Wednesday 6 November 2019

எழுத்தறிவின் முன்னோடிகள் தமிழர்கள்

எழுத்தறிவின் முன்னோடிகள் தமிழர்கள்

சு. ராஜவேலு, வருகைப் பேராசிரியர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

இ ந்தியாவில் குறிப்பாக பண்டைய தமிழர்களின் எழுத்தறிவு ஆற்றலை அறிவதற்கு இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் பேசப்படுகின்ற கீழடி அகழாய்வு அமைந்துள்ளது. இந்த அகழாய்வைத் தவிர தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பல அகழாய்வுகள் நடந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் இல்லாத சிறப்பு கீழடி அகழாய்வில் அறிவியல் அடிப்படையில் தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு 600-க்கும் முன் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது தான். உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை ஒரு லட்சம் கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையும், பிற மாநில தொல்லியல் துறைகளும், பல்கலைக்கழகங்களும், ஆர்வலர்களும் கண்டுபிடித்து பதிப்பித்துள்ளனர். இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. இதன் மூலம் தமிழகத்தில் எழுத்துப் பரவல் என்பது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகவும் பரவலான எழுத்தறிவை மக்கள் பெற்றிருந்தனர் என்பதையும் காட்டுவதாக அமைகிறது.

தமிழ் செம்மொழி தகுதியைப் பெற மத்திய அரசு நிர்ணயித்த கால எல்லை அம்மொழி இன்றையிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால தொன்மையைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது. அதனை தமிழி எழுத்துகளின் சான்றே வரையறுத்தது. இப்போது தமிழி எழுத்துகளின் காலம் கீழடி அகழாய்வின் மூலம் மேலும் ஒரு நூற்றாண்டிற்கும் முந்தி சென்றுள்ளது. வருகிற காலங்களில் தமிழகத்தில் செய்யப்படும் அகழாய்வுகள் தமிழின் தொன்மையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் கடந்த நூற்றாண்டில் கால்டுவெல் அகழாய்வு செய்த பாண்டியரின் தலைநகரமான கொற்கையில் 1970-களில் அகழாய்வு செய்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கரிமம் 14 காலக்கணிப்பின்படி கி.மு 780 என அப்போது அறிவித்தது. கொற்கை அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்பு மட்கலன்கள் கிடைத்துள்ளன. இப்பொழுது மிக எளிதாக காலக் கணிப்பை செய்வதற்கான நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ளன. எனவே தமிழகத்தில் பரவலான அகழாய்வுகள் செய்யப்பட்டால் கீழடி போன்று பல தொன்மையான நகரங்களைக் கண்டுபிடித்து காலத்தை நிர்ணயிக்கமுடியும்.

இந்தியாவில் பல பண்டைய நகரங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வகழாய்வுகளில் மக்கள் பயன்படுத்துகின்ற மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் பரவலாக இதுவரை செய்யப்பட்ட 175 இடங்களில் 37 இடங்களில் மக்கள் பயன்பாட்டில் பயன்படுத்திய மட்கலன்களில் அவர்களது பெயர்கள் கீறப்பட்டுள்ளன. தமிழகத்தில் சங்க கால தொடர்புடைய ஊர்களில் மட்பாண்ட எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் 2600 ஆண்டுகளுக்கும் முன்பாகவே தமிழ் மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது புலப்படுகிறது.

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமணல் என்னும் ஊரில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் தான் மிக அதிக அளவில் பானைப் பொறிப்புகளில் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு 850 மட்கல ஓடுகளில் எழுத்துடைய மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக தற்போது மதுரைக்கருகில் உள்ள கீழடியில் இதுவரை 160-க்கும் மேற்பட்ட மட்கலன்களிலும் உரோமானியருடன் தொடர்புடைய அரிக்கமேடு, அழகன் குளம் ஆகிய அகழாய்வுகளில் பெருமளவில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இப்பட்டியலில் ஊர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஆண்டு தோறும் நீண்டு கொண்டு செல்கின்றன.

இப்பானைப் பொறிப்புகள் கிடைக்கும் சில ஊர்கள் வணிகர்களுடன் தொடர்புடையவை. குறிப்பாக கொடுமணல், அரிக்கமேடு, அழகன்குளம், காவேரிப்பூம்பட்டினம் போன்றவை. இந்நகரங்களுக்கு அயல் நாட்டினர் மட்டுமன்றி வட இந்திய வணிகர்களும் வந்துள்ளனர். இது குறித்து சங்க இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அவ்வாறு வந்த வணிகர்கள் தமிழர்களின் எழுத்தறிவைக் கண்டு வியந்துள்ளனர். தமிழர்கள் பானைப் பொறிப்புகளில் எழுதுவது போன்று தங்களுடைய பெயரையும் எழுத விழைந்து தமிழ் எழுத்துகளைக் கற்றனர். சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மட்கல ஓட்டில் தமிழின் அகர வரிசையை எழுதிப் பார்த்ததற்கான மட்கல ஓடு ஒன்று கிடைத்துள்ளது. உடைந்த நிலையில் உள்ள இம்மட்கலத் துண்டில் அகர வரிசை எழுத்துகளான அ, ஆ, இ, ஈ என எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள் வட இந்திய வணிகர்களுக்கு தமிழைக் கற்றுத் தந்ததுடன் தமிழின் அடிப்படை உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்து களையும் வட இந்திய பிராகிருத மொழிக்கு கொடையாக அளிக்கின்றனர்.

அடிப்படை எழுத்துகளைத் தமிழிலிருந்து பெற்று தமிழகத்திலேயே பிராகிருத மொழிக்கான சில எழுத்துகளை தமிழர்களின் துணையுடன் உருவாக்குகின்றனர். அவ்வாறு தமிழகத்தில் பிராகிருந்த எழுத்துக்கள் மொத்தம் 7 குறியீடுகள் தான். அவற்றையும் இலங்கை வணிகர்கள் தான் உருவாக்கியிருத்தல் வேண்டும். நிகமம் என்பது வணிக குழுவினைக் குறிக்கும் ஒரு சொல். இது கொடுமணல் அகழாய்வில் பானையிலும் மாங்குளம் குகைக் கல்வெட்டிலும் வருகின்ற பெயர். இதனை வட இந்தியாவில் பின்னர் வந்த அசோகன் பிராமி எழுத்தில் பிராகிருத ஒலிக்குறிய வர்க்க எழுத்தில் தான் எழுதி உள்ளனர். எனவே தமிழர்களின் துணையுடன் பிராகிருதத்திற்கான சில வர்க்க எழுத்துகள் தமிழ்நாட்டில் தோற்றம் பெற்று பின்னர் அம்மொழிக்கு ஏற்ற அனைத்து வர்க்க எழுத்துகளும் கி.மு 4-ம் நூற்றாண்டளவில் ஆந்திராவில் பட்டிப்பொருளு என்னும் பவுத்த விகாரையிலும், இலங்கை பவுத்த விகாரைகளிலும் உருவாகி பிராகிருத மொழிக்கேற்ற எழுத்து வகைகளை மவுரியப் பேரரசர் அசோகர் கி.மு. 3-ம் நூற்றாண்டில் சீர் செய்து பயன்படுத்துகின்றார்.

நகரங்களில் வாழ்ந்த தமிழர்கள் மட்டுமன்றி குக்கிராமங்களிலும் தமிழன் எழுத்து அறிவு பெற்றிருந்தான் என்பதற்குத் தமிழர் பயன்படுத்திய மட்கலன்கள் மட்டுமன்றி தமிழி எழுத்துப் பொறித்த நடுகல் கல்வெட்டுகளும் கி.மு. 5-ம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் கிடைக்கின்றன. இவை தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் புலிமான்கோம்பை, தாதப்பட்டி ஆகிய ஊர்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டையிலும் கிடைத்துள்ளன. இந்தியாவில் இதுவரை வட இந்திய பிராமியில் நடுகல் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமன்றி பொன்னாலான தகடுகள், மோதிரங்கள், உலோக முத்திரைகள், நாணயங்கள் ஆகியவற்றில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளமை தமிழர்கள் பெருமளவில் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிவிக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக எழுத்தறிவில் தமிழர்கள் சிறந்த நிலையில் இருந்தமையால் தான் இந்தியாவில் 60 சதவீத தமிழ் கல்வெட்டுகள் இதுவரை தமிழில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியும் அதன் எழுத்தமைப்பும் காலத்தால் முற்பட்டது எனவும் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிக் கல்வெட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஹத்திபாடா என்ற இடத்திலும் குஜராத் மாநிலத்தில் ருத்ரதாமன் என்ற மன்னனின் ஜுனாகத் கல்வெட்டும் கி.பி. 1-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனவும், பழமையான கன்னட கல்வெட்டு ஹல்மிதி என்ற இடத்திலும், பழமையான தெலுங்கு மொழிக்கான கல்வெட்டு எர்ரகுடிபாடு தனஞ்சயன் முத்துராஜா கல்வெட்டும் ஆகும் என இந்தியக் கல்வெட்டாய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழ் மொழியே இந்தியாவின் மூத்த மொழிகளில் முதன்மையானது என்பதையும் இலக்கிய வளம் மிக்க தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கும் முன்பே எழுத்தறிவில் மிகச் சிறந்த நிலையில் இருந்தனர் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

No comments:

Popular Posts