Saturday, 8 September 2018

செயலே பெரிது

செயலே பெரிது இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். ஆனால் பலருக்கு அந்தக் கனவு நிறைவேறாமல் போவதற்குக் காரணம், முயற்சியின்மையே. சிலர் சில வேளைகளில், ஒரு மாணவரை என்னிடம் பெருமையோடு அறிமுகம் செய்துவைப்பார்கள். இவர் டெல்லியில் ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார் என்று மதிப்புடன் கூறுவார்கள். ஒரு போட்டித் தேர்வுக்குப் படிப்பதில் பெருமைதான். ஆனால் போதுமான முயற்சி இருந்தால் மட்டுமே, அந்த ஐ.ஏ.எஸ். என்ற மூன்றெழுத்துகள் சொந்தமாகும். பத்து லட்சம் போட்டியாளர்கள் மோதும் இத்தேர்வில் 150 பேர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். ஆகவே, ஒருவர் கனவு கண்டால் மட்டும் அதை அடைந்துவிட முடியாது. அந்தக் கனவை நனவாக்கத் தேவையான உழைப்பு வேண்டும். துப்பாக்கி வைத்திருந்த வேட்டைக்காரர் ஒருவரிடம், சிறுவன் ஒருவன் ஒரு கேள்வி கேட்டான், ‘இந்தத் துப்பாக்கியை காட்டுக்குள் எடுத்துச் சென்று அங்கு மரத்தில் இருக்கும் நூறு குருவிகளில் ஒரு குருவியைச் சுட விரும்புகிறேன். அப்போது அங்கு எத்தனை குருவிகள் இருக்கும்?' அதற்கு துப்பாக்கி வைத்திருந்தவர், ‘ஒரு குருவியும் இருக்காது, எல்லாம் பறந்து போய்விடும்' என்றார். உடனே அச்சிறுவன், ‘இது சரியான பதில் அல்ல' என்றான். ‘அப்படியானால் சரியான பதில் என்ன?' என்று கேட்டார் வேட்டைக்காரர். ‘எல்லா குருவிகளும் அங்கேதான் இருக்கும்' என்றான் சிறுவன். ‘அது எப்படி?' என்றார் அவர். ‘நான் ஒரு குருவியைச் சுட ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். நான் துப்பாக்கியை உங்களிடம் வாங்கினேனா? அதில் குண்டைப் போட்டேனா? சுட்டேனா? இல்லையே? அப்படி இருக்க, எப்படி குருவிகள் பறக்கும்?' அந்தப் பதிலில் வேட்டைக்காரர் திகைத்தார். இந்தப் பூமியில், வினை இல்லாமல் எந்த விளைவும் இருக்காது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் டாலமி, பூமி உருண்டையாக மத்தியில் இருக்கிறது, அதை சூரியன் சுற்றி வருகிறது என்றார். அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டனர். பார்ப்பவர் கண்களுக்கு அப்படித்தான் தெரிகிறது. இந்தக் கோட்பாட்டுக்கு ‘ஜியோ சென்ரிசம்' என்று பெயர். ஆனால் 1473 முதல் 1543-ம் ஆண்டு வரை வாழ்ந்த நிக்கோலஸ் கோபர்நிக்கஸ், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதையும், அனைத்து கோள்களும் பூமியைப் போல சூரியனைச் சுற்றுகின்றன என்பதையும் கண்டுபிடித்து, 'வான்கோள்களின் சுழற்சிகள்' (Revolutions of the Heavenly Bodies) என்ற நூலில் வரைபடங்களுடன் விளக்கினார். ஆனால் அதை வெளியிட்டால் மதத் தலைவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில், நூலை வெளியிடாமலே இருந்துவிட்டார். பின்னாளில், கோபர்நிக்கஸ் சொன்னது உண்மைதான் என்று கலிலியோ கலிலி போன்ற அறிஞர்கள் கூறிவிட்டனர். இருந்தாலும் இந்த அறிவியல் உண்மை நிரூபிக்கப்படாமலே இருந்தது. 1519-ம் ஆண்டு பெர்டினன்டு மெகல்லன் என்ற மாலுமி, ஸ்பெயினில் இருந்து 5 கப்பல்களில் 270 கடல் வீரர்களுடன் புறப்பட்டு உலகத்தைச் சுற்றி வந்து அந்த உண்மையை நிரூபித்தார். ஆனால் 1522-ம் ஆண்டு மெகல்லனின் விக்டோரியா கப்பல் ஸ்பெயினை அடைந்தபோது அதில் அவரது பூத உடல்தான் இருந்தது. வரும் வழியில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த ஒரு சண்டையில் மெகல்லன் கொல்லப்பட்டார். அவருடன் பயணித்த இருநூறுக்கும் மேற்பட்டவர்களில் வெறும் 18 பேர் மட்டுமே உயிருடன் நாடு திரும்பினர். ஓர் உண்மையை நிரூபிக்க இத்தனை பேர் உயிரைக் கொடுக்க வேண்டியிருந்திருக்கிறது. பொதுவாக, உலகில் அரிய சாதனைகள் பலவும் தீரச் செயல்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற ஆசையிருந்தால் உடனே ஒரு வெள்ளைத் தாள் எடுத்து, தோன்றுவதை எழுதத் தொடங்குங்கள். ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசையிருந்தால், தெரிந்த அளவில் பேசத் தொடங்குங்கள். வெட்கமோ, தப்பாகிவிடுமோ என்ற அச்சமோ அவசியமில்லை. சிற்சில தவறுகள் நேர்ந்தாலும் பரவாயில்லை. ஒரு துளியளவு செயல், மலையளவு நல்லெண்ணத்தை விடச் சிறந்தது என்பார் பாரத ரத்னா அப்துல் கலாம். அவர் குறிப்பிட்டதைப் போல, காணும் கனவை நனவாக்க செயலால்தான் முடியும். நாம் சொல்லும் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இருக்க வேண்டும் அல்லவா? பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெறப்போவதாகக் கூறும் ஒரு மாணவன், அதற்கான செயல்கள், வாசித்தல், எழுதுதல், ஆய்வு மேற்கொள்ளுதல், விவாதித்தல் போன்றவற்றைச் செய்தால் மட்டுமே அவன் மீது அவனுக்கே நம்பிக்கை பிறக்கும். சொன்னதைச் செய்பவர்களைத்தான் உலகமும் நம்பும். ‘நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன்' என்பது இன்று பலரும் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம். அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி, எதில் ‘பிசி'யாக இருக்கிறீர்கள்? வேடிக்கை விளையாட்டிலும் பொழுதுபோக்குகளிலும் கம்ப்யூட்டர் விளையாட்டிலும் ஒருவர் பிசியாகிவிட்டால் அவருக்கு தனது இலக்கு நோக்கிச் சிந்திக்கவோ, அதை நோக்கிப் பயணிக்கவோ நேரம் இருக்காது. மாணவர்கள் தாங்கள் என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டால் நான் அவர்களுக்கு இவ்வாறு சொல்வேன்... உங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய நோக்கம் எது என்று தீர்மானியுங்கள். அதற்கு அதிக நேரத்தைச் செலவிடுங்கள். ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பது உங்கள் எண்ணம் என்றால், விழித்திருக்கும் நேரத்தில் பெரும் பகுதியை உயிரியல் பற்றிய சிந்தனையிலும் செயலிலும் செலவழித்திடுங்கள். நம் நாட்டில் இருக்கும் மோசமான கலாச்சாரங்களில் பிரதானமானது, எல்லோரும் எப்போதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பதுதான். அர்த்தமற்ற விஷயங்களை சத்தம் போட்டு பேசிக்கொண்டிருக்க நாம் பழகிவிட்டோம். இதனால் எங்கும் ஒரே சத்தமாக இருக்கிறது. இன்னொருவர் பேசுவதைக் கேட்கக்கூட நாம் தயாராக இல்லை. கல்லூரியில் ஆசிரியர் ஒரு பக்கம் பேசும்போது மாணவர்கள் இன்னொரு பக்கம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாம் சத்தம் போட்டு பேசும் வெட்டிப்பேச்சு, அருகில் உள்ள மற்றவர்களுக்கும் இடையூறாக இருக்கிறது. அவர்களின் நிம்மதியைப் பாதிக்கிறது. பேசியதையே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் வேலை செய்யவும், சிந்திக்கவும், திட்டமிடவும் எங்கே நேரம் இருக்கும்? சொல்லாதீர்கள், செய்யுங்கள். பேசாதீர்கள், செய்து காட்டுங்கள். வாக்குமூலம் வழங்காதீர்கள், நிரூபியுங்கள். ஒன்றுக்கு ஆசைப்பட்ட பின்னர் அதை அடைய எதையும் செய்யாமல் இருப்பது ஆபத்தானது. அது பயத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துவிடும். காலம் நெருங்க நெருங்க அது பதற்றத்தை ஏற்படுத்தி, தன்னம்பிக்கை இல்லாத மனிதனாக நம்மை மாற்றிவிடும். செயலைச் செய்ய ஆரம்பித்தால்தான் நமக்குத் தைரியம் வரும், தன்னம்பிக்கை பிறக்கும். எனவே, வீட்டுக்குள் சோம்பியிருக்காமல் வீட்டுக்கு வெளியே வாருங்கள். செய்ய வேண்டிய வேலைகளை இப்போதே செய்யுங்கள். நமது செயலை வைத்தே பிறர் நம்மை எடை போடுவார்கள் தவிர, நமது பேச்சால் அல்ல. நம் செயல்கள் சிறந்தவையாக இருந்துவிட்டால், எப்போதும் நம் நோக்கத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. உயர்ந்த சிந்தனையும், பெரிய நோக்கமும் உள்ள ஒருவரும்கூட அராஜகமாக கார் ஓட்டினால் அவரால் பிறருக்கு விபரீதம் நேரக்கூடும். இங்கே மனதில் உள்ள உயர்ந்த எண்ணமும், நல்ல குணமும் பெரிதல்ல. அவரது செயல்தான் பெரிது என்பது நமக்குப் புலனாகிறது. நம் செயல் மோசமாக அமைந்தால் அதற்காகப் பல விளக்கங்களைச் சொல்லவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். செயல் இல்லாத கனவுகளால் பயனில்லை. செயல் இல்லாத நல்ல யோசனையால் எந்த பிரயோசனமும் இல்லை. வார்த்தைகள் உற்சாகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் செயல்களே மாற்றத்தை உண்டாக்கும். வெற்றி பெற ஒரே வழி, தீவிர செயலன்றி வேறில்லை!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts