Friday 20 March 2020

ஒரு ஊருல ஒரு ராஜா...!

கே.பாக்யராஜ். திரைப்பட இயக்குனர்.

இ ன்று (மார்ச் 20-ந்தேதி) கதை சொல்லும் தினம்.

நீங்ககூட காதாசிரியர்தான்.இப்படி சொல்வது உங்களுக்கு ஒரு சின்னக் குழப்பம், திகைப்பு, அதிர்ச்சி, ஆச்சரியம் இப்படி ஏதாவது ஒரு உணர்வை கண்டிப்பா கொடுத்திருக்கும். ஆனா அது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் அல்ல; முழுக்க முழுக்க உண்மையான விஷயம்தான் எப்படின்னா..

நம்ம எல்லாருமே ஒரு கதாசிரியர் தான்; நமக்குள்ள கதை பண்றதுக்கான, ஒரு ‘ஸ்ட்ராங்கான’ அடித்தளம் இருக்கு. இதுவரை எல்லாருமே உங்க வாழ்க்கையில எத்தனையோ கதைகளை பண்ணியிருப்பீங்க. கொஞ்சம் உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளுக்குப் போங்க. அதாவது 4 லிருந்து 5 வயசு. நம்ம வீட்ல, ஸ்டாண்டு மேல இருக்கற ஏதாவது ஒரு வேல்யூவான பொருளை விளையாட்டுத்தனமா எடுத்து, கை தவறி உடைச்சிருப்போம். அது சிதறி விழுந்ததைப் பார்த்ததுமே உங்க மனசு பதற ஆரம்பிச்சிருக்கும். “ஐயோ! அம்மா, அப்பா வந்து இப்ப தோலுரிச்சிடுவாங்களே” அப்படிங்கற கிலியான ஒரு கேள்வி உங்க கண்ணு முன்னால வந்து விஸ்வரூபமா நிக்கும்.

யாரும் கவனிக்கலேன்னா டக்குன்னு அந்த இடத்தை காலி பண்ணி ஓடிடுவோம். ஓட முடியாதவங்கதான் பாவப்பட்ட ஜென்மங்க. ஏன்னா, உடைஞ்ச சத்தம் கேட்டு அம்மாவோ, அப்பாவோ இல்லே பெரியவங்களோ யாராவது உடனடியா வந்ததுமே உடைச்சது நீங்கதான்னு உறுதி பண்ணிடுவாங்க. ஏண்டா உடைச்சேன்னு கேள்வியே கேட்காம, டப்பு டப்புன்னு நம்மளைப் போட்டு சாத்தறவங்க பாதிப்பேரா இருப்பாங்க. சிலர் சம்பந்தமே இல்லாம நம்மையும், உடைஞ்ச பொருளையும் மாறி மாறிப் பார்த்துட்டு, “எப்படி உடைஞ்சது?”ன்னு ஒரு மேதாவித்தனமான கேள்விய எழுப்புவாங்க.

நம்மள்ல சிலர், “சாரி மம்மி! எடுக்கும் போது தவறி விழுந்துருச்சு”னா எதார்த்தமா உண்மையை உளறிக் கொட்டிருவோம். இவங்ககிட்ட கதை இல்லை. அதாவது கதைய உருவாக்கிற யுக்தி அப்ப உருவாகலை. சிலர் அந்த கேள்விக்கு “இல்லை மம்மி! அதுக்கு பக்கத்துல இருந்த வேற ஒண்ணத்தான் எடுத்தேன். இது தெரியாம கைப்பட்டு விழுந்து, உடைஞ்சிருச்சுன்னு ஒரு சுமாரான கதைய சொல்லுவோம். இதுக்கும் அடி உண்டு!. இந்த அடிக்கு பயப்படறவங்கதான் டக்குன்னு சமயோசிதமா தப்பிக்கிறதுக்காக அவசரமா ஒரு கதைய யோசிப்போம். அதாவது “மம்மி! நான் காத்துக்காக இதோ இந்த ஜன்னலைதான் திறந்தேன். டக்குன்னு காத்து பலமா அடிச்சதுல அது அப்படியே கிழே விழுந்து உடைஞ்சிருச்சு”ன்னு சொல்வோம்.

இந்த நம்ம பதில், “லாஜிக்கா இருக்கா; இதை எதிராளி நம்பு வாங்களா இல்லையா?”. இது அந்த நேரத்துல நமக்கு தோணாது. ஆனா தப்பிக்க அவசரமா நாம ஒரு கதைய உடனே உருவாக்கிட்டோம் அதுதான் இப்ப பாயிண்ட்.

இப்படி நம்மளையறியாமலேயே, சின்னவயசிலிருந்தே நாம கதாசிரியர்களா உருவாக ஆரம்பிச்சிருக்கோம். ஸ்கூல்ல “ஏண்டா ஹோம் ஒர்க் பண்ணலை?, நேத்து ஏண்டா லீவு?, எதுக்குடா அவனை அடிச்சே, இல்லே ஏன் அவன் நோட்டை கிழிச்சே?” இப்படி எதிர்கொள்ற ஒவ்வொரு கேள்விக்குமே, அழகா ஒரு கதையை உருவாக்குறோம். அது கதை இல்லயே; பொய்தானே? அப்படித் தோணுதா? அது கரெக்ட்!. “பொய்ங்கறதுதான் கதை. அதுதான் ஆரம்பம் அப்பறம் போகப்போக அது மெய்யான கதைகளாவும் மாறுது. இந்த பொய்ங்கற கதைகளை, நாம்தான் சின்ன வயசுல உருவாக்குறோம் அப்படின்னு நினைக்காதீங்க. நமக்கு சின்ன வயசா இருக்கும்போதே, பெரியவங்க நம்மளை சாப்பிட வைக்க, தூங்க வைக்க ஒரு ஊருல ஒரு ராஜா உள்பட எத்தனையோ பொய்க்கதைகளை சொல்றதில்லையா? அங்கிருந்துதான் நமக்கு கதை சொல்ல‘ ‘ட்ரெய்னிங் ஸ்டார்ட்’ ஆகுது.

நம்ம நண்பர்கள்கிட்ட ஒரு அவசரத்துக்கு பணம் உதவி கேட்கும்போது, ‘ஐயோ புரோ! கைல இருந்தது இப்பதான் நம்ம ராம் வந்து அவசரமா கேட்டான்னு கொடுத்துட்டேன். கொஞ்சம் முன்னால நீ வந்திருக்க கூடாதா?” அப்படிங்கும் போது, அவன் என்னமா கதை விடுறான்னு நமக்கு எரிச்சலா வரும். அதே, நம்ம கிட்ட உதவி கேட்டு ஒருத்தர் வரும்போது, அவனுக்கு குடுக்க பிரியமில்லாதப்போ, நாம நமக்கு சொன்ன கதையவிட, பெட்டரா ஒரு கதைய யோசிச்சு சொல்லுவோம். இது பொண்ணு பார்க்க போறதிலிருந்து, பொண்டாட்டி, புள்ளைங்ககிட்ட தொடர்ந்து கடைசிவரைக்கும் நம்மளை விடாம தொத்திக்கும்.

அதனாலதான் நான், நம்ம எல்லாருமே கதாசிரியர்கள்தான்னு சொன்னேன். சரி, இப்ப கதைகள்ல எத்தனை விதங்கள் இருக்குன்னு பார்ப்போம்.

நாம நம்ம சூழ்நிலைக்காக உருவாக்கறது வழக்கமான கதைகளாவும், சாதாரண கதைகளாவும்தான் இருக்கும். அதே நம்மளை சுத்திவரப்பார்த்தம்னா வேற மாதிரி நிறைய கதைகள் தினசரி நடந்துட்டே இருக்கும். நம்ம ஏரியாவுல, தன்னோட மனைவி குழந்தைகளை விட்டுட்டு ஒரு கணவன் எங்கேயோ ஓடிப்போயிட்டான் அப்படின்னா அது அந்தக் குடும்பத்துக்கு சோதனையான சோகம். நமக்கு அவங்க வாழ்கை ஒரு சோகமான கதை.

அந்த சோகமான கதையைத்தான் உங்களுக்கு சினிமாவா சொன்னேன். என்னுடைய முதல் படமான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’. திரைப்படத்துக்கு அடித்தளமே நான் முன்னால சொன்ன ஒரு குடும்பத்தோட கதைதான். அதாவது நான் சின்ன வயசுல, என் ஏரியாவுல அப்படி ஒரு உருக்கமான குடும்பத்தோட வாழ்க்கையப் பார்த்தேன். அது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. அதனால அதையே கதைக்களமா அமைச்சுட்டேன். அதுக்கு கண், காது, மூக்குன்னு கொஞ்சம் கற்பனைகளை திரைக்கதையா ஜோடிச்சு, அதுக்கு ஒரு முழு பரிமாணம் கொடுத்தேன்.

இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே; நம்ம வாழ்க்கையிலே இப்படிப்பட்ட எத்தனையோ சோகங்களை, சுவாரஸ்யங்களை, ஏமாற்றங்களை, சுக துக்கங்களை நாம சந்திச்சிருப்போம்னு!. அது நம்மளை பாதிச்சிருக்கும். ஆனா அதெல்லாம் கதைங்கறதை நாம கூர்ந்து கவனிக்காம விட்டுருப்போம். தினசரி அதே மாதிரி நம்மளை சுத்தியும் இந்த சமுதாயத்துல எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டேதான் இருக்கும். அது எல்லாம் நாம சாதாரண நிகழ்வா எடுத்துக்குறோம் அதையே ஒரு கதாசிரியன் தன்னோட கதைக்கான விதையா எடுத்துக்குறான். அதுல கொஞ்சம் முன்ன பின்னே தன்னோட சில கற்பனைகளை கலந்து, அதுக்கு புதுசா ஒரு முழுப்பரிமாணத்தை கொடுக்கிறான்.

என்னோட “ஒரு கை ஓசை” படத்துல ஹீரோ ஒரு ஊமைக் கதாபாத்திரம். அது சின்ன வயசுல, ஸ்போர்ட்ஸ் கிளப்புல நான் பார்த்த ஒரு உண்மையான நபர்தான். அவருடைய பேச்சு வார்த்தைகள் உணர்வுகளை நான் மனசுல பதிச்சு வச்சிருந்தேன். மத்தபடி அவர் வாழ்க்கையில நடந்த விஷயங்களை நான் கற்பனையா உருவாக்கினேன்.

அதே மாதிரி “அந்த 7 நாட்கள்” படக்கதை, சந்திரபாபுவை நான் திரைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். நேர்ல பார்த்ததில்லை. சென்னைக்கு வந்தபின், நான் தங்கியிருந்த மேன்சன் ஹவுஸ்ல இருந்த சில நாடக நடிகர்கள் அவர் வாழ்க்கையப் பத்தி பொழுதுபோக்கா பேசிட்டிருந்தாங்க. அதுல அவர் திருமணமாகி மனைவி கூட வந்தப்போ மனைவி, தான் வேறு ஒருவரக் காதலிச்சதா சொல்லி அழுததும், சந்திரபாபு அவரை காதலன்கிட்ட அனுப்பி வச்சார்னு பேசிகிட்டாங்க. அது உன்னதமான ஒரு கதாபாத்திரமா என்மனசுல பதிஞ்சது. அவரை ஹீரோவா மனசுல வச்சு கதையத் தொடங்கினேன். நான் பின்னால என் கற்பனைப்படி, மாதவங்கற மலையாளி கதாபாத்திரத்தை உருவாக்கி நம்ம பண்பாடு கலாசாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்லி, கதையை மக்கள் ரசிக்கும்படி வேற கோணத்துல சொல்ல ஜனங்களுக்கு பிடிச்சு வெற்றி பெற்றது.

ஆக, கதை என்பது நமக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. நம்மைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் நடக்கலாம். அவை விந்தையாவும், விபரீதமாவும், விசித்திரமாவும் எத்தனையோ உணர்வுகள்ல நடந்திருக்கலாம்.அது நமக்குள்ள ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தா, நிச்சயம் அந்த பாதிப்பு மத்தவங்களுக்கு வரும்னு நம்பிக்கையோட தொடங்கினா நம்ம நிறைய படைப்புகளைக் கொடுக்க முடியும்.

அதாவது ஒரு கதாசிரியர் இந்த சமூகத்தோட நடவடிக்கைகளை அப் டு டேட் அதை கவனிச்சுட்டே இருக்கணும். அப்பதான் அவன் நல்ல படைப்புகளை உருவாக்க முடியும். அதனால கதை எழுதுவது ஒரு மிகப் பெரிய பிரமிப்பான விஷயமா, யாரும் நினைக்க வேண்டிய அவசியமில்லை. சுற்றிவர கூர்ந்து கவனிப்பதும், கொஞ்சம் கற்பனை வளமும் இருந்தால் எல்லோராலுமே கதை எழுத முடியும். நம்பிக்கைதான் முக்கியம்.

கதை சொல்லும் நாளில், நமது தினத்தந்தி பத்திரிகையில் எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். நன்றி கூறிக்கொள்கிறேன்.

No comments:

Popular Posts