Wednesday, 5 September 2018

இந்திய கலாசாரத்துக்கு ஏற்ற கல்வி அவசியம்

இந்திய கலாசாரத்துக்கு ஏற்ற கல்வி அவசியம் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று வருகிறேன். அப்போதெல்லாம், இந்திய கல்வியின் பாரம்பரியத்தையும், மீண்டும் சிறந்த கல்விக்கான அதே ஊக்கத்தை புகுத்துவதற்கான வழிமுறைகளையும் நான் வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளேன். நினைவுக்கு எட்டாத காலகட்டத்தில் இருந்தே பாரம்பரியமாக இந்தியா ஒரு கற்பிக்கும் மையமாக திகழ்ந்து வருகிறது. 20-ம் நூற்றாண்டில் மிகவும் புகழ்பெற்ற இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறும்போது, “எண்களை எண்ணுவதற்கு இந்தியர்கள் கற்றுக்கொடுத்தனர். அது இல்லாமல் இருந்திருந்தால் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சாத்தியம் இல்லாமல் போயிருக்கும்” என்றார். அமெரிக்க நாடக ஆசிரியரும், நகைச்சுவைக் கலைஞருமான மார்க் டுவைன், இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்போது, “மனித வர்க்கத்தின் தொட்டில், மனித உரையாடலின் பிறப்பிடம், வரலாற்றின் தாய், புராணங்களின் பாட்டி, பாரம்பரியங்களின் பூட்டி” என்றெல்லாம் வர்ணித்துள்ளார். மனித வரலாற்றை அறியக்கூடிய பொக்கிஷங்கள் எல்லாம் இந்தியாவில்தான் உள்ளன. பண்டைய இந்தியாவில் கற்பிக்கும் மையங்களாக தட்சசீலம், நாளந்தா, புஷ்பகிரி ஆகியவை திகழ்ந்தன. இந்தியாவின் மற்ற மூலைகளில் இருந்தும், உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அறிவைத் தேடுவோரும், விஞ்ஞானிகளும் இந்த மையங்களுக்கு வந்துள்ளனர். வேதங்கள், வேளாண்மை, தத்துவம், கணிதம், வில்வித்தை, தற்காப்புக் கலைகள், அறுவை சிகிச்சை, மருந்துகள், வான்வெளி சாஸ்திரம், மாய வித்தைகள், வணிகம், இசை, நாட்டியம் ஆகியவற்றில் உயர்கல்வியை கற்க விரும்பியவர்கள் உலகெங்கிலும் இருந்து இந்த மையங்களுக்கு வந்தனர். கி.பி. 7-ம் நூற்றாண்டில் சீனாவின் தத்துவஞானி சுவான்சங், நாளந்தாவுக்கு வந்து அங்கிருந்த புத்த மத குருக்களுடன் பயின்றார். அவர் ஊர் திரும்பும்போது 657 சமஸ்கிருத வாசகங்களை கற்றுச் சென்றார். அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியா, புகழ்பெற்ற ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் சாரகா ஆகியோர் தக்‌ஷசீலா மையத்தில் பயின்றவர்களாவர். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய பகுதிகளில் ஆய்வில் கிடைத்த நகர்ப்புற கட்டமைப்புகளை பார்க்கும்போது, அந்த காலத்தில் உலகத்தின் மற்ற நாடுகளைவிட இந்தியா முன்னிலை பெற்றிருந்ததை அறியலாம். பூஜ்யம் என்ற எண், பின்னக் கணிதம் ஆகியவை உலகுக்கு இந்தியா கொடுத்த விலைமதிக்க முடியாத அம்சங்கள். அணுவின் அழிக்கமுடியாத ஆற்றல் பற்றி ஜான் டால்டனுக்கு முன்பாகவே கானத் மகரிஷி அதை குறிப்பிட்டு இருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரி என்ற ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையின் தந்தை என்று இந்தியாவின் சுஷ்ருதா அழைக்கப்படுகிறார். கற்பித்தல், கல்வி ஆகியவற்றில் இந்தியா சிறந்து விளங்கியதோடு நல்ல ஆலோசனைகளை மற்ற நாடுகளில் இருந்தும் பெற்றுக்கொள்வதை வரவேற்றது. தற்போது நமக்கு வேண்டுவதெல்லாம், எந்தவொரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற புதிய மனநிலைதான். அந்தக் கருந்து எந்த இடத்தில் இருந்து பிறந்து வந்திருந்தாலும் சரி, அதுபற்றி சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் வேண்டும். மற்றவர்களிடம் இருந்து எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் காலனி ஆதிக்கத்தில் இருந்த மனநிலை தற்போது அவசியமில்லை. ‘இந்திய கல்வியை மேல்நாட்டு கல்வி போலாக்குவது, இந்தியர்களின் அசல் சிந்தனையை திருடிவிட்டது. எதையும் ஐரோப்பிய அல்லது மேல்நாட்டு அம்சங்களின் அடிப்படையில் எதிர்நோக்கும் மனநிலையை உருவாக்கச் செய்துவிட்டது. சொந்த கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மதிக்காத நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது’ என்று பேராசிரியர் கொனீரு ராமகிருஷ்ண ராவ் உள்பட பலரும் உணர்கின்றனர்.கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் கற்கும் விஷயமாகும். கற்பதில் ஒரு குழந்தை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அந்தக் குழந்தை தனது தாய் மொழியில் கற்பிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்வது அவசியம். மேலும், நமது சமூக கலாசாரத்தின் அடிப்படையிலான கல்வி புகுத்தப்பட வேண்டும். இந்திய பண்பாட்டுக்கு ஏற்புடையதல்லாத கல்வி முறைகளை கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது. குருட்டு நம்பிக்கைகளை கொண்டிருப்பதைவிட, அதற்கான விடைகளையும், ஆதாரங்களையும் தேடி ஆய்வு செய்து புது யோசனைகளை வெளிக்கொணர முயல வேண்டும். இதை நாம் செய்யாவிட்டால், நமக்கு திறமைகள் இருந்தாலும் அதற்கேற்றபடியான முன்னேற்றத்தை காண முடியாமல் போய்விடும். சமஸ்கிருத கவிஞர் காளிதாசா, “பழமையானது அனைத்துமே நல்லதாக இருக்க அவசியமில்லை. நவீனம் எதையும் கெட்டதாகவும் நினைக்க வேண்டாம். ஞானமுள்ளவர்கள், தங்களுக்கு தேவையானதை சிந்தித்து, ஆராய்ந்து முடிவு செய்வார்கள். முட்டாள்கள், மற்றவர்களின் ஆலோசனையை பின்பற்றுவார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். பண்டைய இந்தியாவில் எத்தனையோ தத்துவங்கள், அறிவுரைகள் உருவாக்கப்பட்டு நமக்கு தரப்பட்டுள்ளன. அவை நம்மை உயர்த்தக்கூடியவை. அவற்றைப் படித்து அவை தரும் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வது அவசியம். சுதந்திர இந்தியாவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிலையங்கள், இந்திய கல்வி முறையில் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்களை உருவாக்கியுள்ளன. உலக அளவிலான கற்பித்தல் முறைகளை கவனிக்கும்போது, நமது கலாசாரத்திலும், பாரம்பரியத்திலும், மரபிலும் வேரூன்றிய கல்வியை அளிப்பது அவசியமாக உள்ளது. இன்று (செப்டம்பர் 5-ந்தேதி) இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கடைபிடிக்கும் இந்த நாளில், நமது ஆசிரியர்களையும், இந்தியாவின் எதிர்காலத்தை வகுப்பறைக்குள் வடிவமைக்கும் அவர்களின் முயற்சிகளையும் வாழ்த்துவோமாக!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts