Saturday 7 July 2018

கைவிட வேண்டிய முடிவு!

கைவிட வேண்டிய முடிவு! By என். முருகன் | இந்தியாவில், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 1884 முதல் 1888 வரை வைஸ்ராய் எனும் உயரிய பதவியில் இருந்தவர் லார்ட் டஃப் ஃபெரின் எனும் ஆட்சியர். அவரிடம் ஜோசப் செய்லி எனும் சரித்திர ஆசிரியர் இந்தியாவிலுள்ள ஐ.சி.எஸ். அதிகாரிகளின் திறமை மற்றும் தகுதிகள் பற்றிக் கேட்டுள்ளார். அதற்கு வைஸ்ராய் நம் ஐ.சி.எஸ். அதிகாரிகளின் பணிக்கு ஈடானது உலகின் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. நேர்மை, தைரியம், சரியானபடி கணிக்கும் திறமை, சுயநலமில்லாமல் பணிபுரிதல், பொறுமை, வெளிப்படைத் தன்மை ஆகிய குணங்களுடன் பணி செய்கிறார்கள். அதே வேளையில், அவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் விசுவாசத்துடனும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை வேறெந்த ஆங்கிலேயர்களையும்விட எங்கள் நாட்டின் சிறந்த பிரஜைகள் அவர்கள். அவர்களுக்கு ஊழல் செய்யும் பழக்கம் கிடையாது. அதனால்தான், 25 கோடி மக்களை, 1000 ஆங்கிலேய ஐ.சி.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்க முடிகிறது' எனக் கூறினார் அந்த வைஸ்ராய். இப்படித் தரமான பணியை வழங்கிய ஐ.சி.எஸ். அதிகாரிகளில் இந்திய பிரஜைகளும் உறுப்பினரானார்கள். லண்டனில் நடந்த தேர்வில் வெற்றி பெற்று, ஐ.சி.எஸ். அதிகாரிகளாக இந்தியாவில் நிறைய அதிகாரிகள் பணி செய்தனர். நம் நாடு சுதந்திரமடைந்தவுடன், ஐ.சி.எஸ். பதவிகளை நீக்கிவிட்டு, வேறு நிர்வாகப்பணி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸாரின் மத்தியில் எழுந்தது. காரணம், சுதந்திரப் போராட்டத்தின்போது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து காங்கிரஸ் தொண்டர்களை அடக்கி ஒடுக்கியவர்கள் இந்த ஐ.சி.எஸ் அதிகாரிகளே. ஆனால், சர்தார் வல்லபபாய் படேல், இந்த கோரிக்கையை எதிர்த்தார். அதற்கான நியாயமான காரணங்களை முன்வைத்தார். ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெளியேற முடிவு செய்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த 561 குறுநில மன்னர்கள், தங்களுடைய சிறிய நாடுகளை தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கு காய் நகர்த்தினார்கள். அதை ஆங்கிலேயர்களும் ஊக்குவித்தனர். ஆனால், அதைக் கடுமையாக எதிர்த்த சர்தார் வல்லபபாய் படேல், எல்லா குறுநிலங்களையும் நம் தேசத்துடன் இணைத்தார். 1947-ஆம் ஆண்டு வாக்கில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை சுட்டிக் காட்டிய மேன்செஸ்டர் கார்டியன்' எனும் பத்திரிகை படேல் இல்லாமல் இருந்திருந்தால், மகாத்மா காந்தியின் கொள்கைளும், நேருவின் திட்டங்களும் இந்தியாவில் வெற்றியடைந்திருக்க முடியாது' என்று குறிப்பிட்டது. அப்போது ஐ.சி.எஸ். குறித்து எதிர்மறையாக நேரு கூறியது, அந்த பதவி, சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து இருக்க முடியாது; ஐ.சி.எஸ். என்றால் என் மனதுக்கு எதிர்மறை எண்ணங்களே வருகின்றன; அவர்கள் இந்தியன் அல்ல, சிவில் அல்ல, சர்வீஸும் அல்ல' என கூறினார். நேருவின் கருத்தை மறுத்து, எந்த ஒரு சண்டையும் சச்சரவும் இல்லாமல் 561 குறுநில மன்னர்களின் 8,00,000 சதுர கிலோ மீட்டர் நிலம் இந்திய யூனியனுடன் சேர்க்கப்பட்டது. அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கியவர்கள் அன்றைய ஐ.சி.எஸ் மற்றும் ஐ.பி. அதிகாரிகளே' என சர்தார் வல்லபபாய் படேல் கூறியதோடு சுதந்திர இந்தியாவிற்குத் தேவையில்லை என அவர்களை வெளியேற்றினால், அவர்களுடன் சேர்ந்து நானும் வெளியேறி விடுவேன்' எனச் சூளுரைத்தார் படேல்! அவர் கருத்தை ஏற்று ஐ.சி.எஸ், ஐ.பி. பதவிகளைத் தக்க வைத்துக்கொண்டதோடு அவ்விரு பதவிகளின் பெயரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என மாற்றிக் கொள்ளலாம் என்ற படேலின் யோசனையையும் ஏற்றுக் கொண்டனர். பட்டப்படிப்பில் தேர்ச்சியடைந்து, மத்திய பொது வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தாங்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ். பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விதிமுறைகள், முந்தைய ஐ.சி.எஸ்., ஐ.பி. பதவிகளுக்கான தேர்வு நடைமுறையை முழுமையாக பின்பற்றி அமைக்கப்பட்டன. அந்த விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள், உலகின் எல்லா நாடுகளிலும் பாராட்டப்படும்படி பணி செய்கிறார்கள். இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அமைப்பை ஆங்கிலேயர் காலத்தில் இரும்புச் சட்டம் (ஸ்டீல் ஃப்ரேம்) என்று வர்ணித்ததைச் சுட்டிக்காட்டி அது இன்றும் தொடர்கிறது என பலரும் கூறுகின்றனர். இந்தக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் தற்போது ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்திட்டத்தின்படி, ஜாயின்ட் செக்ரட்டரி' எனப்படும் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்களில் திறமையாகப் பணிபுரியும் அதிகாரிகளை பணியமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக 10 இணைச் செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை தேர்ந்தெடுக்கும் பணியை மத்திய அரசின் பணி தேர்வுத் துறை தொடங்கியுள்ளது. இது ஒரு சிறந்த திட்டம் என சில பத்திரிகைகளும், கல்வி நிலையங்களும் இதை வரவேற்றுள்ளன. அவர்கள் சுட்டிக்காட்டுவது, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் பல திறமையான ஐ.ஏ.எஸ். அல்லாத தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அரசுப் பணியின் உயர்மட்டத்தில் நிர்வாகிகளாக பணியமர்த்தப்பட்டதை. ஐ.ஜி. படேல், பிமல் ஜலான், பி.எல்.டாண்டன், வி.கிருஷ்ணமூர்த்தி, மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா, ஆர்.வி.ஷாஹி மற்றும் நந்தன் நிலேகேணி போன்றவர்கள் மத்திய அரசின் உயர் பதவியில் அமர்ந்து பணி செய்ததை பலர் சுட்டிக் காட்டுகின்றனர்! சிலர், மற்றொன்றையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இன்றைய இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பிற்கு தேவை 6,396 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். ஆனால் 4,926 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே தற்போது உள்ளனர். இதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1990-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தபோது, மத்திய அரசு, நிதி உதவிக்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி மையத்தை (ஐ.எம்.எஃப்.) நாடியது. அவை, இந்தியாவின் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டை விதித்தன. கடன் தேவையின் அவசரம் கருதி, அதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு பல பணிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டது. உலக வங்கியில் பணம் பெற்று திறமையுடன் இந்தியப் பொருளதாரம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால், வளர்ந்துவிட்ட பொருளாதாரத்திற்கு ஏற்ப அதிக அளவில் அரசு அதிகாரிகள் தேவை என்பதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. வாங்கிய கடன் தொகை திருப்பி செலுத்தப்பட்ட பின், ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் அதிகமாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்படாததால்தான் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை புதிதாகத் தேர்ந்தெடுக்காமல் வெளியிலிருந்து தேர்ந்தெடுத்து இடைச்செருகலாக இணைச் செயலாளர்களின் பதவியை நிரப்பலாம் என்பது சரியான முடிவல்ல. பிற துறைகளில் சிறப்பாகப் பணி செய்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையான பணியை செய்ய முடியும் என எண்ணுவது சரியல்ல. அரசு நிர்வாகத்தின் தலைமை இடத்தில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தேவை தலைமைக் குணம். இந்த தலைமைக் குணத்தை அடைய நல்ல புரிதல் தேவை. அந்த புரிதல் உருவாவது கல்வி கற்கும் முறையில்தான். மனப்பாடம் செய்து தேர்வு எழுதித் தேர்ந்தவர்களை விடவும் புரிந்து கல்வி கற்கும் முறையில் உருவான மாணவர்கள் சிறப்பானவர்கள். இதை உறுதி செய்து பணித் தேர்வு முறையை நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவர்களே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். தலைமைக் குணம் பற்றி கூறிய ஹரால்ட் லாஸ்கி எனும் அறிஞர், ஒரு தலைவரின் சிறப்பான குணம், வேலையை திறமையாக செய்வது அல்ல. தன் கீழ் இருப்பவர்களை திறமையாக வேலை செய்ய வைப்பதே' என்றார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பின் மாவட்ட நிர்வாகத்தின் அடிமட்ட பணிகளில் பயிற்சி எடுக்கிறார்கள். இதை முடித்த பின், கற்றவற்றை தங்கள் பணிக்கு உபயோகிக்கிறார்களா என்பதையும் மேற்பார்வை செய்கிறார்கள் உயரதிகாரிகள். கற்றதையெல்லாம் மனதில் தேக்கிக் கொள்வதும், தேக்கிக் கொண்டவற்றை தேவையான போது உபயோகிப்பதும்தான் புத்திசாலித்தனம். எல்லாவற்றையும் புரிந்து வைத்துக் கொள்ளும் தனியார் நிறுவன உயரதிகாரிகளை விடவும் புத்திசாலிகள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்பது திண்ணம். இவர்கள் பணித்திறமை பெற்றுவிட்டார்கள்' என்பது ரகசிய குறிப்புகளாக ஒவ்வோர் ஆண்டும் இளம் அதிகாரிகளின் பணி குறிப்பேடுகளில் பதியப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் அவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டு, மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் பணியில் பெறும் அனுபவம் எந்தவொரு தனியார் நிறுவன அதிகாரிக்கும் கிடைத்திருக்க முடியாது. எனவே, தனியார் நிறுவன அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தீங்கையே உருவாக்கும். இம்முடிவைக் கைவிடுவதே இன்றைய நிர்வாகக் கட்டமைப்பிற்கு உகந்தது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts