Monday 17 September 2018

தொலைநிலைக் கல்வியில் படிக்கும்போது....

தொலை நிலைக் கல்வி ஒரு வரப்பிரசாதம். மாணவர் பருவ வயது கடந்தவர்கள், படிப்பை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றவர்கள் போன்றோர் தங்கள் லட்சியத்தை அடைய நல்வாய்ப்பாக உருவானவைதான் தொலை நிலைக் கல்வி. ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வியை வழங்கி வருகின்றன. ஆனால் தொலைநிலைக் கல்வி எளிதானது என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. தவறான அந்த எண்ணம் அவர்களை தேர்வு நேரத்தில் தடுமாற வைக்கும். தொலைநிலைக் கல்வியில் படிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இங்கே பார்ப்போம்... நேரடியாக கல்லூரிக்கு சென்று ‘ரெகுலர்’ முறையில் படிக்க முடியாதவர்களுக்காகவும், பணி செய்துகொண்டே படிக்க விரும்புபவர்களுக்காகவும் கொண்டுவரப் பட்டதுதான் தொலைநிலைக் கல்வி முறை. அதனால் வயது வரம்பு கடந்து கல்வியின் பயனை அடைந்தவர்கள் பல லட்சம் பேர். தொலை நிலைக் கல்வியின் சிறப்பம்சமே கட்டாய வகுப்பறை என்ற வரையறை இல்லாததுதான். சில பல்கலைக்கழகங்களில் வார இறுதிநாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அனைவரும் ஆஜர் ஆவது கட்டாயமில்லை. வகுப்புக்குச் சென்றால் பாடங்களை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும், தேர்வும் கடினமாகத் தோன்றாது. கட்டாயம் இல்லை என்பதற்காக வகுப்புக்குச் செல்லாதவர்களும், ஒரு பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காகத்தான் படிக்கிறோம், தேர்வை எழுதினாலே ‘பாஸ்’ (தேர்ச்சி பெற) செய்துவிடுவார்கள் என்ற நினைப்புடன் படிக்கத் தொடங்குவது பலரின் எண்ணமாக உள்ளது. பல நேரங்களில் அவர்களின் எண்ணம் பொய்த்துப் போவதுடன், குறுகிய கால படிப்பை, ஆராய்ச்சிப் படிப்புபோல பல ஆண்டுகள் படிக்க வேண்டியதாகிவிடுகிறது. பிறகு ‘பிட்’ அடித்தாவது தேர்ச்சி பெற வேண்டும் என்பது போன்ற குறுக்கு வழியில் முயற்சி செய்யும் எண்ணத்தையும் தூண்டிவிடுகிறது. இதுபோன்ற தடுமாற்றம் வராமல் இருக்க தொலைநிலைக் கல்வியை தேர்வு செய்யும்போதே, தங்கள் லட்சியத்தை உறுதியாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பட்டம் பெற்று அரசு பணிக்குச் செல்வது என்பது உள்பட நீங்கள் இந்த படிப்பை தேர்வு செய்ததற்கான காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதை குறித்த காலத்தில் வென்றெடுக்க வேண்டிய உறுதியையும் மனதில் வளர்க்க வேண்டும். அதற்கு சிறந்த மனப்பக்குவம் வேண்டும். லட்சியப்போக்குடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தை படிப்பதற்காக செலவிட வேண்டும். அப்போதுதான், உங்களால் வெற்றிகரமாக கல்வியை நிறைவுசெய்ய முடியும். பள்ளியில் படிக்கும்போது பாடங்கள் நடத்த ஆசிரியரும், பயிற்சி பெறவும், சந்தேக நிவர்த்தி பெறவும் டியூசன் வகுப்புகளும் இருக்கும். ஆனால் தொலைநிலைக் கல்வியில் படிக்கும் போது இந்த உதவிகள் இருக்காது. சுயமாகப் படித்து பயிற்சி பெற வேண்டியிருக்கும். அது பலருக்கும் வித்தியாசமான அனுபவமாகவும், தடுமாற்றமான நிலையையும் உருவாக்கலாம். இருந்தாலும் பள்ளிப் படிப்புவரை நாம் பெற்ற அனுபவமும், வயது முதிர்வு, மற்றும் மனநிலை வளர்ச்சியின் பயனாக நம்மால் எதையும் தேடிப் படிக்கவும், சுயமாக திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் வர வேண்டும். பெரும்பாலும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடப் புத்தகங்களே படிப்பதற்கு போதுமானதாக இருக்கும். சில பாடங்கள், தகவல்களுக்கான விளக்கங்கள் மட்டும் தேவைப்படும். இன்றைய இணைய நுட்ப காலத்தில் அந்த சந்தேகங்களை எளிதில் தேடித் தீர்த்துக் கொள்ள முடியும். தாங்கள் படிக்கும் பல்கலைக்கழக இணையதளங்களிலேயே உங்கள் படிப்பு தொடர்பான ஏராளமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் நீங்கள் தேடும் பலவற்றுக்கும் விடை கிடைக்கலாம். பாட புத்தகங்களை முறையாக படித்தாலே, தேர்வை சிறப்பாக எழுதி விடலாம். அதற்காக தினசரி குறித்த நேரத்தை ஒதுக்கிப் படியுங்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நூலகங்கள் செல்வதை வழக்கப்படுத்துங்கள். பணியில் இருப்பவர்கள் வார இறுதி நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நூலகங்கள், ஆடியோ-வீடியோ சிடி.க்கள், இணையதளங்கள் போன்றவை தொலைநிலைக் கல்விக்கு பெரிதும் உதவும். சில வகையான படிப்புகளுக்கு, இணையதளங்களில் அதிகளவு தகவல்கள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றவற்றை பல்கலைக்கழக தொடர்பு மையங்களின் வழியே கேட்டுப் பெறலாம். மூத்த மாணவர்கள், நண்பர்களின் உதவியையும் நாடலாம். கலைப்படிப்புகள் தவிர்த்த பல்வேறு படிப்புகளுக்கு கட்டாய பயிற்சி வகுப்புகளும், வருகைப் பதிவேடும் அவசியமாக இருக்கும். செயல்முறை வகுப்புகள் இருக்கும். பணியில் இருப்பவர்கள் இத்தகைய கல்வியைத் தங்களால் தொடர முடியுமா? பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கெடுக்க முடியுமா? என்பதை யோசித்துக் கொண்டு படிப்பை தேர்வு செய்ய வேண்டும். ஆசைக்காகவோ, அவசியத்திற்காகவோ தேர்வு செய்துவிட்டு அவஸ்தைப்படக்கூடாது. உதாரணமாக சட்டம், சுற்றுலா, கேட்டரிங், டிசைனிங், தொழிற்பயிற்சி படிப்புகள், ஆர்கிடெக்சர் மற்றும் பல அறிவியல் படிப்புகளுக்கு இத்தகைய கட்டாய வகுப்புகளும், செய்முறைத் தேர்வும் இருக்கும். எனவே இவற்றை தேர்வு செய்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். பலர் தொலைநிலை படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்யாமல் இருப்பதற்கு, தேர்வு செய்யும் படிப்பைப் பற்றிய புரிதல் இல்லாததும், அதை அடைய தேவையான முயற்சிகள் செய்யாததுமே காரணமாகும். வேலை, அலைச்சல், அசதி, சோம் பேறித்தனம், அலட்சியம் போன்ற பண்புகள் தொலைநிலைக் கல்வியை பாதிக்கச் செய்துவிடும். வருடங்களை வீணடிக்க வைத்துவிடும். முன்னேற்றத்தை விரும்புபவர்கள் ஒருசில தடைகளை கடந்து பயிற்சியை நிறைவு செய்து பட்டம் பெற்று தங்கள் கனவை நனவாக்கலாம். மொத்தத்தில் தொலைநிலைக் கல்விக்கு தேவைப்படும் பக்குவத்தை, நமக்கு நாமே வளர்த்துக்கொண்டால்தான் வெற்றி நிச்சயம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts