தமிழை வளர்த்த அயல்நாட்டு துறவி

தமிழை வளர்த்த அயல்நாட்டு துறவி

வீரமாமுனிவர்

நாஞ்சில் பி.சி. அன்பழகன், திரைப்பட இயக்குனர்.

இ ன்று (நவம்பர் 8-ந்தேதி) வீரமாமுனிவர் பிறந்தநாள்.

இத்தாலி இயேசு சபையை சேர்ந்த கான்சன் டைன் சோசப் பெஸ்கி 1680-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இத்தாலி நாட்டில் காஸ்திகிலியோன் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் கொண்டல்போபெஸ்கி, எலிசபெத் பெஸ்கி. கிறிஸ்தவ மதப் பரப்புரைக்காக, 1710-ம் ஆண்டில் செந்தமிழ் நாட்டிற்கு, தேன் தமிழ் கற்க தேக்கு மரத் தேகத்தோடும், பாக்கு மர உயரத்தோடும் இறையச்ச இயல்பாக வந்தார். சுப்பரதீபக்கவிராயரிடம் தமிழைக் கற்றார்.

வீரமாமுனிவர், தைரியநாதசாமி, சுவடி தேடும் சாமியார், பூக்களின் காதலன்... போன்றவைகள் இவர் தமிழ்பால் கொண்ட காதலால் வலிய வந்து ஒட்டிக் கொண்ட புனைபெயர்கள்

தேம்பி அழாமல் தெம்பாக கற்ற தமிழ் புலமையால் தேம்பாவணி காவியத்தை இமைகள் தூக்கம் தழுவாது விரைந்து எழுதி அரங்கேற்றம் கண்டார். இது இவரின் தமிழ்ப்புலமைக்கு சான்றாக உள்ளது. இந்த காப்பியம் முழுவதிலும் வீரமாமுனிவரின் மரபு கவிதைகளின் தமிழமுதத்தை பருகி மகிழலாம். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் சிறப்பான பணிகளை செய்துள்ள இவர், தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். பின்பு தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதியை உருவாக்கினார். தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதியை உருவக்கியது இவரது வாழ்நாள் சாதனையாகும்.

இன்று தமிழ் புலவர்களே பஸ் வந்தாச்சா என்று கலப்பின மொழிச் சரடு விடும் காலத்தில், வீரமாமுனிவர் அன்றே, திருக்காவலூரில் தமிழ் கல்லூரியை ஆரம்பித்து சுயேச்சையாக தமிழாசிரியராகவும் அமர்ந்து இலக்கண பிழையில்லா வரம்பில்லா தனித் தமிழ் வலிமைகளை பல அமர்வுகளில் அசத்தியிருக்கிறார்.

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய நூல்களை, ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். இலக்கிய சுவடிகளை பல இடங்களில் சென்று தேடியலைந்து சேகரித்தார். இதனால் இவர் சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் அகராதியை அனைவருக்கும் புரியும் படி உரை நடையில் வெளியிட்டார். வீரமாமுனிவரின் தமிழ்தொண்டு காரணமாக அவரது இயற் பெயரான கான்சன் டைன் ஜோசப் பெஸ்கி மருவி வீரமாமுனிவராக தேஜஸ் சோடு தமிழ்நாட்டில் வலம் வந்தார். தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தி தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூல் படைத்தார். அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்தார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் திரை மொழியில் அறம் தொழும் நகைச்சுவையை படைத்தாரென்றால், வீரமாமுனிவர் நூல் வழியில் பரமார்த்த குருவின் கதையை இலக்கிய தர வரிசைக்கு உயர்த்தினார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியமாகவும், தமிழின் முதல் சிறுகதையாகவும் இந்நூல் திகழ்கிறது. தமிழ் உரை நடை வளர்ச்சியில் வீரமாமுனிவருக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழ் எழுத்துகளில் குறில், நெடில் ஆகியவற்றில் திருத்தம் செய்தார். அந்த வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் தந்தை என்றும் அவரை அழைக்கலாம்.

போர்ச்சுக்கீசிய குருக்களே பழைய பனன ஓலைகளில் பள்ளி கொண்ட தமிழை நூல்களாக்கி அரியணை அழகோடு துள்ளி எழ வைத்தவர்கள் ஹென்றி பவர், கால்டுவெல், ஜி.யு போப் வரிசையில் வீரமாமுனிவரும் உயர்தர தமிழ்ப் புலவர்களின் தரவரிசையில் வந்த வெளி விருந்தாளியாவார்.

1706-ல் தரங்கம்பாடிக்கு வந்த ஜெர்மானிய சீகன் பால் குதான் நாட்குறிப்பு பயணக் கட்டுரைகளின் மூதாதையர் ஆவார். இந்த வியத்தகு மேதைகளால் நயத்தகு தமிழ் சிறகுகளை தேச எல்லைக் கற்களை தாண்டி விரித்தது. தமிழ்நாட்டில் கோனான் குப்பம், ஏலாக்குறிச்சி ஆகிய இடங்களில் வீரமாமுனிவர் தங்கி இருந்து செய்த பணிகள் பிரசித்திப்பெற்றவை. தமிழ் இலக்கியத்தின் சிகரமாக விளங்கும் திருக்குறளை லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து உலகறிய செய்தவர் வீரமாமுனிவர் தான். செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், இலக்கண திறவுகோல் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவரை போல் எந்த புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை ஆகியவற்றை படைக்கவில்லை. தமிழ் ஆராய்ந்த அயல் நாட்டு துறவிக்கு அவர் பெருமையை உலகறிய செய்யும் விதமாக சென்னையில் இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின் போது அப்போது முதல்-அமைச்சராக இருந்த அண்ணா சென்னையில் அவருக்கு சிலை எடுத்து கவுரவித்தார். 1747-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி தமது 67-வது வயதில் வீரமாமுனிவர் இறுதி மூச்சை சுருதி சுத்த தமிழில் காதலாகி கரைத்துக் கொண்டார். வீரமாமுனிவரின் பூத உடல் மறைந்தாலும் அவரது சீரிய தமிழ் தொண்டால் தமிழர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பெற்று இருக்கிறார்.

Comments