குடல் நலமா?

குடல் நலமா?

கமலேஷ் சுப்பிரமணியம்,எழுத்தாளர்.

எ ல்லோரும் உடல் நலமா? என்று தான் கேட்பார்கள், குடல் நலமா? என்று கேள்வி கேட்டமைக்கு நான் காரணம் சொல்வதற்கு முன்பு, நமது உடலின் ஒரு பகுதியான குடலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.

நமது குடலானது உணவை ஆராய்ந்து உட்கொள்கிறது, உணவு சுவையை உணர செய்கிறது, செரிமானம் செய்து உணவை எரிபொருளாக்கி நமது உடலை வளர்க்கிறது. அது மட்டுமல்ல சேமிப்பு கிடங்காகவும் திகழ்ந்து தேவையற்ற உணவு, நச்சு, அதிகப்படியான நார் முதலியவற்றை கழிவுகளுடன் வெளியேற்றம் செய்கிறது. குடலானது தன்னிச்சையாக செயல்படாமல், நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுடன் (குறிப்பாக மூளையுடன்) ஒவ்வொரு நொடியும் தொடர்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது நமது குடல்.

குடல் செய்யும் முக்கிய காரியம் உணவை செரிமானம் செய்வது. இதில், உணவு செரிமானமானது தொடங்குமிடம் வாய் அல்ல மூளை என்பது ஆச்சரியம். ஆம், நாம் உணவை உண்ணும் முன்பே, மூளை உணவை பற்றிய செய்தியை குடலுக்கு அனுப்பி தேவையான செரிமான சுரப்பிகளை சுரக்க செய்கிறது. ஆதலால் தான் சுவையான உணவை பார்த்தால் நமக்கு எச்சில் வருகிறது. மூளையின் எண்ணத்தில் தொடங்கும் செரிமானமானது, வாய், உணவுக்குழாய், வயிறு, சிறு குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை, பெருகுடல் கடந்து மலக்குடல் வந்தடைந்து, சேர்க்கப்படாத உணவு வெளியேற்றப்படுகிறது.

குடலை பற்றிய அடுத்த ஆச்சரியம் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள். உங்கள் ஒருத்தர் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த பூமியில் வாழும் மக்களைவிட, ஏன் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகம் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இந்த நுண்ணுயிர்கள் சேர்ந்து நுண்ணுயிர் கட்டாகிறது. நமது கை ரேகை போல் நமது குடலில் உள்ள நுண்ணுயிர் கட்டானது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். குழந்தை பிறந்தவுடன் அது குடிக்கும் தாய் பால் முதல் ஆரம்பிக்கிறது இந்த நுண்ணுயிர் சேர்க்கை.

நமது குடலில் உள்ள இந்த நுண்ணுயிர்கள், உணவு செரிமானத்திற்கு மட்டுமின்றி, ஹார்மோன் சுரப்பதற்கும் உதவுகிறது. முக்கியமாக, ஐம்பது சதவீதத்திற்கு மேல் நமது சந்தோஷத்திற்கு வித்திடும் ‘டோபோமின்’ என்ற ஹார்மோன் சுரப்பதற்கு உதவுவது நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களே. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நமது குடலை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்? என்பதை பார்ப்போமா!

முதலில் நாம் சமசீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நார் சத்து அதிகமாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் உள்ள உணவு நல்லது. தயிர், பூண்டு, வெங்காயம் போன்றவை கொண்ட உணவுகள் உட்கொள்வது மிக முக்கியம். அவை நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களை வளர்க்கவும், பேணி பாதுகாக்கவும் உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவு, செயற்கை நிறம் கூட்டப்பட்ட உணவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏதேனும் வைட்டமின் குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை உட்கொள்ளலாம்.

புகை பிடித்தல், மது அருந்துதல், ரசாயன கழிவுகளுடன் வேலை பார்த்தல் அல்லது அதனருகே வாழுதல், மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் போன்றவை நமது உடலில் நச்சுத்தன்மையை கூட்டி விடும்.

தினசரி உடற்பயிற்சி, நமது நுண்ணுயிர் கட்டை பராமரிக்க உதவும். சூரியனுடைய நேரத்தை ஒட்டிய வாழ்வு முறை இருந்தால் நமக்கு நன்மை. இதனால் தேவையான தூக்கம் கிடைப்பதுடன் மன அழுத்தம் குறையும். சந்தோஷமாக உற்றார், உறவினர், நண்பர்கள் என்று நற்சமூக வாழ்வுடன் தியான பயிற்சியும் மேற்கொண்டால் மனநிம்மதியுடனும், குடல் நலத்துடனும் வாழலாம்.

குடலை சரிவர பராமரிக்கவில்லை என்றால் பல வகை நோய்க்கு நாம் ஆளாக நேரும். வாய் துர்நாற்றம் தொடங்கி, செரிமான கோளாறு, வாந்தி, குமட்டல், உணவு விழுங்க முடியாமை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல் கசிவு, மலக்குடலில் வலி, பசையம் (குளூட்டன்) ஒவ்வாமை, அழற்சி குடல் வியாதி, குடல் புற்று நோய், எரிச்சல் கொண்ட குடல் போன்ற பல வகையான வியாதிகள் குடலை சுற்றி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் வரும் முன் காப்போம்.

திருமூலர் கூறியது போல, “உடம்பை வளர்த்தேனே, உயிரை வளர்த்தேனே” என்று வாழ்ந்து உடலின் பெரும்பகுதியான குடலை பராமரிப்போம். அடுத்த முறை உங்கள் நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும்போது “உடல் நலமா?” என்ற கேள்வியுடன், “குடல் நலமா?” என்ற கேள்வியும் சேர்த்து கேளுங்கள்.

Comments