Friday, 20 December 2019

பெண்களே பெண்களுக்கு எதிரியாகிறார்களா?

பெண்ணிய ஆர்வலரும், சமூக அறிவியல் ஆய்வாளருமான கமலா பாஸின் சொல்கிறார்: ‘ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் நிறையப் பெண்களை அறிந்திருக்கிறேன். தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் உரிமைக்காக உழைத்த ஆண்களையும் அறிந்திருக்கிறேன். பெண்ணியம் என்பது உண்மையில் உயிரியல் சார்ந்த செயல்பாடல்ல, அது ஒரு கருத்தியல்ரீதியான கோட்பாடு.’ பெண்ணியச் சிந்தனைகளில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஆண்களையும், ஆண்மையச் சமூகச் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி, அதன் குறைகளைக் களைவதையே அடிப்படைப் பணியாக வரையறுத்துக்கொள்ளப்பட்டது.

அது ஆண்களை முற்றிலுமாகச் சென்றடைந்துவிடவில்லை. இன்னொருபுறம் ஆணாதிக்கச் சமூகம் மிகவும் சாதுரியமானது. அது பெண்களுக்கு இழைக்கும் அநீதிகள் எதையும் நேரடியாகச் செய்வது கிடையாது; பெரும்பாலும் பெண்களை வைத்துத்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அது நிகழ்த்துகிறது. ஆணாதிக்கக் கோட்பாடுகளின் அடியொற்றி நடக்க அது பெண்களுக்குப் பழகிக்கொடுத்திருக்கிறது. பெண்களே பாதிக்கப்படுபவர்களாகவும் பாதிப்பை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பதால், பெண்ணியம் இருமுனை கொண்ட கத்தியைப் போல இந்தப் பிரச்சினைகளைக் கையாள வேண்டியுள்ளது.

வகுப்பறைப் பெண்ணியத்தின் சாராம்சங்கள் சிலவற்றைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அதுவே நடைமுறைப் பெண்ணியம் என்று நம்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், தான் உரையாடும் அனைவரிடமும், “பிற்காலத்தில் நான் ஒரு முழு நேரப் பெண்ணியவாதியாக இருப்பேன். பெண்களின் உரிமைக்காக ஆண்களை எதிர்த்துப் போராடுவேன்” என்று உணர்ச்சி ததும்பப் பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை அவரிடம், “குறிப்பாக ஆண்களை மட்டும் ஏன் குறைசொல்கிறீர்கள், அதற்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அதற்கு மறுமொழியாக, “ஆண்கள் பெண்களின் திறமைகளை மதிப்பதில்லை. அவர்களுக்குப் பெண்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே பெண்களால் அநேக காரியங்களில் ஈடுபட முடிவதில்லை” என்றவர், ஒரு ஆய்வுக்காகக் களப்பணி செய்யும் வாய்ப்பைப் பெண் என்பதால் தனக்குத் தராமல், மற்றொரு மாணவனுக்கு அளித்த சம்பவத்தை மேற்கோள் காட்டினார். அவர் பக்க நியாயங்கள் முற்றிலும் உண்மை என்றாலும், பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் ஆணாதிக்கச் சமூகம் இன்னும் வலுப்பெற்றுக்கொண்டுதான் இருக்கும்.

குடும்பம் முதல் பணிபுரியும் இடம் வரை தங்கள் திறமைகள் மீதான அவநம்பிக்கையைப் பெண்கள் தன் பாலினத்திடமிருந்துதான் முதலில் கடந்துவர வேண்டிய சூழலை ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கியிருக்கிறது. பெண்கள் மீது பலவிதமான எதிர்மறை எண்ணங்களைத்தான் அதன் கோட்பாடுகள் பெண்களுக்குள் விதைத்துவிட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணியவாதியோடு தொடர்ந்த உரையாடலின் முடிவில், “நீங்கள் ஒரு பெண், உங்கள் வீட்டில் நிகழவிருக்கும் ஒரு திருமணத்துக்காக ஐயாயிரம் பேருக்குச் சமைக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம்.

அந்த சமையல் வேலையைச் செய்துதருவதாக ஆண், பெண் என இரு சமையல்காரர்கள் உங்களை அணுகுகிறார்கள். அந்த ஆர்டரை இருவரில் நீங்கள் யாருக்குத் தருவீர்கள்?” எனக் கேட்டேன். ஆண் சமையல்காரரிடம் ஒப்படைப்பதாகச் சொன்னார். ஆணாதிக்கச் சமூகத்தின் வெற்றிக்கு இப்படித்தான் பெண்கள் தங்களுக்கே தெரியாமல் பங்களித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமையல் செய்யும் திறமை என்னவோ பெண்களுக்கு மரபணுவில் இருப்பதுபோல வீட்டில் காலங்காலமாகப் பெண்கள் சமைத்தாலும், அதைத் தொழிலாகச் செய்ய நேரும்போது பெண்களைவிட ஆண்களைத்தான் பெண்களே தேர்வுசெய்யப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். “அஞ்சு பத்து பேருக்குன்னா பரவாயில்ல, ஐயாயிரம் பேருக்கு சோறாக்கும்போது, பொம்பளைங்க சாப்பாட்ட கொழையவிட்ர மாட்டாங்களா?” என்ற அந்தப் பெண்ணின் அவநம்பிக்கையை இன்னும் எத்தனை தலைமுறைப் பெண்கள் கடந்துவர வேண்டும் என்று பிரமித்தபோது, பெண்ணியம் ஏழு கடல் தூரம் தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்தது.

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.comநவீனா

No comments:

Popular Posts