Saturday, 11 January 2020

தமிழ் போற்றும் தெய்வங்கள்

தமிழ் போற்றும் தெய்வங்கள் | By கோதை ஜோதிலட்சுமி  |  ஆதவன் மெல்ல தன் கிரணங்களை விரிக்கத் துவங்க விடியல் இதோ கண்முன்னே எழுகிறது. அமைதி குடிகொண்டிருந்த மதுரை மூதூரில் அந்தணர் தம் கடமைகளுள் தலையாயதான வேதம் ஓதுதலைத் தொடங்குகிறார்கள். அந்தணர் ஓதும் வேத மந்திர ஒலி சூரிய கிரணங்களோடு சேர்ந்து மேலெழும்பி நகரெங்கும் பரவுகிறது.  பொழுது புலர்ந்ததை மக்கள் உணர்ந்து கண்விழிக்கிறார்கள். மதுரை இப்படித்தான் அன்றாடம் கண்விழித்ததாக பரிபாடல் சொல்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதற்கான காலக் கண்ணாடி இலக்கியங்கள். வரலாற்றுப் பெட்டகம் என்றும் கலாசாரத்தின் பதிவு என்றும் நாம் போற்றுபவை சங்க இலக்கியங்கள். அவற்றுள் ஒன்றான பரிபாடல் இப்படி மதுரை மூதூரைக் குறிப்பிடுகிறது என்றால், புறநானூற்றில் மற்றொரு காட்சி உவமையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. கானகத்தில் முனிவர்கள் வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடத்துகிறார்கள். அப்போது அவர்களுக்கு அருகே மான்கள் பாதுகாப்புடன் அமைதியாகப் படுத்துக் கொண்டு அவற்றை வேடிக்கை பார்க்கின்றன. இத்தகைய ஏராளமான எடுத்துக்காட்டுகளும் தகவல்களும் இருக்கின்றன.

இன்றைக்கு தமிழர்கள் எவ்விதத்திலும் ஹிந்துக்களே அல்லர் என்று கோஷமிடுகிறார்கள். தமிழர் என்று தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் இவர்கள் தமிழ் இலக்கியங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நம் வழிபாட்டு முறைகளை, தொன்றுதொட்டு தமிழருக்கு இருக்கும் நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. எதன் பொருட்டு இந்தத் தகவல்களை அவர்கள் மறைக்க முயல்கிறார்கள்? தமிழருக்கும் ஹிந்து சமயத்துக்கும் தெய்வங்களுக்கும் தொடர்பு இல்லை என்று இவர்கள் சாதிப்பதற்கான காரணம் என்ன? இதனால் தமிழர் என்பவர் எத்தகைய தெய்வ நம்பிக்கையில் தம் வாழ்வை கட்டமைத்துக் கொண்டவர்கள் என்ற உண்மையை சற்றே நினைவுகூர்வது காலத்தின் கட்டாயமாகிறது.

தமிழரை ஹிந்துக்கள் அல்லர் என்று சாதிப்போர், சமயம் என்ற சொல்லோ அல்லது மதம் என்ற சொல்லோ எவ்விடத்திலும் சங்க இலக்கியத்தில் அல்லது எந்த ஆதாரங்களிலும் காணப்படவில்லை என்று கூறுகிறார்கள். நாமும் அதைத்தான் வலியுறுத்துகிறோம். சமயம் என்ற சொல் பாரத தேசத்தில் முற்காலத்தில் வழக்கில் இருந்ததில்லை. சனாதன தர்மம் என்றே வழங்கப்பட்டு வந்தது. நாம் வாழ்வியல் அறம் என்றோம். சமயம் என்ற சொல் பின்னாளில் ஏற்பட்டதுதான்.

ஸ்ரீமத் பாகவதத்தில், இந்திரனுக்கு விழா எடுப்பதும் வழிபாடு நடத்துவதும் வழக்கம். அப்படிச் செய்யாதபோது, பெருமழை பெய்து அவர்களின் வாழ்வாதாரம் குலைந்து போகும்படியான சூழல் ஏற்படுகிறது. அப்போது கிருஷ்ண லீலைகளில் ஒன்றான கோவர்த்தனகிரியை தன் சுண்டு விரலில் தூக்கி நிறுத்தி கோவலர்களைக் காக்கும் கிருஷ்ண லீலை வருகிறது.  இதேபோன்ற நம்பிக்கையை நாம் தமிழகத்திலும் காண்கிறோம். இந்திரவிழா பற்றிய செய்திகளும், இந்திரன், தேவலோக அமிழ்தம் பற்றிய குறிப்புகளும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம், திருக்குறள் என ஏறத்தாழ எல்லா நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்திர விழாவும் அதையொட்டிய வழிபாடுகளும் நடத்தப்படாதபோது காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டதாக மணிமேகலை கூறுகிறது. ஸ்ரீமத் பாகவதம் கூறும் லீலைக்கும் தமிழர்களின் நம்பிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை நாம் மறுக்க முடியாது.

இந்திரனை தெய்வம் எனத் தமிழ் மக்கள் வணங்கினர் என்பதை தொல்காப்பியரே உறுதி செய்துவிட்டார். அதே நேரத்தில் இன்றுவரை அந்தணர்கள் வாழ்வியல் கடமையாகக் கருதும் சந்தியாவந்தனம் செய்யும்போது கூறும் மந்திரங்கள் இந்திரனை ஆராதிப்பன என்ற உண்மையைப் பதிவு செய்வது கட்டாயமாகிறது."கோயில் என்னும் அமைப்பு அரசியல் நோக்கம் கொண்டது, மக்களை ஏமாற்றும் தந்திரம்' என்று கடவுள் மறுப்பாளர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். சங்க காலத்தில் கோயில் வழிபாடு இல்லை என்றும் பொய்யுரைக்கிறார்கள். ஆனால், ஊர் நடுவே தெய்வங்களுக்கு மன்றம் அமைத்து வழிபாடு நடத்தியதை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் இயம்புகின்றன. கோட்டம், மன்றம் என்று கோயில்கள் வழங்கின. 

இந்திர விழாவின்போது கற்பகக் கோட்டத்தில் வெள்ளை யானை கொடியேற்றப்பட்டு தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெற்றன. 28 நாள்கள் திருவிழா நடைபெற்றது. காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் நகருக்கு நடுவே தெய்வங்களுக்குரிய கோட்டங்கள் இருந்ததாகக் கூறும் இலக்கியங்களை இந்தச் சனாதன மறுப்பாளர்கள் தமிழ் இலக்கியம் என்று ஏற்கப்போவதில்லையோ?

அடுத்து, சிவன் என்ற சொல்லே ஆதித் தமிழகத்தில் கிடையாது; இவை வட நாட்டவரால் நம்மவரிடம் திணிக்கப்பட்ட தெய்வ வழிபாடு என்று திரித்துக் கூறுவது.  சங்க இலக்கியங்களில் ஆதிரையான், ஆலமர் செல்வன், ஈசன், தாழ்சடைப் பெரியோன், மணிமிடற்றன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், முக்கட் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையோன், பிறவா யாக்கைப் பெரியோன் என்றெல்லாம் புகழப்படும் தெய்வத்தை சிவன் என்று கொள்ளாமல் வேறு எங்ஙனம் கொள்வது? புராணச் செய்திகள், முப்புரம் எரித்த சிவபெருமானின் செயல்கள் பல பாடல்களில் விளக்கப்படுகின்றன. பாலை நிலத்தில் கொற்றவை வழிபாடு செய்யப்படும்போது சிவனுக்கும் வழிபாடு நிகழ்ந்தது. பாண்டிய நாட்டில் 7 நாள்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப் பெற்ற தகவல் சிறுபாணாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தினின்று இதனை மறைக்க முடியுமா?

எட்டுத்தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு. ஒளவைப் பாட்டியை ஏற்காத தமிழர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழரின் அடையாளம் ஒளவை. அதியமான் ஒளவைக்கு நீண்டநாள் வாழ்வளிக்கும் நெல்லிக்கனியைத் தந்த வரலாற்றைத் தமிழகம் அறியும். நெல்லிக்கனி பெற்ற ஒளவை,  "பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே' என்று அதியமானை வாழ்த்துகிறார். அதாவது, "சிவனைப் போல நிலைபெற்று வாழ்வாயாக' என்கிறார். "ஒளவை தமிழச்சி இல்லை' என்று சாதிக்கப் போகிறார்களா சனாதன எதிர்ப்பாளர்கள்?

ஆதிசங்கரர் ஷண்மதம் என்று கூறுகிறார். காணபத்தியம், கெளமாரம், செளரம், சாக்தம், சைவம், வைணவம் என்பனவே அவர் கூறும் ஆறு வழிபாட்டுப் பிரிவுகள். அவற்றுள், "கெளமாரம்' என்பது முருகக் கடவுளின் வழிபாடு; இதனைத் தமிழகத்தில் குறிஞ்சிநில மக்கள் செய்துவந்தனர். "சாக்தம்' என்பது சக்தி வடிவில் பெண் தெய்வ வழிபாடு. இதனைப் பாலைநில மக்கள் மேற்கொண்டு இருந்ததையும், "சைவம்' என்று சிவபெருமானை பரம்பொருளாக வணங்கியதைக் கூறும் வழிபாட்டு முறையை தமிழகம் மேற்கொண்டிருந்ததை மேலே கண்டோம்.

திருமால் வழிபாட்டை "வைணவம்' என்று ஆதிசங்கரர் கூறுகிறார். அதனை முல்லை நில மக்கள் பின்பற்றினர். செளரம் என்பது, சூரியனை வழிபடுவது தமிழர் வாழ்வோடு இணைந்த வழிபாடு இது என்பதனை இன்றளவும் தமிழர் திருநாளில் சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி கூறும் திருவிழாவாகவே கொண்டாடும் பான்மையிலிருந்து அறிகிறோம்.

"ஸ்மார்த்தம்' என்ற ஒரு சொல்லை ஆதிசங்கரர், மேலே கூறிய ஆறுவகை தெய்வங்களையும் ஏற்று வழிபடும் முறைக்குப் பயன்படுத்துகிறார். இத்தகையோர் தமிழகம் முழுவதும் இன்றளவும் காண்கிறோம். இப்படி சனாதனத்தைப் பின்பற்றுவோர் ஜகத்குரு என ஏற்றுப் போற்றும் ஆதிசங்கரர் குறிப்பிடும் வழிபாட்டு முறைகளை, தெய்வங்களை தமிழர் பின்பற்றியதை எதைக் கொண்டு மறைக்க முடியும்?குறி கேட்பது, நிமித்தம் பார்ப்பது, நேர்த்திக்கடன் செய்து கொண்டு அதனை நிறைவேற்றுவது போன்ற வழிபாட்டு முறையோடு தொடர்புடைய செய்திகளையும் வழக்கங்களையும் தமிழர் கொண்டிருந்ததை நிறுவுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.

இதனை இலக்கியங்களிலிருந்து மறைக்கவோ மறக்கவோ இயலுமா?
நடுகல் வழிபாடு, முன்னோரையும் தெய்வமாக வணங்கும் முறை தமிழர்களிடம் பெருமளவில் இன்றும் இருந்து வருகிறது. நம் முன்னோர் இறைநிலை அடைந்தனர் எனும் தத்துவத்தை நம்புவதே குலதெய்வ வழிபாடு. சொர்க்கம் குறித்த நம்பிக்கை, சைவ சித்தாந்தம் கூறும் இறையோடு கலத்தல் என்பனவே இந்த வழிபாட்டின் அடிப்படை.

போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்யும் வழக்கம் இருந்ததை திருக்குறள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவை உணர்த்துகின்றன. பதிவிரதைகளாக வாழ்ந்த பெண்களுக்கும் நடுகல் எடுக்கப்பட்டது. நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றித் தொல்காப்பியம் விளக்கமாக எடுத்துச் சொல்கிறது. இந்தியா முழுவதும் நடுகற்கள் இருப்பதும் சிந்திக்கத்தக்கது. வழிபாடு, தெய்வங்கள், அவற்றிற்கான கோட்டங்கள், காக்கும் தெய்வம் என நம்பி மக்கள் வழிபட்ட பான்மை, தொடர்ந்து வரும் சடங்குகள், மெய்யியல் தத்துவங்கள், அது குறித்த தமிழர்தம் புரிதல் சனாதன தர்மத்தை ஒத்திருக்கின்றன. கண்மூடித்தனமாக காழ்ப்புணர்வோடு நம் முன்னோரின் நம்பிக்கைகளை இல்லையென்று சாதிப்பதைக் காட்டிலும், அவற்றில் காலத்திற்கேற்ப எது நமக்கு உகந்தது என்பதைக் கண்டறிந்துத் தெளிவதே அறிவுடைமை. 

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

No comments:

Popular Posts