Friday 7 September 2018

தமிழ் நாடகத்தின் திருப்புமுனை

தமிழ் நாடகத்தின் திருப்புமுனை சங்கரதாஸ் சுவாமிகள் டி.கே.எஸ். கலைவாணன் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தமிழில் நடத்தப்பட்ட நாடகங்கள் முழுவதும் முழுமையாக பாடல்களையே கொண்டுள்ளதாக இருந்தன. நாடகம் நடத்தப்படுவதில் ஒரு ஒழுங்கு முறை, நியதி இருந்ததில்லை. நாடகங்கள் தெருமுனைகளில் நடக்கும். இரவு முழுவதும் நடக்கும். நடிகர்களும் பாத்திரங்களின் தன்மை பற்றி கவலைப்படாமல் தங்களின்தன்மை, திறமை, விருப்பம் போல் பாடலும், வசனமும் பேசுவார்கள். இவ்வாறு ஒரு இலக்கணத்திற்கு உட்படாமல் இஷ்டம் போல் வெறும் பொழுது போக்கிற்கு மட்டும் கையாளப்பட்ட நாடகக் கலைக்கு ஒரு இலக்கணம் வகுத்து, வடிவம் அமைத்து, சீரான காட்சியமைப்புகள், உரையாடல்கள் போன்ற ஓர் ஒழுங்கினை ஏற்படுத்தி அதனை மேடை நாடகமாகப் பரிமளிக்கச் செய்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். அதனாலேயே அவர் ‘தமிழ் நாடகத் தந்தை’ என்றும், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்றும் போற்றப்படுகிறார். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ, வசனங்களையோ பயன்படுத்தாத நடிக, நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்களே தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. என்றும் அவர் புகழை நன்றியுடன் போற்றுகிறார் அவர் முதன்மை மாணவராக விளங்கிய தமிழ் நாடக மேதை பத்மஸ்ரீ அவ்வை டி.கே.சண்முகம். 1867-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தூத்துக்குடி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியில் தாமோதரக் கணக்குப் பிள்ளை என்பவரின் செல்வத் திருமகனாக சங்கரதாசர் பிறந்தார்.. தம் தந்தையார் தாமோதரப் புலவரிடமே தமிழ்க் கல்வி பயின்று தம் தமிழ் நிலை வளர்த்துக் கொண்டார் சுவாமிகள். பின்னர் தண்டபாணி சுவாமிகள் என்னும் பெரியாரிடம் மேலும் பயின்று தமிழ்ப் புலமை பெற்றார். அதன் காரணமாக தம் குருவான தண்டபாணி சுவாமிகளை மனதில் வைத்து, பழனி தண்டபாணிப் பதிகம் என்னும் தலைப்பில் பழனி முருகனுக்கு பதிகம் பாடினார் சுவாமிகள். அவற்றுள் ஒரு பாடல்தான் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்னும் பதிகம் ஆகும். தமது 24-வது வயதில்தான் நாடகத் துறையில் முழுமையாக பிரவேசிக்கத் தொடங்கினர் சுவாமிகள்.1910-ம் ஆண்டு சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சொந்த நாடகக் குழு ஒன்றினைத் தொடங்கினார். இக்குழுவில்தான் புகழ் பெற்ற கலைஞர் எஸ்.ஜி. கிட்டப்பாவும் மற்றும் அவர்தம் சகோதரர்களும் பயிற்சி பெற்றனர்.அந்நாளைய நடிகர்கள் சுவாமிகளின் பாடல்களை மட்டும் பாடிப் பயன்படுத்திக் கொண்டு, உரையாடல்களை தம் விருப்பம் போல் சுயமாகப் பேசுவதைக் கண்டு வெறுப்புற்று, சிறுவர்களைக் கொண்டு நாடகம் போடுவதே சிறந்தது என்று எண்ணி, 1918-ம் ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்திய பாலசபா என்றும் நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். இக்குழுவில்தான் தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகமும், அவர் சகோதரர்களும் சுவாமிகளிடம் மாணவர்களாச் சேர்ந்தனர். சண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்காகவே ஒரே இரவில் அவர் எழுதிய நாடகம் அபிமன்யு சுந்தரி இதில் சண்முகம் வீர அபிமன்யுவாக நடித்து அந்நாளிலேயே பெரும் புகழ் பெற்றார். அறுபத்து எட்டு நாடகங்கள் எழுதிய சுவாமிகளின் நாடகங்களுள் பதினாறு நாடகங்கள்தான் தற்போது அச்சில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை அச்சிட்டு தமிழ் உலகுக்கு முதலில் தந்தவர் அவ்வை சண்முகம். வள்ளி திருமணம், கோவலன், சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, சதி அனுசூயா, சுலோசனா சதி, பக்த பிரகலாதன், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, லவகுசா, இராமாயணம், அரிச்சந்திரா மயான காண்டம், நல்ல தங்காள், சுத்ராங்கி விலாசம் ஆகிய நாடகங்கள் தவிர, ரோமியோ ஜுலியட், சிம்பலைன் (ஷேக்ஸ்பியர்) போன்றவை சுவாமிகள் எழுதிப் பிரபலமான நாடகங்களாகும். சுவாமிகளின் நடிப்புத் திறமையும் அபாரமானது. மாணவர்களுக்குத் தாமே நடித்து நடிப்பைச் சொல்லிக் கொடுப்பாராம். நல்ல உடற்கட்டும், எடுப்பான தோற்றமும் கொண்டவராக சுவாமிகள் விளங்கியதால், சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன், ‘பக்த பிரகலாதா’வில் இரணியன், நளதயமந்தியில் சனீசுவரன் என்று சில வேடங்களைத் தாங்கி நடிக்கும்போது பயங்கரமாக இருக்குமாம். எமன் வேடத்தில், கிங்கரர்களை அதட்டும்போது தம் சூலாயுதத்தை ஆவேசமாக தரையில் ஓங்கி அடித்ததைப் பார்த்த ஓர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரங்கிலேயே கருச்சிதைவு ஏற்பட்டதாம். அதனால் முன்கூட்டியே, இக்காட்சிக்கு முன்பாக ‘கர்ப்பிணி பெண்கள் இருந்தால் வெளியே சென்று விடுங்கள்’ என்று அறிவிப்பார்களாம். 1921-ம் ஆண்டில் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்திய பால சபா சென்னைக்கு நாடகங்கள் நடத்தப் புறப்படும்போது சுவாமிகள் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். சண்முகம் சகோதரர்கள் சென்னையில் நாடகம் நடத்தும்போது 1922, நவம்பர் மாதம் 13-ந்தேதி சுவாமிகள் இப்பூவுலகைவிட்டு மறைந்தார். நாடகக்காரர்கள் என்றால் இழிவாக நினைத்த காலத்தில், அந்நாடகக் கலைஞர்களுக்கு ஓர் முகவரியையும், மரியாதையையும், மதிப்பையும் பெற்றுத் தந்தவர் சுவாமிகள் ஆவார்.சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் அவ்வை சண்முகம் 1965-ம் ஆண்டில், ‘சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்’ என்னும் ஓர் அமைப்பினை நிறுவி, ஆண்டுதோறும் சுவாமிகள் நினைவாக விழா எடுத்து வந்தார். 1970-ல் அவ்வை சண்முகம் முயற்சியால் மதுரை மாநகரில், தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக சுவாமிகளின் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப் பெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், தி.நகர் அபிபுல்லா சாலையில் ஏற்கனவே இருந்த கலையரங்கிற்கு அன்றைய முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ‘சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம்’ என்று பெயரிட்டுச் சிறப்பித்தார். இன்று (செப்டம்பர் 7-ந்தேதி) சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts