Monday, 9 September 2019

படிப்பிற்கேற்ற வேலை

படிப்பிற்கேற்ற வேலை

முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்.,

காவல்துறை இயக்குனர்.

கு ரூப்-4 தேர்வுகளில் 5 ஆயிரம் பணியிடங்களுக்கு 13.59 லட்சம் போட்டியாளர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் பலர் பொறியியல் பட்டதாரிகள். காவல்துறையில் காவலர் பணியில் சேர 10-வது படித்திருந்தால் போதுமானது. ஆனால் இப்போது தேர்வு எழுதிய 2.3 லட்சம் போட்டியாளர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகளாக இருக்கிறார்கள்.

உயர்படிப்பு படிப்பதே உயர் பதவி வேலைக்காகத்தான். படிப்பிற்கேற்ற வேலை தேடுவதும் நல்லதுதான். ஆனால் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பது இன்று சிரமமாகி விட்டது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கு சரியாக பொருந்தும். படிப்பிற்கேற்ற வேலைதான் செய்ய வேண்டுமா? அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து விடலாமா? என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் உள்ளார்கள்.

நான் படித்தது விவசாய முதுகலைப்பட்ட படிப்பு. ஆனால் 32 ஆண்டுகள் வேலை செய்வதோ காவல் துறையில், இரண்டு ஆண்டுகள் வங்கி அதிகாரியாகவும் பணி செய்துள்ளேன். இதுவே ஒரு முரண்பாடாக தெரிகிறது அல்லவா?. ஆனால் இதில் எந்த தவறுமில்லை. எந்த படிப்பும் படிக்கலாம் பின்னர் என்ன வேலையும் செய்யலாம். அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வேலை கூட தேடலாம் என்பதுதான் 21-ம் நூற்றாண்டின் வேலைவாய்ப்பு விதியாக இருக்கிறது.

தேவைக்கு அதிகமான படிப்பு படித்தவர் காவலராக பணி செய்வதில் நன்மையும் ஏற்பட்டிருக்கிறது. பொறியியல் பட்டதாரிகளின் செயல்பாடுகள் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். இவர்கள் சட்டங்களையும், மக்களையும், மரபுகளையும், நடைமுறையையும், மாற்றங்களையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். அவர்களது நடவடிக்கை காவல்துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். அவர்கள் படிப்பும், பட்டமும், துறையின் லட்சியத்தை அடைய நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும்.

இன்று பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். தமிழ் எழுத்தாளர் மறைந்த சுஜாதா (ரங்கராஜன்) ஒரு மின்னணு பொறியியல் பட்டதாரி, மறைந்த கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கவில்லை. ஆக ஒருவருக்கு ஒரு பணியின் மீது ஆர்வம் ஏற்பட்ட பிறகு அவர் அவரது அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்வார், வெற்றி பெறுவார். கல்வி கற்காமல் ஒருவர் எந்த துறையிலும் பிரகாசிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அது, பள்ளியிலும் கல்லூரியிலும் கற்கலாம்; வீட்டிலும், வீதியிலும், அங்காடியிலும், நூல்களிலும், அனுபவத்திலும் கூட அந்த தொழில் சார்ந்த கல்வியைக் கற்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சிலருக்கு மேற்கத்திய நாடுகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள்; சிலர் செல்வந்தர்களின் ஆதரவோடு படிக்கச் சென்றார்கள். அங்கு கணிதம், சட்டம், உலக வரலாறு, பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறிவியல், முன்னேற்றம் என்று கற்று அறிந்தார்கள். அதோடு நாகரிக மக்களின் சமத்துவக் கொள்கை, ஜனநாயகம், தனிமனித உரிமை, சமூக நீதி போன்றவற்றையும் தெரிந்துகொண்டார்கள். இவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வந்ததும் இந்திய மக்கள் படும் துன்பங்களைக் கண்டு கதி கலங்கினார்கள். எனவே படித்த படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்தனர். அப்படியே களத்தில் இறங்கி போராடினர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தாதாபாய் நவ்ரோஜி (1825-1917), மகாத்மா காந்தி (1869-1948), ஜவகர்லால் நேரு (1889-1964) மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் (1891-1956) இவர்களில் அம்பேத்கர் பிற்காலத்தில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதினார். அவர்கள் அன்று இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்ற உயரிய கல்வி அவர்களுக்கு பெரிதும் உதவியது. இவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்தும், நூலகங்களிடமிருந்தும் அறிவை சேகரித்தார்கள்.

ஆனால் எந்த கல்லூரி கல்வியும் இல்லாத பெருந்தலைவர் காமராஜர், தேசத் தலைவராக திகழ்ந்தார். நாட்டின் பிரதம மந்திரியை தேர்வு செய்யும் ‘கிங் மேக்கர்’ என்ற அரசியல் வித்தகராகவும் ஜொலித்தார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மூன்று முறை பதவி வகித்தார். அவரது காலத்தில்தான் பவானிசாகர் அணை, கீழ் பவானி, ஆளியார் பரம்பி குளம் போன்ற பல அணைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவர் பள்ளிக்கூடங்கள் பல திறந்து பாமரமக்களின் கல்விக் கண்களைத் திறந்தார். மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்த சமூக அறிஞரும் இவரே. ஆனால் இவர் எந்த கல்லூரியிலும் படிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை, ஏழைகளின் மீது அக்கறை, அரசியல் மேடை, தலைவர்களுடன் நெருக்கம், அதிகாரிகள் பழக்கம், சிறைச்சாலை அனுபவம், செய்தித்தாள் வாசிப்பு ஆகியவை அவருக்கு தரமான பயனுள்ள கல்வியைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனால் அவரால் இங்கிலாந்தில் கற்றவர்களுக்கும் ஒருபடி மேலே போய் நிற்க முடிந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான வரைவுத் திட்டம் இதுதான். நீங்கள் படிக்கும் கலை, அறிவியல், வணிகவியல், மொழி, பொறியியல் போன்ற பாடத்தை உண்மையான அக்கறையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் கற்றுவிடுங்கள். கல்லூரி தேர்வு தேவையும் மீறி கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதே நேரம் உங்களது மனதிற்கு எந்த வேலை பிடித்திருக்கிறது? உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்ற ஆராய்ச்சியையும் சமகாலத்தில் செய்யுங்கள். கல்லூரி நாட்களில் ஒரு பொழுதுபோக்கையும் வளருங்கள். கல்லூரியின் இறுதியாண்டில் படித்த படிப்பிற்கேற்ற ஒரு வேலையைத் தேடுவதா? அல்லது படிப்பிற்கு நேரடித்தொடர்பு இல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுப்பதா என்ற முடிவை எடுக்கலாம்.

படித்த படிப்புதான் தொழிலா அல்லது பொழுது போக்கைத் தொழிலாக மாற்றுவதா என்ற முடிவெடுக்கும் நன்னாள் வரும் வரை நீங்கள் நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும், பத்திரிகைகளையும் படிக்க வேண்டும். எழுதுதல், பேசுதல், வாசித்தல், விவாதித்தல் போன்ற திறமையையும் ஒருசேர வளர்க்க வேண்டும்.

இன்று கல்லூரியில் பட்டம் பெற்ற அனைவரிடமும் ஒரு தரமான கல்வி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எனவே படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும் என்று எல்லோரும் அடம் பிடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அப்படி வேலை கேட்டால் வேலை கிடைக்கவும் செய்யாது. ஆகவே கிடைக்கும் வேலையில் சேர்ந்துவிட வேண்டியதுதான். அந்த வேலையில் அக்கறையுடன் பணியாற்றினால் புதியதாக நிறைய கற்றுக்கொள்ள முடியும். அப்படி கற்றுக்கொண்ட பின்னர் படிப்பிற்கு ஏற்ற வேலையும் கிடைக்கும்; படிப்பிற்கு மீறிய வேலைகூட கிடைக்கும்.

No comments:

Popular Posts