Saturday 11 January 2020

தலைமுறையை காப்பாற்றும் தலைக்கவசம்

தலைமுறையை காப்பாற்றும் தலைக்கவசம் | முனைவர் ஜெ.லோகநாதன்,
ஐ.பி.எஸ்., | காவல் துறை துணைத்தலைவர் | தஞ்சாவூர் சரகம். | உலக நாடுகளில் ஏற்படும் மனித உயிரிழப்பிற்கு ஒரு மிக முக்கிய காரணமாக விளங்குவது சாலையில் ஏற்படும் விபத்துகளாகும். உலகத்தில் ஒருவருடத்தில் சுமார் 13.5 லட்சம் பேரும், இந்தியாவில் 1.5 லட்சம் பேரும் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர். இதுதவிர இந்தியாவில் 4.96 லட்சம் பேர் சாலை விபத்தினால் காயம் அடைந்து தற்காலிக ஊனமுடனோ அல்லது நிரந்தர ஊனமுடனோ வாழ்க்கையை சிரமத்துடன் நகர்த்துகின்றனர். சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணமான அதிவேக பயணம், குடித்துவிட்டு வாகனம் இயக்குவது, தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது, சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தில் பயணிப்பது மற்றும் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது ஆகும். உலக நாடுகளில் நடைபெறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் 23 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களும், 22சதவீதம் பேர் பாதசாரிகளாகவும், 5சதவீதம் பேர் சைக்கிளில் பயணிப்பவரும் ஆகமொத்தம் 50சதவீத உயிரிழப்புகள் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளாலேயே நிகழ்கிறது.

தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இது மார்ச் 31, 2019 நிலவரப்படி 2.75 கோடி வாகனங்களாகவும், 2018-ம் ஆண்டை விட 7.89 சதவீதம் அதிகமானதாகவும் உள்ளன. மொத்த வாகனங்களில், 84 சதவீதம் இருசக்கர வாகனங்களாகவும், அதன் எண்ணிக்கை 2.33 கோடியாகவும் உள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் 1.43 கோடியாகவும், மொபட் 53.78 லட்சமாகவும் மற்றும் ஸ்கூட்டர் 35.76 லட்சமாகவும் உள்ளன.

ஆக சாலையில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமெனில் 84 சதவீதம் வாகனங்களில் பயணிப்பவர்களை சாலை விதிகளை பின்பற்ற வைத்தாலே அவர்களால் விளையும் 50 சதவீதம் சாலை விபத்து உயிரிழப்புகளை குறைக்க முடியும். முக்கியமாக தலைக்கவசம் அணிவதன் மூலம் இருசக்கர வாகன பயணிகளின் உயிரிழப்பை தடுக்க முடியும்.

காவல் துறையின் மூலமாக எண்ணற்ற வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சாலை ஓரங்களிலும், காவல் நிலையங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் நடத்தப்படுகின்றன. அதிக அளவில் வழக்குகள் பதியப்பட்டு அபராதத் தொகையும் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தோராயமாக ஒரு லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனாலும் சாலைகளில் 100 சதவீதம் தலைக்கவசம் அணிந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை பார்க்க முடிவதில்லை. தலைக்கவசம் அணிபவர்கள் கட்டாயம் அதன் பயனை உணர்ந்திருக்கிறார்கள். அணியாதவர்கள் தங்களை ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

நான் என்னுடன் தலைக்கவசம் அணிவது சம்பந்தமாக நடந்த சில சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும்போது, என் அலுவலகம் வந்த ஒரு மனுதாரர் என்னிடம் காவல் துறையினருக்கு என் உயிரை காப்பற்றியதற்காக நன்றி என கூறி ஒரு கடிதத்தை அளித்தார். நான் என்ன என்று விசாரித்த போது, அவர் சுமார் இருபது நாட்களுக்கு முன்பு ஒருநாள் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் சென்றதால், அவரை நிறுத்தி காவல் துறையினர் அறிவுரை கூறி தலைக்கவசம் அணிய உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பியுள்ளனர். அப்போது காவலர்கள் உங்கள் கண்ணை மூடிக் கொண்டு ஒருநிமிடம் நீங்கள் திடீரென இல்லாத இந்த உலகை நினைத்து பாருங்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்? நீங்கள் இல்லாத உலகில் வருந்துவது யார்? என கூறியதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, வீட்டிற்கு ஒரே ஆண்மகனாக இருந்ததால், அன்று முதல் தலைக்கவசம் அணிய ஆரம்பித்துள்ளார்.

ஒரு நாள் இரவு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சாலையில் திடீரென வந்து பாய்ந்த நாயால் அவர் பைக்கின் பிரேக்கை திடீரென பிடிக்க கீழே விழுந்தபோது சுமார் 200 மீட்டர் தரையிலேயே இழுத்து செல்லப்பட்டு சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் தலை மோதியபோதும், சிறு சிராய்ப்பு காயங்களுடன் எழுந்து நின்ற போது, தலைக்கவசத்தின் அவசியத்தையும் அது எப்படி தன் உயிரை காத்துள்ளது என்பதை அறிந்தேன் எனவும் அதனாலயே நன்றி சொல்ல வேண்டும் என தோன்றியதால் வந்ததாகவும் கூறினார்.

காவல் துறையினர் அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற அறிவுறுத்தியதின் பேரில் தலைக்கவசம் அணிந்தே இருசக்கர வாகனம் செலுத்துகின்றனர். இதுதவிர, அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்துறையின் மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தியதின் மூலம் தலைக்கவசம் அணிந்து வாகனம் செலுத்துகின்றனர்.

நாம் முன்மாதிரியாக திகழ்ந்தால் மற்றவர்களும் பின்பற்ற ஏதுவாக அமையும். தமிழக அரசின் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சீரிய முயற்சியால், தமிழகத்தில் 2017-ம் ஆண்டு 15,061 பேராக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள், 2018-ம் ஆண்டு 11,375 ஆக 24.3 சதவீதம் குறைந்துள்ளது மனதிற்கு சிறு ஆறுதல் அளித்தாலும், ஒரு குடும்பத்தில் எதிர்பாராத ஒரு உயிரிழப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, 100 சதவீதம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணித்தால் மேலும் நாம் சாலையில் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம்.

தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற மாற்றம் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்தே வர வேண்டும், எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், எத்தனை வழக்குகள் போட்டாலும் வராது என்பது நிதர்சன உண்மையாகவே உள்ளது. தலைக்கவசம் காவலுக்காக அல்ல, தங்களின் குடும்பத்தின் காவலுக்காக என்பதை உணர்ந்து, தலைக்கவசம் அணியுங்கள் உங்கள் தலைமுறைகளைக் காப்பாற்றுங்கள்.

No comments:

Popular Posts