Tuesday 1 October 2019

கலை உலகின் சிங்கம்

இன்று(அக்டோபர் 1-ந்தேதி) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சகாப்தமாக திகழ்ந்தவர். சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ளகண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சரியத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.

‘பாச மலர்’ படத்தில் ‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்’ என்ற பாடல் வரிகள் தொடங்கும்முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் லேசாக, நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.

‘உடல் ஊனம் ஊனமல்ல, உன்னைத்தான் நான் மணந்து கொள்வேன்’ என்று ‘பாகப் பிரிவினை’யில் சரோஜாதேவி சொல்ல, வாதம் வந்த கையை ஒரு முறை பார்த்துவிட்டு, ‘இந்தப் பரிதாபத்துக்குரியவன் மேலா ஆசைப்படுகிறாய்’ என்று பரிதாபம், அடி மனதில் ஆனந்தம், அவளுக்கு நன்றி கூறுதல் அனைத்தையும் சில நொடி கண்ணசைவில் காட்டுவார். தமிழை அவரைப்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை.

“அய்யோ ஏமாந்தேன்! எத்தனையோ கஷ்டப்பட்டு, கடல் கடந்து வந்தேன்! கல்யாணி! காலையிலே உன்னைக் காணலாம், அத்தானைக் காணலாம், அப்பாவைக் காணலாம் என்று ஆசை அலைமோதிக் கிடந்தேனே! நெஞ்சிலே நஞ்சை அள்ளிக் கொட்டிவிட்டாள். கொஞ்சிக் குலவிக் கொடுமை செய்து விட்டாள்-வஞ்சகி!” என்று ‘பராசக்தி’யில் ஆட்டக்காரியிடம் உடைமைகளை இழந்த அப்பாவியாகப் பேசுவது...

“நீலவானிலே செந்நிறப் பிழம்பு, அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன். சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது. அதுதான் நீரின் நெற்றியிலே இட்ட, இந்த வட்டமான நிறப்பொட்டு” என்று ‘கட்டபொம்மனில்’ மனைவியிடம் போர் முழக்கமிடுவது...

“கைவீசம்மா கைவீசு! கடைக்குப் போகலாம் கைவீசு!” என்று நொறுங்கிய இதயத்துடன், உடைந்த குரலில் ‘பாசமலர்’ கடைசிக் காட்சியில் நடிப்பது...

“கலைவாணி! கருணாகரி! கல்விக்கரசி! சொல்லின் செல்வி! கற்றவர் போற்றும் கலாதேவி! வித்தை படித்தோர் வணங்கும் வேதவல்லி! காவிய நாயகர்கள் போற்றும் கலையுலகின் நாயகியே!” என்று பெருமையுடன் சரஸ்வதியைப் போற்றித் துதிப்பது...

“கொங்குதேர் வாழ்க்கை

அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது கண்டது மொழிமோ!

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற்றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே!”

என்ற பல்லை உடைக்கும் சங்க இலக்கியப் பாடலைத் ‘திருவிளையாடல்’ சிவன் வேடத்தில் உச்சரிப்பது - இப்படித் தமிழ் மொழியில். அளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது.

ஒரு நடிகன், வேஷம் கட்டுவதிலேயே 50 சதவீதம் மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்கப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொள்வார்.

சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர, புலிபோல் ஒரு நடை நடந்து வருவார் - மனோகரா - படத்தில்.

மரமேறும் சாமுண்டி கிராமணியாய் ‘காவல் தெய்வத்தில்’ கைதட்டல் பெறவே ஒரு நடை நடப்பார்.

‘போனால் போகட்டும் போடா’ பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார்.

‘சட்டி சுட்டதடா, கைவிட்டதடா’ பாடலுக்கு ஒரு வித்தியாசமான ‘வாக்கிங் ஸ்டிக்’ ஊன்றிய நடை.

அப்பர் சுவாமிகளாக ‘திருவருட் செல்வரில்’ முதிர்ந்த பெரியவர் நடை.

“வெற்றிவேல்! வீரவேல்! சுற்றிவந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்” என்ற ‘கந்தன் கருணை’ பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை!

அவருடைய நினைவாற்றல், கிரகிக்கும் சக்தி அபாரமானது! காட்சிக்கான வசனங்களை, மற்றவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்?

நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி, அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்யமாட்டார். பட்டையைக் கழற்றி விடுவார்.

‘உயர்ந்த மனிதன்’ உச்சகட்டக் காட்சியில், திருட்டுப் பழி சுமத்தப்பட்ட என்னை, பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய்த் தெறிக்கும் அளவுக்கு விளாசித் தள்ளி விட்டார்!

அவரைக் கட்டுப்படுத்த சவுகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டார்.

இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்காதவர் இருக்க முடியாது.

ஜெமினியின் ‘விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் ஒரு காட்சியில் பத்மினி கன்னத்தில் ஓர் அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி, அடுத்த படப்பிடிப்பு தளத்தில் விழுந்து விட்டது.

‘ஷாட்’ முடிந்ததும், பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார்.

போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். அந்தப் படப்பிடிப்புத் தளத்துக்குள் நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருகியவாறு இருந்தவரைப் பார்த்துப் பதறிப்போய் ‘என்னம்மா’ என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை. வலி தாங்க முடியவில்லை. முழுசா அழுதிட்டு வந்திடுறேன். ஐந்து நிமிடம் பொறுத்துக்குங்க!” என்றாராம் பத்மினி!

‘ராஜராஜசோழன்’ படப்பிடிப்பு, வாசு ஸ்டூடியோவில் தஞ்சை பெரிய கோவிலின் ஒரிஜினல் அளவில் ‘செட்’ போட்டிருந்தார்கள்.

அதிகாலை ஏழு மணிக்குப் படப்பிடிப்பு. சிவாஜி, ஒரு அடி உயரமுள்ள அலங்காரக் கொண்டையுடன், திருப்பாச்சி அரிவாள் மீசையுடன், ஆடை அலங்காரங்களுடன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு 6.50-க்கு கம்பீரமாக நடந்து வந்தார்.

நான், அவருக்கு அரை மணி நேரம் முன்னதாக ‘ஸ்பாட்டு’க்கு போயிருந்தேன். எனக்கு ‘ஷாட்’ வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

சிவாஜிக்குக் கோபம், ஆத்திரம். “என்னடா! நான் ரெயில்ல வந்தா. நீ பிளேன்ல வர்றியா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நடிப்பில்தான் கிட்டயே நெருங்க முடியல! இந்த மாதிரி விஷயங்கள்லயாவது உங்களோட போட்டிப் போடலாம்னுதான்” என்றேன்.

உடனே கோபம் மறைந்து, ஹ... ஹ... ஹ... என்று சிரித்தவாறு, “வா... வா, நல்லா முன்னுக்கு வா” என்றார்.

உடலில் எந்த ஒரு நடிகனும், ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. சிவாஜி, காலையில் ரிக்‌ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும், கிழிந்த கோட்டுமாய் கை ரிக்‌ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு, பளபளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக, ‘சொர்க்கம்’ படத்தில் நடிப்பார்...! ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படிச் செய்திருக்க வாய்ப்பு இல்லை.

பேராசை பிடித்த அந்தக் கலைஞன், சிங்கமாய்க் கலையுலகில் உலவியவன்! சிங்கத்தின் பங்கு என்று சொல்வதுபோல இரையின் பெரும் பங்கை எடுத்துக்கொண்டு, எல்லா விதமான வேடங்களையும் தானே போட்டு நடித்து விட்டான்! அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒருமுறை பார்த்துக் கொள்கிறோம்.

அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிர்ஷ்டம்! தமிழ்நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷ்டம்!

No comments:

Popular Posts