Tuesday 18 September 2018

பெண்களுக்கு பொற்காலம் பிறக்குமா?

பெண்களுக்கு பொற்காலம் பிறக்குமா? எழுத்தாளர் முனைவர் திருக்குறள் கோ.ப.செல்லம்மாள் பெண்களுக்கு கல்வி வேண்டும், கல்வியைப் பேணுதற்கே, நாட்டினைப் பேணுதற்கே என்று பாரதிதாசனார் பாடியதை மறக்கலாமா? நாட்டினைப் பேணுதற்குப் பெண்களைப் போற்றி வளர்க்க வேண்டாமா? ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று கேட்டு, ‘பெண்ணின் பெருந்தக்கது இல்’ என்ற பதிலையும் கூறியுள்ள திருவள்ளுவரின் பெண்ணியச் சிந்தனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா! பெண்களை சீரழித்து வாழ்வது ஒரு வாழ்வாகுமா? கணவனே ஆனாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடல் உறவு கொள்ளக் கூடாது என்ற சட்டம் இருப்பதை உணர வேண்டாமா? தாலி கட்டி, தன்னைப் பாதுகாத்து வாழ்கின்ற கணவன் என்ற உறவுக்கே இந்த நிலை என்கின்றபோது பேர், ஊர் தெரியாத மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் எந்த சட்டத்தின் கீழ் பெண்களை, அதுவும் சிறுமிகளைப் பாழ்படுத்துகிறார்கள் என்பதை நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது. நாளுக்கு நாள் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறைந்தபாடில்லை. மகாத்மா காந்தியடிகளும், திருவள்ளுவரும், உதித்த நாட்டிலா இப்படி! மகாத்மா காந்தியடிகள் கண்ட பெண்களின் பொற்காலக் கனவு என்னாயிற்று? என்றுதான் அவர்கனவு நிறைவேறும். ஏன் இந்த அவலங்கள், அத்துமீறல்கள். இத்தகைய கொடியவர்களை, விலங்கினும் கீழான மனிதர்களாகத்தான் கருத நேரிடுகிறது. இந்த கொடியவர்களை சட்டம் போட்டு மட்டும் திருத்த முடியுமா? என்றால் முடியாது. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பாடல் அடிகளுக்கேற்ப இன்றுவரையில் நாடு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பணம், பொன், பொருட்களை மட்டுமா கொள்ளை அடிக்கின்றார்கள். பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். கற்பைச் சூரையாடுகிறார்கள். ஒரு தலைக்காதலால் சோனாலி, தன்யா, நவீனா, சுவாதி, பிரான்சினா இப்படி எத்தனை பெண்கள் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். பெருந்திணைக் காதல், ஒருதலைக் காதல் துன்பத்தைத் தரும். இருமனம் ஒன்று சேர்ந்த அன்புடைக் காதலே (இருதலைக் காதல்) இன்பத்தைத் தரும் என்கின்ற அடிப்படை உணர்வைக் கூட உணராது இருக்கின்றார் கள். ‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்’ என்னும் திருவள்ளுவரின் கூற்றை பெண்களிடம் வன்முறையில் ஈடுபடுவோர் உணர்ந்து பார்க்கவேண்டும். உணர்ந்தால்தான் மென் முறையை ஏற்று வன்முறையை விட்டொழிப்பார்கள். அப்போதுதான் பெண்ணுலகம் உய்யும். தஷ்வந்த் என்பவர் 6 வயது சிறுமியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல், கொன்று எரித்த செய்தியையும் அறிந்தபோது மனம் கொதித்துப் போய் விட்டது. அந்த சிறுமியை ஈன்ற பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? பெற்ற அன்னை தவறை தட்டிக் கேட்டதால் ஈன்ற அன்னையையும் கொன்றுள்ளார். 24 வயதில் எப்படி இப்படியொரு அரக்கத்தனம் அவருக்கு வந்தது என்ற காரணத்தை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வாலிபர் இப்படி என்றால் பதினோரு வயது சிறுமியை லிப்டை இயக்கும் ஊழியர் ஒருவர் கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பலரை அழைத்து கற்பழிக்க வழிவகை செய்துள்ளார். நெஞ்சென்ன நெஞ்சோ? களங்கம் செய்பவர்க்கு உள்ளமில்லையோ என்று குமுற வேண்டியுள்ளது. இப்படி தொடரும் செய்திகள் பெண்களுக்கு அடிமேல் அடி விழுவதாக உள்ளது. இந்தச் செய்திகள் பெண்களுக்குத் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் எச்சரிக்கை மணியாகவும் உள்ளதை நினைத்துப் பார்க்க முடிகிறது. சிறையில் அடைத்து சட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனை அளித்து, திருத்த முயன்றால் மட்டும் போதாது? நல்ல வழிகாட்டுதல்கள் வேண்டும், நல்லறிவு புகட்ட வேண்டும். திருவள்ளுவர் காட்டு நன்னெறிகளை கற்பிக்க வேண்டும். புத்தர்பிரான் இயம்பியது போல் ஆசையே துன்பத்திற்குக் காரணம் ஆகும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவைகள் அளவோடு இருக்க வேண்டும். ஆண்கள் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும் மனதில் வைக்க வேண்டும். இந்த அடிப்படை உணர்வு உள்ளத்தில் நிரம்பினாலே, கொலைகள், கற்பழிப்பு போன்ற கொடூரங்கள் மறையும் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் பணியாற்றுகிறார்கள் ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் காதலில் சமத்துவம் இல்லையே. எதனைச் செய்தல் வேண்டும், எதனைச் செய்தல் கூடாது என்று திருவள்ளுவர் பாடியுள்ள பாடல்களை குறட்பாக்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி விளக்கி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொறாமை, பேராசை, சீற்றம், துன்பம் தரும் பேச்சு, செயல் இவற்றைத் தவிர்த்து வாழ்வதே சிறந்த அறமாகும். வாழ்வியலில் அறம் செழிக்க மனதை தூய்மையுடன் வைத்துக் கொண்டாலே போதும். அதுவே நிறைவான அறமாகும். திரைப்படங்கள், செல்போன்கள், வாலிபர்களைச் சீரழிக்கும் வகையில் ஆபாச காட்சிகள் வெளியிடப்படுவதை நிறுத்தினால் நலம் பயக்கும். சண்டைக் காட்சிகள், கொலை, களவு, கற்பழித்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளைத் தவிர்க்க முற்படலாம். பெண்கள், குழந்தைகள் முதற்கொண்டு விழிப்புணர்வோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயலவேண்டும். திருக்குறளை பள்ளிகளில் அவசியம் பயிற்றுவித்தால், தனிமனித ஒழுக்கம் வளரும். தூய்மையான மனதை உருவாக்கலாம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் மாணவர்களை மாற்றம் பெறச் செய்யலாம். மனத்தூய்மை பெற்றால் அவரவர்கள் மனசாட்சியே சிறந்த நீதிபதிகளாக மாறும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் பின்னால் செல்வதை விட்டு விட்டு, புதிய இந்தியாவை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். இது கூகுள் உலகம் என்பதால், எப்பொழுதும் விழிப்புணர்ச்சியோடு இருத்தல் அவசியமாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts