Wednesday, 11 March 2020

நாட்டுப்புறப் பாடலால் வளர்ந்த விவசாயத் தொழில்

மகா.பால சுப்பிரமணியன், துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

நா ட்டுப்புறப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. விவசாயத் தொழிலை எளிதாக செய்வதற்கு விஞ்ஞான வளர்ச்சியால் இன்று பல்வேறு எந்திரங்கள் உள்ளன. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நமது நாட்டில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்தது. பிற தொழில்கள் எல்லாம் இவற்றைச் சார்ந்தே இருந்தன. இத்தகைய விவசாய உற்பத்தி முறையில் எந்திரங்கள் இல்லாமல் மனித உழைப்பே முக்கியமான உற்பத்தி சக்தியாக இருந்தது. இத்தகைய விவசாயம் சார்ந்த உழவுத் தொழிலோடு தொடர்புடைய பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்கள் உழவர்களின் மனச்சோர்வை அகற்றுவதாகவும், உடல் உழைப்பினால் ஏற்படக்கூடிய வலியையும் போக்குவதாக இருந்தது.

உழவுத்தொழிலில் உழவு, நடுகை, களையெடுத்தல், கமலை இறைத்தல், ஏற்றம் இறைத்தல், கதிரறுப்பு போன்ற வேலைகளில் ஈடுபடும் உழவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் முக்கியமானது. விவசாய வேலைகளிலேயே நாற்றைப் பிடுங்கி நடுவதுதான் மிகவும் நுட்பமான வேலை. முதுகு குனிந்து நெடுநேரம் சரியான இடைவெளி விட்டு நாற்றை நட்டுச் செல்வதற்கு பயிற்சியும், அனுபவமும் வேண்டும். அப்படி நாற்று நடும் பெண்களுக்கு சோர்வு ஏற்படும்போது சோர்வை நீக்கும் நாட்டுப்புற பாடலாக...

“நாலு மூலை சமுக்க வயல்

அதிலே நடும் குட்டப் புள்ளே

நான் போடும் நாத்துக்களை

நீ சேர்ந்து நட்டாலாகாதோ?

நாத்துப் பிடுங்கி வச்சேன்

நடுவத் தொளி ஆக்கி வச்சேன்

நாத்து நடும் பொம்பளையா

சேத்து நட மாட்டியளோ

பொட்டிட்டு மையிட்டு

பொய்யக் கரை தீர்த்தமாடி

நட்டுட்டுப் போற புள்ளை

நயன வார்த்தை சொல்லிரம்மா” என்ற இப்பாடல் அமைந்துள்ளது.

பயிரைப் போலவே தோன்றும் களைகளை கூர்ந்து நோக்கி, பிடுங்கி எடுக்க வேண்டும். சற்று அயர்ந்தால் களைக்குப் பதில் பயிர் கையோடு வந்து விடும். களையெடுத்தலும் நடுகையைப் போலவே சலிப்புத் தரும் வேலை. சலிப்பு தோன்றாமலிருக்க வயல் வரப்பிலுள்ள ஆண்களும், வயலில் களை எடுக்கும் பெண்களும் சேர்ந்து

“வாய்க்கால் வரப்பு சாமி

வயக் காட்டுப் பொன்னு சாமி

களை எடுக்கும் பெண்களுக்கு

காவலுக்கு வந்த சாமி

மலையோரம் கெணறு வெட்டி

மயிலைக் காளை ரெண்டு கட்டி

அத்தை மகன் ஓட்டும் தண்ணி

அத்தனையும் சர்க்கரையே..!

களை எடுத்துக் கை கழுவி

கரை வழியா போற புள்ள

பரிசம் கொடுத்த மாப்பிளைக்கு

பால் குடம் கொண்டு போறியா”

இப்படி பாடி மகிழ்ச்சியோடு வேலை செய்வார்கள்.

பூமிக்குள் இருக்கும் தண்ணீரை, கிணறு வெட்டி, கடின உழைப்பால் கமலையின் மூலம் வெளிக்கொணர்ந்து, தோட்டப் பயிர் செய்வார்கள். கமலை என்ற தகரத்தால் ஆன பாத்திரத்தில் தோலால் ஆன வால் என்ற பையைக் கட்டி கயிற்று வடங்களை இணைத்து மர உருளைகளைப் பொருத்தி மாடுகளைப் பிணைத்து முன்னும் பின்னும் ஓட்டி நீர் இறைக்க வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். அனுபவம் இல்லாத மச்சான் கமலை இறைக்க தெரியாமல் திண்டாடுவதைக் கண்டு கேலியும், அனுதாபமும் கலந்து...

“பொட்டலிலே வீடுகட்டி

பொழுதிருக்கத் தாலிகட்டி

கருத்தக் காளை ரெண்டும் கட்டி

கமலையெறைக்கப் போகும் கருத்த துரை..,

பொட்டலிலே கிணறு வெட்டி

போர்க்காளை ரெண்டும் கட்டி

காப்புப் போட்ட கருத்த மச்சான்

கமலை கட்டத் தெரியலையே!

மந்தையிலே கிணறு வெட்டி

மயிலைக் காளை ரெண்டு பூட்டி

சீதனம் கொடுத்தானே

சிமிட்டி பாயும் கமலைத் தண்ணி” என்று பெண் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஏரிகளில் நீர் நிரம்பினாலும், நாற்று வளர்ந்து பொதி தள்ளி மணிபிடிக்கும் தருவாயில் ஏரி வற்றிப்போகும். அங்கும் இங்கும் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கும். அது மடையேறிப் பாயாது. வயல் மட்டத்திற்கு கீழ் சிறிது நீர் கிடக்கும். உழைப்பின் பயன் வீணாகாமல் இருப்பதற்காக உழவர்கள் பள்ளத்தில் உள்ள நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இதற்காக பனை ஓலையாலோ, இரும்பாலோ செய்த இறவைப் பெட்டிகளை பயன்படுத்துவார்கள். அதன் இரண்டு முனைகளிலும் கயிறுகளைக் கட்டி பக்கத்திற்கு ஒருவராக நின்று கொண்டு நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இந்த வேலையில் உடல் வலி தோன்றாமலிருப்பதற்காக இறவைப் பெட்டியின் அசைவிற்கு ஏற்ப

“கைமாத்துக்காரா

கச்சைக் கட்டும் தோழா

நான் இறைத்த நேரம்

நீ இறைக்க வாடா

கை வழியே வாடா

கைவலியும் தீர

மேல் வழியே வாடா

மேல்வலியும் தீர

காளியாத்தா தாயே

கால்கள் வலியாமல்

மீனாட்சி அம்மா

மேலுவலியாமல்

கருப்பண்ண சாமி

கைகள் வலியாமல்

முத்து முனியாண்டி

உத்த துணை நீயே

ஏர்வாடி அல்லா

எனக்குத் துணை நீயே” என்று பாடுவார்கள்.

அறுவடைக்கு கூட்டம் கூட்டமாக உள்ளூர் வேலையாட்களும், வெளியூர் வேலையாட்களும் வருவார்கள். கதிரறுத்து, கட்டுக்கட்டி, களத்துக்கு தூக்கிச் சென்று, வட்டம் உதறி, புணையடித்து, மணி தூவி, நெல்லை குவியலாகக் குவிப்பார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் சோர்வு தோன்றும்போது ,

“ஊரோரம் கதிரறுத்து

உரலு போல கட்டுக்கட்டி

தூக்கி விடும் மச்சானே

தூரகளம் போய்ச்சேர

கருதறுத்துக் கிறுகிறுத்து

கண்ணு ரெண்டும் பஞ்சடைச்சி

தூக்கி விடும் மச்சானே

தோப்புக் களம் போய்ச்சேர..

நெல்லுக் கருதறுத்து

நிமிர்ந்து நிற்கும் செவத்தபுள்ள என்

சொல்ல மறந்திராத நீ

சொன்னபடி நானிருப்பேன்

தும்ப மலர் வேட்டி கட்டி

தூக்குப் போணி கையிலேந்தி

வாராக எங்க மாமன்

வட்டம் உதறுதற்கே” என இந்த அறுவடைப் பாடல்களைப் பாடுவார்கள்.

உழைக்கும் மக்களின் வாழ்க்கையில்; அவர்களது சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்களாக நாட்டுப்புற பாடல்கள் விளங்குகின்றன. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அப்படிப்பட்ட அந்த உழவுத் தொழிலில் ஈடுபடும் உழவர்களுக்கு மனதில் தெம்பையும், உற்சாகத்தையும், வழங்கி விவசாயத்தொழில் சிறக்க அறிவியல் வளர்ச்சியடையாத காலத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் பெரிதும் உதவின என்பது யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

No comments:

Popular Posts