Friday 3 January 2020

தொல்காப்பியர் பிறந்தநாள் கொண்டாடுவோம்

தொல்காப்பியர் பிறந்தநாள் கொண்டாடுவோம் | பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குநர், | சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை. |தமிழின் செம்மொழித் தகவுக்கு ஆணி வேராக இருப்பது தொல்காப்பியம். இதனை இயற்றிய தொல்காப்பியர் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மேழ வெள்ளுவா (சித்திரை பவுர்ணமி) அன்று கொண்டாடுவது தகும் என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கூடிய காரைக்குடி கருத்தரங்கில் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மன்றங்களும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று தொல்காப்பியர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். திருவள்ளுவர் நாளையும் நாம் கொண்டாடி வருகிறோம்.

1920-ம் ஆண்டில் மதுரை மனோன்மணி விலாச அச்சகத்தில் த.ஆறுமுக நயினார் பிள்ளை இயற்றிய நற்குடிவேளாளர் வரலாறு எனும் 1035 செய்யுள் கொண்ட நூல் வெளியிடப்பட்டது. இதில் கி.மு. 901-ல் (கலியாண்டு 2200) ஏற்பட்ட கடல்கோளால் குஜராத்து மாநில துவரை (துவாரகை) மாநகரும், தென்தமிழக மணலூர் பகுதியும் கடலில் மூழ்கியதாக அறிய முடிகிறது. கடல்கோளால் நாடிழந்த மக்களுக்கு நிலம் தந்த பேருதவி பொலந்தார் மார்பின் நெடியோனாகிய நிலந்தருதிருவின் பாண்டியன் தொல்காப்பியத்தை அரங்கேற்றியவனாகக் கூறப்படுகிறான். ஆதலின் தொல்காப்பியத்தின் மேல் வரம்பு கி.மு. 901 என்பது உறுதிப்படுகிறது. இக்குறிப்பு தொல்காப்பியர் பிறந்த ஆண்டு வரையறுக்க உதவுகிறது.

கொற்கைக்குக் குடிபெயர்ந்த பாண்டியர் மரபில் கி.மு.834-ல் கூழைப் பாண்டியன் முடி சூட்டிக் கொண்டதால் இதற்கு முன்பே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே, தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட காலத்தின்கீழ் வரம்பு கி.மு.834 ஆண்டுக்கு முற்பட்டது எனத் தெளிவாகிறது.

கலிங்கத்தில் ஆரியர் குடியேறிய கி.மு.900 முதல் கி.மு.800 கால அளவில் வடசொற்கள் உள்ளது உள்ளபடியே கலந்து பாலிமொழி உருவாகியது. கி.மு.800 அளவில் திருத்தியமைத்த 41 எழுத்துகள் பாலிமொழியின் எழுத்துகளாயின. பிராகிருத மொழி தமிழைப்போல் வடமொழி எழுத்துகளை நீக்கிவிட்டது. எனவே, வடசொற் கலப்பு நேரடியாகத் தமிழைத் தாக்கிய கி.மு.900 முதல் கி.மு.800 கால வரம்பே தொல்காப்பியர் வாழ்ந்த காலமாகும்.

தொல்காப்பியர் காலத்தில் கோடி எனும் எண்ணுப் பெயர் இல்லை. குவளை என்னும் சொல்லே கோடியைக் குறித்தது. கோடி எனும் சொல் முதன் முதலாகப் பாலிமொழியில் தான் தோன்றியது. இதன் காலம் கி.மு.800 என்பதால் தொல்காப்பியர் கி.மு.800-க்கு முன்பு வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. குவளை எனும் தமிழ்ச்சொல் பாலி மொழியில் குவளை குவடி கோடி எனத் திரிந்து விட்டது. குவளை என்னும் சொல்லுக்கு கோடி எனும் எண்ணுப் பொருள் இருந்ததை சுக்கிரநீதி (106) குறிப்பிடுகிறது.

கடல்கோளுக்குப் பிறகு மக்கள் குடியமர்ந்து வாழத் தொடங்கிய பின் முந்துநூல் கண்டு கல்வியும், கலையும் வளர்க்கவும் தமிழ்ச்சங்கம் நிறுவவும் ஒரு தலைமுறை அதாவது 37 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்நிலையில் அதங்கோட்டாசானிடம் கல்வி கற்ற தொல்காப்பியர் கி.மு.864 ஆண்டு பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஐந்திரனார் காலத்தில் ய, வ எனும் உடம்படு மெய்கள் பயன்படுத்தப்படவில்லை. ஈழத்துத் தமிழைப்போல் வர இல்லை, கேட்க இல்லை எனச் சொற்கள் பிரிந்தே இசைத்தன. தனிச்சொல்லிலும் நாய் எனும் சொல் ‘நாஇ’ என எழுதப்பட்டதைத் தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார். இந்த இலக்கண அமைப்பு இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருவதால் இன்றும் வட இந்திய மொழிகள் அனைத்திலும் ஆய் ஆயி (தாய்) எனும் தமிழ்ச்சொல் இடையில் யகர மெய் பெறாமல் ‘ஆஇ’ என்றே எழுதப்படுகின்றது. ‘ஐ’ எனும் நெட்டெழுத்து பல்லவர் காலத்தில் தான் இந்த வடிவம் பெற்றது. அகர இகரம் ஐகாரம் ஆகும் எனும் தொல்காப்பியர் நூற்பாவை நன்கு விளங்கிக் கொள்ளாத நச்சினார்க்கினியர் ‘ஐ’ வடிவமே பழையது என்றும் ‘அஇ’ என எழுதுவது ஐகார எழுத்தின் போலி என்றும் கருதி உரையெழுதிவிட்டார். சிந்துவெளி முத்திரைகளிலும் ஐகாரம் ‘அஇ’ எனும் இருகுறில் கூட்டாகவே எழுதப்பட்டுள்ளது. இன்றைய இந்தி மொழியிலும் சென்னை எனும் பெயர் சென்னைஇ என எழுதப்படுகிறது.

இந்நிலைகளைக் கூர்ந்து நோக்கினால் தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு.864 எனவும், கி.மு.835-ல் தொல்காப்பியம் அரங்கேறியது எனவும் வரையறுப்பது ஏற்கத்தக்கது. எனவே, இந்திய மொழிகளுக்குப் பொது இலக்கணம் வகுத்துத் தந்த தொல்காப்பியர் பிறந்த நாளை நாம் தவறாமல் கொண்டாட வேண்டும்.

No comments:

Popular Posts