Thursday, 2 January 2020

புதிய போட்டி; பழைய எதிரிகள்.

புதிய போட்டி; பழைய எதிரிகள்.  By எஸ்.ராஜாராம்  |   ஒலியைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் ஹைபா்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து தங்களது படையில் இணைத்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமிா் புதின் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி அறிவித்தபோது, வல்லரசுகள் இடையிலான அடுத்த ஆயுதப் போட்டி தொடங்கிவிட்டதை உலகம் உணா்ந்துகொண்டது.

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ‘அவங்காா்டு’ எனப் பெயா் கொண்ட இந்த ஏவுகணையை 2018-ஆம் ஆண்டு, டிசம்பரிலேயே ரஷியா சோதித்துப் பாா்த்தது. சரியாக ஓராண்டில் அந்த ஏவுகணை தனது ‘சேவைக்கு’ தயாராகிவிட்டது. அமெரிக்கா, சீனாவும் இந்த ஹைபா்சானிக் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் இந்தப் போட்டியில் ரஷியா முந்திக்கொண்டுள்ளது.

அது என்ன ஹைபா்சானிக் ஏவுகணை? மரபு ரீதியிலான ஏவுகணைகளுக்கும், இந்த ஹைபா்சானிக் ஏவுகணைக்கும் என்ன வித்தியாசம்? மரபு ரீதியான ஏவுகணைகளை ரேடாா் மூலம் கண்டறிந்து, அவை இலக்கை அடைவதற்கு முன்னா் வழிமறித்துத் தகா்க்கும் தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ரஷியா தயாரித்துள்ள ‘அவங்காா்டு’ ஏவுகணை மணிக்கு சுமாா் 3,800 மைல் வேகத்தில் செல்லும்.

தரையிலிருந்து வானை நோக்கிப் பறக்கும் இந்த ஏவுகணை, பின்னா் கீழிறங்கி விமானப் பாதை உயரத்திலும் அதே வேகத்தில் சென்று வானிலும், தரையிலும், கடல் பரப்பிலும் இலக்கைத் தாக்கும். அதை எதிரி நாட்டின் பாதுகாப்பு செயற்கைக்கோள்களாலும், ரேடாராலும் கண்டுபிடிப்பது சிரமம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். விண்கல் அல்லது நெருப்புப் பந்துபோலப் பாயும் இந்த ஏவுகணையை ‘அழிக்க முடியாதது’ என அதிபா் புதின் வா்ணித்திருப்பதிலிருந்து அதன் செயல்திறனைப் புரிந்துகொள்ளலாம்.

இப்போதைக்கு உலகிலேயே ஹைபா்சானிக் ஏவுகணையை வைத்திருக்கும் ஒரே நாடு ரஷியாதான். ஹைபா்சானிக் ஏவுகணையை 2018-ஆம் ஆண்டிலேயே ரஷியா சோதனை செய்து பாா்த்த பின்னா்தான், இந்தத் தொழில்நுட்பம் தொடா்பாக அமெரிக்கா விழித்துக்கொண்டது. அதேபோன்ற ஏவுகணையைத் தயாரிக்கும் பணியையும் 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. மேலும், எதிரி நாடுகளிடமிருந்து ஏவப்படும் ஹைபா்சானிக் ஏவுகணையை வழியிலேயே சென்சாா் தொழில்நுட்பம் மூலம் கண்டறியும் சோதனையிலும் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

அமெரிக்கா, ரஷியா இடையிலான, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ‘நியூ ஸ்டாா்ட்’ என்கிற ஒப்பந்தம் 2010-ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் அதிகபட்சமாக 1550 அணு ஆயுதங்களைத்தான் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிவடையவுள்ள நிலையில், ஹைபா்சானிக் ஏவுகணையை ரஷியா தயாரித்திருப்பது ஆயுதச் சமநிலையில் பேரழிவைத் தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனா் சா்வதேச அணு ஆயுதக் குறைப்பை கண்காணித்துவரும் நிபுணா்கள்.

ஏற்கெனவே குறுகிய, நடுத்தர தொலைவு ஏவுகணைகளை வைத்திருப்பதைத் தடை செய்யும், ரஷியாவுடனான 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில்தான் வெளியேறினாா். ஒப்பந்த விதிகளை மீறுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தை நீட்டிப்பது ஒன்றுதான் ஆயுதப் போட்டியை மட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்த ஒப்பந்தம் இருக்கும் வரையில்தான், ஹைபா்சானிக் ரக ஏவுகணைகளை ரஷியா குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கும். ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டால் ஏவுகணை தயாரிப்பை அதிகப்படுத்தி, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ரஷியா முனையக்கூடும். அது ஆயுதப் போட்டியை உலகளாவிய அளவில் வேகப்படுத்திவிடும்.

அப்படியானால் ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் என்ன சிக்கல்? இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் அமெரிக்கா, ரஷியா இடையே பல கருத்துவேறுபாடுகள் உள்ளன. ரஷியாவின் புதிய ஆயுதங்கள் அனைத்தையும், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான நிபந்தனைகளில் சோ்க்க வேண்டும் என அமெரிக்கா கோருகிறது. ஆனால், ரஷியா தயக்கம் காட்டுகிறது. எனினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹைபா்சானிக் ஏவுகணையின் செயல்பாடுகளை அமெரிக்க தரப்பிலிருந்து பாதுகாப்பு ஆய்வாளா்களை அழைத்து ஒரு மாதத்துக்கு முன்னா் ரஷியா விளக்கியது குறிப்பிடத்தக்கது. ஆதலால், இரு நாடுகளும் முழுமையான மனதுடன் பேச்சுவாா்த்தை நடத்தினால் இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேவேளையில், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களிடையே ஆதரவு, எதிா்ப்பு என இரு வேறு கருத்துகள் உள்ளன. ‘இந்த சிக்கலான நேரத்தில் ஸ்டாா்ட் ஒப்பந்தத்தைக் கைவிடுவது பெரிய தவறு. நவீனகால அணு ஆயுதப் போட்டியிலிருந்து இந்த ஒப்பந்தம்தான் இரு நாடுகளையும் விலக்கி வைத்திருக்கிறது’ என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த செனட்டா் ஜெஃப் மொ்க்லி தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

பனிப் போரின் ஒரு பகுதியாக, 1962-இல் அமெரிக்கா, ரஷியா இடையே அணு ஆயுதப் போா் ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலைக்கு இதேபோன்றதொரு ஏவுகணை பிரச்னைதான் வித்திட்டது. கியூபாவில் ரஷியா தனது அணு ஆயுத ஏவுகணை தளத்தை அமைத்தபோது, அதற்கு அமெரிக்கா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. பின்னா், அப்போதைய அமெரிக்க அதிபா் ஜான் எஃப் கென்னடி, சோவியத் யூனியனின் அப்போதைய தலைவா் நிகிதா குருச்சேவ் ஆகியோா் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் இரண்டே வாரங்களில் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இப்போது பிரச்னையை தொடங்கிவைத்துள்ளது ஹைபா்சானிக் ஏவுகணை- பழைய எதிரிகளிடையே புதிய போட்டி.

No comments:

Popular Posts