Wednesday 6 November 2019

தயக்கத்தை தைரியமாக மாற்ற ஒரு கணம் போதும்..!

தயக்கத்தை தைரியமாக மாற்ற ஒரு கணம் போதும்..!

முத்துமீனா, எழுத்தாளர், நாமக்கல்.

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்ற அற்புதமான அர்த்தம் கொண்ட கவிமணியின் இக்கூற்றை அனைவரும் அறிந்திருப்போம். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழு பருவங்களிலும் பெண்களைப் போற்றி கொண்டாடுதலே நம்முடைய கலாசாரத்தின் அடிநாதம் ஆகும். பெண்ணை பூவோடும், நிலவோடும், நதியோடும், காற்றோடும், இசையோடும் மென்மையாக ஒப்பிட்டும் நாம் பார்த்திருக்கிறோம். அதே பெண்ணை இன்று சிங்கப் பெண்ணாக ஒப்பிடுகையில் உணர்ச்சிப்பூர்வமாக பெருமதிப்புடன் கொண்டாடி வருகிறோம். பெரும்பாலான ஆட்டோக்களின் பின்புறம் “பெண்கள் நம் கண்கள்” என்ற வாசகத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதே போல் சில ஆட்டோக்களில் “சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே” என்ற வாசகத்தையும் பார்க்க முடியும்.

பெண்ணால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்றொரு கருத்தையும் கேட்டிருக்கக்கூடும். ஆக, பெண் என்பவள் பிறந்தது முதல் இறுதிவரை தன்னுடைய வாழ்நாட்களில் அவளை சுற்றி ஏராளமான போற்றுதலையும், தூற்றுதலையும் சந்தித்தாக வேண்டும். ஒரு காலத்தில் பெண் குழந்தைகளே வேண்டாம் என்று கள்ளிப்பால் ஊற்றிக்கொலை செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இக்காலகட்டத்தில் அந்த நிலை மாறி பெண் குழந்தைகளும் இந்த சமூகத்தில் சுதந்திரமாக பிறந்து, வளர்ந்து, படித்து தன் சொந்தக்காலில் நின்று குடும்பத்தை காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகித்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆண்மகனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து கருத்து சுதந்திரம் இல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த நிலைமை மாறி இக்காலத்து பெண்கள் தைரியசாலிகளாக, புத்திசாலிகளாக வளர்ந்துள்ளனர்.

மேலே கூறிய பெண்களின் இக்கால நிலைமையானது பொதுவான ஒரு ஒப்பீடு என்றுதான் வைத்துக்கொள்ள முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்களைவிட இக்கால பெண்கள் நிச்சயமாக பலவகைகளில் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் மிளிர்ந்திருந்திருக்கிறார்கள். அந்த வகையில் சற்று ஆழ்ந்து சென்று பார்த்தோமானால் படிப்பு விஷயத்தில் ஏறக்குறைய அதிகப்படியான சதவீத பெண்கள் அபரிமித வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்ட சதவீத பெண்கள் சமூகத்தையும், சமூகத்தினரின் பார்வையையும், அன்றாட வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளையும், சிக்கல்களையும் எதிர்கொள்ளக்கூடிய மனதைரியத்தை கொண்டுள்ளார்களா என்றால், இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொள்ளாச்சி சம்பவமேயாகும்.

அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் நன்கு படித்த பெண்கள்தான் என்று தெரிகிறது. ஆக, இதிலிருந்து ஒரு ஆழமான உண்மையை பெண்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். கல்வி என்ற ஒன்று மட்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு போதாது. எல்லாவற்றையும் தாண்டிய மனதைரியமும், மனவலிமையும், தெளிவான சிந்தனையும், உறுதியான நிலைப்பாடும், ஒவ்வொரு பெண்ணிற்கும் இன்றியமையாதது தேவைப்படும் விஷயங்களாகும். பேருந்திலோ, ரெயிலிலோ தகாத முறையில் ஒருவன் பார்த்தாலோ, தொட முயற்சித்தாலோ சுற்றி இருப்பவர்களுக்கு பயந்து சொல்ல இயலா வேதனையை மனதில் மூடி மறைத்துக்கொண்டிருக்காமல் மிகுந்த மன தைரியத்தோடு கணீரென்ற குரலில் அவனை நோக்கி கத்தி திட்டுதல் வேண்டும். இவ்வாறு கனத்த குரலில் தன்னை அநாகரிக முறையில் அணுக நினைப்பவரிடம் பேசும்பொழுது ஒரு பெண்ணின் மனதில் எங்கிருந்தோ யானை பலம் வந்தது போன்ற உணர்வு ஏற்படும். எதிரில் இருப்பவன் கண்ணில் தன் முழு உடலும் அஞ்சி நடுங்கும் பயத்தை பார்க்க முடியும்.

இவ்வாறு ஒரு முறை செய்யத்தொடங்கினால், வாழ்க்கையில் இதுபோன்று பலவிதமான இன்னல்களின் போது பயப்படாமல், மனதிற்குள்ளே போட்டு மருகிக்கொள்ளாமல், நிமிர்ந்த நன்னடையோடு நேர்கொண்ட பார்வையால் தைரியமாக இருக்க முடியும். பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே படிப்பை காட்டிலும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும், உறுதியான நிலைப்பாட்டையும் பெற்றோர்கள் கற்றுத்தருதல் அவசியம். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுத்தருதலோடு நிறுத்தாமல், பெண்ணுக்கு அநியாயம் நேர்ந்தால் உடனடியாக தட்டிக்கேட்க வேண்டும் என்றும் சொல்லி வளர்க்க வேண்டும். 100 சதவீத பெண்களில் 99.9 சதவீத பெண்கள் பேருந்திலோ, ரெயிலிலோ நிறைய மக்கள் கூடும் பொது இடங்களிலோ நிச்சயமாக ஏதேனும் ஒரு முறையில் பாலியல் ரீதியாக அநாகரிக செயல் களால் பாதிக்கப்பட்டிருப்பர். இதில் 10 சதவீத பெண்கள் கூட அவ்விடங்களில் அத்தகைய செயலில் ஈடுபடுபவர்களை எதிர்த்து தட்டிக்கேட்டிருக்க மாட்டார்கள்.

ஏனெனில் ஒரு பெண்ணின் மனதில் இனம் புரியாத பயம் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ, பொது இடத்தில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ, இதை வெளியில் சொன்னால் மிகவும் கேவலமாக நினைப்பார்களோ என்று பலவிதமான பயம் அவளை சொல்லவிடாமல் தடுக்கும். இப்படி ஒவ்வொரு விஷயமாக தொடங்கி எல்லாவற்றுக்கும் தயக்கம் காட்டி சொல்ல இயலா வேதனையை மனதில் கொண்டு தவிர்த்தலை பெண்கள் அனைவரும் அடியோடு நிறுத்த வேண்டும். தன்னுடைய சுய உணர்வை, பாதுகாப்பு உணர்வை குலைக்கும் எவ்விதமான செயலையும் நெருங்கவிடாமல் அதீத தைரியத்தினால் தகர்த்தெறிய வேண்டும். இத்தனை வருடங்களாக புழுங்கிக்கொண்டிருந்ததை மாற்றி பொங்கி எழ வேண்டும். இக்கட்டான வேளையில் பெண்கள் வெளிகாட்டத்தொடங்கும் வலிமையானது மாபெரும் சக்தியைக் கொண்டது. அந்த ஒரு கணத்தை நினைத்தாலே பின்னாளில் எந்த ஒரு பிரச்சினையின் போதும் தயக்கமே காட்டமாட்டார்கள்.

தயக்கத்தை தைரியமாக மாற்றுவதற்கு ஒரு கணம் தேவை என்றால், அந்த ஒரு கணத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதில்லை. தனக்கு உதவி செய்ய பிறர் வரவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்காமல் தனக்கான பாதுகாப்பை தானே மேற்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கத் தொடங்கவேண்டும். பெண்ணியம் பேசும் பெண்கள் முதலில் தைரியம் பழகுதல் அவசியம். குறிப்பாக தற்கால இளம் பெண்கள் தனக்கென்று தனியான நிலைப்பாட்டில் நடந்து கொள்ள வேண்டும். எளிதில் தங்கள் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் சூழ்ச்சி வலைக்குள் இணையதளத்தின் மூலம் சிக்கித்தவிப்பதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு சுதாரித்து நடக்கும் வழிமுறைகளை பின்பற்றி உறுதியோடு செயல்பட்டால் இறுதியில் வரும் அவலநிலையை தவிர்க்க முடியும். மனதில் உள்ள தேவையற்ற பயத்தையும், நெருடலையும் என்று தூக்கி எறிகிறோமோ, அன்றே வாழ்க்கையின் புது பரிமாணத்திற்கு செல்ல முடியும். மெல்லினமே பழகி பழக்கப்பட்ட பெண்கள் வல்லினம் பழகுவது அவசியம்.

No comments:

Popular Posts