Tuesday, 11 February 2020

பயண இலக்கிய ஞாயிறு!

பயண இலக்கிய ஞாயிறு! By இலக்கிய வீதி இனியவன்  |   "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் அமரர் "சோமலெ'ஆகச்சிறப்பான அங்கம் வகிப்பவர். சோமசுந்தரம் லெட்சுமணன் எழுத்தாளர் "சோமலெ' ஆனது சுவாரஸ்யமான வரலாறு. 11.2.1921-இல் பிறந்த சோமலெயின் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிறது.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பத்திரிகைத் துறை படிப்பில் ஆர்வம் கொண்டார். எனவே, மும்பை ஹாரிமன் இதழியல் கல்லூரியில் சேர்ந்து "பட்டயப் பயிற்சி'யை நிறைவு செய்தார். என்றாலும், கற்ற கல்வி சார்ந்த பணி தேடாமல் விவசாயம் மீது விருப்பம் கொண்டார். நவீன முறையில் கலப்புப் பண்ணையம் நிறுவ விரிவான திட்டங்கள் வகுத்தார்.

வேளாண்மை விழைவால் ஏற்பட்ட பெரும் பொருளிழப்பைச் சரிசெய்ய, இல்லத்தார் நடத்திவந்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் ஈடுபட முடிவு செய்தார் சோமலெ.  ஆறு மாதம் உலக உலா நிகழ்த்தினார். அங்கே கற்றதும் பெற்றதுமாக மீண்ட சோமலெ, ""வணிகனாகப் போனேன்... எழுத்தாளனாகத் திரும்பியிருக்கிறேன்'' என உவகையுடன் உரைக்கலானார்.

எழுத்துலகில் பலரும் படைப்பிலக்கிய நாட்டம் உடையவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இவரோ, பயண இலக்கிய ஆளுமையால் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். இவருக்கு, "முன்மாதிரி' ஏ.கே.செட்டியார். உலக நாடுகள் பற்றி அவர் எழுதிய சில நூல்கள் உருவாக்கிய உந்துதலே, இவரை அவர் வழியில் பாதம் பதிக்க வைத்தது.

தமிழ்கூறும் நல்லுலகில் ""சோமலெ' என்றால், "தெரியலெ' என எவரும் சொல்ல மாட்டார்கள்'' என்பார் பிரபல எழுத்தாளர் சாவி.
ஆனந்த விகடனிலும் இதைப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் அறுதிப் பெரும்பான்மையான பத்திரிகை ஆசிரியர்கள் இவரது கட்டுரையைக் கேட்டு வாங்கி வெளியிடுவார்கள். சோமலெ "எழுத்து' இல்லாத பொங்கல், தீபாவளி மலர்களைக் காண்பதே அரிது.

"அமெரிக்காவைப் பார்' என்பது இவருடைய முதல் நூல். பயண நூல்களில்  பெரும்பாலும் தேவையற்ற புள்ளிவிவரங்கள் பொதிந்திருக்கும். சுயபுராணம் சூழ்ந்திருக்கும். வந்தநாடு தந்த மயக்கத்தால் அதைப் புகழ்ந்தும், சொந்த நாட்டை இகழ்ந்தும் பேசும் போக்கு மிகுந்திருக்கும். ஆனால், சோமலெயின் விவரிப்பில் விவேகம் இருந்தது. நிறை - குறைகளைச் சுட்டும் கண்ணோட்டத்தில் நடுவுநிலைமை பளிச்சிட்டது.

"அமெரிக்காவைப் பார்' நூலை அடுத்து, "ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்' எனும் நூல் வெளியாயிற்று. அதைத் தொடர்ந்து, "உலக நாடுகள் வரிசை' என, மேலும் பத்து நூல்களுக்கு ஆசிரியரானார், சோமலெ.

"நடமாடும் தகவல் களஞ்சியம்' என, அறிஞர் உலகம் இவரை  வியந்து பாராட்டியது. எனவேதான், "ஆப்பிரிக்க நாடுகள் வரிசை'யில் பன்னிரண்டு நூல்களை இயற்றி, இன்னொருவர் செய்ய முடியாத சாதனையை இவரால் செய்ய முடிந்தது. இவற்றைத் தவிர, ஆய்வறிக்கைகளாக, கட்டுரைத் தொகுப்புகளாக, சிறுசிறு நூல்களாக சோமலெ படைத்துள்ள "உலகப் பயண' நூல்கள் மட்டுமே நாற்பதை நெருங்கும். கிட்டத்தட்ட இவர் எழுதிய மொத்தப் புத்தக எண்ணிக்கை சுமார் எழுபது இருக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் சுதந்திர எழுத்தாளராக விளங்கிய சோமலெவுக்கு, எதிர்பாராமல் சில பொறுப்புகள் கிட்டின. அண்ணாமலைப் பல்கலைக்கழக "மக்கள் தொடர்பு அலுவலர்', அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி "தாளாளர்',சென்னைப் பல்கலைக்கழக "ஆட்சிக் குழு உறுப்பினர்', மதுரை காமராசர் பல்கலைக்கழக "ஆட்சிப் பேரவை உறுப்பினர்' என, பல நிலைகளில் நின்று சிறப்புற்றார்.

1996-இல் தொடங்கப்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், 1965 முதல் 1971வரை "சர்வகலாசாலை', "ரிஜிஸ்ட்ரார்' போன்ற அயல்மொழிச் சொற்களையே நிர்வாகம் பயன்படுத்தி வந்தது.

அப்போதைய துணை வேந்தர், தன்னிகரில்லாத தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம். "அவர் காலத்தில் இந்த நிலையா?' என நெஞ்சம் கொதித்து, கிளர்ச்சி செய்யவும் சோமலெ ஆயத்தமானார். இதை அறிந்த தெ.பொ.மீ., இவருக்கு இசைவாக ஆணை பிறப்பித்தார். "பல்கலைக்கழகம்', "பதிவாளர்' எனும் தூய தமிழ்ச் சொற்கள் உடனே நடைமுறைக்கு வந்தன.

இதழியல், அரசியல், சமயவியல், தொழிலியல், மொழி ஆய்வு, நகரத்தார் இயல் ஆய்வு, அரிய பெரிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு, பல்கலைக்கழக வரலாறு, கோயில் குடமுழுக்கு விழா மலர்கள், பல்சுவைக் கட்டுரைகள், சிறுவர்க்குச் சில கதைகள் என சோமலெ பல்வேறு தலைப்புகளில், பல்வேறு துறைகளில் தோய்ந்து ஏராளமாக, அதே சமயம் ஏற்றம் துலங்க எழுதினார். பல நூல்களைத் தமிழிலும், சில நூல்களை ஆங்கிலத்திலும் எழுதிப் புகழ் குவித்தார்.

இவர் எழுதியவற்றுள், "தமிழக மாவட்ட வரிசை' தொகுப்புகளைத் தவிர்க்கவே இயலாது. "உலக நாடுகள் குறித்து எழுதியதைவிட, உள்ளூர்கள் பற்றி எழுத அரும்பாடு படவேண்டியதாயிற்று' எனும் சோமலெ, மேலும் இப்படி விவரிக்கிறார்:

""மாவட்டத்தின் பல பகுதிகளில் அலைந்தேன். அறிஞர் பலரைப் பார்த்துப் பேசினேன். பாமரரிடமும் தகவல் திரட்டினேன். எல்லா நூலகங்களுக்கும் போய்த் தரவுகள் தேடினேன். தொன்மையான புத்தகங்களை அலசினேன். பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாநாட்டு அறிக்கைகள், கல்லூரி ஆண்டு மலர்கள் என எதையும் விடவில்லை. பழைய புத்தகக் கடைகளையும் பாக்கி வைக்கவில்லை. ஆகப் பழைய ரயில்வே அட்டவணையும் இவற்றுள் அடங்கும்.
இந்த அடிப்படை முயற்சிகளோடு அந்த மாவட்டத் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமுதாய அக்கறையுடைய ஊர்ப் பிரமுகர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கடிதமும் அனுப்பினேன். கல்லில் நாரெடுக்கும் முயற்சிதான்...

1961-இல் எடுத்த பணி 1980-இல்தான் முழுமையாயிற்று. பத்து மாவட்டங்கள் பற்றி எழுதி நிறைவு செய்ய இருபது ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆரம்பத்தில் அலுப்பாக இருந்தாலும், எழுத்துப்பணி முடித்தவுடன், எல்லையில்லாத மனநிறைவு கிட்டியது''-என முத்தாய்ப்பை எட்டுகிறார்.

சோமலெ, பத்து மாவட்ட நூல்களுக்கும் அந்தந்தப் பகுதி சார்ந்த அறிஞர் களிடம் அணிந்துரை வாங்கியிருப்பது நல்ல உத்தி. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு - தெ.பொ.மீனாட்சிசுந்தரம்; வடஆர்க்காடு மாவட்டம் - மு.வரதராசன்; தென் ஆர்க்காடு மாவட்டம் - அ.சிதம்பரநாதன்; சேலம் மாவட்டம்  - மேனாள் மத்திய அமைச்சர் ப.சுப்பராமன்; கோவை மாவட்டம் - மேனாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம்; இராமநாதபுரம் மாவட்டம் - மன்னர் சேதுபதி என, இப்படி வரிசை நீளும்.

வடார்க்காடு மாவட்ட நூலுக்கான அணிந்துரையில், ""அயல் நாடுகள் பற்றி மிகுதியாக எழுதிய சோமலெயின் எழுதுகோல் தமிழ்நாட்டைப் பற்றியும் எழுத முன்வந்திருப்பது மகிழத்தக்கது''
என உவகையுடன் உரைத்திருக்கிறார் டாக்டர் மு.வ.ஒரு தந்தைக்கு வள்ளுவர் வகுத்த இலக்கணப்படி வாழ்ந்தவர் சோமலெ. இவருடைய தனயன் சோமசுந்தரமோ குறள் கூறும் இலக்கியமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர். வேளாண் விஞ்ஞானியான இவருக்கு, அமெரிக்காவில் பணி. சோமலெ அமரரான ஆண்டு, அவர் பிறந்த மண்ணான "நெற்குப்பை' பெருமை கொள்ளும்வண்ணம், அவர் பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் நிறுவி, தந்தையின் உருவச் சிலை வைத்து, ஊர் மக்கள் என்றென்றும் உளங்கொள்ளுமாறு செய்திருக்கிறார் சோமசுந்தரம்.
11.2.2020-இல் "சோமலெ நூற்றாண்டு' தொடங்கி, 11.2.2021-இல் நிறைவுறுகிறது.


கட்டுரையாளர்:
செயலர், சென்னை கம்பன் கழகம்.

No comments:

Popular Posts