Saturday 7 July 2018

சரியோ? முறையோ?

சரியோ? முறையோ? By எஸ். ஸ்ரீதுரை | எப்போதுமே சர்ச்சையும் பரபரப்பும் நிறைந்தது இந்தியக் கிரிக்கெட் உலகம். கவாஸ்கர் - கபில்தேவ் இடையேயான பிணக்கில் தொடங்கி, ஐ.பி.எல். சூதாட்ட மோசடி வரை எத்தனையோ விவகாரங்களைப் பார்த்துவிட்ட இந்திய கிரிக்கெட்டைத் தற்போது சூழ்ந்துகொண்டிருப்பது யோயோ' விவகாரம். விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியையும் விரைவான செயற்பாட்டையும் ஆய்வுக்கு உட்படுத்தும் யோயோ' தற்போது சில வீரர்களின் தலையெழுத்தையே மாற்றுவதாவும் உருவெடுத்துள்ளது. இருபது மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ள கூம்புகளில் ஒன்றிலிருந்து கிளம்பி, எதிரிலுள்ள மற்றொரு கூம்பைத் தொட்டுவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முதல் கூம்பைத் தொடவேண்டும். இதற்கு ஷட்டில் செய்தல் என்று பெயர். இவ்வாறு தொடர்ந்து ஷட்டில் செய்யும் போது ஒருவர் தமது வேகத்தை அதிகரித்துக் கொண்டே செல்லவேண்டும். எதிர்பார்க்கும் வேகத்தில் ஓடாதவர் மூன்று முறை எச்சரிக்கப்படுவார். அதற்குப்பிறகு வெளியேற்றப்படுவார். ஒருவர் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை எட்டு நிமிடத்தில் கடக்க முடியும். அந்த வேகமே யோயோ' தேர்வில் பங்கு பெறுவதற்கான குறைந்தபட்ச வேகமாகும். மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் அணிகள், தங்கள் வீரர்களுக்கு இந்த யோயோ'வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளன. இவற்றுள் நியூசிலாந்து அணி வீரர்களுக்கான யோயோ நிபந்தனைகள் மிகவும் கடுமையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே முதலில் யோயோ' சோதனையை வலியுறுத்தினார். அதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கான காரணிகளில் ஒன்றாக யோயோ' சோதனையும் ஆனது. கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோலிக்கும் ஒத்துப்போகாததால் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. ஆனாலும், கேப்டன் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனியின் நல்லாதரவுடன், வீரர்கள் தேர்வில் யோயோ'வுக்கான முக்கியத்துவம் தொடர்கிறது. முழு உடற்தகுதிக்கு யோயோ மட்டுமே சான்றாகி விடுமா, ஏற்கெனவே தங்களது தனித்திறமைகளை நிரூபித்து, சர்வதேசப் போட்டிகளில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றிகள் பலவற்றுக்குக் காரணமாக இருந்த தரமான வீரர்களை, யோயோவைக் காரணம் காட்டி நிராகரிக்கலாமா' என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு யுவராஜ் சிங், ரவிச்சந்திர அஷ்வின் இருவரும் யோயோ சோதனையைக் காரணம் காட்டி இந்திய ஒரு நாள் மற்றும் இருபது ஒவர் (டி-20) போட்டிக்கான அணிகளில் சமீபகாலமாக சேர்க்கப்படுவதில்லை. அஷ்வினுக்காவது டெஸ்ட் பந்தயங்களில் விளையாட வாய்ப்பளிக்கப்படுகிறது. அந்த வாய்ப்பும் யுவராஜுக்குக் கொடுக்கப்படுவதில்லை. தனது அனாயாசமான பேட்டிங் திறமையினால் இந்திய அணிக்குப் பல வெற்றிகளைக் கொடுத்த யுவராஜின் தன்னம்பிக்கை படுபாதாளத்திற்குப் போய் விட்டதை இந்தஆண்டு ஐ.பி.எல். ஆட்டங்களில் அவரிடம் ஏற்பட்ட தடுமாற்றத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. தூஸ்ரா, கேரம் பால் என்று பந்துக்குப் பந்து வித்தியாசம் காட்டி, ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் ஆறு விதமாக வீசி, எதிரணி மட்டையாள்ர்களைத் திணறடித்துப் பல வெற்றிகளை தனது பந்துவீச்சின் மூலம் இந்தியாவிற்குப் பெற்றுத்தந்த நம் தமிழ்நாட்டின் அஷ்வின் ஒரு நம்பத்தகுந்த மட்டையாளரும் ஆவார். மேலும், மட்டையாளருக்கு அருகில் ஸ்லிப், ஷார்ட்லெக் போன்ற ஃபீல்டிங் இடங்களில் சிறந்த முறையில் பல கேட்சுகளைப் பிடித்த துறுதுறுப்பான ஃபீல்டரும் ஆவார். கால்பந்து மற்றும் ஹாக்கியைப் போலக் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஆட்ட நேரம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 ஆகிய எவ்வித ஆட்டங்களிலும், மட்டை வீசும் அணியில், மைதானத்தில் இறங்கிய இரண்டு பேரைத் தவிர மற்றவர்களுக்கு ஓய்வு நேரம்தான். ஃபீல்டிங் செய்யும் அணியிலுள்ள அனைவரும் கூட எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. மட்டையாளர் அடித்த பந்து யார் பக்கமாகச் செல்கிறதோ, அவர்கள் மட்டும் உஷாராக இருந்தால் போதுமானது. இந்நிலையில், அணியில் உள்ள அனைவருமே ஆட்டநேரம் முழுவதும் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போல நினைத்துக்கொண்டு, கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட யோயோ உடற்தகுதித் தேர்வில் வீரர்கள் தேர்வு பெற்றே ஆக வேண்டும் என்றும், அப்படி தேர்வு பெறாதவர்கள் எவ்வளவு தனித்திறனும் அனுபவமும் பெற்றிருந்தாலும் அணியிலிருந்து வெளியேற்றுவோம் என்பதும் சரியான கொள்கையாகத் தெரியவில்லை. அடுத்த மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியினரின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இளம் மட்டையாளரான அம்பாட்டி ராயுடு யோயோவில் தேர்வு பெறவில்லை என்று தற்போது விலக்கப்பட்டுள்ளார். இவ்வருடத்திய ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த அந்த இளம் வீரர், முதலில் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுப் பின்னர் நீக்கப்பட்டது அவருக்கு எத்தகைய மன உலைச்சளைக் கொடுத்திருக்கும் என்பது கிரிக்கெட் வாரியத் தேர்வாளர்களுக்குத் தெரியாதா? அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில், அனுபவம் வாய்ந்த யுவராஜ், அஷ்வின் போன்ற தனித்திறன் கொண்ட வீரர்களும், அம்பாட்டி ராயுடு போன்ற இளம் நம்பிக்கையாளர்களும் இடம் பெறாமல் போவது நமது இந்தியக் கிரிக்கெட் அணிக்கு எத்தகைய பலவீனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts