Monday, 9 September 2019

மனிதத்தின் மேன்மை மனிதநேயம்

மனிதத்தின் மேன்மை மனிதநேயம்

இரா.பிறையா அஸ்வத்,

உதவி பேராசிரியை,

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,

மதுரை.

2003 -ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, பாக்தாத் நகரில் உள்ள கெனால் விடுதி சற்று பரபரப்புடன் காணப்பட்டது. விடுதி புகை மண்டலமாய் காட்சியளித்தது. மனித வெடிகுண்டால் பல உயிர்கள் மண்ணோடு மண்ணாயின. உலக நாடுகள் அதிர்ந்துபோயின. சற்றும் எதிர்பாராத நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி செர்ஜியோ, விண்ணை அடைந்தது, உலக நாடுகள் அனைத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. மனிதநேயம் எங்கே என தேடச்செய்தது. உலகத்தை தன் கையில் வைத்து அதன் ஓட்டத்தைக் கணிக்கும் அதிசய பிறவிதான் மனிதன். சாதனைகள் பலவற்றை சாதாரணமாக முடிப்பவன். சாதனைகளுக்கு பின்னே இருக்கும் வலிகளை வலுவிழக்கச் செய்து, சரித்திர பக்கங்களில் இடம்பெறும் மனிதனின் தன்னலமற்ற பண்பு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.

தென் அமெரிக்கா கண்டத்தில் தோன்றி, ஐரோப்பா கண்டத்தில் கல்வி கற்று, தனது சேவைப் பணியை ஆசிய கண்டத்தில் தொடங்கியவர்தான் செர்ஜியோ வெயிரோ டி மெல்லோ. தான் வாழ்ந்த 55 வருடங்களில் 34 வருடங்களை இவ்வுலக உயிர்களுக்காகவே அர்ப்பணித்தவர்.

புலிட்சர் பரிசு பெற்ற ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக இருந்த சமந்தா பவரின், “செர்ஜியோ ஒன் மேன்ஸ் பைட் டூ சேவ் தி வேர்ல்ட்” என்ற புத்தகம் செர்ஜியாவின் வாழ்வை நிலைநிறுத்தும். வங்காளதேசத்தில் தொடங்கிய சேவை, பாக்தாத்தில் முடியும் வரை காண்போர் அனைவரையும் அன்பால் அரவணைத்தது. பல நாடுகளில் அகதிகளின் வாழ்வை வளமாக்க, அவர்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றுதலை கடமையாக கொண்டார்.

மக்களின் விடியலுக்காக பாக்தாத் சென்றவரின் வாழ்க்கை பாதையை மாற்றியது மனித குலம் தானே! மனிதனிடமிருந்து மனிதனை காக்கும் கருவி எது? என்ற கேள்விக்கு விடை காண முயன்றனர். அன்றைய தினத்தை அடையாளமாக வைத்து, மனிதன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதநேயமே என்பதை உணர்ந்து உலக மனிதநேய தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. மனிதநேயம் என்பதற்கு அன்பு, பாசம், கருணை என பல பொருள் உண்டு. இருப்பினும், உண்மையான மனிதநேயம் தன்னலம் கருதா பொது நலத்தில் தான் உள்ளது.

ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னை விரும்பவேண்டும். தன் வார்த்தை என்னும் வாளை அன்பால் தீட்டவேண்டும். எண்ணம் முழுவதையும் அண்டை அயலாரை அரவணைத்து செல்லும் குணத்தால் நிறைத்தல் வேண்டும். தனது பண்பினால் பிறரை வரலாறு படைக்க தூண்டுகோலாக்கவேண்டும். அப்போது இன்பம் எங்கும் நிறைந்திருக்கும்.

ஆனால் மனிதன், நியூட்டனின் மூன்றாம் விதியான ஒவ்வொரு வினைக்கும் சரியான எதிர்வினையை மட்டுமே கடைபிடிக்க பழகுகின்றனர்.

எந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சியில் முன்னேற்றத்தை அடைகிறானோ அதற்கேற்றாற்போல, தன்னலம் என்னும் சுயநலத்தின் காலடியில் கட்டுண்டு கிடக்கிறான். உயிரை அலட்சியம் செய்வதால், அவதிப்படுகிறான்.

சாலையில் இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அதை சட்டை செய்யாது, விபத்தைச் சந்தித்த பிறகு, ரத்தத்திற்காக மனித நேயம் தேடுகின்றனர். மனித உயிர்களின் மதிப்பை தெரிந்தவர்களால் மட்டுமே அங்கு மனிதநேயம் காப்பாற்றப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விண்ணுலகம் அழைத்தபோது, ராமேசுவரத் தீவு இளைஞர் படையால் சூழ்ந்தது. வானும் பூமாரி பொழிந்தது. இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மூத்த இளைஞன். மனிதர்களுக்குள்ளே புகுந்து புதுமைப் படைத்தார். அவர் மனிதநேயத்திற்காக வழிநடத்தப்பட்டவர். எண்ணத்தில் விளையும் பயிரே மனித நேயம். நாம் இருக்கும் இடம் எதுவாயினும் அங்கே நல்ல குணங்களை விதைப்பதே நேயம்.

செய்யும் தொழிலில் முழுமனதோடு செயல்பட்டு அதனால் பயன்பெறுவோர் வாழ்த்துகின்ற அற்புதமான நிலையே மனிதநேயம். பயன்பெறுவோரின் மொழிகளைக் கற்றறிந்து அதற்கேற்ப நடத்தல் மனிதநேயத்தின் அடிப்படை அகதியாய் அண்டை நாட்டை நாடுவோருக்கு அன்னம் வழங்கிடும் நாடே அவர்களுக்கு சுவர்க்க பூமி. எதிரிகளைத் துரத்தியடிக்கும் வீர உள்ளத்திற்குள் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் ராணுவத்தின் வெள்ளை உள்ளம்தான் மனிதநேயம்.

அன்பினால் இந்த உலகையே ஆண்ட அன்னை தெரசா, மனித நேயத்தின் உயிர்நாடி. எந்திரத்தனமாக ஓடும் நாம் கணப் பொழுதையாவது மனிதர்களின் மகிழ்ச்சிக்காக வாழ்ந்தவர்களை நினைவில் நிலைநிறுத்த வேண்டும். உலக அமைதிக்காக இன்னுயிரை ஈந்தோருக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும்.

இளைய சமுதாயமே! மனிதநேயத்தின் பொருள், அவரவர் காணும் செயலில் இருக்கும். செயல் என்பது சொல்லின் வெளிப்பாடு. சொல்லானது எண்ணத்தின் வெளிப்பாடு. மனிதநேயம், எண்ணத்தின் வரி வடிவம். மதம், இனம், மொழி வேறானாலும் மனிதனின் வாழ்வை உயர்த்தும் ஆதாரம் மனித நேயம். உலகின் மாபெரும் சக்தி, மனித சக்தி. மனிதன் வாழும்போதே அதனை உணரவேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம் வாழ்வை உயர்த்துவதற்கே! நாம் காணும் கசப்பான நிகழ்வுகள், நமக்கு அனுபவத்தைக் கற்றுத்தரும் படிப்பினைகள். பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பினை, நாம் கொடுக்க முன்வரவேண்டும். பிறரிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைத்தான் மற்றவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர் என்பதே உண்மை. அறிவின் ஆற்றலில் அன்பு கலந்தால் ஆகாயம் வசப்படும். பொறுமை என்னும் பொக்கிஷத்தை போற்றினால் போராட்டங்கள் குறையும். அனைவரிடத்தும் நிறை மட்டும் காண விளைந்தால் தரிசு நிலம் நன்னிலமாகும். பிறருக்கு நல்லது செய்ய முனைந்தால் கோடி நன்மை வந்து சேரும். உயிர்களை ஆபத்தில் இருந்து காப்பது மனிதநேயம். அதுபோல தன் உடலையும், மனத்தையும், சிந்தையையும் போதைப் பொருட்களிலிருந்தும், வஞ்சக செயலிலிருந்தும் காப்பது மனிதநேயமே.

தன்னை அர்ப்பணிக்கும் குணம் தன்னை நேசிப்பவருக்கே இருக்கிறது. ஆதலால் தன்னை நேசித்து, பிறரை வாழவைக்கும் மனிதநேயத்தை ஒளிச்சுடராய் ஏற்றிடுவோம்.

அகிலத்தில் உள்ள நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை, அகிம்சை வழி நின்று, அடக்கிடுவோம். மனிதனை மனதால் பார்த்திடுவோம். மனித நேயம் மண்ணில் மழையாய் பொழிந்திட வாழ்ந்திடுவோம்.

No comments:

Popular Posts