Sunday, 22 December 2019

தமிழ்கூறும் சனாதன தர்மம்

தமிழ்கூறும் சனாதன தர்மம்
By கோதை ஜோதிலட்சுமி

சனாதன தர்மம் (ஹிந்து தர்மம்) என்னும் சொல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தேசத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக மிகப் பெரும் சர்ச்சைக்குரிய சொல்லாகவும் இந்தச் சொல் இருக்கிறது. சனாதன தர்மம் என்பது நிலையான தத்துவ ஞானம் அல்லது நம்பிக்கை.

மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் நிலைத்திருக்கும் வாழ்வியல் கோட்பாடுகளைக் குறிக்கும் சொல் என்றும் கொள்ளலாம். தர்மம் என்ற சொல் கடமை, பொறுப்பு இரண்டின் கூட்டுச் சேர்க்கை அல்லது இரண்டும் இணையும் இடம்.

சனாதனம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகளை வகுத்துத் தந்திருக்கிறது. தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம் --இந்த வடமொழிச் சொற்களுக்கு தமிழில், "இறைவனுக்குச் செய்வது, துறவிகளின் சொற்களைக் கேட்பது, பசியால் வாடி வருபவருக்குப் பிடி உணவு தருவது, இறந்தவர்களுக்குச் செய்யும் நீத்தார் கடன், விலங்குகளை மதித்து அவற்றைப் போஷித்துப் பாதுகாப்பளிப்பது' எனப் பொருள் கொள்ளலாம்.

இந்த ஐந்து கடமைகளையும் எளிதாக திருமூலர்,
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு
            கைப்பிடி
யாவர்க்குமாம் இன்னுரை தானே
- என்கிறார்.

வள்ளுவப் பேராசான் தமது குறளில் இந்த ஐந்து கடமைகளுக்கும் தனித் தனியே மிக விரிவாக அதிகாரங்களை இயற்றித் தந்திருக்கிறார்.
திருவள்ளுவர் யாருக்குச் சொந்தம் என்பதைவிட,  அவர் கூறிய அறம் பின்பற்றப்படுவதில்தான் மதிப்பு இருக்கிறது. திருவள்ளுவர் சனாதனம் குறிப்பிடும் இந்த ஐவகைக் கடமைகளையும் தனித் தனி அதிகாரங்களாக வகுத்து நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

தமிழர் வாழ்வியல் என்பது சனாதனத்தை அடியொற்றியது என்பதற்கு மிகச் சிறந்த சான்றுகளாக இவை விளங்குகின்றன. திருக்குறள் உலகப் பொதுமறையாக ஒருபுறம் இருக்க, திருக்குறள் குறித்து திருவள்ளுவமாலை தந்த சங்கப் புலவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்                     மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே                     செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
இதற்குரிய ரல்லாதாரில்
என்கிறார் வெள்ளிவீதியார்.

எவராலும் செய்யப்படாதது என்பதால் வேதம் செய்யா மொழி. பொய்யாமொழி என்பது திருக்குறள். இரண்டுமே ஒரே பொருள் குறித்துத்தான் பேசுகின்றன. ஒரே ஒரு வேறுபாடுதான், அது செய்யா மொழியாகிய வேதம் அந்தணர்களால் மட்டுமே ஓதப்படுகிறது. ஆனால், திருக்குறள் எனும் பொய்யாமொழி உலக மாந்தர் அனைவராலும் ஓதப்படுகிறது. உக்கிரப் பெருவழுதி என்னும் புலவர் நான்முகனே வள்ளுவராக வந்துதித்தார் என்று போற்றுகிறார்.

நான் மறையின் மெய்ப்பொருளை
முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த
என்கிறார்.

திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற இன்னபிற பழந்தமிழ் நூல்கள் இங்கே இருந்த வாழ்வியல் முறை குறித்துத் தெளிவான கருத்துகளை முன்வைக்கின்றன. தமிழ் தேசியம் பேசுவோர் இந்த நூல்களை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். அந்நாளில் இந்நூல்களை ஆக்கியோர் சமயம் சார்ந்து எழுதினார்கள் என்பதைக் காட்டிலும் தாம் நம்பிய வாழ்வியல் முறையைச் செயல்படுத்தி வந்த அறத்தை வலியுறுத்த நூல்களை இயற்றினார்கள்.

அதிவீரராம பாண்டியர், ஒளவையார் என்று பலரும் இயற்றித் தந்திருக்கும் நூல்கள் அவர்கள் பின்பற்றிய வாழ்வியல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனால், இந்தத் தேசம் முழுவதும் ஒரே விதமான அறம் பின்பற்றப்படுகிறது என்று கொள்வதுதான் அறிவுடைமை. இந்த உயரிய அறத்துக்கு அல்லது தர்மத்துக்கு நாமும் உரிமையாளர்கள் என்று கொண்டு அதன் மேன்மைகளைப் புரிந்து கொள்ளலாம்.

சனாதன தர்மத்தைப் பொருத்தவரை அது தீபத்தின் ஒளி போன்றது. தீபத்தின் சுடர் இந்தத் திசையில்தான் பிரகாசிக்க வேண்டும், இன்னாருக்குத்தான் தனது ஒளியை வழங்க வேண்டும் என்று எந்தப் பாகுபாடும் இல்லை. எண்திசைகளிலும் எல்லாவற்றையும் வெளிச்சமிட்டுக் காட்டும் ஒளியைப் போன்றதே இந்த தர்மமும்.
இதனை நமக்கு எடுத்துரைக்க வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இன்னும் அந்தந்தப் பிராந்தியத்தில் மகான்கள் அருளிச் செய்த பாசுரங்கள், வழிகாட்டும் நூல்கள் அமைந்துள்ளன. தமிழில் திருக்குறள், சமய இலக்கியங்கள் என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம்,
திருமந்திரம், திவ்யப் பிரபந்தம் முதலான நூல்கள் இந்தத் தர்மத்தை நாம் புரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகின்றன.

தனி மனித உணர்வுகளை நியாயங்களை மதித்து நடத்தல், தனி மனித ஒழுக்கம் முதலானவை
இந்த தர்மத்தின் தனிச் சிறப்பு. இதை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளிலும் திருக்குறள் வலியுறுத்துகிறது.

 சீதை தன் கணவரைப் பின்பற்றுவதே தனது தர்மம் என்று கணவர் சொல்லுக்கேற்ப நெருப்பில் இறங்குகிறார். சீதையைப் பூஜிக்கிறார்கள். பக்த மீரா தன் கணவரைத் துறந்து இறைவனை அடைவதே தன் நோக்கம் எனத் துறவு மேற்கொள்கிறார். மீராவும் இந்த மண்ணில் பூஜிக்கத் தகுந்தவராக இருக்கிறார். இருவரும் கொண்டாடப்படுகிறார்கள்.

ஆத்திகவாதத்தை ஏற்பதைப் போலவே நாத்திகவாதத்தையும் சனாதன தர்மம் ஏற்கிறது. இறை நம்பிக்கையற்றவர்களும் ரிஷிகளாக வாழ்ந்ததை இதிகாசங்கள் சொல்கின்றன. ஜாபாலி என்ற ரிஷி சடங்குகளை, இறைவன் குறித்த கருத்துகளை மறுக்கிறார். அவரும் மரியாதையோடு நடத்தப்பட்டிருக்கிறார்.

இயற்கையின் அத்தனை வடிவங்களும் இறைவனாக வழிபடப்படுகின்றன. எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை தெய்வங்களும் சாத்தியம் எனும் நிலை சனாதன தர்மத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அதாவது, தனி மனித விருப்பமும் சுதந்திரமும் அடிப்படைகளாக   அமையப் பெற்றுள்ளன.

"ஏகம் சத் விப்ரா பஹுதா வதன்தி'-
அதாவது, உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்
- என்கிறது ரிக் வேதம். இதையே நம்மாழ்வார் திருவாய்மொழியில்,
உளன் எனில் உளன் அவன் உருவம்
இவ்வுருவுகள் அலன் எனில் அலன்
என்கிறார்.

இல்லறம், துறவறம் இரண்டுமே மேன்மையானவையாகப் போற்றப்படுகின்றன. இல்லறத்துக்கு நிகரான தர்மம் இல்லை என்று  திருக்குறளும் ஆணித்தரமாகச் சொல்கிறது. அதேபோல துறவறம் கொண்டவரைப் பேண வேண்டும். துறவறத்தார் எல்லா சபைகளிலும் போற்றப்பட வேண்டியவர் என்றும் கூறுகிறது.

 எல்லாமும் இறைவன் கருணை என்று சரணாகதி அடைந்து விடும் எளிய பக்தி மார்க்கத்தையும் ஏற்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் எனும் கர்ம யோகத்தையும் வலியுறுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் என்பது என்ன?, நான் யார்? என்ற மிக நுட்பமான ஞான ஆராய்ச்சியையும் ஞான யோகம் என்று போற்றுகிறது.

"இன்றைய செயல்களால் நாளைய விதியை நீயே நிர்மாணித்துக் கொள்கிறாய்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதாவது, உனது செயலுக்கான விளைவை நீயே அனுபவிக்கிறாய் என்பதே நம்பிக்கை. உன் செயல்கள் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கோட்பாடு. அன்பை போதிக்கும் அதேவேளையில் அறத்தை நிலைநிறுத்த நம்பும் நியாயத்தைக் காக்கப் போரிடவும் தயங்காதே. விருப்பு, வெறுப்பற்று அறம் காக்கச் செய்யப்படும் செயல்களின் பலாபலன்கள் செய்தவனைப் பாதிப்பதில்லை என்றும் அழுத்திச் சொல்கிறது.

சனாதனம் என்றவுடன் வர்ணம் என்ற ஒற்றைச் சொல்லால் அதனைப் புறக்கணிக்கின்றனர். வர்ணம் என்பது பிரிவு என்று அகராதிகள் பொருள் சொல்கின்றன. நால்வகை வர்ணம் என்பது பிறப்பால் வருவது அல்ல. ஒருவர் தன் முயற்சியால், செயலால் தன்னை எங்கே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பதற்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அஸ்வத்தாமன் தன் தீய பழக்கங்களால், செயல்களால் தாழ்ந்தவன் ஆகிறான், விசுவாமித்திரர் அரச குலத்தில் பிறந்தவர். அவர் பிராமணனாகத் தன்னை மாற்றிக் கொள்கிறார். வர்ணக் கலப்பில் பிறந்த எத்தனையோ பேர் மகான்களாக வணங்கப்படுகிறார்கள். வியாசரும் நீதி நூல் தந்த விதுரரும் வர்ணக் கலப்பில் பிறந்தவர்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
        சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்கிறார் திருவள்ளுவர்.

இதையே, சாந்தோக்கிய உபநிஷதம் வர்ணம் என்பது குணங்களால் ஏற்படுவதே தவிர பிறப்பால் ஏற்படுவது அல்ல என்று தெளிவாய் எடுத்துரைக்கிறது. சத்திய கர்மா பற்றிய கதையில், "பூமியில் எங்கு எப்படிப் பிறந்தான் என்பதைவிட, என்ன செயலாற்றி எதை அடைய விரும்பி நீ எதுவாக நினைக்கிறாய் என்பதே முக்கியம். அதிலேயே உன் வர்ணம் அடையாளப்படுத்தப்படுகிறது' என்கிறார் ரிஷி கெளதமர்.

திருவள்ளுவரும் ஒளவைப் பாட்டியும் எடுத்தியம்பும் வாழ்வியல் நெறிமுறைகளைத்தான் சனாதன தர்மமும் சொல்கிறது. ஆக்கச் சிந்தனை கொண்ட பார்வையோடும் புரிந்து கொள்ளும் ஆவலோடும் உற்று நோக்கினால், சனாதன தர்மம் சொல்வதும் நமது பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுவதும் ஒரே வாழ்வியல் முறைதான் என்பதைத் தெளிவாக உணர முடியும். மிகச் சிறந்த நாகரிகத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அதனுள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

கோதை ஜோதிலட்சுமி

No comments:

Popular Posts