Wednesday 11 March 2020

விபத்தில்லா புதிய உலகை உருவாக்குவோம்...!

அரிமதி இளம்பரிதி, எழுத்தாளர், புதுச்சேரி.

நா ட்டின் முன்னேற்றத்திற்கு இயற்கை வளத்தை விட மனித வளமே முக்கியம். இதை உணர்ந்தவர்கள் ஜப்பானியர்கள். அதனால், மனித வள மேம்பாட்டில் அக்கறையோடு இருப்பார்கள். இந்தத் தகுதியால்தான் வளர்ந்த நாடுகளுக்கான தர வரிசையில் தமக்கான இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துள்ளது. இந்நிலையில், சாலை விபத்துகளைக் குறைத்து மக்களைப் பாதுகாப்பது குறித்து ஜப்பான் அரசு யோசித்தது. ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியது. அதில் தொழில் நுட்ப வல்லுனர்கள், சாலை மேம்பாட்டுத்துறையினர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். கடைசியில், ஜப்பான் மனித வள மேம்பாட்டுச் சிந்தனையாளர் ஒருவர் வழங்கிய பரிந்துரைகளே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசால் அமல்படுத்தப்பட்டது. தற்போது, ஜப்பானில் விபத்துகள் குறைந்து வருகின்றன. சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே மனித நேயத்தை, அன்பை மேம்படுத்துவதன் மூலம் நிரந்தரமாக விபத்துகளைக் குறைக்க முடியும். இதுவே, சிந்தனையாளர் வழங்கிய ஆலோசனை.

சாலைகள் தரமாக இருப்பது முக்கியமன்று. மாறாக, பேருந்து ஓட்டுனர்களிடம் மனித நேயம், அன்பிருக்க வேண்டும். இவை இருந்தால், மது அருந்திவிட்டு பேருந்தை இயக்க மாட்டார்கள். விபத்திற்கும் வாய்ப்பில்லை. அடுத்தவர்கள் தம் பேருந்தில் பயணிக்கும்போது ஒரு ஓட்டுனர் பொறுப்பின்றி குடித்துவிட்டு வாகனத்தை இயக்க வாய்ப்புண்டு. ஆனால், அதே பேருந்தில் தம் மகனோ, மகளோ பயணித்தால் வாகனத்தை இயக்க மாட்டார். காரணம், தம் பிள்ளைகள் மீது ஓட்டுனர் அளப்பரிய அன்பு, பாசம் வைத்துள்ளார். அன்பாலும், மனித நேயத்தாலும் கூட விபத்தில்லாத உலகை உருவாக்க முடியும். இதைத்தான் ஜப்பான் சிந்தனையாளர் ஆலோசனையாக வழங்கினார். வாகனங்களை ஓட்டுபவர்களிடம் மனித நேயத்தை, நிரந்தரமாக உருவாக்கி விட்டால் அவர்கள் சாலைகளில் பயணிக்கும் போது அடுத்தவர்கள் நலன், பாதுகாப்பு குறித்தும் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அருகில் சென்று உரக்கக் காற்று ஒலிகளை எழுப்பினால் சாலைகளில் பயணிப்பவர்கள் அதிர்ந்துவிடுவார்கள் என்பதால் ஒலிகளை எழுப்ப மாட்டார்கள். இதனால், எல்லோரிடமும் சுயக்கட்டுப்பாடும், பொறுப்புணர்வும் மேலோங்கி விபத்துகள் குறையும்.

நோர்வே (நார்வே), சுவிடன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், நெதர்லாந்து உலக அளவில் மிகச் சிறந்த, வளர்ந்த, பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகள். அதோடு, இந்த நாடுகளில் மனித நேயமும், அன்பும் தழைத்தோங்குகின்றன. விபத்துகளும், வன்முறைகளும் மிகக் குறைவு. வளர்ந்த நாடுகளில் பூனைகள் சாலைகளைக் கடக்கும். குறுக்கும் நெடுக்குமாக ஓடும். அப்போதெல்லாம் வாகன ஓட்டிகள் செல்லப் பிராணி கடந்து செல்லும் வரை அமைதி காக்கிறார்கள். “கடப்பது பூனைத்தானே” என்ற அலட்சியம் ஒருவரிடமும் இல்லை.

அதேபோல், மாலை நேரங்களில் பள்ளி பேருந்துகளிலிருந்து குழந்தைகள் குதூகலத்தோடு இறங்குகிறார்கள். அப்போது, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். அதாவது, குழந்தைகள் சாலைகளில் எப்படி வேண்டுமென்றாலும் நடந்து கொள்வார்கள். திடீரென்று ஓடலாம். சாலைகளில்கூட விளையாடலாம். அவர்கள் பாதுகாப்போடு வீடுகள் போய்ச் சேரும் வரை ஓட்டுனர்கள் மிக நிதானமாக இருக்கின்றனர். நம் நாட்டின் யதார்த்த நிலையை, சிறார்கள் படும் வேதனைகளை எழுத வேண்டிய அவசியமில்லை.

சாலைகளில் அடுத்தவர்கள் மீதான அன்பை விபத்துக்கள் குறைவாக நடைபெறும் நாடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால், நம் ஊர் சாலைகளில் சுயநலத்தாலும், பொறுப்பற்றத் தன்மையாலும், எத்தனையோ கொடிய விபத்துகள் நடைபெறுகின்றன. படிக்கட்டுகளில் கால் வைத்து ஏறுவதற்குள்ளாகவே, அவசரப்பட்டு பேருந்தை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளிடம் கொடிக்கட்டிப் பறக்கும் சுயநலமும், அற்பப்புத்தியும், “தான்” என்ற தன்முனைப்புமே (ஈகோ) காரணங்கள்.

சாலைகளில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் முதியவராக இருந்தால் அருகில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு நிதானம் தேவை. வயதானவருக்கு கேட்பதிலும், பார்வையிலும் குறைபாடுகள் இருக்கும். நினைவாற்றல் குறைவால்? திசைக் காட்டிக் கருவிகளை (இன்டிகேட்டர்) முறையாக பயன்படுத்தவும் தெரியாது. இந்த புரிதலோடு அருகில் ஓட்டுபவர்கள் வாகனங்களை இயக்கினால் விபத்துகள் குறையும்.

சில இளைஞர்கள் உள்ளனர். சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் இளம் பெண்ணாக இருந்து, அவர் முந்திச் சென்று விட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. விரட்டிச் செல்வார்கள். ஒலியெழுப்பி, ஊளையிட்டு நடுக்கத்தில் விபத்தை ஏற்படுத்துவார்கள். இதுவா வீரம்? அதே பெண் இவர்களின் சொந்த சகோதரியாக இருந்தால் இப்படித்தான் அநாகரிகமாக நடந்து கொள்வார்களா?. மனித நேயம் வேண்டும்.

வளர்ந்த நாடுகளை போன்று நம் சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கும், மிதி வண்டிகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கு இவர்கள் உதவிடுகிறார்கள். ஆனால், பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள ஏழை, எளியவர்கள் மட்டுமே சாலைகளில் நடந்து செல்வார்கள், மிதி வண்டிகளைப் பயன்படுத்துவார்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. இது மாற வேண்டும். வளர்ந்த நாடுகளில் பெரும் தொழிலதிபர்கள் அலுவலகங்களுக்கு மிதி வண்டியில் சென்று வருகின்றார்கள்.

குறிப்பாக, வளர்ந்த நாடுகளில் மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகள், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களோடு சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழிவிடுகிறார்கள். ஆனால், நம் சாலைகளில் கனரக வாகன ஓட்டுனர்கள் மொழித் தெரியாமல், வழியறியாமல் நெரிசலில் சிக்கிக் கொண்டு படும் வேதனைகளை வார்த்தைகளில் எழுத முடியாது.

அண்மைக் காலமாக தமிழகத்தில் புதிய கலாசாரம் பரவி வருகிறது. சாலைகளில் விபத்துகளைப் பார்த்தவுடன் அலைபேசி வழியாக ஒளிப்பதிவுச் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றார்கள். காப்பாற்றுவதற்கோ, உதவி செய்வதற்கோ முன்வருவதில்லை. சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர் இளம் பெண்ணாக இருப்பார். உடைகளெல்லாம் கலைந்து, குருதிக் கொப்பளிக்க அலங்கோலமாக சாலையின் நடுவே உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பார். அந்த வேதனைகளை எப்படித்தான் இவர்களால் பதிவுச் செய்ய முடிகிறது? யோசிக்க வேண்டும்.

“அன்பின் வழியது உயர்நிலை” என்றார் வள்ளுவர். உயிர்களின் இயக்கம் அன்பையே அடிப்படையாக கொண்டது. அதனால், அதே அன்பின் மூலம் விபத்தில்லா புதிய தேசத்தை உருவாக்க ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முயற்சித்து வெற்றியைப் பெற்றுள்ளன. நாமும் முயற்சித்தால் விபத்தில்லா புதிய உலகை நம்மாலும் உருவாக்க முடியும். அதோடு, மனித நேயம் மிக்க மக்களை உருவாக்கி சாலைகளில் விபத்துகளைக் குறைக்கவும் முடியும். முயன்றால் முடியும்!

No comments:

Popular Posts