Monday, 9 September 2019

விண்வெளியில் வளரும் சோதனைக்கூட மனித மூளைகள்

‘ஆர்கனாய்டுகள்’ எனப்படும் மனித மூளை உயிரணுக்களைக் கொண்ட மூளைப் பந்துகள்

ஒரு காலத்தில் விண்வெளியை அண்ணாந்து பார்த்து அது குறித்த கற்பனைகளை செய்யவும் கனவுகளைக் காணவும் மட்டுமே முடிந்தது மனிதனால். ஆனால் இன்று, விண்வெளியின் பல்வேறு பகுதி களைப் படம்பிடிக்கவும், எங்கெல்லாம் கோள்கள், நிலவுகள், புறக்கோள்கள் ஆகிய பல்வேறு வகையான பிரபஞ்ச அமைப்புகள் இருக்கின்றன என்று சல்லடைப் போட்டுத் தேடி துல்லியமாக தகவல்களை பதிவுசெய்து அசத்திக்கொண்டு இருக்கிறான் மனிதன்.

விண்வெளியில் உள்ள ஏதாவது ஒரு நிலவில் அல்லது கோளில் குடியேறுவதுதான் மனிதனின் அடுத்த இலக்கு. அதற்காக செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கோள்களுக்கும் பூமியின் நிலவுக்கும் விண்கலங்கள் சென்று அங்கு தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றனவா என்று கண்டறிந்தது எல்லாம் பழைய கதை.

தற்போது, மனிதர்கள், தாவரங்கள், எலி, நாய் போன்ற விலங்குகள் ஆகிய பல்வேறு உயிரினங்களை சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை, முற்றிலும் ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் வசிக்க வைத்து அவற்றின் உடலில் எந்தவித மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும், ஆபத்தான ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் நோய்கள் ஏதேனும் ஏற்படுகின்றனவா என்று உலகின் பல ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அத்தகைய ஆய்வுகள் நல்லதும் கெட்டதுமாய் சில பல முடிவுகளை அளித்துவந்தாலும் ஆய்வு முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் ஆலிசன் மியோத்ரியின் (Alysson Muotri) சோதனைக்கூடத்தில் சுமார் இரண்டு வாரங்கள் வரை வளர்க்கப்பட்ட ‘ஆர்கனாய்டுகள்’ (Organoids) எனப்படும் மனித மூளை உயிரணுக்களைக் கொண்ட மூளைப் பந்துகள், விண் வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு (International Space Station) நாசா மூலமாக சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

மனித தோல் உயிரணுக்களை மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலமாக முதலில் ஸ்டெம் செல்களாக மாற்றி பின்னர் அந்த ஸ்டெம் செல்களில் இருந்து இந்த ஆர்கனாய்டு மூளைப் பந்துகள் உருவாக்கப்பட்டன. முற்றிலும் ஈர்ப்பு விசையே இல்லாத ஜீரோ கிராவிட்டியில் (Zero gravity) இந்த மூளைப் பந்துகள் வளருமா என்று கண்டறிவதும், ஒரு வேளை நன்றாக வளர்ந்தால் எந்த வகையில், எப்படி வளர்கின்றன என்பதைக் கண்டறிவதுமே இந்த ஆய்வின் முதன்மையான நோக்கம் என்கிறார் ஆய்வாளர் மியோத்ரி.

முக்கியமாக, ஊட்டச்சத்து நிறைந்த திரவங்கள் அடைக்கப்பட்ட பைகளில் வைத்து பின் அவற்றை ஒரு உலோக பெட்டியினுள் அடைத்து இந்த மூளைப் பந்துகள் சர்வதேச ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கு அந்த ஆர்கனாய்டு மூளைப் பந்துகள் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து எண்ணிக்கையில் பல்கிப் பெருகியுள்ளதாக சமீபத்தில் கூறியுள்ளார் முனைவர் மியோத்ரி.

தொடக்கநிலை வளர்ச்சியில் உள்ள மனித சிசு மூளைகள் வெளியிடும் ஒரு வகையான அடிப்படையான மூளை அலைகளை (brain waves) இந்த ஆர்கனாய்டுகள் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார் மியோத்ரி. ஆர்கனாய்டுகள் வெளியிடும் மூளை அலைகள், ஆயிரக்கணக்கான நரம்புகளின் வலையமைப்புகள் செயல்படும்போது வெளியாகும் மூளை அலைகளுக்கு நிகரானவையாய் இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் சில நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவரும்போதும், கனவு காணும்போதும் இந்த வகை மூளை அலைகள் தோன்றும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த ஆர்கனாய்டுகளுடன் சிலந்தி போன்ற தோற்றம் கொண்ட ஒரு ரோபோவை இணைத்து அவற்றுக்கு இடையில் மூளை அலை பரிமாற்றம் நிகழ்கின்றதா என்றும் பரிசோதிக்கப்பட்டது.

முக்கியமாக, உலகின் முதல் மூளை ஆர்கனாய்டுகள் உருவாக்கப்பட்டு தற்போது வெறும் ஆறு வருடங்களே ஆகியுள்ள நிலையில், இந்த வகையான ஆர்கனாய்டுகள் தொடர்பான ஆய்வு முடிவுகளுக்கு உறுதியான கருத்தாக்கங்களை, அர்த்தங்களை உருவாக்குவதும், அதுகுறித்த புரிதல்களை உறுதி செய்வதும் மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் தென் கலிபோர்னியாவின் நரம்பியல் ஆய்வாளர் ஜியார்ஜியா குவாட்ராட்டோ உள்ளிட்ட சில நரம்பியலாளர்கள்.

ஏனெனில், இந்த வகை ஆர்கனாய்டுகள் விண்வெளியில் வளருமா என்பதே சந்தேகத்துக்கு இடமாக இருந்த நிலையில், ஜீரோ கிராவிட்டியில் அவை ஆரோக்கியமாக வளர்ந்து பல்கிப் பெருகியது மட்டுமல்லாமல் மூளை அலைகளை வெளியிட்டுள்ளது மிகவும் நம்பிக்கையூட்டும் ஒரு ஆய்வு முடிவு என்றாலும், இது மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு மேலும் பல நரம்பியல் தகவல்களை உறுதி செய்தால் மட்டுமே இந்த மூளைகள் மனித மூளைகளுக்கு நிகரான செயல்பாடு கொண்டவைதானா என்பதை உறுதி செய்ய முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், தற்போது இந்த ஆர்கனாய்டுகள் மூலமாக ஆட்டிசம், ஸ்கீசோப்ரீனியா உள்ளிட்ட சில மூளைக்குறைபாடுகளையும், சீக்கா வைரஸ்கள் மூளையை எப்படி பாதிக்கின்றன உள்ளிட்ட பல ஆய்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அவற்றிலிருந்து அர்த்தமுள்ள கருத்தாக்கங்களும், மூளைத் தொடர்பான மேலதிக நரம்பியல் புரிதல்களும் ஏற்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், தற்போது பூமிவிட்டு விண்வெளி வரை சென்று ஆரோக்கியமாக வளரும் மனித மூளை ஆர்கனாய்டுகள் மனிதர்களை தாக்கி நிலைகுலையச் செய்துவிடும், மனித வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பல்வேறு வகையான மூளைக் குறைபாடுகளை முழுமையாக புரிந்துகொள்ளவும், அக்குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சைகளை உருவாக்கி அவற்றை குணப்படுத்தவும் உதவும் என்று நாம் நம்பலாம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

No comments:

Popular Posts