்புலம் இருந்தாலும் எல்லா அணுக்களின் காந்த அச்சு ஒரே திசையை நோக்கி அமைய முடியாது. எனவேதான், திரவ காந்தம் எளிதில் சாத்தியமில்லை. முடியாது என்பதைச் சாதித்துக் காட்டுவதுதானே அறிவியல். நானோ இரும்பு ஆக்ஸைடு துகளின் நீர்க் கரைசலைக் கொண்டு, திரவ நிலையில் காந்தப்புலத்தை ஏற்படுத்திச் சாதனை புரிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

டிடர்ஜென்ட் போன்ற பாலிமர் மூலக்கூறுக்கு அதிசயமான குணம் உண்டு. இழை போன்ற டிடர்ஜென்ட் பாலிமர் மூலக்கூறின் ஒரு முனை நீரை விரும்பும், மறு முனை நீரை விலக்கும். அழுக்கு படிந்த துணியை டிடர்ஜென்ட் சோப்புக் கரைசலில் ஊற வைக்கும்போது, அதன் நீர் விலக்கு முனை துணியின் அழுக்குத் துணுக்கில் பிணைந்துகொள்ளும். நீர் விரும்பும் முனை நேர் மூலக்கூறில் பிணைந்துகொள்ளும். ஒரு அழுக்குத் துணுக்கில் பல்லாயிரம் பாலிமர்கள் பிணைந்துகொள்வதால் இறுதியில் கொழுக்கட்டை போன்ற அமைப்பில் மாறும். நடுவே அழுக்கு, அதனைப் பந்துபோல எல்லாப் புறங்களிலும் சுற்றிய டிடர்ஜென்ட் பாலிமர், அதன் மேல் நீர் மூலக்கூறு என மூன்று அடுக்கில் அமையும். துணியை நீரில் அலசும்போது அழுக்கு - டிடர்ஜென்ட் பந்து நீரோடு சென்றுவிடும். இவ்வாறுதான் ரஸ்ஸலும் லியூவும் நானோ காந்தக் குமிழிகளை உருவாக்கினார்கள்.

நானோ காந்தக் குமிழ்

நானோ அளவில் இரும்பு ஆக்ஸைடைத் தூளாக்கி அதனைக் கரியமில வாயுவோடு (கார்பன் டை ஆக்ஸைடு) கலந்தனர். கரியமில வாயு நீரோடு பிணையும். கரியமிலப் பூச்சு செய்யப்பட்ட நானோ இரும்பு ஆக்ஸைடை மிமீ அளவே உள்ள நுண்துளி டொலுவீன் எண்ணெயில் செலுத்தினார்கள். இந்தக் கரைசல் துளிகளை நீரில் இட்டனர்.

டொலுவீன் எண்ணெய் பாலிமர் நீரை விலக்கும் தன்மை கொண்டது. நீரிலிருந்து விலகத் துடிக்கும். நானோ இரும்பு ஆக்ஸைடு துகளின் மேலே உள்ள கரியமிலப் பூச்சு நீரை விரும்பும். எனவே, வெளியே உள்ள நீர் மூலக்கூறுகள் நானோ துகள்களை எண்ணெய்த் துளியின் வெளிப்புறமாக இழுத்து மெல்லிய படலம்போல மேலே படரச் செய்தது. இதன் தொடர்ச்சியாக உள்ளே எண்ணெய்க் கரைசல் வெளியே கூழ்ம நிலையில் நானோ இரும்பு ஆக்ஸைடு தோல் என்ற சிறுசிறு நுண்குமிழிகள் உருவாயின. இரும்பு ஆக்ஸைடு காந்தத் தன்மை கொண்டது. சிறுசிறு நுண்குமிழ்களின் மீது தோல் போல படிந்துவிட்டதால் இந்த நானோ துகள்கள் அங்குமிங்கும் நகர முடியாமல்போனது.

இதன் தொடர்ச்சியாக, திரவம் எனினும் இந்த நானோ இரும்பு ஆக்ஸைடு துகள்கள் மட்டும் சலனமின்றி திட நிலைபோல ஒரே இடத்தில் நிலை கொண்டது. எனவே, நீரில் மிதந்த ஒவ்வொரு குமிழியும் சிறு காந்தம்போல ஆனது. வெளியிலிருந்து காந்தப் புலத்தால் இந்தக் குமிழிகளைத் தூண்டி எல்லாத் துகள்களின் காந்த அச்சை ஒரே திசையில் ஒழுங்கமைக்க முடிந்தது. வெளிப்புற காந்தத் தூண்டுதலை எடுத்த பின்னரும் குமிழியின் மேலே நானோ துகள்கள் அங்குமிங்கும் நகர முடியாமல் அடைத்து இருப்பதால் ஒழுங்கமைப்பு குலையவில்லை. அந்தக் குமிழிகள் நிரந்தர காந்தமாக மாறின.

அற்புதத் தொழில்நுட்பங்கள்

காந்த திரவங்களைக் கொண்டு கற்பனையை விஞ்சும் அதிசயத் தொழில்நுட்பங்களைப் படைக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். திரவ நிலை என்பதால், எந்த வடிவத்திலும் காந்தத்தை வடிவமைக்க முடியும். விதவிதமான காந்தப் புலங்களை உருவாக்க முடியும். முப்பரிமாண பிரின்டர் எனப்படும் நவீனக் கருவி கொண்டு பல்வேறு விதமான திரவ காந்தங்களைத் தயாரித்து செயற்கை செல்கள், இயந்திர மனிதன் உட்பட பல்வேறு கருவிகளைப் படைக்கலாம் எனக் கூறுகின்றனர். இந்தத் தொழில்நுட்பம் முழுமை பெற்றால் புற்றுநோயாளிகளுக்கு இதைவிட நல்ல செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 September 2019

வந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்

வந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்

பேராசிரியர் மா.ராமச்சந்திரன்

விளம்பர மோகிகளின் அஜாக்கிரதையினால் ஒரு இளம்பெண்ணின் இன்னுயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது. “வீதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. ‘கட் அவுட்’, ‘பேனர்’ வைக்கும் கலாசாரம் களையப்பட வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதனை நடைமுறைப்படுத்த தவறியதின் விளைவு சென்னையில் சுபஸ்ரீயின் அகால மரணத்திற்கு காரணமாகிவிட்டது.

பொதுவாக, பல நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள் வைக்கப்பட்டாலும் அரசியல் கட்சியாளர் வைக்கும் பதாகைகளே அதிகம் காணப்பெறுகின்றன. பதாகைகளின் எண்ணிக்கையே தமது செல்வாக்கை காட்டுகிறது என்று தலைவர்களும், தலைவர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று தொண்டர்களும் நினைக்கின்றனர். இதனால் போட்டி போட்டுக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் குறுக்கும், நெடுக்குமாக பதாகைகள் வைக்கிறார்கள். இந்த விளம்பர பதாகைகளால் சாலை விபத்துகள் மலிந்துவிட்டன. சுபஸ்ரீயின் மரணமும் இத்தகைய ஒரு விளம்பர பதாகையால் ஏற்பட்டது என்பதை எண்ணும்போது வேதனையாக உள்ளது.

இந்த உயிரிழப்புக்கு ஏதேனும் ஒரு தொகையை நிவாரணமாக வழங்கி அரசு ஆறுதல் பெறலாம். “இனி ‘பேனர்’, ‘கட்அவுட்’ வைக்கக்கூடாது” என்று தம் தொண்டர்களுக்கு வேண்டுதல் வைத்ததோடு கட்சியினர் ஆறுதல் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு யார் ஆறுதல் கூறக்கூடும்? ஒரு உயிரைக் காவு கொண்ட பின்னர், “இனி பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது” என்று அனைத்து கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருப்பது ஆறுதலான விஷயம்தான். ஆனாலும் இது எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற அதிரடி அறிவிப்புகளையும், அவசர நடவடிக்கைகளையும் கண்டு ஏமாந்திருக்கிறோம்.

ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் கொஞ்சநாள் அதிரடி நடவடிக்கை எடுப்பது போல் நடிப்பதும், அதற்கு பின் அதனை காற்றில் பறக்கவிடுவதும் தமிழகத்தில் காணப்படும் நடைமுறை. கும்பகோணத்தில் பள்ளி எரிந்தபின் கொஞ்சம் வேகம் காட்டினர். பின்னர் வேகத்தை குறைத்துக்கொண்டனர். சென்னையில் பள்ளி பேருந்தின் அடிப்பகுதி ஓட்டை வழியே விழுந்து உயிர்நீத்தது ஒரு குழந்தை. அதற்கு பிறகு ‘பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்கிறேன் பார்’ என்று கொஞ்சநாள் ஆரவாரச் சோதனைகள் நடைபெற்றன. இப்போது அது ஒரு சம்பிரதாயச் சடங்காகி உள்ளது. ஒரு பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை வழிமறித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இப்போதும் அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களைக் காணத்தான் முடிகிறது. இப்படி நடந்து முடிந்த பின் ஆரவார நடவடிக்கை எடுப்பதையும், அதற்கு பிறகு அதனை அடியோடு மறந்து விடுவதையும் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றைப் போலத்தான் இந்த விளம்பர பதாகைகளின் அறிவிப்பும் பிரசவ கால சபதமாகிவிடக்கூடாது என்பது பொதுமக்களின் கவலையாக உள்ளது.

ஒரு ஆபத்தில் இருந்து விடுபடுவதற்கு மூன்று உத்திகள் உள்ளன. வருமுன் காத்தல், வரும்போது காத்தல், வந்த பின் காத்தல் என்பன அவை. இதனை உணர்த்தும் வகையில் அமைந்த மூன்று மீன்களின் கதையைப் பலர் படித்திருப்போம். இவற்றுள் வரும்போது காத்தல், வந்தபின் காத்தல் என்னும் இரண்டைக் காட்டிலும் வருமுன் காத்தலே உத்தமம். இதனால்தான், “வருவதற்கு முன்னே காத்துக்கொள்ளாத ஒருவனுடைய வாழ்க்கை, தீயின் முன் வீழ்ந்த வைக்கோல் போல் அழிந்துவிடும்” என்று வள்ளுவர் குறிப்பிடுவார். இதனை உணர்ந்து நடந்தால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி பிறக்கும்.

பொது மக்களின் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் செல்லலாம். நீதி மன்றங்கள் ஆலோசனை வழங்கலாம்; ஆணைகள் பிறப்பிக்கலாம். ஆனால் அவை நடைமுறையாவது அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரைப் பொறுத்தே உள்ளது. அதனைப் புரிந்துகொள்வது அவசியமாகும். விதிமுறைகளுக்குட்பட்டு அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நடந்துகொள்ள வேண்டும். ‘தலைக்கவசம் அணிய வேண்டும்’ என்று சட்டம் வந்தால் அதற்கு அடிபணிவது எல்லோருடைய கடமையாகும். அதனைவிடுத்து அலட்சியப்படுத்துவது மடமையாகும். இதனைப் போன்றுதான் பதாகை வைப்பதிலும் ஒரு கண்டிப்பு இருக்க வேண்டும். சட்டத்திற்கு முன் யாவரும் சமமே என்பதை உணர்ந்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, அதிகாரம் இவற்றிற்கு அஞ்சாத மனதைரியம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி எதையும் செயல்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்ற பாரதியாரின் வரிகளைப் போன்று நடந்து முடிந்த பின் நடவடிக்கை எடுப்பதும் நகைப்புக்குரியதுதான். எடுத்த நடவடிக்கையை இடையிலே தளரவிடுவதும் ஏளனம்தான். வந்த பின் அலறுகின்ற அவலத்தை ஒழித்து வருமுன்னர் காப்பதற்கு வழியறிதலே புத்திசாலித்தனம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அது இந்தி நாள் என்றால், எது தமிழ் நாள்?

அது இந்தி நாள் என்றால், எது தமிழ் நாள்?

சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை.

இ ந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தான் ஒரே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது தான் உலக அளவில் இந்தியாவை ஒருமுகமாககாட்டும் என்று தன்னுடைய வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அது இந்தி நாள் அன்று வெளியிடப்பட்டது என்பதைத் தவிர அதற்கு வேறு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் முன்னாள் உள்துறை அமைச்சர்களும் இப்படி அந்த இந்தி தினத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்றும் இப்போது சமாதானம் சொல்லப்படுகிறது.

இந்தி தினமென்று ஒரு மொழிக்கு மட்டும் ஒரு தினத்தை வைத்துக்கொள்வது ஒரு சமமற்ற தன்மைதான். செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினம் என்றால் எது தமிழுக்கான தினம்? எது இந்தியாவின் பிற மொழிகளுக்கான தினங்கள்?. இந்தி அலுவல் மொழியாக இருக்கிறது. அப்படியானால் இணை அலுவல் மொழியாக இருக்கிற ஆங்கிலத்துக்கு ஏதேனும் தனியாக ஒரு தினம் இருக்கிறதா? ஒரு குறிப்பிட்ட மொழியை மேம்படுத்துவதற்காக இப்படி அரசு ஒரு தினத்தை குறிப்பது வெறுமனே வாழ்த்துச் சொல்லும் சடங்கோடு முடிவடைந்துவிடாது. அந்த மொழிக்கு அரசின் பணத்தில் இருந்து அதாவது மக்களின் வரிப்பணத்தில் இருந்து மேலும் மேலும் நிதி ஒதுக்குவதற்கும் இந்த இந்தி தினம் உதவும். இதனை அமித்ஷா செய்திருப்பது என்பது மட்டுமல்ல வேறு யார் செய்து இருந்தாலும் அது தவறானது தான்.

இந்தி எதிர்ப்புக் குரல் என்பது தமிழ்நாட்டில் இன்று தான் புதிதாக எழுகிறதா? பல இந்தி போராட்டங்களை தமிழகம் கண்டு இருக்கிறது. அப்போது எல்லாம் காங்கிரஸ் அரசு தானே பெரும்பான்மையாக இருந்து இருக்கிறது. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை எதிர்த்து தானே 1965-ல் அத்தனை பெரிய போராட்டம் தமிழகத்தில் நடந்தது. ஆனால் நாம் பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்படுகிறோம் என்பது உண்மை அல்ல. இந்தி திணிப்புக்கு எதிராகவே தமிழகம் எப்போதும் களத்தில் நிற்கிறது என்பது தான் உண்மை.

இந்திக்கு மட்டும் தனிச்சிறப்பு வழங்கப்படுவது எதனால் என்று கேட்டால் அது பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி என்கிறார்கள். அந்த பெரும்பான்மை மக்கள் என்னும் தொடருக்குள் பல்வேறு கிளை மொழிகளை, பேசும் மக்களின் எண்ணிக்கையும் உள்ளடங்கி இருக்கிறது. அவர்கள் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் 35 சதவீத மக்கள் இந்தி பேசும் மக்கள் என்றால் 65 சதவீத மக்கள் இந்தி பேசாத மக்கள் தானே? எது பெரும்பான்மை என்பதை இப்போது அவர்கள் சொல்லட்டும்.

இப்படி பெரும்பான்மை வாதம் பேசும் அவர்கள் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்துக்கு ஏன் வரிப்பணத்தை கொட்டி கொடுக்கிறீர்கள் என்று கேட்டால் அது தொன்மையான மொழி என்கிறார்கள். இந்தி என்று வருகிற போது பெரும்பான்மைவாதம் முன்னிறுத்தப்படுகிறது, சமஸ்கிருதம் என்று வந்தால் தொன்மை வாதம் முன்னிறுத்தப்படுகிறது. சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்றால் தமிழ் தொன்மையானது இல்லையா?.

நான் கேட்பது இந்தி இருக்கும் இடத்துக்கும், சமஸ்கிருதம் இருக்கும் இடத்துக்கும் தமிழைக் கொண்டு வாருங்கள் என்பது இல்லை. இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை ஏற்றுக் கொண்டுள்ள 22 மொழிகளுக்கும் சமத்துவம் கொண்ட இடத்தை வழங்குங்கள் என்பது தான்.

நாம் நம் தாய் மொழிக்காக மட்டும் பேசவில்லை. இந்திய மொழிகளின் சமத்துவத்துக்காகவே குரல் கொடுக்கிறோம். நம்மீது எந்த ஒரு மொழியும் திணிக்கப்படக்கூடாது என்பதைப் போலவே தமிழ்மொழியும் பிறர் மீது திணிக்கப்படக் கூடாது என்றே அவரவர் ஆசைப்படுகிறோம். அவரவர் தாய் மொழியில் அவரவர் செயல்படுவதற்கு அனுமதி வேண்டும். அந்த நிலை வரும் வரை ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது தான், அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாட்டின் கொள்கை.

எனவே தேசிய இனங்களின் உரிமைகளுக்கும், மாநில சுயாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான குரலை, அரசின் குரலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய வரவுகளும் குரல்களும்

என்னுடைய ஊர் பெருசு சொல்லும், “நம்ம ஊத்துமல ஜமீனு சித்தாத்துத் தண்ணிய நம்மூருக்குக் கொண்டுவருவாருன்னு பாத்தா, அவரு மட்டும் வீரகேரளம்புதூர்ல ஆத்துக்கால் மேலயே வீட்டக் கட்டி குடியேறினாரு பாரு. அதேமாதிரித்தான் வெள்ளக்கார தொரைகளும். அவய்ங்க அவய்ங்களுக்கு எந்த ஊர் வசதியோ அங்கனைக்கு அங்கன ஆபீஸ் போட்டுக்கிட்டாய்ங்க. நம்மள மாதிரி வானம்பாத்த பூமியில வசிக்கிற பயல்க எல்லாம் தொரைமாரைப் பாக்க வண்டியும், கட்டுச்சோறும் கட்டிக்கிட்டுப் போக வேண்டியதாப்போச்சு. கலெக்டர் திருநவேலியில, சப் கலெக்டர் சேர்மாதேவியில, முன்சீப் நீதிபதி அம்பாசமுத்திரத்துல... தலையெழுத்து!”

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆட்கள்தான் மாறியிருக்கிறார்கள்; குரல் மாறவில்லை. தென்காசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் வெங்கட்ரமணாவின் இன்றைய குரல், அன்றைய ஊர் பெருசின் குரலைப் பிரதிபலிப்பதுபோலவே இருந்தது. “திருநெல்வேலி கலெக்டர் தென்காசிக்கு வந்தா ஒண்ணு, குளிக்கிறதுக்கா இருக்கும். இல்லாட்டி, சாரல் விழாவுக்கா இருக்கும். வேற எதுக்கும் வர மாட்டாங்க. ஏன்னா, திருநெல்வேலியிலயே அவங்களுக்குத் தலைக்கு மேல வேலையிருக்கும். பெரிய மாவட்டம் பாத்தியளா?”

மாவட்டங்களைச் சிறிதாகப் பிரித்து, அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பரவலாக்கியதில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலம் குறிப்பாக, இரு திராவிடக் கட்சிகளுமே இந்தப் பெருமைக்கு உரியவை. ஆனால், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எந்த அளவுக்கு மக்களின் அபிப்ராயத்தை ஒட்டி அமைந்திருக்கின்றன?

இந்த 5 ஆண்டுகளில் 85 புதிய வருவாய் வட்டங்கள், 11 வருவாய்க் கோட்டங்களைப் பிரித்த தமிழ்நாடு அரசு, தற்போது புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்குவதாக அறிவித்திருக்கிறது. விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருநெல்வேலியிலிருந்து தென்காசி, காஞ்சியிலிருந்து செங்கல்பட்டு, வேலூரிலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று புதிய மாவட்டங்களைப் பிரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர். இதுதொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் முறைப்படி நடக்கவில்லை என்றும், சில அரசியல்வாதிகள் மட்டுமே பங்கேற்றார்கள் என்றும் புகார் சொல்கிறார்கள் மாவட்ட மக்கள்.

புதிய மாவட்ட உருவாக்கத்தைப் பெரும்பாலானோர் வரவேற்றாலும், இன்னொரு பக்கம் எதிர்க் குரல்களையும் கேட்க முடிந்தது. “யாரைக் கேட்டு எங்க ஊரைப் புது மாவட்டத்துக்குத் தள்ளிவிட்டீங்க?” என்று சிலரும், “ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிக்கிறபோது, அந்த மாவட்டத் தலைநகருக்கு அடுத்தபடியாக பெரியளவில் வளர்ச்சியடைந்த ஊரையே தலைநகரமாக்குகிறீர்களே... இதுவரையில் புறக்கணிக்கப்பட்ட ஊர்களுக்கு என்ன நியாயம் செய்யப்போகிறீர்கள்?” என்று சிலரும் கேட்டார்கள்.

பழைய, புதிய மாவட்டத் தலைநகரங்களுக்குச் சமதொலைவில் இருப்பவர்கள், பழைய மாவட்டத்திலேயே தங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். மதுரையிலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, உசிலம்பட்டிக்காரர்கள் “மதுரையுடன்தான் இருப்போம்” என்று எப்படிப் போராடினார்களோ, அதேபோன்ற போராட்டம் இப்போது திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில் வட்டாரத்தில் தீவிரமடைந்திருக்கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கடை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியதும், “திருநெல்வேலியோடு சேர்க்க முடியாது என்றால் எங்களைத் தனி மாவட்டமாக அறிவித்துவிடுங்கள்” என்று அவர்கள் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிற ஆலங்குளத்திலிருந்து ஒரு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிற இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. “நாங்கள் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கிறோம், மாவட்டத்தை மட்டும் ஏன் தென்காசியில் சேர்க்கிறீர்கள்? திருநெல்வேலியில் 32 கல்லூரிகள் இருக்கின்றன. தென்காசியில் இருப்பதோ வெறும் இரண்டே இரண்டு கல்லூரிகள். இப்படி இதுவரையில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரோடு எங்களை ஏன் சேர்க்கிறீர்கள்?”

தற்போதைய மாவட்டப் பிரிவினை என்பது நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் வசதியாகத்தான் அமையும் என்றாலும், இந்தப் பிரிவினைகள் முழுமையானவை அல்ல என்பதையே மக்களின் குரல்கள் எதிரொலிக்கின்றன. அதனால்தான் கும்பகோணம், கமுதி, மயிலாடுதுறை, விராலிமலை, ஓசூர், சங்கரன்கோவில் என்று நிறைய ஊர்களிலிருந்து புதிய மாவட்டக் கோரிக்கைகள் புறப்பட்டு வருகின்றன. கட்சிக்காரர்களில் ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காகப் புதிய மாவட்ட அமைப்பை உருவாக்குவதுபோல பொறுப்புள்ள தமிழக அரசு, மாவட்ட வரைபடங்களை இஷ்டத்துக்கு உருவாக்கிவிட முடியாது; கூடாது. அது குரங்கு அப்பத்தைப் பங்கிட்ட கதையாகிவிடும்.

எனவே, எப்படிப் பார்த்தாலும், மாவட்டப் பிரிவினைகளைவிட, மாவட்டச் சீரமைப்பு அல்லது மறுவரையறையே சரியானதாக இருக்கும். இதன் மூலம்தான் இதுநாள் வரையில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஓரளவுக்கேனும் நியாயம் செய்ய முடியும். ஆதி மதுரை என்று வரலாற்றுபூர்வமாக நிரூபணமாகியும்கூட, நம்முடைய கீழடி சிவகங்கை மாவட்டத்திலேயே இருக்கிறது. தற்கால மதுரை மாவட்ட எல்லையில் இருந்து வெறும் 3 கிமீ தள்ளி உள்ள இந்த ஊரை மாவட்ட மறுவரையால்தான் மதுரைக்குக் கொண்டுவர முடியுமே தவிர, பிரிப்பால் அல்ல.

தெலங்கானாவில் ஆரம்பத்தில் வெறும் 5 மாவட்டங்களே இருந்தன. அதனை 31 மாவட்டங்களாகப் பிரித்தது அம்மாநில அரசு. அதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாகப் பிரிக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அதேபாணியில் “தமிழகத்திலும் 60 மாவட்டங்களை உருவாக்கலாமே?” என்று யோசனை சொல்லியிருக்கிறார் பாமக அன்புமணி ராமதாஸ். ‘சிறியதே அழகு’ என்ற அடிப்படையில் பார்த்தால் இந்த யோசனை பரிசீலனைக்கு உரியதே.

தமிழகத்தின் மக்கள்தொகை 8 கோடியைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுமார் 10 முதல் 15 லட்சம் மக்கள் தொகைக்குள் வருகிறபடி 50 மாவட்டங்களாகப் பிரிப்பது நிச்சயம் பலன் தரும். ஆனால், மறுபடியும் அரசியல், சாதி கண்ணோட்டத்தை முன்னெடுக்காமல் அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை முழுமையாகக் கேட்டு, அவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து இதைச் செய்ய வேண்டும். குறிப்பாக, மாவட்டத் தலைநகரை அணுகுவதில் உள்ள தொலைவு, சட்டமன்ற மக்களவைத் தொகுதி வரையறைகளில் உள்ள ஒற்றுமை ஆகியன முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்; வட்டங்களின் வருவாய் மட்டும் அல்ல. தமிழ்நாடு மாவட்டங்களை மறுவரையறை செய்வதற்கென்று ஒரு ஆணையத்தை அமைத்து, அதன்படி மாவட்டங்களை மறுவரையறை செய்வது பலன் தரும். எப்படி புதிய மாநிலங்கள் உருவாகிறபோது மத்திய அரசு, மாநில நிர்மாணத்துக்கென கூடுதல் நிதி ஒதுக்கியதோ அதேபோல, புதிய மாவட்ட உருவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சிறப்புத் திட்டங்களின் மூலம் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டியதும் தமிழக அரசின் கடமை.

எதையும் ஆக்கபூர்வமாக, மக்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் செய்வது என்றால் இதுதான் சரி. இல்லையென்றால், வாயுள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கே பிழைக்கும்.

- கே.கே.மகேஷ்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மேட்டூர் அணை உபரி நீர்

மேட்டூர் அணையிலிருந்து கடந்த பத்து நாட்களாக வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாளொன்றுக்கான பாசன நீர்த் தேவை 2.2 டிஎம்சி. ஆனால், கடந்த பத்து நாட்களில் 19 டிஎம்சி நீர் கூடுதலாகவே திறந்துவிடப்பட்டுள்ளது. உபரி நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் அது கொள்ளிடம் வழியே ஓடி கடலில்தான் கலக்கிறதேயொழிய காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் சென்றுசேரவில்லை. மழை பொய்த்தும் ஆற்றில் நீர்வரத்து குறைந்தும் விவசாயம் பொய்ப்பது காவிரிப் படுகை விவசாயிகளுக்கு பழகிப்போன அனுபவம்தான். ஆனால், இந்த முறை ஆற்றில் நீர் கரைபுரண்டும், விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை. என்ன காரணம்?

ஜனவரி 28-ல் மேட்டூர் அணையை மூடி, ஜூன் 12-ல் மீண்டும் திறப்பதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் காவிரிப் படுகையில் வாய்க்கால்களையும் நீர்நிலைகளையும் தூர்வாருவது வழக்கம். இந்த முறை, ஜூலை மாதத்தில்தான் குடிமராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு கால்வாசிப் பணிகள் நடந்தன என்றால், இந்த ஆண்டு பாதி வேலைகள் நடந்திருக்கின்றன. பரவாயில்லைதான், ஆனால், அதனால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மைநிலை.

கடந்த ஆண்டு குடிமராமத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் காரணமாக ஆளுங்கட்சியின் மீது விவசாயிகளிடம் கடும் அதிருப்தி எழுந்தது. அதிருப்தியைக் குறைக்கும் முயற்சியாக இந்த ஆண்டு ஒப்பந்ததாரர்களுக்குப் பதிலாக விவசாயிகளிடமே பணிகளை ஒப்படைப்பதாக அறிவித்தது அரசு. அதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசனதாரர்கள் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. பாசனதாரர்கள் 10 சதவீதம் செலவை ஏற்றுக்கொள்ள அரசு 90 சதவீதம் செலவை ஏற்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பாசனதாரர்கள் சங்கங்கள் என்ற பெயரில் குடிமராமத்துப் பணிகளை ஏற்றிருப்பதும் வழக்கம்போல ஆளுங்கட்சிக்காரர்கள்தான்.

மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த விரும்பாத அரசு, மண் கொள்ளையைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக, கிராமங்களில் வீடு கட்டுபவர்கள் மனையை உயர்த்துவதற்காகச் சொந்த நிலத்திலிருந்து மண் வெட்டுவதற்கும்கூட வருவாய்த் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமானது.இந்நிலையில், பாசனதாரர் சங்கங்கள் குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணியைச் செய்யலாம் என்று அறிவித்தது மீண்டும் ஒரு மண் கொள்ளைக்கே இட்டுச்செல்கிறது.

நீர்நிலைகளை ஆழப்படுத்தும்போது கிடைக்கிற மண்ணைக் கொண்டு கரையை உயர்த்தாமல் அதை விற்பனை செய்வதே வேலையாக நடக்கிறது. நீர்நிலைகளிலிருந்து வெட்டப்படும் மண் ஒரு லாரிக்கு இவ்வளவு என்று விலைவைத்து விற்கப்படுகிறது. குடிமராமத்துப் பணிகள் நடக்கும் இடங்களில் வருவாய்த் துறையோ பொதுப் பணித் துறையோ இவற்றைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை.

குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணிகள் காலம் தாழ்ந்து நடந்துகொண்டிருக்கின்றன என்றால், அந்தக் குளங்களுக்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. ஆற்றிலிருந்து கிளை பிரியும் வாய்க்கால்கள்தான் காவிரிப் படுகையின் நரம்பு மண்டலமாக இயங்கிவருகின்றன. கல்லணையிலிருந்து கிளை பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை வாய்க்கால் ஒவ்வொன்றும் சிறு சிறு வாய்க்கால்களாகப் பிரிந்து காவிரிப் படுகையைச் சூழ்ந்துள்ளன. இந்த நீர்வழித் தடங்கள் முறையாகத் தூர்வாரப்படவில்லை.

எங்கெங்கும் பாலங்கள்

உபரி நீரைப் பாசன வாய்க்கால்களில் திருப்பி விடாததற்கு முக்கியக் காரணம், இந்த வாய்க்கால்கள் அனைத்தும் நீர் செல்லும் நிலையில் இல்லை என்பதே. காவிரிப் படுகையின் எந்தச் சாலையில் சென்றாலும் பாலம் அமைக்கும் வேலைகளைத்தான் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டுகளில் தரைப்பாலம் கட்டுகிறோம் என்று வாய்க்கால்களைத் தடுத்தார்கள். இந்த ஆண்டு தரைப்பாலங்களுக்குப் பதிலாக மேம்பாலங்களைக் கட்டுகிறோம் என்று நீர்ப்பாதையைத் தடுத்துவைத்திருக்கிறார்கள். திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம், வேதாரண்யத்திலிருந்து நாகை செல்லும் சாலைகளில் நிறைய பாலங்கள் நீண்ட காலமாக பாதி வேலை முடிந்த நிலையிலேயே கிடக்கின்றன. விவசாய நிலங்களுக்குப் பயன்படும் பாசன வாய்க்கால்களின் மீது கோடை காலத்திலேயே பாலங்களைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்குத் துளியும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

காவிரியின் கடைமடையிலிருந்து இப்படி கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க மேட்டூர் அணைக்கட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எழுகின்ற குரல்கள் வேறுவிதம். முதல்வர் எடப்பாடி கிழக்குக் கால்வாய் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளைத் தூர்வாரி, குழாய்கள் மூலமாக நீரைக் கொண்டுசென்று அந்த ஏரிகளை நிரப்பும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏரிகளைப் புனரமைக்கும் முதல்வர், காவிரிக்கு மேற்கே ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் பகுதிகளை முற்றிலும் கைவிட்டுவிட்டார் என்கிறார்கள் அங்கிருக்கும் விவசாயிகள்.

அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மேற்குக் கால்வாயைக் காட்டிலும் ஏரிகளைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். காவிரியிலிருந்து 8 கிமீ தொலைவில் 42 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் செல்லாயூர் பெரிய ஏரி தூர்வாரப்படாமல்தான் கிடக்கிறது. 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரடுப்பட்டியூர் ஏரியும் கைவிட்டப்பட்ட நிலையில்தான் இருக்கிறது.

அதுபோலவே பழையூர் ஏரி, புதூர் ஏரி, ஆணைக் கவுண்டனூர் ஏரி, முளியனூர் ஏரி என்று விவசாயத்துக்கு ஆதாரங்களாக இருக்கும் பெரும்பாலான ஏரிகளை தமிழக முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. ஆற்றுக்குக் கிழக்கில் மட்டும்தான் அவரது பார்வை இருக்கிறது, மேற்குப் பக்கமாக அவர் திரும்பவே இல்லை என்கிறார்கள் அந்தியூர் வட்டார விவசாயிகள்.

சொந்த ஊர் பக்கமே முதல்வரின் பார்வை இப்படி இருக்கிறது என்றால், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பற்றி விவரிக்கவா வேண்டும்? அடிப்படையிலேயே நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம் இது. நல்ல மழை பொழிவது மக்களுக்கு மட்டும் அல்ல, அரசுக்கும் சேர்த்தே வெகுமதி. அந்த மழையைக் கூடப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் நாடு இருந்தால் அதைக் காட்டிலும் கொடுமை இல்லை!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 September 2019

கண்ணீர் ஏன் சுரக்கிறது ?

கண்கள் இப்படியும் அப்படியும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. கண்கள் இயங்குவதற்கு ஈரப்பசை அவசியம். கண்ணீர் சுரந்துகொண்டே இருப்பதால்தான் கண்கள் உலர்ந்துவிடாமல் இருக்கின்றன. கண்ணீர் ஒரு மசகுபோல் வேலை செய்வதால்தான் நாம் கண்களை மூடித் திறப்பது எளிதாக இருக்கிறது. காற்றில் வரும் தூசி, கிருமி போன்றவை கண்களில் படும்போது, அந்தப் பாதிப்பிலிருந்து கண்களைக் காப்பாற்றுவதற்காகக் கண்ணீர் சுரந்து, அவற்றை வெளியேற்றுகிறது. கருவிழிக்குத் தேவையான ஆக்சிஜனையும் கண்ணீர்தான் வழங்குகிறது. கண்களின் மேல்புறத்தில் கண்ணீர்ச் சுரப்பி இருக்கிறது. இது எப்பொழுதும் சிறிதளவு கண்ணீரைச் சுரந்துகொண்டே இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் சுரந்தாலும் 1 மில்லி அளவு கண்ணீர்தான் சுரக்கிறது. கண்களில் உறுத்தல், வலி, துக்கம் போன்ற உணர்ச்சிகள் ஏற்படும்போது அதிக அளவில் கண்ணீர் சுரக்கிறது. கண்ணீர்ச் சுரப்பிகளில் மட்டுமல்லாமல் விழிவெண்படலத்திலும் இமைகளிலும் உள்ள துணைச் சுரப்பிகளும் சிறிதளவு கண்ணீரைச் சுரக்கின்றன,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காந்தி ஏன் மகாத்மா?

மகாத்மாவாக காந்தி பிறக்கவில்லை. ஒரு சாதாரண மனிதராகத்தான் பிறந்தார். வளர்ந்தார். அதனால் தவறுகளைச் செய்தார். பிற்காலத்தில் தாம் செய்த தவறுகளை நினைத்து வருந்தினார். இனி தவறு செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினார். எளிய வாழ்க்கை, அகிம்சை போன்றவற்றைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் காந்தியை மகாத்மா என்று மக்கள் ஏற்றுக்கொண்ட பிறகும் தாம் சின்ன வயதில் செய்த தவறுகளை மறைக்காமல், தம் சுயசரிதையில் எழுதினார். இதைச் செய்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்! குற்றம் குறைகளோடு இருந்த சாதாரணமான காந்தி, பிற்காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமேற்று வழிநடத்தினார். உலக நாடுகளுக்கு அகிம்சையின் அடையாளமாகத் திகழ்ந்தார். நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலைவர்கள் காந்தியின் வழியைப் பின்பற்றினார்கள். அவர் மறைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அகிம்சைப் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையை உலகத்தில் விதைத்துக்கொண்டிருக்கிறார். காந்தியை ’மகாத்மா’ என்று அழைப்பது பொருத்தம்தானே,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுதந்திர தினத்தில் காந்தி

“என்னால் ஆகஸ்ட் 15-ம் தேதியைக் கொண்டாட முடியாது. உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அதே நேரத்தில், உங்களைக் கொண்டாட வேண்டாம் என்று நான் கூறவும் மாட்டேன். துரதிர்ஷ்டவசமாய், இன்று நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கான விதைகள் அடங்கியிருக்கின்றன. இத்தருணத்தில், எப்படி நாம் ஒளியேற்றிக் கொண்டாட முடியும்?” என்றார் காந்தி. இது சுதந்திரத்துக்கு முன்பு 1947 ஜூலை மாதத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின்போது காந்தி கூறியது.

அதற்கும் முன்னதாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற பணிக்காகப் புதிய வைஸ்ராயை அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி பிப்ரவரி-20 அன்று நியமித்தார். மவுண்ட்பேட்டன் பிரபுதான் அந்த வைஸ்ராய். இதனை அடுத்து மார்ச் 22-ம் தேதியன்று மவுண்ட்பேட்டன் இந்தியாவுக்கு வந்தார். வந்த உடனே காந்தியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். காந்தி அப்போது பிஹாரில் இருந்தார். பிஹாரில் மோசமான இனக் கலவரத்தால் ஏராளமான முஸ்லிம்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், அங்கிருந்த காந்திக்கு மவுண்ட்பேட்டன் தன்னைச் சந்திக்க விரும்புகிறார் என்பது தெரியவருகிறது. அதனையடுத்து டெல்லிக்கு மார்ச் 31-ல் காந்தி செல்கிறார். அங்குள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்பில் காந்தி தங்குகிறார். ஏப்ரல் முதல் தேதியன்று மவுண்ட்பேட்டனை காந்தி சந்திக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரியப்போகிறது என்ற அச்சத்தில் இருந்த காந்தி, மவுண்ட்பேட்டனிடம் ஒரு யோசனையை முன்வைக்கிறார். ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் கட்சியே ஆட்சியை அமைக்கட்டும். தான் விரும்பியவர்களையே ஜின்னா அமைச்சரவையில் நியமிக்கட்டும். காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றார் காந்தி.

ஏற்கெனவே, கடுமையான இந்து-முஸ்லிம் கலவரங் களைப் பார்த்து மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த காந்தி, தேசப் பிரிவினை என்பது பெருமளவில் ரத்தம் சிந்த வைக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாகத் தெரிந்திருந்தது. அதைத் தடுப்பதற்காகத்தான் ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீகே ஆட்சியை அமைக்கட்டும் என்றார். ஆனால், இதை நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை.

இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் அட்லி அறிவித்தார். இதை நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தத் திட்டத்தை ஆதரித்து காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. ஜூன் 15-ல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழு, இந்தத் திட்டத்தை ஏற்பது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. 153 பேர் ஆதரித்தும் 29 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் இது காந்திக்கு ஒப்புதல் இல்லாத தீர்மானம் என்பதால் அவருடைய நெருக்கமான தொண்டரும் அப்போதைய காங்கிரஸ் தலைவருமான கிருபளானி இப்படிக் கூறினார்: “நான் முப்பதாண்டு காலமாக காந்திஜியுடன் இருந்திருக்கிறேன். சம்பாரண் சத்தியாகிரகத்தின்போது அவருடன் இணைந்தேன். அவர் மீது நான் கொண்டிருக்கும் விசுவாசத்துக்கு மாறாக நான் என்றுமே நடந்துகொண்டதில்லை. ஆனால், இப்போது அவரால் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு தீர்மானத்தை ஏன் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏனெனில், சகோதரத்துவத்துக்கும் அமைதிக்கும் காந்தி விடுத்த அறைகூவலுக்கு இந்த தேசம் செவிமடுக்கவில்லை.”

ஆம்! காங்கிரஸுக்கு வேறு வழியே இல்லை. 1946-லிருந்து நடைபெற்றுவரும் இனக் கலவரங்களைப் பார்த்த பிறகு பிரிவினை என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனம் காங்கிரஸ் தலைவர்களுக்குப் புரிந்திருக்கும். மேலும், இரு மதத்தினரும் என்றென்றுமாக ஒருவரையொருவர் அடித்துக் கொன்று குவித்துக்கொண்டிருப்பதை நாடு தாங்க முடியாது என்பதால், தேசப் பிரிவினைத் தீர்மானத்தை வேறு வழியின்றி காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. ஆனால், காந்திதான் இறுதிவரை தேசப் பிரிவினையை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தார். “பாகிஸ்தான் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுவிட்டது. பஞ்சாபையும் வங்கத்தையும் பிரிக்க வேண்டும் என்றும் அது கோரியிருக்கிறது. இந்தியாவைப் பிரிப்பதற்கு நான் எப்போதும்போல எதிரானவன். ஆனால், என்னால் என்ன செய்துவிட முடியும்? என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு விஷயம் எதுவென்றால், இந்தத் திட்டத்திலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்வதுதான். கடவுளைத் தவிர, வேறு யாராலும் இதை ஒப்புக்கொள்ளும்படி என்னை வலியுறுத்த முடியாது” என்று காந்தி கூறியது விரக்தியின் உச்சம்.

ரத்தம் சிந்திய வரைபடம்

தேசப் பிரிவினை உறுதியான பிறகு, எந்தெந்த இடங்கள் எந்தெந்த நாட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு சிறில் ராட்கிளிஃப் என்ற பாரிஸ்டர் ஜூன் இறுதியில் நியமிக்கப்பட்டார். இந்தியாவைப் பற்றிச் சிறிதும் தெரியாத, இந்தியாவில் காலடியே வைத்திராத ஒருவரிடம் இந்தியாவைப் பிரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது விசித்திரம். ஜூலை மாதம் ராட்கிளிஃப் இந்தியாவுக்கு வந்தார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாகக் குறிக்கப்பட்டுவிட்டதால், ராட்கிளிஃபிடம் இருந்ததெல்லாம் சில வாரங்களும் ஒரு வரைபடமும் சில உதவியாளர்களுமே. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட தகவல்களைக் கையில் வைத்துக்கொண்டு வரைபடத்தில் கோடு கிழிக்க ஆரம்பித்தார் ராட்கிளிஃப். அவருடைய பென்சில் உண்மையில் தேச வரைபடத்தில் விளையாடியிருக்கிறது. வயல் ஒரு நாட்டிலும் வீடு ஒரு நாட்டிலும், முன்வாசல் ஒரு நாட்டிலும் பின்வாசல் ஒரு நாட்டிலும், தெருவின் எதிரெதிர் சாரிகள் வேறு வேறு நாட்டிலும் என்று தேச வரைபடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ராட்கிளிஃபின் பென்சில் கிழித்த கோடுகளை காந்தி பார்த்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.

சுதந்திரம் நெருங்க நெருங்க பஞ்சாப், வங்கம், பிஹார் போன்ற இடங்கள் கலவரங்களால் பற்றியெரிந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் கேள்விப்பட்ட காந்தி, “தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில் எனக்கு இடமே இல்லை. 125 ஆண்டுகள் வாழும் விருப்பத்தை நான் விட்டுவிட்டேன். ஓரிரு ஆண்டுகள்தான் நான் நீடிக்கலாம். அது வேறு விஷயம். வன்முறை வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில் வாழ எனக்கு விருப்பமே இல்லை” என்று புலம்பினார் காந்தி.

சுதந்திர தினமும் வந்துவிட்டது. இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டும்விட்டது. வன்முறைகளுக்குச் சிறிது இடைவெளி விட்டு, நாடு முழுதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்படிக் கொண்டாடாத ஒரு நபர் காந்திதான். சுதந்திர தினத்தன்று அவர் கல்கத்தாவில் இருந்தார். கல்கத்தாவில் நடந்த கலவரங்களைத் தணிப்பதற்காக அங்கு சென்றிருந்த காந்தி, சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருந்தார். ராட்டையில் நூல் நூற்றார். கல்கத்தாவில் அவர் சுஹ்ரவர்த்தி என்ற முஸ்லிம் தலைவருடன் தங்கியிருந்தார். காந்தி வந்த பிறகு அங்கே கலவரம் தணிந்தது. சுதந்திர தினத்தன்று இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். மாணவர்கள் மத நல்லிணக்க அணிவகுப்புகளை நடத்தினார்கள். தொடர்ந்துவந்த நாட்களிலும் அப்படியே. அதைப் பற்றிக் குறிப்பிடுகையில் மவுண்ட்பேட்டன், “பஞ்சாபில் கலவரத்தை அடக்க முடியாமல் நமது ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் திணறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கல்கத்தாவில் நமது ராணுவம் ஒரே ஒரு நபரை (காந்தியை) உள்ளடக்கியது. ஆனால், அங்கு கலவரமே இல்லை” என்றார். அப்போது வங்கத்தின் ஆளுநராக இருந்த ராஜாஜி, “மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறார். ஆனால், கல்கத்தாவில் சாதித்த அளவுக்கு மிக அற்புதமாக வேறெதையும் அவர் சாதித்திருக்கிறார் என்று நான் கருதவில்லை” என்று நெகிழ்ந்துபோனார். அதுதான் காந்தியின் வல்லமை!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts