Sunday, 22 December 2019

எல்லா திசையிலும் இசை

எல்லா திசையிலும் இசை

டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம்

க ல் மனதையும் கனிய வைக்கும் இசை தமிழ் இசை! மொழியின் உணர்வுகளை இசைக் குறிப்புகளால் மெருகேற்றி உணர்வூட்டி வாழ்க்கை முறையோடு ஒன்றி, தாலாட்டு முதல் வாழ்வின் இறுதி நீராட்டு வரை பாடல்கள் தந்தது, உலகின் முதல் இசையான நம் தமிழ் இசை தானே!. மொழியால் இசையை வளமாக்கி, இறை நம்பிக்கை பாடல்களால் செழிப்பாக்கி இன்று ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி, செழித்திருப்பது நம் தமிழ் இசை. இதயப்பூர்வமான இசை உள்ள இடத்தில் வசைக்கு இடம் இருக்காது.

காதுக்கு விருந்து..

சிந்தனைக்கு தெளிவு..

மனதுக்கு அருமருந்து...

தளர்வான நேரத்தில் ஊக்குவிப்பு..

தவிப்பான நேரத்தில் ஆறுதல்..

களிப்பான நேரத்தில் உற்சாகமூட்டி..

களைத்த உழைப்பாளிக்கு களிப்பூட்டி...

எல்லாவிதங்களிலும் மகிழ்விப்பது இசை ஒன்றே!

மொழியே இல்லாத சூழலிலும் குழந்தையை தாலாட்டி தூங்கவைத்தும், மகுடிக்கு நாகத்தை மயங்கவைத்தும், காதலரை ஏங்க வைத்தும், வயல் வெளியில் பயிர் வளர உதவி செய்தும், நோய்க்கு மருந்தாக விளங்குவதையும் பார்க்கின்றோம். இசைக்கு வசப்பட்டதைப் போல வேறு எந்த கலைக்கும் உள்ளம் வசப்பட்டதாக வரலாறு இல்லை.

தற்கால மருத்துவ முறைகளில் இசையின் பயன்பாடு ஏராளம். குறிப்பாக மனோதத்துவ மருத்துவத்திலும், மன வளர்ச்சி தேவைப்படுகிற சிறப்பு குழந்தைகளுக்கும் முக்கியமாக பயன்படுகிறது. பாடலைப் பாட முயற்சிப்பது அல்லது கேட்பது மட்டுமல்ல, தாளங்களை ஒருவர் வாத்தியத்தில் வாசிக்க, அதை நோயாளிகள் எதிரில் பின்பற்றி வாசிப்பது என்பது ஆழ்மனக் கட்டுப்பாட்டை ஒரு சாராருக்கும் கை மூட்டுகளில் வலியோடு இருப்பவர்களுக்கு நிவாரணமும் தருகிறது.

தமிழர்களுக்கே உரித்தான தொன்மையான தமிழ் இசை வரலாற்றில், தமிழ் இசையின் தாய் காரைக்கால் அம்மையார், தேவார மூவர் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், சீர்காழி தமிழ் இசை மூவர் என போற்றப்பட்ட முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் அருணாசலக்கவிராயர், திருஅருட்பா வழங்கிய அருட்பெரும்ஜோதி ராமலிங்க வள்ளலார் என்று, இசையால் மனிதர்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் இசையால் நோய் தீர்த்த நிரூபணம் உள்ளது.

பாடல் வரிகளில் உள்ள நம்பிக்கை, இசை வடிவோடு வரும்போது நல்ல குணம் கிடைக்கிறது. இதில் சீர்காழியில் பிறந்த பக்தி இசைப் பரம்பரையினர், இந்த துறையில் உடலுக்கும் உள்ளத்திற்கும் கொடுக்கும் பலன் குறித்த எனது ஆய்வுப் பணிக்கு சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முனைவர் பட்டம் வழங்கியது. இப்படி வெகு காலத்திற்கு முன்பே இசையின் நோய் தீர்க்கும் தன்மைகளை நம் தமிழ் இசை கொண்டிருப்பது இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் திரைப்படங்களில் கூடுதலாகப் பாடல்களும் அவற்றில் முக்கியமான வாழ்க்கை தத்துவங்களையும் கருத்துகளையும் கதாநாயகர்கள் பாடியது இசையால் ஒரு நல்ல மனநிலையை பொழுதுபோக்கோடு சேர்த்து தந்த முயற்சியே ஆகும். பக்தி ரசம், காதல் ரசம், சோக ரசம், நகைச்சுவை, வீரம் என நவரசத்தின் அத்துணை வெளிப்பாடுகளையும் திரைப்பாடல்கள் சமுதாயத்திற்கு தந்தது ஒரு வைத்தியமே! இன்றைய தமிழ்த் திரையுலகின் பெரும்பாலான பாடல்களில் தமிழும் இல்லை, இசையும் இல்லை, ரசிகர்களுக்கு உணர்ந்துகொள்ள கருத்துகளும் இல்லை. பல படங்களில் பாடல்களும் இல்லை.

நமது உடல் இயக்கத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இசை ஊறி இருப்பதை நம்மால் உணரமுடியும். நமது நாடித் துடிப்பு ஆதியில் மனிதன் தாள லய பிடிப்பின் ஒழுங்குமுறையை முதலில் உணரக் கிடைத்த ஒன்றாகும். மூச்சு சுவாச முறை காற்றின் வெளிப்பாட்டையும், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவியை அவன் உணர கிடைத்ததாகும். மனிதனின் இருதய துடிப்பு மனிதனுக்கு பல வகையான தாள நடைகளை ஒழுங்குமுறையுடன் உணர்த்தியதை காணமுடியும். இதையெல்லாம் உணர்ந்த மனிதன், தன்னிடம் இருந்த குரலை உயர்த்தி இசை பாடினான், சொற்களை கூட்டி பாடலாக்கினான், குறிப்பாக, நம் தமிழர்கள் மொழி சார்ந்த அங்கமாகவே இசையை ஆக்கினான். எனவே தான் திறமையான இசையை ஒரு சிறப்பு அம்சமாக, இறைவன் தந்த வரமாக இன்றும் நம் மனித குலம் போற்றுகின்றது.

தமிழிசை மரபுகளுக்கு தரப்படுகிற மரியாதை அளப்பரியது. அதற்கு அதன் மரபு முறை வழுவாத ஒழுங்குமுறையும், பண்பட்ட பயிற்சி முறைகளுமே காரணம். சென்னைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். எத்துணை வகையான சங்கீதத்தை அவர்கள் இசை விழாக்கள் மூலமாக ஒரே மாதத்தில் கேட்கிறார்கள்!

இன்றைய இசையின் பயன்பாடு எப்படி உள்ளது என்று பார்த்தால் ஆண்டுதோறும் ‘டிசம்பர் சீசன்’ என்று மார்கழிப் பனியின் சுகத்தோடு, ஒரே மாதத்தில் நெருக்கியடித்து, ஒரே சென்னையில் நூற்றுக்கணக்கான சபாக்கள், ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகள் என சபாக்கள் சிறப்பாகக் கலைத்தொண்டாற்றி வருவதைக் காண்கிறோம். இந்த நெரிசலில், பல நல்ல கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பார்க்கமுடியாமலும் பெரும்திரளான இசை ரசிகர் கூட்டம், ஆங்காங்கே சிதறிப் போவதும் காண்கிறோம். அது தவிர, ‘திறமை உள்ள பல கலைஞர்களுக்கு சில வாய்ப்புகளும், வேறு சில பாசமிகு கலைஞர்களுக்கு பலப்பல வாய்ப்புகளும்’ வழங்கப்படுவதை வெளிப்படையாக நாம் காணமுடியும். திறமையுள்ள பல வெளியூர் மற்றும் வெளிமாநில கலைஞர்கள் இங்கு வாய்ப்புகள் இல்லாமலே போய்விடுகின்றனர்.

ஆரோக்கியமான இசை வளர்ச்சிக்கு வாய்ப்புகள் பரவலாக்கப்பட்டு அனைவருக்கும் பேதமின்றி பகிர்ந்தளித்து, அத்துணை இசை பாணிகளையும் வெளிக்கொணர்ந்து, இளம் திறமைகளை உற்சாகப்படுத்தி, புதியவர்களுக்கு வழிகொடுத்து தமிழகத்தின் அத்துணை பெருநகரங்களிலும் இசைவிழாக்களை பரவலாக வழங்கவேண்டும். வெளியூரில் இசை விழா நடத்தினால் எடுபடாது என்பது கிடையாது, வெளியூர் கோவில்களில் இசை விழாவாக கொண்டாடுகிறார்கள் வெளியூரில் இசை விழாக்கள் நடத்த சாத்திய கூறுகள் உள்ளன. அங்கு பொதுமக்கள் விடிய விடிய இருந்து இசையை கேட்டு இன்புறுவர் அதற்கு உபயதாரர்கள் மனமுவந்து நடத்த முன்வர வேண்டும். திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவில் அனைத்து கலைஞர்களும் ஆர்வத்தோடு பங்கேற்பர். எனது தந்தையார் சீர்காழி கோவிந்தராஜன் அங்கே செயலாளராக இருந்து தொண்டாற்றி இருக்கிறார். அங்கே சென்று வந்தால் சங்கீத கலைஞர்களுக்கு ஆன்ம பலம் கிடைக்கும்

குளிர்கால விழாவாக மட்டுமல்லாமல், கோடை வெயிலுக்கும் இசையோடு இளப்பாற “கோடைகால சிறப்பு இசை விழாக்கள்” நடத்த சபாக்கள் தங்களுக்குள் விழாக்கள் நடத்துவதைப் பகிர்ந்துகொண்டு வகை செய்யவேண்டும். அதற்கு ‘ஸ்பான்சர்’ செய்யும் நிறுவனங்கள் மனது வைத்தால் நிச்சயம் நடத்தமுடியும். பணம் கொடுப்பதோடு நின்று விடாமல் அது தக்க முறையில் செலவிடப்பட்டதா என்று கண்காணிக்க முன்வர வேண்டும். நமது மண்ணுக்கே உரித்தான இசை மரபுகள் மறைக்கப்படக்கூடாது, மீண்டும் மறக்கவிடக்கூடாது. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

No comments:

Popular Posts