Monday, 10 September 2018

ரோமானியப் பெண்களை கவர்ந்த கொற்கை முத்து

ரோமானியப் பெண்களை கவர்ந்த கொற்கை முத்து டாக்டர் அ.பாஸ்கர பால்பாண்டியன், தொல்லியல் அறிஞர் ரோமாபுரி சாம்ராஜ்யம் தலை நிமிர்ந்து நின்றகாலம். பண்பாட்டிலும் நாகரிகத்திலும் அந்நாடு சிறப்புற்றிருந்த காலம். ரோமாபுரிப் பெண்கள் அழகுக்கலையிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர். அவர்கள் முத்துக்கள் பதிக்கப்பெற்ற அழகான அணிகலன்களை தங்கள் மேனி முழுவதும் அணிந்து தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் அணிந்து கொண்ட முத்துக்கள் தமிழ்நாட்டின் கொற்கை துறைமுகத்தில் இருந்து வாங்கப்பட்ட முத்துக்களாகும். இது வரலாற்று ஆசிரியர்கள் குறிப்புக்களாலும் அகழாய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளியோபட்ரா என்ற ரோமன் நாட்டுப் பேரரசி முத்துக்கள் மீது மிகவும் ஆசைக்கொண்டவர். இவர் விலை உயர்ந்த கொற்கை முத்து ஒன்றினை மதுவில் கரைத்துக் குடித்து தன் மேனியைக் கவர்ச்சிகரமாக மாற்றிக்கொண்டாராம். மதிப்புமிக்க கொற்கை முத்துக்களை இவர் விரும்பி அணிந்துகொண்டார் என்பர். கைல்சு என்னும் ரோமானிய மன்னனின் மனைவி பவுலினா என்பவர் விலை உயர்ந்த கொற்கை முத்துக்களை அணிந்தார் என்று கிரேக்க வரலாற்று ஆசிரியர் பினினி கூறுகிறார். உலோலா என்னும் ரோமநாட்டு அரசி 30 ஆயிரம் பொன் நாணயத்துக்குச் சமமான கொற்கை முத்துக்களை அணிந்தார் என்னும் குறிப்பும் உண்டு. ரோம நாட்டுப்பெண்கள் பெரிதும் கொற்கை முத்தை விரும்பி வாங்கியதால் ரோமநாட்டுப் பொருளாதாரம் நலிவுற்றது என்று திபேரிசு என்ற ரோமநாட்டு மன்னன் ரோமநாட்டு செனட் சபையில் தெரிவித்துள்ளார். இவர் காலம் கி.பி. 16 முதல் கி.பி. 37 வரை ஆகும். பாண்டிய அரசனுடைய தூதுக்குழு ஒன்று அகஸ்தஸ் சீசர் காலத்தில் வணிகத்துக்காக தூது சென்றதாகவும் ரோமானிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். கி.மு. 27-ல் அகஸ்தஸ் சீசர் காலத்தில் தொடங்கிய முத்து வணிகம் கி.பி. 68-ல் நீரோ மன்னன் காலம் வரை சிறப்புற்றிருந்தது. தாலமி, பினினி, பெரிப்பு ரூஸ் நூலாசிரியர் போன்றோர் கொற்கை முத்து பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கொற்கையில் நடைபெற்ற முத்துக்குளிப்பு பற்றிச் சங்க இலக்கியங்கள் பல கூறுகின்றன. கொற்கைக் கடற்கரையில் முத்துக்கள் குவிந்து கிடக்கும் என்கிறது அகநானூறு. பாண்டிய மன்னர்கள் மதுரையில் ஆட்சி செய்ய பாண்டிய இளவரசர்கள் கொற்கையில் இருந்து வணிகத்தினைக் கவனித்துக்கொண்டனர். சிலப்பதிகார காலத்தில் வெற்றிவேற் செழியன் என்னும் இளவரசன் மதுரையில் இருந்து ஆட்சி செய்தான். சந்திரகுப்த மவுரியரின் அமைச்சராக இருந்த சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கொற்கை முத்து பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தலை சிறந்து விளங்கிய கொற்கை இப்போது சிற்றூராகக் காட்சி தருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் முக்காணிக்கு மேற்கே இவ்வூர் இன்றும் காணப்படுகிறது. டாக்டர் கால்டுவெல், ஈவ்ஸ் மார்ட்டின் போன்ற மேலைநாட்டு ஆய்வு அறிஞர்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு அரியப்பொருட்களை கண்டெடுத்தனர். ரோமானியக்காசுகள், ரோமானியப் பானைஓடுகள், பாண்டியர் காசுகள், பழையகட்டிடங்களில் அடிபகுதிகள், முத்துக்கிளிஞ்சல்கள், முத்துக்களை அளவிடும் கருவிகள், தாழிகள் முதலியவை அங்கு கிடைத்த அரியபொருட்களாகும். கற்காலத்தை சேர்ந்த கற்கோடாரி ஒன்றும் கிடைத்துள்ளது. கொற்கைக்கு அருகில் உள்ள அக்க சாலை என்னும் ஊரில் பாண்டியர் காலத்தில் நாணயங்கள் அச்சிடப்பெற்றன. அக்க சாலையில் உள்ள பழங்கால விநாயகர் கோவிலில் கல்வெட்டுக்கள் உள்ளன. இவை கொற்கையை மதுரோதைய நல்லூர் என்றும் குறிப்பிடுகின்றன. பழங்கால வன்னிமரமும் அதற்கடியில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பமும் கொற்கை ஊரின் முன்னர் காணப்படுகின்றன. பெரிய அரண்மனை, அகழி, அரண்கள் கொற்கையில் இருந்திருக்க வேண்டும். அகழிக்கரை சாமி கோவில், காட்டை வாழி ஐயன் கோவில் என்பன இன்றும் கொற்கை அருகில் உள்ளன. தாமிரபரணி ஆறு தனது போக்கை மாற்றிக்கொண்டதாலும் கடல் பின் வாங்கிச் சென்றதாலும் கொற்கைத் துறைமுகம் சிறப்பை இழந்து அழிந்தது. கொற்கைக்குப்பிறகு காயல் துறைமுகம் சிறப்புற்றிருந்தது என்பது மார்க்கோப்போலா குறிப்புகளால் தெரிய வருகிறது. அரபு நாட்டுக்குதிரைகள் இத்துறைமுகத்தின் வழியாகப் பெரிதும் இறக்குமதி செய்யப்பட்டன. கொற்கை மன்னார்குடாவில் உள்ளது என்றும் கடலில் செல்லும் போது கொற்கைக் கோட்டையின் கதவுகள் திறக்கப்படும் ஓசையை கேட்கலாம் என்றும் பினினி எழுதியுள்ளார். கொற்கைநகரம் மன்னர்கள் படையெடுப்பால் வீழ்ச்சி அடைந்தது என்பார்கள். காலத்தாலும், பண்பாட்டு மாற்றங்களாலும் அழியாத பேரழகி கிளியோபட்ராவைக் கவர்ந்த முத்துக்களைத் தந்த பாண்டியநாட்டுக் கொற்கை அழிந்தாலும் நம் மனக்கண்ணில் நீங்காமல் என்றும் நினைவில் நிற்கும். வரலாற்று அறிஞர் வின்சென்ட் சுமித் இந்திய வரலாறு என்பது கங்கைக்கரையிலிருந்து அல்ல; காவிரிக்கரையில் இருந்து எழுதபட வேண்டும் என்று குறிப்பிட்டார். உண்மையில், அது தாமிரபரணிக்கரையில் இருந்து, கொற்கைக்கரையில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts