வந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்

வந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்

பேராசிரியர் மா.ராமச்சந்திரன்

விளம்பர மோகிகளின் அஜாக்கிரதையினால் ஒரு இளம்பெண்ணின் இன்னுயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது. “வீதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. ‘கட் அவுட்’, ‘பேனர்’ வைக்கும் கலாசாரம் களையப்பட வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதனை நடைமுறைப்படுத்த தவறியதின் விளைவு சென்னையில் சுபஸ்ரீயின் அகால மரணத்திற்கு காரணமாகிவிட்டது.

பொதுவாக, பல நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள் வைக்கப்பட்டாலும் அரசியல் கட்சியாளர் வைக்கும் பதாகைகளே அதிகம் காணப்பெறுகின்றன. பதாகைகளின் எண்ணிக்கையே தமது செல்வாக்கை காட்டுகிறது என்று தலைவர்களும், தலைவர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று தொண்டர்களும் நினைக்கின்றனர். இதனால் போட்டி போட்டுக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் குறுக்கும், நெடுக்குமாக பதாகைகள் வைக்கிறார்கள். இந்த விளம்பர பதாகைகளால் சாலை விபத்துகள் மலிந்துவிட்டன. சுபஸ்ரீயின் மரணமும் இத்தகைய ஒரு விளம்பர பதாகையால் ஏற்பட்டது என்பதை எண்ணும்போது வேதனையாக உள்ளது.

இந்த உயிரிழப்புக்கு ஏதேனும் ஒரு தொகையை நிவாரணமாக வழங்கி அரசு ஆறுதல் பெறலாம். “இனி ‘பேனர்’, ‘கட்அவுட்’ வைக்கக்கூடாது” என்று தம் தொண்டர்களுக்கு வேண்டுதல் வைத்ததோடு கட்சியினர் ஆறுதல் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு யார் ஆறுதல் கூறக்கூடும்? ஒரு உயிரைக் காவு கொண்ட பின்னர், “இனி பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது” என்று அனைத்து கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருப்பது ஆறுதலான விஷயம்தான். ஆனாலும் இது எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற அதிரடி அறிவிப்புகளையும், அவசர நடவடிக்கைகளையும் கண்டு ஏமாந்திருக்கிறோம்.

ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் கொஞ்சநாள் அதிரடி நடவடிக்கை எடுப்பது போல் நடிப்பதும், அதற்கு பின் அதனை காற்றில் பறக்கவிடுவதும் தமிழகத்தில் காணப்படும் நடைமுறை. கும்பகோணத்தில் பள்ளி எரிந்தபின் கொஞ்சம் வேகம் காட்டினர். பின்னர் வேகத்தை குறைத்துக்கொண்டனர். சென்னையில் பள்ளி பேருந்தின் அடிப்பகுதி ஓட்டை வழியே விழுந்து உயிர்நீத்தது ஒரு குழந்தை. அதற்கு பிறகு ‘பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்கிறேன் பார்’ என்று கொஞ்சநாள் ஆரவாரச் சோதனைகள் நடைபெற்றன. இப்போது அது ஒரு சம்பிரதாயச் சடங்காகி உள்ளது. ஒரு பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை வழிமறித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இப்போதும் அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களைக் காணத்தான் முடிகிறது. இப்படி நடந்து முடிந்த பின் ஆரவார நடவடிக்கை எடுப்பதையும், அதற்கு பிறகு அதனை அடியோடு மறந்து விடுவதையும் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றைப் போலத்தான் இந்த விளம்பர பதாகைகளின் அறிவிப்பும் பிரசவ கால சபதமாகிவிடக்கூடாது என்பது பொதுமக்களின் கவலையாக உள்ளது.

ஒரு ஆபத்தில் இருந்து விடுபடுவதற்கு மூன்று உத்திகள் உள்ளன. வருமுன் காத்தல், வரும்போது காத்தல், வந்த பின் காத்தல் என்பன அவை. இதனை உணர்த்தும் வகையில் அமைந்த மூன்று மீன்களின் கதையைப் பலர் படித்திருப்போம். இவற்றுள் வரும்போது காத்தல், வந்தபின் காத்தல் என்னும் இரண்டைக் காட்டிலும் வருமுன் காத்தலே உத்தமம். இதனால்தான், “வருவதற்கு முன்னே காத்துக்கொள்ளாத ஒருவனுடைய வாழ்க்கை, தீயின் முன் வீழ்ந்த வைக்கோல் போல் அழிந்துவிடும்” என்று வள்ளுவர் குறிப்பிடுவார். இதனை உணர்ந்து நடந்தால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி பிறக்கும்.

பொது மக்களின் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் செல்லலாம். நீதி மன்றங்கள் ஆலோசனை வழங்கலாம்; ஆணைகள் பிறப்பிக்கலாம். ஆனால் அவை நடைமுறையாவது அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரைப் பொறுத்தே உள்ளது. அதனைப் புரிந்துகொள்வது அவசியமாகும். விதிமுறைகளுக்குட்பட்டு அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நடந்துகொள்ள வேண்டும். ‘தலைக்கவசம் அணிய வேண்டும்’ என்று சட்டம் வந்தால் அதற்கு அடிபணிவது எல்லோருடைய கடமையாகும். அதனைவிடுத்து அலட்சியப்படுத்துவது மடமையாகும். இதனைப் போன்றுதான் பதாகை வைப்பதிலும் ஒரு கண்டிப்பு இருக்க வேண்டும். சட்டத்திற்கு முன் யாவரும் சமமே என்பதை உணர்ந்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, அதிகாரம் இவற்றிற்கு அஞ்சாத மனதைரியம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி எதையும் செயல்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்ற பாரதியாரின் வரிகளைப் போன்று நடந்து முடிந்த பின் நடவடிக்கை எடுப்பதும் நகைப்புக்குரியதுதான். எடுத்த நடவடிக்கையை இடையிலே தளரவிடுவதும் ஏளனம்தான். வந்த பின் அலறுகின்ற அவலத்தை ஒழித்து வருமுன்னர் காப்பதற்கு வழியறிதலே புத்திசாலித்தனம்.

Comments