Thursday, 7 November 2019

வாரி வாரிக் கொடுத்த வாரியார்

வாரி வாரிக் கொடுத்த வாரியார்

சுகிசிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்.

இன்று (நவம்பர் 7-ந் தேதி) பக்த பிரமுகர் கிருபானந்த வாரியார் நினைவு தினம்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள் புனைப்பெயர் ஒன்று வைத்துக்கொள்வார்கள். ஆனால் மயிலாப்பூரில் தாச்சி அருணாச்சல முதலி தெரு என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் தெருவுக்கு ரொட்டிக்கார தெரு என்று ஒரு புனைப்பெயர் உண்டு. உண்மையில் வறட்டிக்கார தெரு என்று தான் சொல்லி இருக்க வேண்டும். அவ்வளவு எருமைகள், சாணி, வறட்டிகள் என்று தெரு மணக்கும். அதில் இருபதாண்டுகளுக்கு மேல் குடியிருந்தோம்.

அங்கிருந்து மயிலை சமஸ்கிருத கல்லூரிக்கு நடந்து போக வேண்டும். 2, 3 கி.மீட்டர் வரும். கட்டாயப்படுத்தி என்னை அப்பா (கலைமாமணி டி.என்.சுகி.சுப்பிரமணியன்) அழைத்துப்போவார், வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்க. அந்த காலத்தில் வருடம்தோறும் ஒரு மாதம் அங்கே வாரியார் பேச்சு நடக்கும். வரமாட்டேன் என்று மறுக்கும் என்னை, மத்தள நாராயணன் தெரு பக்கோடா (எழுதும் போதே வெங்காய வாசம் வருகிறது) வாங்கித்தருவதாக ஆசைகாட்டி அப்பா இழுத்துப்போவார். கழுத்தில் மாலையோடு ஆஜானு பாகுவாக நின்று கொண்டு பேசுவார் வாரியார் சுவாமிகள். கோவில் மணி மாதிரி குரல் ஒலிக்கும். ராமாயணம், பாரதம், கந்தபுராணம் இப்படி ஏதாவது ஒரு கதை நடக்கும். அடடா... பாகுபலி படம் பார்த்த மாதிரி ஒரு எபெக்ட் இருக்கும். பக்கோடா தான் என்னை ஆரம்பத்தில் தூண்டியது. ஆனால் பக்திச் சொற்பொழிவு என்னுள் ஆழமாக பதிந்து விட்டது.

பொதுவாக பெரிய பெரிய பேச்சாளர்கள் சின்னப்பிள்ளைகள் முன்னால் வந்து உட்கார்ந்தால் பேச சங்கடப்படுவார்கள். ஆனால் துளியும் பாதிப்பின்றி அந்த பிள்ளைகள் கிரகிக்கும்படியும், படித்த மேதாவிகள் வியக்கும் படியும் பேச வாரியார் ஒருவரால்தான் முடியும்.

எதிரில் இருக்கும் பிள்ளைகளைக் கேள்வி கேட்பார். பதில் சொன்னதும் மேடைக்கு வரச்சொல்லி ஒரு சின்ன புத்தகம் பரிசு கொடுப்பார். அப்படி மேடை ஏறிய சிறுவர்களில் நானும் ஒருவன். இன்று மேடை மேடையாக ஏறி இறங்குவது அவரது ஆசியால் என்றால் மிகையில்லை. வாரியார் புத்தகம் கொடுத்த உடன் பிரித்து படிப்பார்கள் சில பிள்ளைகள். பட்டென்று “கல்யாணம் ஆனதும் பந்தல்லேயேவா பெண்டாட்டியோட பேசுவே.... போடா... போயி தனியாப்படி” என்பார். சபை கைகொட்டிச் சிரிக்கும்.

திருப்புகழ் ஒன்றைப் பாடித்தான் பேச்சைத் தொடங்குவார். திருப்புகழ் பரவ வேண்டும் என்பது அவர் வாழ்நாள் தவம். திருப்புகழ் அமிர்தம் என்றே பத்திரிகை நடத்தினார். அவரால்தான் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபைகள், பஜனைகள் ஆரம்பம் ஆயின. நெற்றி நிறைய திருநீறுபூசி இருப்பார். கழுத்தில் உருத்திரகண்டிகை, நவரத்தின மாலை (கண்ணதாசன் அணிவித்தது) அணிந்து சிவப்பழமாக அவர் இருக்கும் அழகே தெய்வீகமாக இருக்கும்.

காலை ஆறு மணிக்கு விமானம் என்றாலும் முன்னரே எழுந்து, தம் சிவபூஜையை இரண்டு மணி நேரம் செய்து விட்டுத்தான் பயணம் புறப்படுவார். சொற்பொழிவுக்கு காலம் தவறாமல் வந்து விடுவார். முன்னரே வந்து மேடையில் ஓர் ஓரத்தில் அமர்ந்தபடி ஏதாவது ஒரு கையால் பிடித்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். மறுகையால் பக்தர்களுக்கு விபூதி கொடுத்துக்கொண்டே இருப்பார். பிரமிக்கத்தக்க நினைவாற்றல்... இசை ஞானம்... குரல் வளம்... நடிப்புத்திறன்... ஆழமான படிப்பு, இயல்பான உயர் ஞானம் இவையே வாரியார் சுவாமிகள். ஆயிரக்கணக்கான கோவில்கள் திருப்பணி செய்தவர். பேச்சின் மூலம் கிடைத்த பணத்தை ஏழை, எளிய மாணவர்கள் படிப்புக்கு மாதா மாதம் மணியார்டராக அனுப்பிவிடுவார். எத்தனை கடிதங்கள் வந்தாலும் கைப்பட ஒரு தபால் கார்டில் பதில் எழுதுவார். திருமணம், விழாக்கள், ஆசி கோரி கடிதம் வந்தால் உடனே ஒரு வெண்பா வேகமாக அப்போதே எழுதிக்கொடுப்பார்.

கந்தர் சஷ்டி ஆறு நாட்களும் கடும் உபவாசம் இருப்பார். விரதம் என்று சுருண்டு படுத்துக்கொள்ள மாட்டார். வழக்கம்போல சொற்பொழிவுகள், கடிதம் எழுதுதல், கலந்துரையாடல் எல்லாமே இருக்கும். தந்தை பெரியாரின் பகுத்தறிவு புயல் வீசிய காலத்தில் இந்து மதத்தின் காவல் தெய்வமாக விளங்கிய ஞானபுருஷர் வாரியார் சுவாமிகள்.

நாத்திகத்தைக் கிண்டல் அடிப்பது பேச்சின் இடைஇடையே இருக்கும். நெற்றி நிறைய தாம் பூசி இருக்கும் திருநீற்றைக் காட்டியபடி “என்னாசாமி மூஞ்சியா? சுவரா? இப்படி வெள்ளையடிச்சு வைச்சிருக்க” என்று ஒரு பயல் கேட்டான். ஆமாண்டா குடியிருக்கிற வீட்டுக்குத்தான் வெள்ளையடிப்பாங்க... குட்டிச் சுவருக்கு அடிக்கமாட்டாங்க என்று அவர் நெற்றியைக் காட்டுவார். இங்க கடவுள் குடியிருக்கான்... அதான் வெள்ளை அடிச்சிருக்கேன்” என்று சொல்லி விட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.

உடல் - உடலுக்குள் உயிர் - உயிருக்குள் ஆன்மா என்கிற கடின விஷயத்தை விளக்க டயரு... டயருக்குள்ள டியூபு... டியூபுகுள்ள காத்து என்று விளக்குவார். திருநீலகண்ட நாயனார் கதை சொல்லும்போது, திருநீலகண்டர் விலைமகள் வீடு போய்விட்டு வந்து தம் மனைவியைத் தொட வரும் காட்சியை வாரியார் விளக்கியது என்னால் மறக்கவே முடியாது.

நாயனார் தொட வந்ததும் “எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்” என்று அவர் மனைவி சத்தியம் செய்வதாக சேக்கிழார் சொல்கிறார். வாரியாரோ “அவர் மனைவி சொல்லவில்லை. கணவன் தொட வந்தார். அன்னையார் விரும்பவில்லை. ஆனால் கணவனைக் கண்டிக்க வாய் வரவில்லை. பதறிப்போன சிவபெருமான் “எம்மைத் தொடாதீர்” என்று அம்மையாருக்காக உள்ளிருந்து குரல் கொடுத்தார்... என்னைத் தொடாதீர் என்று மனைவி பேசுவாள். எம்மை என்று மரியாதைப் பன்மையில் சிவபெருமான் தானே பேசுவார்” என்று விளக்கியபோது வியப்பில் ஆழ்ந்தேன்.

இவ்வளவு நுட்பத்தை கூட்டம் விளங்காது என்று கருதி, “அந்த அம்மா பேசவே சிவன் குரல் குடுத்தாருன்னா நம்ப முடியலே இல்ல” என்று சொல்லி விட்டு கூட்டத்தைப் பார்ப்பார். “சிவாஜி கணேசன் சினிமாவுல பாடுற மாதிரி வருது... அவரா பாடுவார்... சவுந்தர்ராஜன் பின்னாலே இருந்து பாடறாரு இல்ல... அதே மாதிரிதான்” என்று கூறி கூட்டத்தை மகிழ்விப்பார்... கைதட்டல் அடங்க 2 நிமிஷம் ஆகும்.

இளம் வயதில் வீணை கற்றுக்கொள்ள தினம் ஐந்து கி.மீ. தொலைவு கடக்க வேண்டி இருந்தது. எப்படி? வீணையைக் கையில் தூக்கிக்கொண்டு, தெருவில் நடக்க வேண்டும். இன்று இளம் பிள்ளைகள் இப்படி கஷ்டப்பட்டு கற்பார்களா என்ன? வீணையை வைத்து விட்டு குருநாதரை நமஸ்காரம் செய்து விட்டு கல்வி கற்பார். புறப்படும்போது குருவிற்கு மறுபடி ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். குரு கேட்டார் “அதான்... வந்ததும் ஒரு தடவை விழுந்து கும்பிட்டியே... மறுபடி எதற்கு இன்னொரு நமஸ்காரம்” என்றார். “காபி எத்தனை முறை கொடுத்தாலும் குடிக்கிறோமே... ஏன் இரண்டாவது முறை என்று கேட்பதில்லையே... நமஸ்காரம் குருவிற்கு இரண்டு முறை செய்தால் குறைந்தா போய்விடும்” என்பார். அப்படி ஒரு குரு பக்தி.

நூறாண்டு வாழ்ந்த ஞானதீபம் காஞ்சிமகா சுவாமிகள் காஞ்சீபுரத்திற்கு வரும்படி வாரியாரை அழைத்தார். வந்ததும் மகா சுவாமிகளை தம் பெரிய உடம்பு அப்படியே தரையில் படும்படி விழுந்து கும்பிட்டார் வாரியார். “நீங்கள் இப்படி கும்பிட வேண்டாம்” என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளிடம் சொல்லி இருந்தேனே... அவர்கள் உங்களிடம் சொல்லவில்லையா? என்று காஞ்சி சுவாமிகள் தர்மசங்கடத்துடன் கேட்டார். அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள். என்னுடைய கடமையை நான் செய்தேன் என்று இரண்டு வரிகளில் சொல்லி தம் பணிவு அடக்கம் புலப்பட நின்ற பண்பாளர் வாரியார்.

எருமை மாட்டைப் பலி கொடுக்கும் காளி கோவிலில் போய் மறித்து உயிர்ப்பலி வேண்டாம் என்று மக்களை மாற்றியவர் வாரியார். ஆயிரக்கணக்கான மக்களை அசைவ உணவு மறுத்து சைவமாக்கியவர் அவர். ஓர் அசைவ செல்வர் வாரியாரை வீட்டுக்கு உணவுக்கு அழைத்து விட்டு “சாமி... சைவம் அசைவம் கலந்துடாது சாமி... அடுப்பங்கரை வேற வேற... அரிவாள் மனை வேற வேற... கரண்டி பாத்திரம் வேற வேற” என்று இழுத்தார். வாரியார் சிரித்தபடி... அவர் வயிற்றைக் காட்டி “வயிறு ஒண்ணுதானே... அசைவத்துக்கு வேற, சைவத்துக்கு வேற வயிறா வைச்சுருக்கீங்க” என்றார். அத்தோடு மனுசன் செத்தா புதைக்கிற இடம் இடுகாடு... ஆடு மாடு செத்தா வயித்தில புதைக்கிறீங்க... நீங்க ஒரு மொபைல் இடுகாடு” என்றார். பணக்காரர் கைகூப்பியபடி அப்போதே சைவமாகி விட்டார்.

பேச்சையே தவமாக, வேள்வியாக, ஞானமாக நிகழ்த்தி பலரது வாழ்வில் விளக்கேற்றியவர் வாரியார் சுவாமிகள். வீரசைவ மரபில் படுத்த நிலையில் உயிர் பிரியக்கூடாது. அமர்ந்த நிலையில் உயிர் பிரிய வேண்டும் என்பர். சுவாமிகள் விமானத்தில் மும்பையில் இருந்து திரும்பும்போது திருப்பதி தாண்டிய தருணம் அமர்ந்த நிலையில் முருகனுடன் கலந்தார். “எத்தனை மைல் தாண்டினாலும் ரத்தின மயிலில் முருகன் வருவான்” என்பார். அவர் விஷயத்தில் அவர் வாக்கு பலித்து விட்டது!

No comments:

Popular Posts