Thursday, 3 January 2019

வங்கிகளுக்கு மூலதனம் மட்டும் போதுமா?

வங்கிகளுக்கு மூலதனம் மட்டும் போதுமா? | By எஸ். ராமன் | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! மறு பங்கு மூலதன திட்டத்தின் மூலம் சுமார் ரூ.29,000 கோடியை, மத்திய அரசிடமிருந்து மூலதன உதவியாக சில பொதுத்துறை வங்கிகள் விரைவில் பெறப் போகின்றன என்பது சமீபத்திய செய்தி. இதை அறிந்தவுடன், உடல்நலக் குறைவோடு சிகிச்சைக்குக் காத்திருக்கும் நெருக்கமான நண்பருக்கு, அவருக்கு மிகத் தேவையான சிகிச்சை மருந்து கிடைத்து விட்டது என்பது போன்ற நிம்மதி உணர்வுதான் நம் அனைவரது மனதிலும் மேலோங்கியது என்று சொல்லலாம். பொதுத்துறை வங்கிகளை தங்களின் நட்புகளில் ஒருவராக பொது மக்கள் கருதி வந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்திய வங்கி சரித்திரத்தை, 1969-ஆம் ஆண்டுக்கு முன்..., 1969-ஆம் ஆண்டுக்குப் பின்... என்று இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1969-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, வங்கிச் சேவை என்பது பெரும்பாலும் வசதி படைத்தவர்களுக்காக மட்டும்தான் என்ற மனப்பான்மை மேலோங்கி நின்றது. 1969-ஆம் ஆண்டில், தனியார் துறையில் இயங்கி வந்த பல வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, படிப்படியாக அந்த மனப்போக்கு மாறி வங்கிச் சேவை என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரித்தானது என்ற அணுகுமுறை துளிர்த்து வேரூன்ற ஆரம்பித்தது. அதுவரை, வங்கிகளின் வாசல் படியைக்கூட மிதிக்காத அடித்தட்டு மக்கள், வங்கிச் சேவையின் பயனாளிகளாக மாற ஆரம்பித்தனர். தங்கள் திறமைக்கு ஏற்ற தொழிலைச் செய்வதற்கான நிதியுதவி அளித்து, தங்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு கிரியா ஊக்கியாகச் செயல்பட்ட வங்கிகளை தங்கள் நட்பு வட்டத்தில் ஒன்றாக பொதுமக்கள் கருத ஆரம்பித்தனர். 1969-ஆம் ஆண்டில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய சமூக உணர்வோடு கூடிய நிதி சேவைகளைப் பற்றி பட்டியலிட முடியாது. அதுவும் நீண்ட காலமாக தனியார் வங்கிகளால் ஒதுக்கப்பட்ட வேளாண்மை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சி, இந்த வங்கிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. வங்கிச் சேவை என்ற காற்றை அடித்தட்டு மக்களை நுகரச் செய்தது, இந்த வங்கிகளின் சமூக நோக்கத்துடன் கூடிய செயல்பாடுகள்தான். இதைத் தவிர, 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அபரிமிதமான வளர்ச்சி, எண்ணற்ற இளைஞர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை வாரி வழங்கியது எனலாம். இதனால், சுமார் பத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவராவது வங்கிப் பணியில் சேர வாய்ப்பு கிடைத்து, அது பல குடும்பங்களை வாழ வைத்தது. வங்கிப் பணியாளருக்கு சமூகத்தில் பிரத்யேக அந்தஸ்தும் கிடைத்தது. வங்கிச் சேவையில், இந்த மாதிரி புரட்சிகரமான மாற்றங்களுக்குப் பல்வேறு கட்டங்களில் அரசியல் அழுத்தம் தேவைப்பட்டது என்பதை மறுக்க முடியாது. ஆனால், நாளடைவில் அந்த அழுத்தம் தேவைக்கு அதிகமானதாக மாறி, வங்கிகளின் வாராக் கடன் என்ற நோய்க்கு ஒரு காரணியாக மாறிவிட்டது என்பதுதான் வருத்தமான விஷயமாகும். கடன் வழங்குவதற்கு முன்பு ஆராயப்பட வேண்டிய காரணிகளான கடன் விண்ணப்பத்துக்கான நோக்கம், தொழிலின் தன்மை, ஈட்டப்படும் வருமானம், கடனைத் திருப்பிச் செலுத்தும் பொருளாதார வல்லமை, பிணையங்கள் ஆகியவை படிப்படியாக தளர்த்தப்பட்டு, கடனாளியின் சமூக அந்தஸ்து மற்றும் அரசியல் தொடர்புகள் ஆகிய காரணிகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. இந்த மாதிரி மாற்றங்களின் விளைவுகள் வாராக் கடன் வளர்ச்சி மூலம் பிரதிபலிக்க ஆரம்பித்தன. வங்கிகளின் இந்த வாராக் கடன் பிரச்னைதான், சமீப காலங்களில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி போன்ற மேற்பார்வை அமைப்புகளுக்கும் இடையே அந்த அமைப்பின் கவர்னர் ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறும் அளவுக்கு பலத்த கருத்து மோதல்கள் ஏற்படக் காரணமாக அமைந்தது எனலாம். வாராக் கடன்களால் நீண்ட காலமாக சிக்கித் தவித்து, மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, தீவிர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சில வங்கிகளின் மீதான நிர்வாகக் கட்டுப்பாடுகள் ரிசர்வ் வங்கியால் உடனடியாக தளர்த்தப்பட வேண்டும் என்பது அந்தக் கருத்து மோதல்களில் அடங்கும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் செயல்பாடுகளில் கட்டுப்பாடு விதிக்கப்படுவதுபோல்தான் அளவுக்கு அதிகமான வாராக் கடன்களின் பாதிப்பால், மூலதன கணக்கின் பெரும் பகுதியை இழந்து முடங்கிக் போன வங்கிகள் மீது கடன் வழங்குதல், வியாபார விரிவாக்கம், செலவுகள் மற்றும் பணியாளர்களைச் சேர்த்தல், பணி உயர்வு முதலானவற்றில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவற்றின் வாராக் கடன் வசூல் முன்னேற்றம் ரிசர்வ் வங்கியால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த மாதிரி அளவுகடந்த கட்டுப்பாடுகளால், தொடர்புடைய வங்கிகளின் கடன் வழங்கும் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, அதனால் தொழில் துறை பெருமளவில் பாதிக்கப்படுவது நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடியது என்ற எதிர்மறை விளைவுகளை அரசின் அதிகார வர்க்கம் பட்டியலிட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, பட்டியலிடப்பட்ட கருத்துகள் ஓரளவு நியாயமானது என்றாலும், கண்காணிப்பில் இருக்கும் வங்கிகளின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்பது, காலில் பலத்த காயத்துடன் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் நோயாளியை காயங்கள் ஆறுவதற்கு முன்பு எழுந்து ஓடச் செய்வது போன்றதுதான். அதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாட்டு குறைபாடுகள் முதலில் சரி செய்யப்பட வேண்டும். அதில் ஒன்று, மூலதனக் குறைபாடாகும். இந்தக் குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொதுத் துறை வங்கிகளின் மூலதன கணக்கை வலுப்படுத்த , ரூ.2.11 லட்சம் கோடி அளவிலான மறு முதலீடுத் திட்டத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது; இதில் 1.05 லட்சம் கோடி ரூபாய் 2017-18-இல் சில வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் அடுத்தகட்டமாக, கண்காணிப்புக்கு உள்பட்ட 11 வங்கிகளில், 7 வங்கிகளுக்கு அந்தந்த வங்கியின் நிதி நிலைமையைப் பொருத்து ரூ.1,638 கோடி முதல் ரூ.10,086 கோடி வரை மூலதன நிதி ஆதாரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி ஆதாரங்கள் வங்கிகளின் மூலதன கணக்கை மேம்படுத்தி, அவற்றின் கடன் வழங்கும் திறனை வலுப்படுத்தும் என்பதால், கண்காணிப்புக்கு உள்பட்ட சில வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மேம்படுத்தப்பட்ட மூலதன நிதி ஆதாரங்களால் பாதிக்கப்பட்ட வங்கிகள் உடனடியாக புத்துயிர் பெற்று விடுமா என்பது மில்லியன் டாலர் வினாவாகும். ஏனென்றால், வங்கிகளின் தற்போதைய நலிந்த நிலைமைக்கான காரணங்களில் நிர்வாகக் கோளாறு, திறமைக் குறைபாடு ஆகிய காரணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கடன் விண்ணப்பங்களை ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை எட்டுதல், வழங்கிய கடன்கள் மீதான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகள், கடன் வசூலிப்பு ஆகிய துறைகளில் போதிய அளவில் பணியாளர்களின் திறமையை மேம்படுத்த வங்கி நிர்வாகங்கள், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இந்தக் காலகட்டத்தில் மிக அவசியமாகும். வாராக் கடன் என்பது கடன் வழங்கும் வியாபார நடவடிக்கையில் பொதிந்திருக்கும் ஒரு முக்கிய இடர்ப்பாடு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, அந்த இடர்ப்பாட்டை அதிக அளவில் வளர விடாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு வங்கி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று, வங்கிகளால் வழங்கப்பட்ட பல கடன்களில் சில கடன்கள் வாராக் கடனாக மாறுவது சகஜம்தான். ஆனால், வாராக் கடனாக மாறிய கடன் கணக்கை தரம் தாழ்த்தாமல், தரமுள்ள கணக்காக அதை தொடர்ந்து வெளிப்படுத்தும் வித்தைகள்தான், வங்கித்துறையில் இதுவரை நடந்தேறியதாகக் கணிக்க முடிகிறது. அந்த மாதிரி மறைக்கப்பட்ட கணக்குகளை வெளிக் கொண்டு வருவதற்கு, ரிசர்வ் வங்கியின் பிரத்யேக நடவடிக்கை தேவைப்பட்டது. வங்கிகளின் இந்த மாதிரி நெறியற்ற வழிமுறைகள் உடனடியாகக் களையப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மிக அவசியம். பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக அமைப்பு மத்திய அரசின் அதிகார வர்க்கத்திடமிருந்து தனிப்படுத்தப்படவேண்டும். வங்கிகளை நிர்வகிக்கும் இயக்குநர் குழுக்களில் வங்கித் துறை சார்ந்த நிபுணர்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான், வங்கி நிர்வாகங்கள் துறை சார்ந்த நிபுணத்துவத்துடன் வியாபார ரீதியான முடிவுகளை எடுக்க முடியும். ஒரு குடும்பத்தின் தலைவர், அந்தக் குடும்பத்தைப் பற்றிய அனைத்து சாதக பாதகங்களை அறிந்தவராகவும், அந்தக் குடும்பத்தோடு ஒன்றிய ஓர் உறுப்பினராகவும் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் குடும்ப மேம்பாட்டில் அவருடைய ஈடுபாடும், பங்களிப்பும் முழுப் பலனை அள்ளித் தரும் என்பது பொது நியதியாகும். வங்கி நிர்வாக தலைமைப் பொறுப்புக்கும் இந்த விதி மிகப் பொருந்தும். குறுகிய கால அடிப்படையில், ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்புக்கு மற்றொரு வங்கியின் அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட வங்கியில் நீண்ட காலம் பணிபுரிந்த ஒருவரை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுத்தால், பலன்களின் அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நிர்வாகச் சீர்திருத்தம் என்ற வேர்ப் பகுதியை உரமிட்டு வலுப்படுத்துவதில்தான் பொதுத்துறை வங்கிகளின் ஒளிமயமான எதிர்காலம் அடங்கி இருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ? கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு)

No comments:

Popular Posts