Friday, 3 January 2020

எழுச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்

எழுச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் | வெ. ஜீவகுமார், வக்கீல், மாநில துணை தலைவர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம். | இ ன்று (ஜனவரி 3-ந்தேதி) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள். | பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் சிறு முயல் கூட சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்பது சொல்லடை. காகம் பறவாது கட்டபொம்மன் கோட்டையிலே என்று பழமொழி வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பறை சாற்றும்.

1760-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். பெற்றோர் ஜக வீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிகள் ஊமைத்துரை என்ற தனபால்குமாரசாமி, துரைசிங்கம் ஆவர். தங்கையர் இருவரும் உண்டு.

கி.பி. 17-ம் நூற்றாண்டில் கட்டபொம்மன் பரம்பரையில் 47-வது மன்னராக வீரபாண்டியன் வீற்றிருந்தார். ஒவ்வொரு சிற்றரசரும் பாளையக்காரராகவும் அவர்களின் நாடுகள் பாளையப்பட்டுகளாகவும் அழைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக்கு அடங்கி 96 கிராமங்கள் இருந்தன. பாளையக்காரர்களில் பலர் ஆற்காடு நவாப்பிற்கு வரி செலுத்தினர்.

தென் இந்தியாவில் அப்போது கிழக்கிந்திய கம்பெனி புகுந்திருந்தது. வியாபார தந்திரமாக அவர்கள் கடனை வாரி வழங்கினர். கடனை திரும்ப வசூலித்தல் என்ற பெயரில் அவர்கள் சிற்றரசுகளை மண்டியிட வைத்தனர். கடனை திரும்ப செலுத்த திணறிய ஆற்காடு நவாப் 1792-ல் கிழக்கிந்திய கம்பெனியோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்படி வரி வசூலிக்கும் உரிமை அல்லது கடனை அடைக்க முடியாதோருக்கு ஈடாக ஆட்சி பொறுப்பை பெறுவது என்பது வெள்ளையர்களின் தந்திரமாகும்.

வரி வசூலை முறைப்படுத்த அளந்து கல் நடும் முறையை கொண்டு வந்தனர். கர்னல் மேக்ஸ்வெல் என்பவர் இதன் அதிகாரியாக இருந்தார். பாளையக்காரர்கள் நவாப்பிற்கும் பின்பு கிழக்கிந்திய கம்பெனிக்கும் திறை செலுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வெள்ளையர்கள் திறை கேட்டனர். எமது முந்தைய 46 பரம்பரை தோன்றல்கள் யாருக்கும் வரி செலுத்தியதில்லை. நானும் கப்பம் கட்ட முடியாது என்றார் அவர். வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆலன்துரை வரி வசூலிக்க வந்தார். “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உமக்கு ஏன் கொடுக்க வேண்டும் திறை. இனாமாக வேண்டுமானால் உடல் வளைந்து கேள் தருகிறேன். இல்லாவிட்டால் உயிர் பிச்சை தருகிறேன் ஓடி விடு” என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆலன்துரையால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியாத நிலையில் கிழக்கிந்திய கம்பெனி ஜாக்சன் என்பவனை திருநெல்வேலி கலெக்டராக்கியது. ஜாக்சன் அழைப்பின்பேரில் கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க 4 ஆயிரம் வீரர்களுடன் புறப்பட்டார். ஜாக்சன் கட்டபொம்மனை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தார். நெல்லையிலிருந்து நழுவி குற்றாலம், சொக்கம் பட்டி, சிவகிரி, சேத்தூர் என்று மாறிமாறி சென்றார். இறுதியில் இருவரும் ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் சந்தித்தனர். கட்டபொம்மன் தம்மை பார்க்கும் போது படையினரை அழைத்து வரக் கூடாது என்பது ஜாக்சனின் நிபந்தனை ஆகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தன் இரு தம்பிகளோடு ஜாக்சனை சந்தித்தார். ஜாக்சனுடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய கும்பினி படை நின்றது. வீரபாண்டிய கட்டபொம்மனை வரி செலுத்தும்படி மிரட்டிய ஜாக்சன், வீரபாண்டியனை கைது செய்ய தன் படைக்கு உத்தரவிட்டான். கட்டபொம்மனின் வேல் சுழன்றது. கர்னல் கிளார்க் அங்கேயே பிணமாக வீழ்ந்தான். தம்பியர் இருவரோடும் தப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் தன் படையினரோடு பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். கட்டபொம்மன் குறித்து எட்டப்பன் தகவல்களை சேகரித்து அனுப்பினான்.

பின்னர் இரு தரப்பினரையும் தூத்துக்குடியில் இருந்த ஆங்கிலேய அதிகாரி டேவிசன் சமாதானப்படுத்தினார். லூஷிங்கன் நெல்லையின் புதிய கலெக்டரானார். ஆயினும் கட்டபொம்மனிடம் வெள்ளையரால் திறை வாங்க முடியவில்லை. வீரபாண்டியனை பணிய வைக்க சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் ஜான் பானர்மேன் தலைமையில் படைப்பிரிவை உருவாக்கினான். காலாட்படை, பீரங்கி படை, குதிரைப்படை, சுதேசிப்படை (இந்திய வீரர்கள்), விதேசிப்படை (வெள்ளையர்கள்) என ஐந்து படை பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

வீரபாண்டியனின் இரு தம்பிகளும் திருச்செந்தூர் ஆவணி மூல திருநாளுக்குச் சென்றனர். உளவாளிகள் மூலம் தகவல் பானர் மேனுக்குச் சென்றது. உடனே பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சியை தாக்க 5 படைப் பிரிவுகளையும் அனுப்பினான். போர் தொடங்கியது. வீரபாண்டிய கட்டபொம்மனின் சேனை அயரவில்லை. வாயில் காவலன் வெள்ளைய தேவன் வீசிய ஈட்டியில் கர்னல் காலின்ஸின் தலை உருண்டது. இருதரப்பிலும் பலர் மாண்டனர். எனினும் வெள்ளையர் படை தளபதிகள் டக்ளஸ், டார்மிக்ஸ், பிளாக்கி, கன்னர்்பின்னி உள்ளிட்டோர் சடலமாகினர். இவர்களின் கல்லறை இப்போதும் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ளது.

இத்தருணத்திலும் வீரபாண்டிய கட்டபொம்மனை பணிய வைக்க வெள்ளையர் மீண்டும் முயன்றனர். புது வெள்ளமென தாக்குதல் நடத்த சில யுக்திகளை உருவாக்க வீரபாண்டியன் திருச்சி செல்ல திட்டமிட்டார். 50 குதிரைகளோடு வீரபாண்டிய கட்டபொம்மன் படை வட திசை நோக்கி புறப்பட்டது. இடையில் கோலார்பட்டியில் தானாதிபதி மீண்டும் பிடிபட்டார். பின்னர் அவர் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்பட 7 பேர் (ஊமைத்துரை, துரைசிங்கம், முத்தைய நாயக்கர், குமாரசாமி நாயக்கர், முத்துகுமாரசாமி நாயக்கர், வீரபாண்டியனின் அந்தரங்க பணி ஆள் வீரணமணியகாரன்) பல இடங்களில் தங்கி தப்பினர். ஆனியூர், கடால்குடி, சோளபுரம் சென்று, இறுதியில் புதுக்கோட்டை தொண்டைமான் அழைப்பின் பேரில் புதுக்கோட்டை அரண்மனையில் தங்கினர்.

புதுக்கோட்டை மன்னனின் துரோகத்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிபட்டார். விசாரணை என்ற சதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டது. 5-10-1799-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் முருகனை வணங்கி ஓர் நெடுஞ்சாலை புளியமரத்தில் தூக்கு கயிறை தன் கழுத்தில் தானே மாட்டிக்கொண்டு வீர மரணம் அடைந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 39 ஆண்டுகள் வாழ்ந்தார். எட்டப்பன், புதுக்கோட்டை மன்னன் போன்றோரின் துரோகத்தால் அவர் இறந்து 220 ஆண்டுகள் ஆகின்றன. வரலாற்றில் மாவீரனாக மடிந்த முதல் அடையாளமாக வீரபாண்டியனின் பெயர் நிலைத்திருக்கும். வீரபாண்டியனின் மரணம் வீழ்ச்சி அல்ல. எப்போது நினைத்தாலும் ஒரு புத்தெழுச்சி ஆகும்.

No comments:

Popular Posts