Sunday 5 August 2018

வேண்டாமே விபரீதம்...!

வேண்டாமே விபரீதம்...! மகப்பேறு மருத்துவர் சாய் பிரசன்னா குமார் இன்றைக்கு இணையதளம் இலவசமாக கிடைப்பதால், அதை ஆக்கப்பூர்வமாக எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக, எதற்கெடுத்தாலும் இணையதளத்தை நாடுகிறார்கள். வரைமுறையின்றி எதை வேண்டுமானாலும் பார்க்கிறார்கள். இது பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடும். அப்படி ஒரு விபரீத விளையாட்டு ஒரு ஆசிரியையின் உயிரை விலையாக்கி இருக்கிற செய்தி கவலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவருக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கணவர் சமூகவலைத்தளத்தை பார்த்து நண்பரின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தையை பெற்றெடுத்த தாய் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நிச்சயம் எளிதில் கடந்துபோகக் கூடியதில்லை. சுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புவார்கள்; விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது முக்கியம் அல்லவா? பொதுவாகவே இன்றைய சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. எதற்கெடுத்தாலும் பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ‘மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் வீட்டிலேயே 10-க்கும் அதிகமான பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்கள். ஆனால் மருத்துவத்துறை அபரிமித வளர்ச்சியை அடைந்திருக்கும் நிகழ்காலத்தில், மருத்துவமனையில் பெரும்பாலும் ‘சிசேரியன்’ மூலம் தானே பிரசவம் நடக்கிறது?’ என்று அலட்டிக்கொள்கிறார்கள். அதாவது, டாக்டர்கள் வேண்டுமென்றே ‘சிசேரியன்’ மூலம் பிரசவம் பார்ப்பதாக ஒரு மனநிலை சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. இப்படி பழையகாலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்துவதே முதலில் தவறு. அந்த காலத்தில் உடல் உழைப்பை நம்பி தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள். ஆண்களும், பெண்களும் சரிக்கு சமமாக வேலை செய்தார்கள். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமாயிற்று. அந்த காலத்தில் மருத்துவமனைகளும் வெகுகுறைவு. இதனால் வேறுவழியும் இல்லை. அவர்கள் வீட்டில் தான் பிரசவம் பார்த்தாக வேண்டும். ஆனால் இன்றைய நிலை அப்படியானதல்ல. ஊருக்கு ஊரு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, நாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. இதையெல்லாம் விட முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பு வீட்டில் சுகப்பிரசவம் பார்த்தார்கள் என்று நாம் சொல்கிறோம். உண்மை என்னவென்றால், அப்போது பிரசவத்தின்போது தாய் இறப்பதும், பிறந்த குழந்தை இறப்பதும் அதிகமாக இருந்தது. 15 குழந்தைகள் பெற்றிருந்தால் 3 குழந்தைகள் பல வீடுகளில் பிறக்கும்போதே இறந்திருந்தன. 1000 பிரசவங்களில் சுமார் 300 தாய்மார்கள் வரை இறப்பை சந்தித்தனர். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்களை பாருங்கள் இது புலப்படும். ஆனால், இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. பிரசவத்தின்போது, தாய் இறப்பு விகிதமும், சேய் இறப்பு விகிதமும் பல மடங்கு குறைந்துவிட்டது. இந்த புள்ளி விவரங்கள் இந்தியா மட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதை யாரும் கருத்தில் கொள்வதில்லை. சுகப்பிரசவம் வேண்டும் என்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், மருத்துவர்களின் ஆலோசனையும் இன்றி வீட்டில் சுயமாக பிரசவம் பார்ப்பது அறிவுடமை ஆகாது. யூடியுப் போன்ற சமூகவலைத்தள வீடியோக்களை நம்பினால் ஏமாந்துதான் போவோம். இன்றைக்கும் மேலைநாடுகள் சிலவற்றில் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளோடு இதை செய்கிறார்கள். இதற்காக மருத்துவர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது அரசு பயிற்சி பெற்ற நர்சுகள் வீடுகளுக்கு வந்து பிரசவம் பார்க்கிறார்கள். ஆனால், இங்கே அதற்கான வாய்ப்புகள் இருக் கிறதா? என்பதை நாம் பார்க்க வேண்டும். பொதுவாக, சுகப்பிரசவம் வேண்டும் என்றால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அன்றைய காலத்தில் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் மருத்துவம் வளரவில்லை. இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆனால் மனிதனின் ஆரோக்கியம் குறைந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் பழைய காலத்தை ஒப்பிடும் நாம், அவர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்வை பெற எதையும் செய்வதில்லை. பிறகு சுகப்பிரசவம் மட்டும் வேண்டுமென்றால் எப்படி முடியும்? பொதுவாக சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்றால் ரத்தத்தில் 12 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். கருவறையில் இருந்து முதலில் குழந்தையின் தலை வெளியே வர வேண்டும். பிரசவமான 15 நிமிடங்களுக்குள் நஞ்சு வெளியே வர வேண்டும். அல்லது, வெளியே எடுக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் அதிகபடியான உதிரப்போக்கு காரணமாக தாய் உயிரிழக்க நேரிடும். திருப்பூரில் நடந்த சம்பவத்தில் நஞ்சு வெளியே வராததால் தான் அந்த ஆசிரியை இறந்தார். ஒருவேளை அவருக்கு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்திருந்தால், இன்றைக்கு அவர் தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்திருப்பார். அனைத்திலும் புதுமைக்கு மாறிவிட்டு, பிரசவம் மட்டும் வீட்டில் சுகமாக நடக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது. நம் மனமும், உடலும் மாறிவிட்டன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை நமக்கு அருள்புரியும். சிசேரியன் பிரசவங்கள் குறைய வேண்டும். சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு; அதுதான் விருப்பமும் கூட. ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது கணவனும், மனைவியும் தான். இதற்கு, கருத்தரிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சரியான திட்டமிடல் அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லாத இக்காலகட்டத்தில், உடற் பயிற்சி அவசியமாகிறது. அதே போல, கர்ப்ப காலங்களில் மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும். பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே, சுகப்பிரசவம் ஏற்படுமா? அல்லது சிக்கலான பிரசவமாக இருக்குமா? என்பது தெரிந்துவிடும். இதை மருத்துவரிடம் கேட்டறிந்து, அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை குடும்பத்தினரோடு சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம் சாத்தியமே.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts