Sunday, 22 December 2019

முற்போக்குச் சிந்தனையும், முஷரப்புக்கு தண்டனையும்!

முற்போக்குச் சிந்தனையும், முஷரப்புக்கு தண்டனையும்!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,

வருமான வரி துறை அலுவலர்

உ லக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது -

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷரப்புக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரன தண்டனை.

பல சமயங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட முடியாத நிர்வாக முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டி வரலாம். இது மாதிரி சமயங்களில், உண்மையிலேயே பொது நலன் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைதானா என்பதை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.

மிகவும் சிக்கலான பணி இது. வெளியில் தெரிகிற, சாட்சிகள் உறுதிப் படுத்துகிற விவரங்களுக்கு அப்பால், நீண்டகால பயன்களுக்காக சில கசப்பான முடிவுகளை ஆட்சியாளர் தேர்ந்தெடுத்தாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், நீதித் துறையின் செயல்பாடுகள் முடக்கம், ஊடகங்கள் மீதான அடக்குமுறை..... என்று பல அட்டடூழியங்கள். கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியவை.

ஆனாலும் ஆட்சியாளராக ஒருவர் எடுத்த முடிவுகளுக்காக, பிரிதொரு நாளில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்கிற நிலை வந்தால், அந்த நாட்டு ஆட்சி நிர்வாகம் எவ்வாறு செயல்பட முடியும்...?

முஷரப்புக்கு எதிரான வழக்கு - 1999-ல் ராணுவத்தைக் கொண்டு, பிரதமர் நவாஸ் ஷெரிப் அரசை கவிழ்த்ததில் இருந்து தொடங்குகிறது. பாகிஸ்தானில், ராணுவம், ஒர் ஆட்சியைக் கவிழ்ப்பது புதிது அல்ல.

ஏற்கனவே 1956, 1977-ல் நடந்தது. 1947-ல் பாகிஸ்தான் உருவானதில் இருந்து, கடந்த 72 ஆண்டுகளில் சுமார் 33 ஆண்டுகள் அங்கே ராணுவ ஆட்சி இருந்துள்ளது.

இப்போதுதான் முதன் முறையாக, ஒரு சிவில் நீதிமன்றம், பாகிஸ்தானின் மிக உயரிய ராணுவ அதிகாரிக்கு எதிராக மரண தண்டனை வழங்கி உள்ளது. ராணுவத்தை விடவும் சக்தி வாய்ந்த அமைப்பாக, நீதிமன்றம் உருவெடுத்துள்ளது.

இது, ஒரு 'முன்னேற்றம்' என்கின்றனர் சிலர். ஆனால், சிறப்பு நீதிமன்றம் கூறி இருக்கும் சில வாசகங்கள் கடும் அதிர்ச்சி தருகின்றன. ஒரு வேளை, கைது செய்யப்படுவதற்கு முன்பாக முஷரப் இறந்து விட்டால், அவரது உடலை இழுத்து வந்து, பொது இடத்தில் மூன்று நாட்கள் தொங்க விட வேண்டும் என்கிறது தீர்ப்பு.

தனது நாட்டின் அதிபராக இருந்த ஒருவர் மீது, ஏன் இத்தனை வன்மம்..?

சர்வ அதிகாரம் கொண்ட அதிபராக இருந்த போது ஜெனரல் முஷரப், சட்ட நடைமுறைகளை தடுக்கப் பார்த்தார்; நீதிமன்ற செயல்பாடுகளை முடக்க முயற்சித்தார்; நீதிபதிகளின் அதிகாரத்தைப் பறித்து விட்டார் என்கிற கருத்து, கடுமையான தண்டனையின் பின்னால் ஒளிந்துள்ளது. எனவேதான், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒருவித பதிலடி, பழி வாங்கும் நடவடிக்கை என்று சிலர் கருதுகிறார்கள்.

ராணுவம், அரசாங்கம், ஐ.எஸ்.ஐ. (உளவு அமைப்பு) மற்றும் மத அடிப்படைவாதிகள் என்று, பல அதிகார மையங்கள் நிலவும் நாட்டில், நீதித்துறையும் மனம் போன போக்கில் செயல்படத் துணிந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை, சீர் குலைந்து போகும். அது யாருக்குமே நல்லதல்ல. ஐக்கிய அரபு அமீரகத்தில், தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் 76 வயது முஷரப், நாட்டைக் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

1961-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷரப், இளம் அதிகாரியாக, 1965-ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கு பெற்றார். அவரது வீரதீரச் செயலுக்காக, ‘இம்தியாஸ் சனத்' பதக்கம் பெற்றார்.

1971 போரிலும், 'கமாண்டோ' பிரிவில், கம்பெனி கமாண்டர் பொறுப்பு வகித்து, தனது நாட்டுக்காகப் போர் புரிந்தார்.

சுமார் 40 ஆண்டுகளாக தன் உயிரைப் பணயம் வைத்து, ராணுவத்தில் பணி புரிந்த ஒருவர், ‘ராஜ துரோகி'யாக இருக்க முடியுமா..?

ஜெனரல் முஷரப் - கடுமையான இந்திய எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டு இருந்தார். அதற்காக அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் எதிர்க்க வேண்டும் என்றில்லை. கண்மூடித்தனமான நாட்டுப் பற்றும் கூட, ஒரு வகையில் நாட்டுக்குக் கெடுதிதான்.

பயங்கரவாதத்துக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டவர் ஜெனரல் முஷரப். அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளின் செயல்களால், இஸ்லாம் மார்க்கத்துக்கு, தனது நாட்டு முன்னேற்றத்துக்கு, தீமையே விளையும் என்பதில் தெளிவாக இருந்தார். அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த நிலைப்பாட்டை அவர் எடுத்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் தனது கல்வி, ராணுவப் பணி, வாழ்க்கை முறை மூலம், சுயமாக அவர் எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது.

நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்தி - முஷரப், தனது சிறுவயது காலத்தைத் துருக்கியில் கழித்தார். அதனால்தான் துருக்கியின், முஸ்தபா கமால் அடாதர்க் அவரது மனம் கவர்ந்த நாயகன் ஆனார்.

கமால் அடாதுர்க், துருக்கி நாட்டின் புரட்சிகர தலைவர், துருக்கியக் குடியரசை நிர்மாணித்தவர்;

1923 முதல் 1938 வரை அதிபராக இருந்த போது, முற்போக்குச் சிந்தனைகளால் துருக்கியைத் தூக்கி நிறுத்தியவர். எல்லாரையும் அரவணைத்து, உயர்த்துகிற மிதவாத மார்க்கம்தான் இஸ்லாம் என்பதே முஷரப்பின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பயங்கரவாதம் இந்தக் கோட்பாட்டுக்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது; அதற்கு இடம் தரக் கூடாது என்று கருதினார். இதனால், பாகிஸ்தான் நாட்டில், 'மதரஸா' என்னும் சமயப் பள்ளிகளில், அடிப்படைவாதம் பயிற்றுவிக்கப்படுவதைத் தடுத்தார்.

பாகிஸ்தான் மக்கள், அறிவார்ந்த முற்போக்கு சிந்தனை உடைய இஸ்லாமியர்களாக, நமது இந்திய சகோதரர்களுக்கு இணையாகத் திகழ வேண்டும் என்று முஷரப் விரும்பினார். ஏற்கனவே இந்தத் திசையில், ஈராக்கின் சதாம் உசேன் ஆகியோர் ஆற்றிய பங்கு மகத்தானது. மத அடிப்படை வாதத்திற்கு எதிரான, இவர்களின் பங்களிப்பை உதாசீனப்படுத்துவது உலக நன்மைக்கு நல்லதல்ல.

தான் பதவியில் இருந்த வரை, அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளைத் தம் மண்ணில் தலை தூக்க விடாமல் பார்த்துக் கொண்டார் முஷரப்.

ஜெனரல் முஷாரப்பால் பதவி இழந்த நீதிபதிகளில் எத்தனை பேரால், அவர் அளவுக்கு, மத அடிப்படை வாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க முடிந்தது..? பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார, சமுதாய வளர்ச்சியில் முஷரப் கொண்டு இருந்த அக்கறையை யாராலும் மறுக்க இயலாது.

பர்வேஸ் முஷரப் எடுத்த முற்போக்கு நடவடிக்கைகளை, பாகிஸ்தான் நீதியம் பார்க்க மறுத்து விட்டது. அவருக்கு எதிராக தற்போது விதிக்கப் பட்டிருக்கும் மரண தண்டனை, மிதவாத அணுகுமுறைக்கு கிடைத்த மரண அடி.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்; அங்கே இது, மிகவும் சிக்கலான வழக்காகவே இருக்கும். தனது நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்த ஒருவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், தனது அதிகார வரம்பைத் தானாகவே சுருக்கிக் கொண்டது போல் ஆகிவிடும்.

ஒரு வேளை, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை ஆமோதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டால்..? பாகிஸ்தான் ராணுவம், மேலும் தீவிரமாக அரசு நடவடிக்கைகளில் தலையிடத் தொடங்கி விடலாம்.

எந்தப் பக்கம் சாய்ந்தாலும் பொது நலன் பாதிக்கப்படும் என்கிற இடியாப்பச சிக்கலில், தனது நாட்டைத் தள்ளி இருக்கிறது.

சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு. பாகிஸ்தான் இதனை எப்படி எதிர் கொள்ளப் போகிறது...?

இது நிச்சயமாக, அந்த நாட்டின் உள் நாட்டுப் பிரச்சினை. வேறு யாரும் இது குறித்துச சொல்வதற்கு, செய்வதற்கு ஏதும் இல்லை. அமைதியான சமரசத் தீர்வு எட்டப்படுமானால், அனைவருக்கும் நல்லது.

நல்லது நடக்கட்டும்.

No comments:

Popular Posts